Published:Updated:

ஜோக்கர், அப்பா, விசாரணை, உறியடி... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க சினிமா விருதுகள்!

ஜோக்கர், அப்பா, விசாரணை, உறியடி... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க சினிமா விருதுகள்!
ஜோக்கர், அப்பா, விசாரணை, உறியடி... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க சினிமா விருதுகள்!

ஜோக்கர், அப்பா, விசாரணை, உறியடி... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க சினிமா விருதுகள்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான விருது வழங்கும் விழா, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2016-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக `விசாரணை', `ஜோக்கர்', `அப்பா' மற்றும் `உறியடி' திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டன. இந்த விழாவில் வெற்றி மாறன், ராஜுமுருகன், சமுத்திரக்கனி, விஜயகுமார் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். 

“காவல்துறை, அடக்குமுறையின் உருவமாகவே தன்னை அடையாளம் காட்டிவருகிறது. தன்னிடம் சிக்கிக்கொள்ளும் அல்லது திட்டமிட்டுச் சிக்கவைக்கிற எளிய மனிதர்கள் மீதும், அப்பாவி மனிதர்கள் மீதும் ஏவல் விலங்காகக் கடித்துக் குதறுகிறது. அதில் சிக்கிச் சிதறுபவர்களின் வாழ்வு, துயரத்தின் இருளுக்குள் தள்ளப்பட்டுவிடுகிறது. அதே சமயம் தன் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருக்கிறது காவல்துறை. வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவான `விசாரணை' திரைப்படம், இந்த இரண்டு புள்ளிகளையும் ஒருசேர அம்பலப்படுத்துவதோடு, சிக்கித்தவிக்கும் மனிதர்களின் வலியையும் துணிச்சலுடனும் பொறுப்புடனும் வெளிப்படுத்தியது'' எனப் பாராட்டி  `விசாரணை' திரைப்படத்துக்கான விருது வழங்கப்பட்டது.

“எல்லா படைப்புகளுமே அரசியல் பேசுகின்றன. ஆனால், தமிழக அரசியலைப் பேசுவது என்பது அபூர்வமாக இருக்கிறது. அரசியலை நேரடியாகப் பேசாத சூழலில், பேசாத அரசியலை துணிந்து பேசியிருக்கிறது `ஜோக்கர்' திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் சாதாரண மக்களிடையே நிலவிவரும் அரசியலை பகடிசெய்கிறது. பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் ஒரு கிராமத்தின் மனிதன் எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்தி, இந்திய அரசாங்க அரசியலில் பீடித்திருக்கும் ஊழலையும் நடைமுறைகளையும் கூர்மையாக விமர்சித்திருக்கிறது `ஜோக்கர்'. சாதாரண மனிதனின் தேவையைக்கூட பூர்த்திசெய்யாத அரசாங்கத்தையும் கேள்விகளால் துளைத்தெடுத்து வெற்றிகரமான படமாக வெளிவந்திருக்கிறது `ஜோக்கர்' திரைப்படம்'  என்று வார்த்தைகளால் வாகை சூட்டி  இயக்குநர் ராஜுமுருகனுக்கு விருது வழங்கப்பட்டது.

‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே... சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!' என்கிறது தமிழ் இலக்கியம். ஆனால், நம் குழந்தையை நாம் சான்றோர் ஆக்குகிறோமா என்ற கேள்வியை, பார்வையாளன் முன் வைக்கிறது `அப்பா' திரைப்படம். சான்றோர் ஆக்குகிறேன் என்ற பெயரில் குழந்தைகளின் கனவைச் சிதைத்து, தந்தையின் மேலாதிக்கத்தை ஒருசேர கேள்விகுறியாக்குகிறது இன்றைய கல்விமுறை. குழந்தைகளின் தனித்தன்மை வெளிக்கொண்டுவருவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்களின் பேராசைகள் குறித்தும் பொதுச் சமூகத்துக்கு எச்சரிக்கைவிடும் பணியை செய்நேர்த்தியுடன் செய்து `அப்பா' திரைப்படத்துக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்திருக்கிறார் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளருமான சமுத்திரக்கனி'' என்று பாராட்டி விருது வழங்கப்பட்டது.

“இந்தியாவில் தொடரும் கொடுரம் ஒன்று உண்டு என்றால், அது சாதியம்தான். இந்திய வாழ்வியலோடு இணைந்திருக்கும் சாதியத்தைப் புரிந்துகொள்ள நுட்பமான புரிதல் வேண்டும். இளம் இயக்குநர் விஜயகுமார் சாதியநுட்பத்தைச் சரியான முறையில் புரிந்துகொண்டு திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து `உறியடி' திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். பெரும்பாலான படங்களில் சாதியப் பெருமைகளைப் பேசிவந்த நிலையில், சாதிய குரூர முகங்களைத் தோலுரித்துக் காட்டி, சாதிச் சங்கங்களில் பின்னப்பட்டிருக்கும் சூழ்ச்சிகளை வெளிகொணர்ந்திருக்கிறது `உறியடி' படம். 

சாதியச்  சங்கங்கள் குறிவைத்துச் செயல்படும் மாணவச் சங்கங்களின் மூலம் இந்தக் கதையை நகர்த்தியிருக்கிறார் விஜயகுமார். சாதியச் சங்கங்கள் அரசியல் கட்சியாக மாற்றிக்கொள்ள நடத்தும் பேராசை அரசியலைப் பேசும் இந்தப் படம், புதிய சக்திக்கு எதிராக மாணவர்கள் ஒன்றுபடவேண்டிய அவசியத்தையும் முதல் முயற்சியிலேயே சுவாரஸ்யத்துடனும் அக்கறையுடனும் பேச முற்பட்டிருக்கும் சிறந்த முயற்சிக்காக `உறியடி' திரைப்படத்தைத் தேர்வுசெய்திருக்கிறோம்'' என்று  பாராட்டி இயக்குநர் விஜயகுமாருக்கு  விருது வழங்கி கெளரவித்தனர். 

இந்த விழாவில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்செல்வன் ``தமிழ்க் கலாசாரத்தைப் பிரதிபலித்து, தமிழர்களின் முகங்களைக்கொண்டு தமிழர்களின் பிரச்னைகளையும் தமிழ்சமுதாயத்தின் மனசாட்சியையும் திரைப்படமாக வார்த்தெடுத்தவர்களுக்கு, இந்த விருது  மேலும் பெருமை சேர்க்கும். இந்த இயக்கத்தின் பிள்ளைகளாக இருந்தவர்கள், இன்று விருது பெறுகிறார்கள் என்கிறபோது மிகுந்த பெருமையாக இருக்கிறது" என்றார்.

“கடந்த ஆண்டு 191 படங்கள் நேரடி தமிழ் மொழியில் வெளிவந்துள்ளன. இதில் மூன்று பேர்கொண்ட தேர்வுக்குழு எட்டு படங்களைத் தேர்வுசெய்தது. செயற்குழுவில் உள்ள 40 பேர் விவாதித்து, நான்கு படங்களைத் தேர்ந்தெடுத்தனர். நீண்ட விவாதத்துக்குப் பிறகு இந்த நான்கு படங்களுக்கு விருது வழங்க முடிவெடுத்தோம்" என்று படங்களைத் தேர்வுசெய்த முறையை விவரித்தார்  முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த கர்ணா. 

“வீட்டில் கழிப்பிட வசதி இல்லை என்பதை காரணம்காட்டி விவாகரத்து கேட்டுப் பெற்றிருக்கிறார் பெண் ஒருவர். இதற்கான தீர்ப்பு, கடந்த வாரம்தான் வெளியானது. கடந்த ஆண்டே இந்தப் பிரச்னை குறித்து திரைப்படத்தின் மூலம் காட்சிப்படுத்திய ராஜுமுருகன் ஒரு தீர்க்கதர்சி. அரசியல் நையாண்டி மூலம் கோமாவில் கிடக்கும் சமுதாயத்தைத் தட்டி எழுப்பியிருக்கிறார் ராஜுமுருகன். 

சமூதாயத்தில் மூன்றுவிதமான அப்பாக்கள் இருக்கிறார்கள். சமுதாயத்தில் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என நினைப்பவர்கள் முதல் வகை அப்பா. `எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள்' எனச் சொல்லி, குழந்தையை வளர்ப்பவர்கள் இரண்டாம் வகை அப்பா. `யாரையும் நம்பாதே!' எனச் சொல்லி குழந்தையை வளர்ப்பவர்கள் மூன்றாம் வகை அப்பா. இதில் முதல் வகை அப்பா, குழந்தைகளுடன் எப்படிப் பழகுவது என்பது குறித்து, ஒரு நண்பனாகவும் ஓர் அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார்  சமுத்திரக்கனி" என்று சொல்லி பாராட்டினார் பத்திரிகையாளர் குமரேசன்.

“நடிகர்கள் பலரும், கெட்டப்பை மட்டும் மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், ஒரே கருத்தைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நடிகனின் ஊடகமாக  திரைப்படங்கள் இருந்த காலம் மாறி, இயக்குநர்களின் ஊடகமாக திரைப்படங்கள் மாறிவருகின்றன. நடிகனுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்த படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதிகாரத்தின் முகத்துக்கு எதிராக உரக்கப் பேசி படங்கள் சிறந்த திரைப்படங்களாகத் தேர்வுசெய்து விருது வழங்கி இருப்பது பாராட்ட வேண்டும்" என்றார் நாடகக் கலைஞர் பிரளயன். 

“தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், எனக்கு சொந்த வீடுபோல. எழுத்தாளர் ஜெயகாந்தன் `இந்தச் சமுதாயம் என்ன கொடுத்ததோ, அதை நான் திருப்பிக் கொடுப்பேன்' என்ற அடிக்கடி சொல்வார். அதைப்போலவே, பொது உடைமை சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் எனக்கு என்ன கொடுத்தார்களோ, அதைத்தான் நான் திருப்பிக் கொடுத்திருக்கிறேன். விருதுக்கு நன்றி!" என நெகிழ்ந்தார் இயக்குநர் ராஜுமுருகன்.

“மிகச் சிறந்த படைப்புகள் வெளிவரும்போது அவற்றைத் தோளில் வைத்துக்கொண்டாடும் உரிமை எழுத்தாளர்கள் உண்டு. அதன் ஒரு பகுதிதான் இந்த விருதுகள். இந்தப் படைப்புகள்தான் நம் சொத்துகள். சின்ன முதலீட்டில் படங்கள் வெளிவந்தாலும், அது பொது புத்தியை வடிவமைக்கிறது. நான்கு திரைப்படங்களும் பல்வேறு போராட்டங்களைக் கடந்து வெற்றி பெற்றிருக்கின்றன. 

அடுத்த மாதம் 16-ம் தேதி, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பணி செய்தவர்களுக்கு 11 விருதுகள் வழங்கவும், அதற்கு அடுத்து தமிழ் வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்களுக்கு விருது வழங்கவும் இருக்கிறோம்'' எனப் பெருமிதம்கொண்டார் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன்.

அடுத்த கட்டுரைக்கு