Published:Updated:

ஓர் உலகப் போரும் ஒரு சராசரி குடும்பமும்! #EthelAndErnest

ஓர் உலகப் போரும் ஒரு சராசரி குடும்பமும்! #EthelAndErnest
ஓர் உலகப் போரும் ஒரு சராசரி குடும்பமும்! #EthelAndErnest

சாகசங்கள் அல்லாத சாதாரண மனிதர்களைப் பற்றிய இயல்பான திரைப்படம் Ethel and Ernest. கணவனும் மனைவியுமான ஒரு சராசரி குடும்பம் எவ்வாறு உருவாகிறது, எவ்வாறு அவர்கள் மேலெழுந்து வருகின்றனர் என்பதை கடந்த காலத்து வரலாற்றுப் பின்னணியில் நிதானமாக விவரிக்கும் தொலைக்காட்சித் திரைப்படம். 

‘ஐயோ.. சலிப்பாக இருக்குமோ’ என சந்தேகம்கொள்ள வேண்டாம். இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தாய், தந்தையர் எத்தகைய தியாகங்களுக்குப் பின்னால் நம்மை வளர்த்து ஆளாக்குகிறார்கள் என்பதை உணர்வார்கள். தன்னலம் இல்லாத பெற்றோரின் அன்பைப் புரிந்துகொள்வார்கள். எனவே, ஒவ்வொரு சிறாரும் தவறாமல் பார்க்க வேண்டிய படைப்பு இது. 

ரேமண்ட் பிரிக்ஸ் (Raymond Briggs) என்கிற பிரிட்டிஷ் எழுத்தாளரின் கிராஃபிக் நாவலைத் தழுவி இந்தத் தொலைக்காட்சித் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரேமண்ட் பிரிக்ஸ், அடிப்படையில் வரைகலை நிபுணர். கார்ட்டூனிஸ்ட், கிராஃபிக் நாவல் ஆசிரியர் என பன்முகத் திறமையுள்ளவர். தன் பெற்றோரைப் பற்றி அவர் எழுதிய கிராஃபிக் நாவல்தான், தொலைக்காட்சித் திரைப்படமாக உருவாகியுள்ளது. Hand drawn animated film என்பது இதன் சிறப்பு. 

வருடம்: 1928. இடம்: லண்டன். ஏத்தல் என்கிற இளம்பெண் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக இருக்கிறாள். ஜன்னலைத் துடைக்கும்போதெல்லாம் சாலையில் ஓர் இளைஞன் தன்னை நோக்கிப் புன்னகைப்பதை காண்கிறாள். அவன் மீது மெல்ல ஈர்ப்பு உண்டாகிறது. அவன் வராத நாட்களில் ஏக்கம் ஏற்படுகிறது. அந்த இளைஞனின் பெயர் எர்னஸ்ட். பால் சப்ளை செய்யும் பணியில் இருக்கிறான். ஏத்தலைக் காணாவிட்டால் அவனுக்கும் துயரம் உண்டாகிறது. எனவே, ஒருநாள் துணிச்சலுடன் அந்த வீட்டுக்குச் சென்று இளம்பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்துகொள்கிறான். ‘அன்றிரவு நாடகம் பார்க்க வருகிறாயா?’ என்று கேட்கிறான். இளம்பெண்ணும் சம்மதிக்கிறாள். அவர்களின் காதல் மெல்ல வளர்ந்து உறுதியாகிறது. 

எர்னஸ்ட் தன் மீது கொண்டிருக்கும் பிரமாண்டமான அன்பை உணரும் இளம்பெண், அவனை மணக்கச் சம்மதிக்கிறாள். தனது பணியிலிருந்து விலகுகிறாள். இருவரும் தங்கள் உழைப்பால் வரிசை வீடுகளில் உள்ள ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாங்குகிறார்கள். அவர்களுக்கு கைமீறிய செலவுதான் அது. புதிய வீட்டில் இன்பமாக அவர்களின் வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு சராசரியான நடுத்தர வர்க்க குடும்பத்தின் அத்தனை இன்ப, துன்பங்களையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். குழந்தை இல்லையே என்கிற ஏக்கத்துடன் இருக்கிற ஏத்தல், ஒருநாள் தான் கர்ப்பம் அடைந்திருப்பதைக் கணவரிடம் சொல்கிறார். எர்னஸ்ட் உற்சாகமாகக் கூக்குரலிடுகிறார். 

ஆண் குழந்தை பிறக்கிறது. (நாவலை எழுதிய ரேமண்ட்தான் அது). ‘இனிமேல் குழந்தை பிறந்தால், உன் மனைவியை இழக்க வேண்டியதுதான்’ என்று எச்சரிக்கிறார் மருத்துவர். எனவே, தங்களின் ஒரே வாரிசைக் கவனமாக வளர்க்கிறார்கள். எல்லாச் சராசரி சிறுவர்களைப்போல ரேமண்ட் வளர்கிறான். பள்ளியில் சேர்ப்பதற்காக அவனுடைய சுருள் சுருளான தலைமுடி வெட்டப்பட்டது குறித்து தாய் அழுகிறாள். எங்கோ அவன் திருடிவிட்டான் என்பதற்காக, காவல்துறை வந்து எச்சரித்துச் செல்கிறார்கள். மகனைப் போட்டு அடிக்கிறாள் தாய். அதே சமயம், பக்கத்து வீட்டுக்காரி வம்பு பேசும் நோக்கில் விசாரிக்கும்போது மாற்றி சொல்கிறாள். 

ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரான சமயம் அது. இரண்டாம் உலகப் போரின் மூர்க்க கரங்கள், தங்கள் பிரதேசத்தை நோக்கி நீளும் அச்சத்தை உணர்கிறார்கள். எனவேம், சிறுவன் ரேமண்ட்டை மட்டும் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டில் விட்டுவிடுகிறார்கள். தங்களின் ஒரே மகனைப் பார்க்க முடியவில்லையே என்கிற சோகம் ஒருபுறம், போர் சார்ந்த அச்சத்தில் தாம் உயிர் பிழைப்போமா என்கிற நடுக்கம் இன்னொரு புறம்.  சிறுவன் ரேமண்ட் முதன்முதலாக அனுப்பிய கடிதத்தைக் கண்டு, தாய் அத்தனை மகிழ்ச்சி அடைகிறாள். கலை சார்ந்த சார்ந்த பாடப்பிரிவை அவன் தேர்ந்தெடுத்தது குறித்து பெற்றோர் கவலைப்படுகிறார்கள். அவனுடைய வருங்கால வளர்ச்சிக்கு அது உதவுமா என்கிற நடுத்தர வர்க்க கவலை. ரேமண்ட்டின் வருகை, அவனுடைய திருமணம், ஒருவர் பின் ஒருவராக மறையும் பெற்றோர்களின் மரணம் என்பது வரை இந்த அனிமேஷன் திரைப்படம் இயல்பான காட்சிகளுடன் நீள்கிறது. 

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க லண்டனின் சூழல், அப்போதைய கலாச்சாரம், விநோதமான முறையில் இருக்கும் துணி துவைக்கும் இயந்திரம், பாட்டில்களில் பால் வரும் பழைய முறை எனப் பல தொன்மையான விஷயங்களை இந்தத் திரைப்படம் மூலம் அறியமுடிகிறது. லண்டனின் பாரம்பரிய கலாச்சாரம், நிதானமான வாழ்க்கையை அறியும் ருசிக்காகவே இந்தத் திரைப்படத்தைப் பார்க்கலாம். 

எங்கோ நிகழும் போர், ஒரு சராசரியான குடும்பத்துக்குள் எவ்வாறு நுழைந்து அச்சத்தையும் பிரிவையும் உற்பத்தி செய்கிறது என்பது தொடர்பான நுட்பமான காட்சிகள் உள்ளன. எப்போதும் பத்திரிகை படித்துக்கொண்டு தான் சார்ந்திருக்கும் அரசியல் தொடர்பான கருத்துக்களை சொல்லிக்கொண்டிருக்கும் அப்பா, பாமரத்தனமாக இருந்தாலும் அந்தக் கருத்துக்களின் போதாமையைச் சரியாக எடுத்துரைக்கும் அம்மா, மகன் தலைமுடியை சரியாக வாராதது குறித்து இறுதிக்காலம் வரை கவலைப்படும் தாயின் குணாதிசயம், பெற்றொருக்குக் கடிதம் மூலம் தெரிவித்து மனப்பிசகு உள்ள பெண்ணை திருமணம் செய்து அழைத்து வரும் ரேமண்ட், அப்பா வாங்கும் முதல் கார், அதில் தனது மனைவியை அழைத்துக்கொண்டு செல்லும் பெருமித பயணம்... 

இப்படியாக ஒரு நடுத்தர வர்க்கம், சமூகத்தில் மெல்ல மேலெழும் காட்சிகள் நெகிழ்வாகவும் இயல்பாகவும் விவரிக்கப்பட்டுள்ளன. தன் இறுதிக் காலத்தில் அல்சைமர் நோயினால் பாதிக்கப்படும் தாய், தன் கணவனையே ‘யார்?’ என்று கேட்கும் காட்சி உருக்கமானது. ஏத்தல் இறந்த ஒரு வாரத்திலேயே எர்னஸ்ட்டும் கவனிப்பாரின்றி இறந்து கிடக்கும் காட்சி துயரமானது. 

Hand drawn animated film என்பதால், காட்சிகள் அழுத்தமான வண்ணக் கோடுகளான சித்திரங்களாக அமைந்துள்ளன. ஒவ்வொரு பிரேமும் மிகுந்த அழகியலுடன் சிறப்பாக அமைந்துள்ளது. உண்மையான சம்பவங்களை ஒட்டி உருவாக்கப்பட்டிருப்பதாலும், கதையினுள் வரும் ரேமண்ட் என்கிற சிறுவன் பிற்பாடு எழுதிய நாவலே திரைப்படமாகி இருப்பதாலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நம்மால் நெருக்கமாக உணரமுடிகிறது. கதையில் விவரிக்கப்படும் ரேமண்ட், தன் பெற்றோரிடமிருந்து பெரும்பாலும் விலகியே இருக்கிறான். ஆனால், நாவலை எழுதிய ரேமண்ட், தன் பெற்றோரின் ஒவ்வொரு அசைவையும் மிகவும் அனுபவித்து இந்த நாவலை உருவாக்கி இருப்பதைப் பார்த்தால், பெற்றோர் மீது அவர் வைத்திருக்கும் பேரன்பு தெரிகிறது. 

இந்த கிராஃபிக் நாவலுக்குத் திரைக்கதை எழுதி அற்புதமாக இயக்கியிருப்பவர் ரோஜர் மெயின்வுட் (Roger Mainwood). தன் பெற்றோர்களின் அருமையை உணரவேண்டிய சிறார்கள் பார்க்க வேண்டிய அனிமேஷன் திரைப்படம் இது.