ஸ்பெஷல் -1
Published:Updated:

“நாகேஷ் எனும் ஜீனியஸ்!”

விகடன் மேடை - லட்சுமி பதில்கள் வாசகர் கேள்விகள்

“நாகேஷ் எனும் ஜீனியஸ்!”

மகாலட்சுமி, ரெட்டியார்பாளையம்.

'' 'பொல்லாதவன் ’ படத்தில் ரஜினிக்கு ஜோடி நீங்க... அதே ரஜினிக்கு 'படையப்பா’ படத்தில் அம்மாவாக நடிச்சீங்க. இரு தருணங்களிலும் உங்கள் உணர்வுகள் என்ன?''

''நடிப்பு என்பது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட தொழில். அதில் ஹீரோயினாக மட்டும் அல்ல அம்மாவாக, பாட்டியாக நடிப்பதும் என் தொழில்தான். 'இந்தப் படத்தில் மோகன்லாலுக்கு ஹீரோயினாக நடித்துவிட்டு, இன்னொரு படத்தில் ஏன் அம்மாவாக நடித்தீர்கள்?’ என மலையாளத்தில் யாரும் கேட்பது இல்லை. இத்தனை வருடங்களாக நான் சினிமாவில் இருப்பதே எனக்குப் பெருமைதான். 'அன்னைக்கு நாம ஹீரோயின்... இன்னைக்கு ஏன் அம்மாவாக நடிக்கணும்?’னு யோசிச்சா, அப்பவே சினிமா நம்மளை வெளியே தள்ளிடும்!''

காமராசு, நாகப்பட்டினம்.

'' 'மழலைப்பட்டாளம்’ படத்துக்குப் பிறகு  நீங்கள் வேறு எந்தப் படமும் இயக்கவில்லையே ஏன்? சினிமாவில் ஒரு பெண் நடிகையாக மட்டும்தான் ஜொலிக்க முடியுமா?''

''என் அப்பா இயக்குநர் என்பதால், 'சினிமா இயக்கணும்’னு ஆசைப்பட்டேன். கே.பாலசந்தர் சாரிடம் போய் படம் 'டைரக்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன்’னு சொன்னபோது, 'ஓ யெஸ்... தாராளமா எடு. படம் ஓடினா உன்னைப் பாராட்டு வாங்க; இல்லாட்டி என்னைத் திட்டுவாங்க’னு சொன்னார். முக்தா சீனிவாசன் சாரிடம் சொன்னபோது, 'கண்டிப்பா லட்சுமி சினிமா டைரக்ட் பண்ணியே ஆகணும்னு தமிழ் சினிமா ரசிகன் அழுது கதறினானா? ஏன் இந்த விபரீத ஆசை உனக்கு?’னு கிண்டல் பண்ணினார். ஆனாலும் நான் உறுதியா அந்தப் படத்தை இயக்கினேன்.

அந்தப் படத்தில் நிறையக் குழந்தைகளோடு வாழ்கிற ஓர் எழுத்தாளனின் வாழ்க்கையை நகைச்சுவையும் சோகமும் கலந்து சொல்லியிருப்பேன். அப்போ படம் பெரிய ஹிட். அதோடு டைரக்ஷன் மேல இருந்த கிரேஸ் எனக்குப் போயிருச்சு. ஒருவேளை அந்தப் படம் ஓடாமல் போயிருந்தால், இன்னும் சில படங்களை இயக்கியிருப்பேன். இன்னொரு பக்கம் நடிப்பை மிஸ் பண்றது பிடிக்கலை. ஏன்னா நான் ரொம்ப விரும்பி, ரசிச்சுத் தேர்ந்தெடுத்த விஷயம்... நடிப்பு!''

“நாகேஷ் எனும் ஜீனியஸ்!”

சுந்தரம், ஸ்ரீரங்கம்.

''உங்கள் வளர்ப்பு மகள் இப்போது என்ன செய்கிறார், எப்படி இருக்கிறார்?''

'' 'நம் குழந்தைகள் நம்மில் இருந்து வருவது இல்லை. நம் மூலமாக வருகிறார்கள்’ என்கிறார் கலீல் ஜிப்ரான். என் மூலமாக வந்த குழந்தை அவள். 14 வருடங்களாக அந்தக் குழந்தை எங்களை வளர்க்கிறாள். எப்படி நீங்கள் வளர்ப்பு மகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியும்? நீங்களும் உங்கள் குழந்தைக்கு வளர்ப்புத் தந்தையா? பெற்றவர்கள் யாரும் குழந்தைகளை வளர்ப்பது இல்லை; குழந்தைகள்தான் பெற்றவர்களை வளர்க்கிறார்கள். அப்படித்தான் என் மகளும். 'வளர்ப்பு மகள்’ என்ற சொல்லைப்போல ஒரு வேதனை தரும் சொல் வேறு இல்லை. இனிமேல் அந்த வார்த்தையைத் தவிர்த்துவிடுங்கள். அவள் நன்றாகப் படித்து, அவளுக்குரிய வாழ்வை சிறப்பாக வாழ்கிறாள்!''

புவனேஸ்வரன், மகாபலிபுரம்.

'' 'லட்சுமி ’ என்றாலே  பளிச்சென நினைவுக்கு வருபவை 'சிறை’, 'சம்சாரம் அது மின்சாரம்’ படங்கள்தான். அந்தப் படப்பிடிப்பில் நடந்த சுவராஸ்யங்களைச் சொல்லுங்களேன்...''

'' 'சிறை’ படத்தின் கதை அனுராதா ரமணன் விகடனில் எழுதியது. 'மனைவியை 'வேண்டாம்’ என விட்டுப்போன கணவன் கடைசியில் தேடி வருவான். அப்போது தன்னைத் திருமணம் செய்து  விட்டுவிட்டுப் போன கணவனைவிட, கெடுத்துவிட்டு குற்றவுணர்வில் காலமெல்லாம் கண்கலங்காமல் பார்த்துக்கொண்ட அந்தோணிசாமியே மேல் என முதல் கணவன் கட்டிய தாலியைக் கழட்டி வீச வேண்டும். அது அந்தோணிசாமியின் துப்பாக்கி மீது போய் விழும். இதுதான் கிளைமாக்ஸ் காட்சி’ எனச் சொல்லி இயக்குநர் ஆர்.சி.சக்தி சார் ஸ்கிரிப்ட்டை என்கிட்ட கொடுத்தார். நான் 'தாலியைக் கழட்டி வீசாம, கழற்றி முதல் கணவன் கையில்  கொடுக்கிறதுபோல வெச்சுக்கலாமா?’னு கேட்டேன். 'மொத்தக் கதையிலும் இந்த முடிவுதான் சிறப்பு. அதற்காகத்தான் தயாரிப்பாளர் இந்தக் கதையை வாங்கியிருக்கிறார். ஆகவே, அதை மாற்ற முடியாது’ என்றார். நான் அரை நாள் லீவு கேட்டு, வீட்டுக்கு வந்து அதை மீண்டும் மீண்டும் படித்து நடித்துப் பார்த்து குழப்பத்துடனும் அச்சத்துடனும் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தேன். 'சிறை’ படத்தில் பேசப்பட்டது அந்த கிளைமாக்ஸ்தான்.

அதேபோல்தான் 'சம்சாரம் அது மின்சாரம்’ கிளைமாக்ஸ் காட்சியும். விசு ரொம்ப சீரியஸான ஆள். ஸ்பாட்டில் படப்பிடிப்பைத் தாண்டி வேறு எதையும் பேச மாட்டார். அந்தப் படத்தின் 175-வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர் கையால் விருது வாங்கினேன். அந்த விழாவில் பேசிய விசு, 'மனோரமாவையும் லட்சுமியையும் நம்பி இந்தப் படத்தை எடுத்தேன்’ என்றார். எங்களை நம்பி எடுத்தாரோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு மத்தியதர வர்க்கக் குடும்பத்தின் மனசாட்சியை உலுக்கிய அந்தப் படம் ஒரு டிரெண்ட்செட்டர் ஃபிலிம்!''

லலிதா, திருச்சி.

''பெண் சுதந்திரம் என்பது எது வேண்டுமானாலும் செய்வதா... இல்லை, நியாயமான விஷயங்களைச் செய்ய உரிமைகள் கேட்பதா?''

''நியாயம், சுதந்திரம் என்கிற இந்த இரு வார்த்தைகளின் அர்த்தங்களும், அவரவர் குடும்பம், சமூக வாழ்க்கை சார்ந்து மாறுபடும். 'எது உரிமை?’ என்பதில் தெளிவு இருந்தால், அதைக் கேட்கும் உரிமைகள் மறுக்கப்படுவது இல்லை. தவிரவும் உரிமைகளை யாரும் கேட்டுப்பெறும் சூழல் இங்கு இல்லை. உரிமைகள் இருக்கின்றன. அதை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே,  உரிமைகளும் அது சார்ந்த விஷயங்களும் இடத்துக்கு இடம் அமைகின்றன!''

பிரசன்னா ராமசுப்பிரமணியன், மதுரை.

''திரைத் துறையில் பெண்கள் குறிப்பிடத்தக்க படைப்புகள் எதையும் உருவாக்கவில்லை எனச் சொன்னால், 'அதற்கு ஆணாதிக்கம்தான் காரணம்’ எனச் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?''

''நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லையே. பெண்கள் திரைத் துறையில் வெற்றிபெறவில்லை என்பதே ஏற்புடைய கருத்து அல்ல.  ஓர் இயக்குநராக பெண்கள் ஜொலிக்காமல்போவதற்கும் ஆணாதிக்கம் காரணம் அல்ல. திரைத் துறையில் இயக்குநராக வேலை செய்வதாலேயே, ஒரு பெண் வீட்டில் வேலை செய்யாமல் இருக்க முடியாது. வீட்டுக்கு வந்த பிறகும் குடும்பத்தின் கடமைகளை அவள் செய்தாக வேண்டும். சில ஆண்கள் வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவினால்கூட அது முழுமையானதாக இல்லை. சினிமா என்பது பெரிய கமிட்மென்ட். அதிலும் படம் இயக்குவது என்பது ஆறு மாதங்களுக்கு முழு உழைப்பைக் கொடுக்கவேண்டி வரும். அது பெண்களுக்கு சாத்தியம் இல்லாமல் இருக்கிறதே ஒழிய, பெண்கள் யாரும் படம் இயக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. அரசியலில்கூட முழு நேர அரசியல்வாதிகளாக ஆண்கள் இருக்கும்போது, பெண்கள் வீட்டில் வேலை செய்து கணவனின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறார்கள். ஆனால் அதே பெண் முழுநேர அரசியவாதி ஆகிவிட்டால், குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளைக் கவனிப்பது போன்றவற்றில் பாதி வேலைகளைக்கூட ஆண்கள் செய்வது இல்லை. ஆக பெண்கள் வலுவான படைப்புகளை திரைத்துறையில் உருவாக்காமல் போக நிச்சயம் ஆண்கள் காரணம் அல்ல!''

“நாகேஷ் எனும் ஜீனியஸ்!”

ராம்திலக், கோரிபாளையம்.

''சினிமாவில் சிரமப்பட்டு நடித்த காட்சி எது?''

''வெட்கம்னா என்னன்னே எனக்குத் தெரியாது. நான் நடிச்ச முதல் படம் 'ஜீவனாம்சம்’ல 'லைட்டா வெட்கப்படு’னு இயக்குநர் சொன்னப்போ, 'எப்படி வெட்கப்படுறது?’னு கேட்டவ நான். அப்புறம் ஒருமாதிரி சமாளிக்க ஆரம்பிச்சுட்டேன். அப்படி முதல் தடவை வெட்கப்படுற மாதிரி நடிச்சதுதான், என்னைப் பொறுத்தவரை சிரமமான காட்சி!''

ரா.பிரசன்னா, மதுரை.

''நாகேஷ் அவர்கள் உடன் நடித்த அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்களேன்!''

'' 'ஜீவனாம்சம்’ படப்பிடிப்பில்தான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். நான் அப்போ ஜெய்சங்கர், சிவகுமார், முத்துராமன், ஸ்ரீகாந்த்... ஆகியோருக்கு ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு படத்திலும் ஹீரோக்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால், பெரும்பாலும் நாகேஷ் சார் மட்டும் நான் நடிக்கும் எல்லா படங்களிலும் இருப்பார். மதியம் வரை ஒரு படம், அதற்கு பிறகு இரண்டு மணி நேரம் இன்னொரு படத்தில் நடித்துக் கொடுத்துவிட்டு வருவோம். விஜயா கார்டனில் ஒரு டூயட் பாடல் ஷூட்டிங். நானும் ஜெய்சங்கரும் நடிச்சுட்டு இருந்தோம். யாரோ எழுதிய காதல் கடிதத்தை, நான் எழுதியதாக நினைத்து ஜெய்சங்கர் பாடிக்கொண்டிருப்பதுபோல காட்சி. அந்தப் பாடலுக்கு இடையிடையே அந்தக் கடிதத்தின் வரிகள் ஒலிக்கும். ஆனால், அதைப் பிறகு எடிட்டிங்கில்தான் சேர்ப்பார்கள். அந்தப் பாடலுக்குள் அப்படி ஒரு டயலாக் போர்ஷன் இருப்பது ஜெய்சங்கருக்குத் தெரியாது. இந்த நாகேஷ் என்ன பண்ணார் தெரியுமா..? அந்த டயலாக் பேப்பரை வாங்கி அதை ஒரு கடிதம் மாதிரி மடிச்சு கீழே கடைசியில் 'லட்சுமி’னு என் கையெழுத்து மாதிரி போட்டார். ஜெய்சங்கரிடம் போய் 'இதை லட்சுமி கொடுக்கச் சொன்னா’னு கொடுத்துட்டார். ஜெய்சங்கர் கடிதத்தைப் படிச்சுட்டு என்னை ஒரு மாதிரி பார்த்தார். ஷூட்டிங் தொடங்கிய உடனே, 'உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் லட்சுமி’னு சொன்னார். 'சொல்லுங்கண்ணே’ன். 'இது கொஞ்ச மாச்சும் நல்லா இருக்கா... லெட்டர் எழுதி நாகேஷ்கிட்ட கொடுத்துவிடுறீங்க?’னு கேட்டார். 'என்னது லெட்டரா... நான் எங்கே எழுதினேன்?’னு கேட்டு முழிக்க... ஒரே கலாட்டா ஆயிடுச்சு. அப்புறம்தான் தெரிஞ்சுது அது நாகேஷ் பண்ணின காமெடி. அந்த ஜீனியஸ் கலைஞனை நாங்க ரொம்ப மிஸ் பண்றோம்!''

“நாகேஷ் எனும் ஜீனியஸ்!”

கே.ஆர்.அசோகன், ஃபேஸ்புக்.

''தங்களை செல்லமாகக் கிண்டல் செய்யும் மூன்று தலைமுறையிலும் தலா ஒரு நடிகர் பெயரைக் கூறவும்!''

''சிவாஜி பயங்கரமாக் கிண்டல் பண்ணுவார். 'நடந்து வா’ என்பார். வந்தால், 'பொம்பள மாதிரி நடந்து வா’ என்பார். நானும் சிவகுமாரும் நிறையக் கிண்டல் பண்ணிப்போம். ஒரு கட்டத்தில் கிண்டல், சண்டையாக மாறிடும். ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்காமலேயே, ரெண்டு படங்கள் நடிச்சோம். அவ்ளோ பெரிய சண்டை. அப்புறம் ஒரு நாள் திடீர்னு சமாதானம் ஆகிடுவோம். ஆனா, இந்தத் தலைமுறை நடிகர்கள் பொதுவாக என்னைக் கிண்டல் செய்வது இல்லை. நான் ஏதாவது கலாய்ச்சால்கூட, சும்மா சிரிச்சுட்டுப் போயிடுறாங்க. ஆனா, என்னைப் பார்த்து 'ஆன்ட்டி’னு சொல்றதே பெரிய கிண்டல்தான்... இல்லையா!''

ராமகிருஷ்ணன், சென்னை.

''எழுத்தாளர் ஜெயகாந்தன் உங்களை எப்படி நடிகையாகக் கண்டெடுத்தார்?''

'' 'தமிழை இப்படியும் புரிந்துகொள்ளலாம்’ என புனைவு இலக்கியம் மூலம் எல்லோருக்கும் புரியவைத்தவர் ஜெயகாந்தன். அவரை எப்போது பார்த்தாலும் என் கண்கள் பனிக்கும். காரணம், அவரது கதைகளில் வரும் பெண்கள். கோகிலா, கங்கா, கல்யாணி, சித்தாள்... என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர் ஆழமாக ஊடுருவி, நுட்பமாக அவர்களைப் படைத்திருப்பார். அவர் எழுதிய காலகட்டத்தில் அது பெண்களிடையே பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் கேட்கவேண்டிய பல கேள்விகளை ஜெயகாந்தன் தன் கதைகள் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் அவருடைய கதைகளை வாசித்திருந்தாலும், அவரைப் பார்த்ததுகூட கிடையாது. புகழ்பெற்ற நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மகள் கௌரியும் நானும் நண்பர்கள். அவருடைய வீட்டில் ஷட்டில் விளையாடுவோம். அவர் வீட்டு மாடிக்கு ஜெயகாந்தன், இயக்குநர் மல்லியம் ராஜகோபால் போன்றோர் வருவார்கள். ஆனால், அவர்கள் யார் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அப்போ அவங்க 'ஜீவனாம்சம்’ என்ற படத்தின் 'லலிதா’ கேரக்டருக்கு ஆள் தேடிட்டு இருந்தாங்க. திடீர்னு வீட்டு மாடியில இருந்து கீழே விளையாடிட்டு இருந்த என்னைப் பார்த்த ஒருத்தர், 'அந்தப் பொண்ணை லலிதா கேரக்டருக்குப் போடுங்க’ என்றார். என்னை மேலே கூப்பிட்டு விட்டாங்க. அங்கே பெரிய மீசை வெச்சிருக்கிற ஒருத்தர், 'இவதான் லலிதா கேரக்டருக்கு சரியா இருப்பா... நீ யார் பொண்ணு?’னு கேட்டார்.

நான் உடனே, 'என்னை விசாரிக்கிறீங்களே... நீங்க யாரு?’னு கேட்டேன்.  'இவர்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன்’னு சொன்னாங்க. 'சரி. நான் நடிக்கிறேன். எவ்வளவு பணம் கொடுப்பீங்க?’னு கேட்டேன்’ அப்போது தொடங்கியது அவருடனான பயணம். 'சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் ஒரு காட்சி நான் ஸ்ரீகாந்துடன் டெலிபோனில் பேசிவிட்டு அப்படியே கதறி அழுவேன். ரொம்ப உருகி, கசிந்து அழுதுவிட்டு இயக்குநர் பீம்சிங்கைப் பார்த்தேன். அவர் 'வெல்டன்’ என்றார். அந்த சீனில் என் நடிப்பைப் பார்த்த பலரும் கிளாப் பண்ணாங்க. ஓ.கே-னு இந்தப் பக்கம் திரும்பி ஜெயகாந்தனைப் பார்த்தால், 'ரீ டேக்’ என்றார். 'என் கங்கா எப்படி அழணும்னு எனக்குத் தெரியும். சரியா அழலை திரும்பவும் எடுப்போம்’னு சொன்னார். அந்த சீனை மட்டும் பல முறை மீண்டும் மீண்டும் நடித்தேன். அதுதான் ஜெயகாந்தன்!''

- நிஜம் பேசலாம்...