Published:Updated:

“அந்தப் பொண்ணு வலியால துடிச்சப்ப ஒரு அம்மாவா அழுதுட்டேன்!” - செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு

“அந்தப் பொண்ணு வலியால துடிச்சப்ப ஒரு அம்மாவா அழுதுட்டேன்!” - செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு
“அந்தப் பொண்ணு வலியால துடிச்சப்ப ஒரு அம்மாவா அழுதுட்டேன்!” - செய்தி வாசிப்பாளர் சுஜாதா பாபு

ன் தொலைக்காட்சியில் கடந்த 17 வருடங்களாக செய்தி வாசிப்பாளராக இருக்கிறார் சுஜாதா பாபு. அவர் உச்சரிக்கும் அழகிய தமிழுக்கு ரசிகர்கள் ஏராளம். அவரோடு ஒரு ஸ்வீட் சாட்...!

''கோயம்புத்தூர் பெண்ணான உங்களுக்கு மீடியா வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?" 

“என் கணவர் கேரளா 'பொதிகை'  டி.வியில கேமராமேனா வேலை பார்த்துட்டிருந்தார். எங்க பையனை பள்ளியில் சேர்க்கிறதுக்காக நாங்க சென்னைக்கு மாறுதலாகி வந்தோம். அப்போதான் பேப்பர்ல வந்த செய்தி வாசிப்பாளர் விளம்பரத்தைப் பார்த்து, 'நீயும் அப்ளை பண்ணேன்'னு என் கணவர் சொன்னார். நானும் நேர்காணலுக்குப் போக, உடனே ஓ.கே சொல்லிட்டாங்க. திருமணத்துக்கு அப்புறமா மீடியாவுக்கு வந்து, இத்தனை வருஷமா தொடர்ந்து கேமராவைவிட்டு விலகாம இருக்கிறதில் சந்தோஷம்!'' 

''17 வருஷமா நியூஸ் வாசிக்கிறீங்க... நிகழ்ச்சித் தொகுப்பாளர், சீரியல் நடிகைனு அடுத்தடுத்து போக நினைக்கலையா?"

“இன்றுவரை எனக்குப் பிடிச்ச வேலையா இது மட்டும்தான் இருக்கு. அதனாலதான் நீங்க சொல்ற வாய்ப்புகள் எல்லாம் கிடைச்சும் மறுத்துட்டேன். இன்னொரு காரணம், இந்த வேலையில் எனக்கு வீட்டைக் கவனிச்சுக்கிறதுக்கான நேரமும் நிறைவா கிடைச்சது. அதனால சின்னத்திரை, வெள்ளித்திரைனு பல வாய்ப்புகள் வந்தும் அதைப் பெருசா எடுத்துக்கலை. இப்போ, சினிமாவில் பேசும்படியான அம்மா கேரக்டர் அமைந்தால் செய்யலாம்னு எண்ணம் இருக்கு.''

''இந்த வேலையில் மறக்க முடியாத அனுபவங்கள்?" 

“நிறைய இருக்கு. முக்கியமா சொல்லணும்னா, கும்பகோணம் தீ விபத்தில் பள்ளிக் குழந்தைகள் இறந்த செய்தியை வாசிக்கும்போது கண்ணீரைக் கட்டுப்படுத்திட்டுதான் வாசிச்சு முடிச்சேன். அந்த நிகழ்வுல இருந்து நான் மீண்டு வரவும் ரொம்பக் கஷ்டப்பட்டேன். அடுத்ததா, வர்தா புயல் ஏற்பட்டப்போ புயல் காற்றும், மழையும் தொடர்ந்து இருந்துச்சு. அப்போகூட என் கணவரும், நானும் ஆபீஸுக்குக் கிளம்பிட்டோம். பாதியளவு கார் தண்ணீரில் மூழ்கின நிலையில், ஒரு வழியா ஆபீஸ் போய்ச் சேர்ந்தேன். அடாத மழையிலும் விடாது நியூஸ் வாசிச்சேன். ஏன்னா, செய்திகளை மக்களுக்குக் கொண்டுசேர்க்கிறது இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் முக்கியமான விஷயம். அந்தப் பொறுப்பு நம்ம கையில இருக்கும்போது, அதை அர்ப்பணிப்போட செய்யணும்னு நினைச்சேன்.'' 

“உங்க பையனும் நியூஸ் ரீடராமே..?”

விதார்த் எங்களுக்கு ஒரே பையன். அதனால ரொம்பச் செல்லம். இப்போ பி.எஸ்சி., பயோமெடிக்கல் படிச்சிட்டு இருக்கான். கொஞ்ச நாள் வசந்த் டி.வி-யில் ஆங்கிலச் செய்திகள் வாசிச்சான். இப்போ அந்த நிகழ்ச்சியை நிறுத்திட்டாங்க. 'அம்மா... நான் ஸ்டூடன்டா இருக்கும்போதே நியூஸ் ரீடர் ஆகிட்டேன் பார்த்தீங்களா'னு அதில் அவனுக்கு ரொம்பப் பெருமை!"  

"உங்களால மறக்கமுடியாத எமோஷனலா விஷயம் ஏதாவது..?"

"நான், என்னுடைய தோழி பூங்குழலி, என்னுடைய பையன் மூணு பேரும் மெரினா பீச்சுக்குப் போயிட்டு ரிட்டர்ன் வந்துட்டு இருந்தோம். அப்போ அங்க கொஞ்சம் பேர் கூட்டமா நின்னுட்டு இருந்தாங்க. என்னனு போய் பார்த்தப்ப, அந்த பீச் ரோட்டுல ஒரு பொண்ணு அடிபட்டு கிடந்ததைப் பார்த்தேன். சுத்தி நின்னவங்க எல்லோரும் அவங்களை வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு ஜீவன் உயிர கையில பிடிச்சுட்டு வலியால துடிக்குறதைப் பார்த்ததும் என் மனசு பதறிடுச்சு. என்ன பண்றதுன்னு தெரியாம என் தோழியும், என் மகனும் யோசிக்கும் போது நான் வேகமா ஓடி ஒரு ஆட்டோவைப் பிடிச்சேன். அதுக்கப்புறம் அந்தப் பொண்ண ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனோம். அங்க போயிட்டு அவங்க சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி வர வெச்சோம். பதறியடிச்சுகிட்டு வந்த சொந்தக்காரங்க அழுதிட்டே என் கையைப் பிடிச்சு நன்றி சொன்னாங்க. எனக்கு அந்தப் பொண்ணு யாருனே தெரியாது.. ஆனாலும், அவ வலியால துடிக்கும் போது ஒரு அம்மாவா நானும் அழுதுட்டேன். அந்த நிகழ்ச்சி நடந்ததுலேருந்து இப்போ வரைக்கும் சும்மா ரோட்டுல நாலு பேர் கூட்டமா நின்னாலும் என்னவோ, ஏதோனு பதறி ஓடுவேன்"

“அப்போ பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கீங்களே..?”

நல்ல சத்தான சாப்பாடும், உடற்பயிற்சியும் இருந்தாலே போதும்... இளமையான தோற்றம் நம்மை விட்டுப் போகாது. உங்களை நீங்க சந்தோஷமா வெச்சிக்கிட்டா, அது கூடுதல் அழகைக் கொடுக்கும்.”

“உங்க டிரஸ் செலக்‌ஷன் குட் அண்ட் நீட்டா இருக்கும். காஸ்ட்யூம் தேர்வு நீங்களேதானா?”

ஆமா... நானேதான். ஆனா புடவை வாங்க மணிக்கணக்கா எல்லாம் செலவு பண்ண மாட்டேன். கடைக்குப் போன ஐந்தாவது நிமிஷம் டிரஸ் பில்லுக்குப் போயிடும். புடவைக்கு ஏற்ற ஆக்ஸசரீஸில் கவனமா இருப்பேன்.”

“இளைய தலைமுறை நியூஸ் ரீடர்களுக்கு உங்க அட்வைஸ் என்ன?” 

“உச்சரிப்பு முதல் உடல்மொழி வரை இந்த வேலைக்கான விஷயங்களை சின்சியரா கத்துக்கோங்க. ஒரே சேனல்லா இருந்தா வளர்ச்சி பெருசா இருக்காது என்பது இல்லை. எங்கே இருந்தாலும் நம்மகிட்ட திறமை இருந்தா நிச்சயம் சாதிக்கலாம். எந்தத் துறையா இருந்தாலும் நம்ம வேலையை நேர்மையா செய்தா அதுக்கான அங்கீகாரம் நிச்சயம் வந்துசேரும்!”