Published:Updated:

`` ‘பாகுபலி’ பல்வாள்தேவனா முதல்ல கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரைத்தான் யோசிச்சாங்க!’’ - ராணா

கீ.இரா.கார்த்திகேயன்
`` ‘பாகுபலி’  பல்வாள்தேவனா முதல்ல கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரைத்தான் யோசிச்சாங்க!’’  -  ராணா
`` ‘பாகுபலி’ பல்வாள்தேவனா முதல்ல கேம் ஆஃப் த்ரோன்ஸ் நடிகரைத்தான் யோசிச்சாங்க!’’ - ராணா

பலமான திரைப்படப் பின்னணி இருந்தும் எந்தவித அலட்டலும் இல்லாமல் தனக்கான கதாபாத்திரத்தைக் கச்சிதமாகச் செய்யும் மிகச் சிலரில் ராணா டகுபதியும் ஒருவர். இதற்கு சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி' படமே உதாரணம்.

ஆம், `எந்தத் துறையில் நீ என்னவாக இருந்தாலும் செய்வதை நேர்த்தியோடும் நேரத்தோடும் செய்து முடி' என்ற தன் தாத்தாவின் அறிவுரையின்படி திரைத் துறையில் பல ஹாட்ரிக் அடித்துவரும் ஸ்டைலிஷ் `பல்வாள்தேவன்' ராணா டகுபதி, ஆசிரியர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் கோவையில் உள்ள ஒரு கல்லூரிக்கு வந்திருந்தார். இவரிடம் பேசினோம்...

“ஆசிரியர்கள், நமக்குப் பல வடிவங்கள்ல அமைவாங்க. அந்த மாதியான ஆசிரியர்கள்தான் எனக்கு இயக்குநர்களா அமைஞ்சாங்க; என்னைச் செதுக்கினாங்க. என்னை ‘லீடர்' தெலுங்குப் படத்துல நடிகனா அறிமுகப்படுத்திய சேகர் கம்முலா, அடுத்து என் வாழ்க்கையையே மாற்றி அமைத்த இயக்குநர் ரோகன் சிப்பி, புதிய விஷயங்களை நோக்கி ஓடச் சொல்லிக்கொடுத்த ராம்கோபால் வர்மா, இவங்க எல்லோரும் கற்றுக்கொடுத்த விஷயங்களை எப்படி மேம்படுத்தணும்னு கூட இருந்து கைடு பண்ண ராஜமௌலி இவங்க எல்லாரும்தான் எனக்கான ஆசிரியர்கள். எனக்குக் கிடைச்ச ஆசிரியர்களால் இந்த மாணவனுக்குப் பெருமை'' 

“தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் நடிக்கும்போது மொழியைத் தவிர்த்து வேறு என்ன வேறுபாட்டை உணர்வீங்க?''

“நேர்மையா சொல்லணும்னா, எந்த வித்தியாசமும் இருக்காது. இந்த மாதிரி பல மொழிகள்ல நடிக்கும்போதுதான் நான் என்னை இந்தியனா உணர்றேன். ‘சினிமா'ங்கிற வணிகம், எல்லா இடத்துலயும் ஒண்ணா இருந்து மக்களை இணைக்கும். எனக்கு ஏன் இப்படிப் பல மொழிகள்ல நடிக்கப் பிடிக்கும்னா, ஒவ்வொரு மொழியைப் பேசுபவர்களிடமிருந்தும் ஒவ்வொண்ணு கத்துக்க முடியும்.''

“ ‘பாகுபலி’ பற்றி இதுவரை சொல்லாத சுவாரஸ்யமான விஷயம்?”

“ ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரியல் தெரியும்ல, அதுல ‘கல் ட்ரோகோ’னு கெத்தான ஒரு கேரக்டர் வரும். அதில் நடிச்சவர் ஜேசன் மொம்மோ. அவருக்கு, முரட்டு உடம்பு. பல்வாள்தேவன்  கேரக்டருக்கு அவரைத்தான் ராஜமௌலி புக் பண்ண நினைச்சாராம். இதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கல. `அவருக்கு மாற்றா நானா!' என்ற ஆனந்தம். அதுவே எனக்கு நல்ல தொடக்கமா அமைஞ்சது.''  

“ராணாவுக்கு `நடிகர்’ தவிர்த்து வேறு முகவரி?''

“என்னை ஒரு நடிகனாத்தான் உங்களுக்குத் தெரியும். நான் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர். Talk Shows நடத்தியிருக்கேன். விஷுவல் எஃபெக்ட்ஸ்ல வேலைபார்த்திருக்கேன். நடிக்கிறதை விட்டுட்டாக்கூட ஏதாவது ஒருவிதத்தில உங்க முன்னாடி நான் வந்துகிட்டே இருப்பேன்.''

“நீங்கள் கத்துக்கிட்ட மிகப்பெரிய பாடம்?''

“எங்கக் குடும்பத்தினர் ஒவ்வொருத்தருக்கும் என் தாத்தாதான் இன்ஸ்பிரேஷன். யார் யார்கிட்ட என்ன திறமை இருக்குங்கிறதைத் துல்லியமா தெரிஞ்சுக்கிட்டு அவங்களுக்குரிய வேலையைக் கொடுப்பார். ஆரம்பத்துல ஒரு விவசாயியா இருந்து, மெட்ராஸ் வந்து பல படங்கள் பண்ணினார். உழைப்பால் மட்டுமே உயர்ந்த என் தாத்தா சொல்வார், `நீ உன் வேலையைச் சரியான நேரத்துல தரமா செய்யப் பழகு. அது உனக்கு வாழ்க்கையில நிறைய கத்துக்கொடுக்கும்'னு. அந்த வார்த்தைகள்தான் எனக்கு இன்னிக்கும் உதவுது.''

“உங்களுக்குப் பிடித்த கோ-ஸ்டார்?”

“அமிதாப் சார், சஞ்சய் தத் சார், அக்‌ஷய் சார் என நிறைய ஜாம்பவான்களுடன் நடிக்கும் பாக்கியம் கிடைச்சுச்சு. எல்லோரையும் பிடிக்கும். தமிழ்ல அஜித் சாருடன் நடிச்சேன். சிறந்த மனிதர். அவர் கூட வேலைசெய்றவங்கமேல ரொம்பவும் அக்கறை  கொண்டவர். அடுத்து பிரபாஸ், ‘பாகுபலி’க்கு அப்புறம் நல்ல சகோதரராகவே மாறிட்டார்.”

“எப்படி இவ்ளோ ஃபிட்டா இருக்கீங்க?''

“அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. ஏதோ கேரக்டருக்குத் தகுந்த மாதிரி உடம்பைத் தயார்படுத்திக்கிறேன். `பாகுபலி'க்காக அஞ்சு வருஷம் உடம்பை அப்படியே வெச்சிருந்ததால, உங்களுக்கு அப்படித் தோணலாம். அதுக்காக அதிகம் சிரமப்பட்டிருக்கேன். ஸ்கூல் பையன் க்ளாஸுக்குப் போற மாதிரி ரெகுலரா ஜிம்முக்குப் போனேன்.''

“பிடித்த செயல்?''

“கதை சொல்வேன். என்கிட்ட நிறைய கதைகள் இருக்கு. எனக்கு, கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். மனசுல தோன்றுவதை எழுதப் பிடிக்கும்.''

“எப்பவும் உங்களுடனே இருக்கும் பொருள்கள்?''

“ம்ம்ம்ம்... கண்ணாடி இல்லைன்னா என்னால பார்த்துப் படிக்க முடியாது. அப்புறம் செல்போன். கூடவே இருக்கும், தவிர்க்க முடியாதது. '' 

“விமர்சகர்களால் படம் பாதிப்படைவது குறித்து சர்ச்சை எழுந்திருக்கு, அதைப் பற்றி  உங்கள் கருத்து?''

“ஒரு படம் வெளிவந்த பிறகு, அந்தப் படத்தைப் பற்றிய  நல்லது கெட்டது சொல்றது பாசிட்டிவ்தான். ஆனா, அது எவ்ளோ நியாயமா இருக்குதுங்கிறது முக்கியம். நெகட்டிவ் ரிவ்யூ வந்து அதிகம் லாபம் ஈட்டிய படமும் இருக்கு; நல்ல ரிவ்யூ வந்தும் ஓடாத படமும் இருக்கு.''

“உங்க அடுத்த படம்”

“இந்த மாசம் `நான் ஆணையிட்டால்’ ரிலீஸ் ஆகுது. பொலிட்டிக்கல் த்ரில்லர். தெலுங்குல `நேனே ராஜு நேனே மந்திரி'னு வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்ற படத்தோட தமிழ் வெர்ஷன் `நான் ஆணையிட்டால்' . அதுக்கப்புறம் இயக்குநர் சத்யாசிவாவோட `மடை திறந்து’ னு ஒரு தமிழ்ப் படம் பண்றேன்.”