Published:Updated:

’’ரஜினி மாதிரி ஹேர்ஸ்டைல் வந்தா கெடா வெட்றதா வேண்டிக்கிட்டேன்..!’’ - 'குரங்கு பொம்மை' சிந்தனை

மா.பாண்டியராஜன்
’’ரஜினி மாதிரி ஹேர்ஸ்டைல் வந்தா கெடா வெட்றதா வேண்டிக்கிட்டேன்..!’’ - 'குரங்கு பொம்மை' சிந்தனை
’’ரஜினி மாதிரி ஹேர்ஸ்டைல் வந்தா கெடா வெட்றதா வேண்டிக்கிட்டேன்..!’’ - 'குரங்கு பொம்மை' சிந்தனை

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீஸாகி பலரிடமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது ’குரங்கு பொம்மை’ திரைப்படம். படம் நெடுக சஸ்பென்ஸ் த்ரில்லராக ட்ராவல் ஆகும் கதை, சிந்தனை எனும் கதாபாத்திரத்தினால் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கும். சீரியஸ் திருடனாக நடித்து நம்மை சிரிக்க வைத்த சிந்தனையைத் தேடிப்பிடித்தோம். சுவாரஸ்யமான தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறார், சிந்தனையாக நடித்த கல்கி...

யார் பாஸ் நீங்க... உங்களைப் பற்றி சொல்லுங்க..?

’’அறந்தாங்கிதான் என் சொந்த ஊர். அப்பா, அம்மா விவசாயம் பண்றாங்க. தம்பி ஒருத்தன் இருக்கான். அவனும் ஊருலதான் வேலைப் பார்க்குறான். ஸ்கூல் படிப்பை முடிச்சுட்டு ஐடிஐ சேர்ந்தேன். ஆனால், எனக்குள்ள இருந்த ரஜினி என்னை சும்மா இருக்கவிடலை. ஆமாங்க, ரஜினி சாரோட தளபதி படத்தைப் பார்த்ததில் இருந்து எனக்குள் ரஜினி சார் புகுந்துட்டார். ரஜினி மாதிரி ஹேர்ஸ்டைல் வந்துட்டா உனக்கு கெடா வெட்டுறேன்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டேனா பாத்துகோங்க. நடிக்கணும், நடிக்கணும்னு எனக்குள்ள இருந்த ஆசை, வெறியா மாறுன சமயம் நான் சென்னைக்கு வண்டியேறிட்டேன். 

எதையுமே பயிற்சி இல்லாம பண்ணக்கூடாதுனு ரஜினி சொல்லியிருக்கார். அதுனால, சென்னைக்கு வந்து மைம் கோபி அண்ணாகிட்ட நடிப்புக்குப் பயிற்சி எடுத்தேன். அப்பறம், வாய்ப்புக்கு அலைஞ்சேன். எதுவும் கிடைக்கலை. அமீர் சார்கிட்ட உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். இதை நல்லா நோட் பண்ணிக்கோங்க, உதவி இயக்குநரா இல்ல அவரோட உதவியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். அப்போ அவர் பருத்திவீரன் படம் எடுத்துட்டு இருந்தார். அப்படியே அந்தப் படத்துல நடிச்சிடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா அது நடக்கலை. அந்த சமயத்தில் எனக்கு அறிமுகமானவர்தான் அசோக் குமார். அவரோட ஃப்ரெண்ட்தான் குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நித்திலன். அதுக்கப்பறம் இவங்க ரெண்டு பேரோடுதான் ட்ராவல் பண்ணிட்டு இருந்தேன்.’’ 

நித்திலன் உங்க நண்பரா இருந்தனால இந்தப் படத்தில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சதா..?

’’அப்படியெல்லாம் இல்ல ப்ரோ. இந்தப் படத்தில் நடிகனா நான் கமிட் ஆகுறதுக்கு முன்னாடியே உதவி இயக்குநரா கமிட் ஆகிட்டேன். அப்படி ஒரு நாள் டிஸ்கஸனில் இருக்கும் போதுதான் இந்தச் சிந்தனை கதாபாத்திரத்தைப் பற்றி பேசிட்டு இருந்தோம். இந்த கேரக்டரோட பாடி லாங்வேஜ் எப்படி இருக்கணும்னு நான் நடிச்சி காட்டிட்டு இருந்தேன். அப்போ என் நடிப்பைப் பார்த்த நித்திலன், ‛இந்த கேரக்டர்ல நீயே நடி’-னு சொன்னார். இப்படிதான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சது.’’ 

சிந்தனை கதாபாத்திரத்திற்காக என்ன மாதிரி ஹோம்ஒர்க் பண்ணுனீங்க..?

’’எதுவுமே ஹோம்ஒர்க் கிடையாது, எல்லாமே ஃபீல்டு ஒர்க்தான். எனக்குத் தெரிஞ்ச நண்பர் ஒருத்தர் பிக் பாக்கெட் அடிக்கும் ஒருத்தரை அறிமுகப்படுத்தினார். நான் அவரைப் பார்ப்பதற்காக ஓர் இடத்தில் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அவரு கொஞ்சம் லேட்டா வந்தாரு. வந்ததும், ‘சாரி தல. வர வழியில ரெண்டு போனை அடிச்சுட்டு வர லேட் ஆகிடுச்சு’ன்னு சொன்னார். என்னடா இது ஆரம்பத்துலேயே இப்படியானு எனக்கு ஒதர ஆரம்பிச்சிருச்சு. அப்பறம் அவரோட கேங்கை அறிமுகப்படுத்தினார். படத்தில் நான் யூஸ் பண்ணுன பைக், காஸ்ட்யூம்ஸ், பாடி லாங்வேஜ் எல்லாமே அவங்களைப் பார்த்து கத்துக்கிட்டதுதான். அவங்க எல்லோரையும் பார்த்துதான் சிந்தனை கதாபாத்திரத்தை செதுக்குவோம். ரொம்ப ஓவரா இருக்குல..!!!’’

தியேட்டர்ல ஆடியன்ஸ் எப்படி என்ஜாய் பண்றாங்கனு பார்த்தீங்களா..?

’’படத்தோட ப்ரீமியர் ஷோவுக்கு நிறைய செலிபிரிட்டிகள் வந்தாங்க. இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், ராதா மோகன், பாலாஜி மோகன்னு நிறைய பேரு பாராட்டுனாங்க. பாரதிராஜா சாரும் என் நடிப்பை ரொம்ப ரசிச்சி பார்த்தார். அப்பறம் என்னைக் கூப்பிட்டு, ‘டைரக்டர் மனசில நினைச்சதை ஸ்க்ரீனுக்குக் கொண்டு வரவங்கதான் நல்ல நடிகன். நீ நல்ல நடிகன்டா ’னு பாராட்டினார். அத என்னால மறக்கவே முடியாது. எவ்வளவு பெரிய இயக்குநர், எத்தனை பேரை இயக்கியிருக்கார். அவர் வாயால இப்படி ஒரு பாராட்டு கிடைக்கும் போது ரொம்ப பெருமையா இருந்தது. 

தியேட்டருக்கு போய் ஆடியன்ஸ் எப்படி ரசிக்கிறாங்கனு பார்த்தேன். சீரியஸா படம் போயிட்டு இருக்கும் போது இடையில காமெடி பண்ணினால் சில சமயம் அது மக்களுக்குக் கடுப்பாகலாம். ஆனா, இந்தப் படத்தில் அதை ரொம்ப சரியா நித்திலன் கையாண்டிருக்கார். மக்கள் என் காமெடியை ரசிக்கிறாங்க. அப்பாடா... நான் நடிகனாகிட்டேன்.’’

உதவி இயக்குநர், நடிகர்... எதை தொடர்ந்து செய்யப்போறீங்க..?

‘’நடிக்கணும்னு ஆசைப்பட்டு தான் சினிமாவுக்கு வந்தேன். இடையில தான் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன். நடிகனா எனக்கு முதல் வெற்றி கிடைச்சிருச்சு. இனிமேல் நடிப்பைதான் தொடர்ந்து செய்வேன். சில படங்களில் என்னை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு. இந்தப் படத்தில் என் நடிப்பு நல்லா இருக்குன்னு, பாரதிராஜா சார் அடுத்து நடிக்கிற படத்திலேயும் என்னை நடிக்கச் சொல்லியிருக்கார். அந்தப் படத்துல வித்தார்த்தும் நடிக்கிறார்.’’