Published:Updated:

நெகட்டிவ் விஷயத்தில் இவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜியா? `நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’ - படம் எப்படி?

பா.ஜான்ஸன்
நெகட்டிவ் விஷயத்தில் இவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜியா? `நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’ - படம் எப்படி?
நெகட்டிவ் விஷயத்தில் இவ்வளவு பாசிட்டிவ் எனர்ஜியா? `நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’ - படம் எப்படி?

வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு இழப்பை எப்படி மகிழ்ச்சியாக கையாள முடியும், எப்படி இலகுவாக எடுத்துக் கொள்ள முடியும், அது நமக்கு மிக நெருங்கிய ஒருவராக இருக்கும் போது. அப்படி ஒருவரை இழக்கப் போகும் குடும்பம் என்னென்ன செய்கிறது என சொல்கிறது `நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா' படம். அதற்காக அழுது வடியும் சீரியல் டைப் படம் என நினைத்துவிட வேண்டாம். விழுந்து விழுந்து சிரிக்கும் படியான பல சம்பவங்களும், மெலிதாக கலங்க வைக்கும் சின்னச் சின்ன தருணங்களையும் மட்டும் வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் அல்தாஃப் சலீம். 

சரி கதைக்கே வருவோம். ஷீலா சாக்கோவுக்கு (சாந்தி கிருஷ்ணா) திடீரென ஒரு சந்தேகம் வருகிறது. அதைப் பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார். திடீரென சினிமாவுக்குப் போவோம் என கணவர் சாக்கோ (லால்), மகள் சாராவை (அஹனா கிருஷ்ணா) அழைத்துக் கொண்டு சினிமாவுக்குப் போகிறார். படம் முழுதாகப் பார்க்காமல் திரும்ப வருகிறார். லண்டனில் இருக்கும் மகன் குரியனை (நிவின் பாலி) ஊருக்கு வரச் சொல்கிறார். கடைசியில் ஒரு சமயம் பார்த்து கணவரிடம் சொல்லியே விடுகிறார். "எனக்கு கேன்சர் வந்திருக்குமோனு சந்தேகமா இருக்கு!" அவ்வளவுதான், அதன் பிறகு என்ன நடக்கிறது, அந்தக் குடும்பத்துக்குள் வரும் விதவித உணர்வுகள்தான் கதை. 

முன்பு சொன்னது போலவே கதறி அழவைப்பதற்கான ஒரு களத்தை எடுத்துக் கொண்டு வெடித்து சிரிக்கும் படியான ட்ரீட்மெண்டில் கொடுத்திருக்கிறார்கள். அம்மா வர சொன்னதும் தன் திருமணத்தைப் பற்றிய ஏற்பாட்டுக்குதான் என லண்டனிலிருந்து சிப்ஸ் தின்றபடி வருகிறார் நிவின். பயங்கரமாக உடல் எடை கூட்டி நொறுக்குத் தீனிப் பிரியராகவே படம் முழுக்க வலம் வருகிறார் நிவின்.

உண்மையான விஷயம் என்னவென்று தெரியும் முன்பு "ஆமா, என்னோட கல்யாணத்துக்கு வரதட்சணை எவ்வளவு வாங்கலாம், எந்த ஊருக்குப் போகலாம்" என கல்யாணக் கனவுகளில் மிதந்தபடித் திரிகிறார்.  'எங்க குடும்பத்தில் யாருக்குமே தைரியம் கிடையாது. நீயே இந்த விஷயத்தை சொல்லு' என மனைவியிடம் அப்பிராணியாக சொல்லும் லால், பின்பு நிர்பந்தம் ஏற்படுவதால் இதைப் பற்றி ஒவ்வொருவரிடம் கூற எடுக்கும் முயற்சிகள் எல்லாம் காமெடி பட்டாசு. அதிலும் அந்த சில்லி சிக்கன் உதாரணம்தான் ஹைலைட். தங்கையாக நடித்திருக்கும் அஹனா, எழுந்து நடக்கவே சிரமப்பட்டாலும் சிக்ஸ் பேக்ஸ் கிட் வாங்கும் தாத்தா, அவர் சொல்லும் கதைகளை எல்லாம் நம்பும் கேர்டேக்கர் ஜேசுதாஸ், சூப்பர் மார்கெட் ஓனர் கிருஷ்ணா ஷங்கர், நியூட்டன்ஸ் லா சொல்லி வீட்டினரை சமாதானப்படுத்தும் டாக்டர் சய்ஜு, நிவின் பாலி போலவே கல்யாணக் கனவுகளில் மிதக்கும் ஐஸ்வர்ய லட்சுமி எனப் படத்தின் அத்தனைக் கதாபாத்திரங்களும் மிகப் பக்காவாகப் பொருந்துகிறார்கள்.

கதையின் நகர்தலை பாதிக்காமல் இரண்டே பாடல்கள், சில இடங்களில் தேவையை நிவர்த்தி செய்யும் இரைச்சல், மற்ற இடங்களில் மெலிதான இசை என கவனம் பெறுகிறார் இசையமைப்பாளர் ஜஸ்டீன் வர்கீஸ். படத்தின் காட்சி சில நேரம் உணர்வுகளை மாற்றிக் கொண்டே இருக்கும். சீரியஸான ஒரு காட்சிக்குள் வரும் காமெடி, காமெடி நடந்தபடியே சீரியஸான விவாதம் என எல்லாவற்றுக்கும் பொருந்தும் படியான வண்ணம், கோணம் ஆகியவற்றைக் கொடுத்த விதத்தில் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ் முரளிதரன். 

மிக மெதுவாக நகரும் கதை, எதை நோக்கிதான் செல்கிறது என்ற இலக்கில்லாத போக்கு கொஞ்சம் நெளிய வைத்தாலும், எந்த ஒரு இடத்திலும் நம்மை எதிர்மறையான சிந்தனைகளுக்குள் தள்ளிவிடாமல், பாசிட்டிவான விஷயங்களைக் காட்டியதும், பிரிவும் ஒரு பகுதிதான் என்பதை துள்ளலான கொண்டாட்டத்துடனே விளக்குவதுமாக இருக்கிறது படம். நிச்சயம் ஏமாற்றாமல் என்டர்டெய்ன்மென்ட் கொடுக்கும் இந்த `நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’!