Published:Updated:

வருத்தமா வந்தவங்களையும் சிரிக்க வைச்ச குறும்புகாரன்...#5YearsOfVVS

வருத்தமா வந்தவங்களையும் சிரிக்க வைச்ச குறும்புகாரன்...#5YearsOfVVS
வருத்தமா வந்தவங்களையும் சிரிக்க வைச்ச குறும்புகாரன்...#5YearsOfVVS

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குவந்து, ஐந்து படங்கள் நடித்து முடித்திருந்த சிவகார்த்திகேயன் எனும் வளரும் நடிகருக்கு ஆறாவது படமாக அமைந்து, அவரை அடுத்த லெவலிற்கு அழைத்துச் சென்ற படம் `வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. கலர் வேட்டிக்கு மேட்சாக சட்டை அணிந்துக்கொண்டு, சங்கம் ஒன்று அமைத்து லந்து பண்ணிக்கொண்டு, லவ்விக்கொண்டு வெட்டியாய் ஊரை சுற்றித்திரியும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை கலக்கலாக, கலர்ஃபுல்லாக பதிவு செய்தது இந்தப் படம். 

சிவனாண்டி - ஃபாதர் ஆஃப் துப்பாக்கி :

முகத்தில் பெரியமீசை, தோளில் பெரியத்துப்பாக்கி என `டுபுடுபு' புல்லட்டில் தோரணையாய் என்ட்ரி கொடுப்பார் சத்யராஜ். அந்த தோரணையையும், கெத்தும்தான் சிவனாண்டி கதாபாத்திரம். ஒருபுறம் 'உசுர விட கௌரவம்தான் பெருசு' என வரட்டு கௌரவம் காட்டி மீசையை முறுக்கிவிடுவதாகட்டும், ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் போடச்சொல்லி கேட்பதாகட்டும்... மிரட்டியிருப்பார் மனிதர். எல்லா கிராமங்களிலும் சிவனாண்டி போன்ற பெரிய தலக்கட்டுகளுக்கு பின் `தெய்வமே... நீங்க எங்கேயே போயிட்டீங்க' என ஏத்திவிட நான்கு பேர் இருப்பார்கள். இங்கேயும்தான். 'நம்ம எல்லாத்துக்கும் சிவனாண்டியைப் பிடிச்சுருக்க மாதிரி, சலிக்கும் சிவானாண்டியை ரொம்ப பிடிச்சுருக்கு போல' என்ற ஒருவசனம் அவர்களுக்கான ஒரு சோற்றுபதம். உண்மையில், ஊருக்குள் வரட்டு கௌரவமும், வெட்டி பந்தாவும் காட்டித்திரியும் வெள்ளை வேட்டிக்காரர்களை, சிவனாண்டி கதாபாத்திரம் மூலம் நையாண்டி செய்திருப்பார் இயக்குநர் பொன்ராம்.

வசீகரிக்கும் வசனம் :

இப்படத்தின் வசனங்களுக்கு ராஜேஷ். `சிவா மனசுல சக்தி', `ஒரு கல் ஒரு கண்ணாடி' என நகரம் சார்ந்தப் படங்களில் நக்கல் வசனம் எழுதிக்கொண்டிருந்த ராஜேஷ், `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மூலம் கிராமத்து ஏரியாவிலும் வசனங்களில் புகுந்து விளையாடியிருப்பார். அதிலும் சூரியின் `டொமாட்டோ' போன்ற வசனங்கள் அகராதிக்கே புதிது. வசனங்கள் அனைத்தும் எல்லா மத்தியிலும் வரவேற்பினைப் பெற்று சில நாட்களுக்கு கலாய் கவுன்டர்களாக பயன்படுத்தப்பட்டது.

'உனக்கு பிடிக்குமா... எனக்கும் பிடிக்கும்ம்ம்'

`அய்யயோ ஏட்டய்யா காமெடி பண்ணிட்டாரு....`

`இதெல்லாம் நான் பேசுனா சிரிச்சிருவாங்கப்பா....`

`அவன் கருப்பன் இல்லையா எங்க அப்பன் களவாணி பையன்யா..` 

`சிங்கார சிட்டு, சிவப்பு ரோஜா மொட்டு..`

`துப்பாக்கினா தோட்டா இருக்கணும், ஃப்ளக்ஸ்னா எங்க போட்டா இருக்கணும்..`

`கருப்பன் குசும்புக்காரன்...`

`நீங்க கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க. திருவிழா நடத்துங்க நடத்தாம போங்க..ஆனா, எங்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தே ஆகணும்..ஆன்ன்ன்ன்...` போன்ற வசனங்கள் இன்று வரை மீம்கள், டப்ஸ்மாஷ்கள் வாயிலாக வலம் வந்து மக்களை வயிறு குழுங்கச் சிரிக்க வைக்கிறது. 

போஸ்பாண்டி - கோடி காம்போ :

சிவகார்த்திகேயன் அஜித் பாடலை ஒலித்தும், சூரிக்கு சூர்யாவின் பாடலை ஒலித்தும் என்ட்ரி கொடுத்தது ஏலியன் லெவல். கல்யாணம் முதல் காதுகுத்து வரை எந்த ஏரியாவில் எந்த விசேஷம் நடந்தாலும் ஊர் முழுக்க ப்ளெக்ஸும், பேனரும் வைத்து, அந்த கிராமத்தையே பிளாஸ்டிக் சூழ் உலகமாக மாற்றுவதுதான் இவர்களின் சங்கத்தின் ஒரே வேலை. சிவாண்டியை சீண்டி விளையாடுவது, துப்பாக்கியை திருடி கிரிக்கெட் விளையாடுவது என சத்யராஜை எதிர்த்து இவர்கள் செய்யும் லூட்டிகள் ஆகச் சிறப்பு. சிவா - சூரி காம்பினேஷன் மக்கள் மத்தியில் மார்க் அள்ளியது. இந்த காம்போ `வெற்றி' காம்போ ஆகி, இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆன்ன்ன்ன்ன்ன்...

கலர்ஃபுல் பாடல்கள் :

நகைச்சுவை காட்சிகளுக்கு அடுத்ததாக படத்தின் பெரும் ப்ளஸ் பாடல்கள்தான். இமானின் துள்ளலான இசைக்கு, யுகபாரதியின் வரிகளும் பாடல்களுக்கு மேலும் எனர்ஜி கூட்டியது. கிராமத்து இளைஞர்கள் மாஸ் காட்ட 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்',  காதலர்களுக்கு 'பார்க்காத, பார்க்காத...', சூப் கேர்ள்ஸ்களுக்கு 'என்னடா, என்னடா...', சூப் பசங்களுக்கு 'இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சு டா...', ஒன் சைடு லவ்வுக்கு 'ஊதா கலரு ரிப்பன்' என படத்தின் ஒட்டுமொத்த பாடல்களும் அடுத்த ஒருமாதத்துக்கு ரிப்பீட் மோடில் ஒலித்தது.

போஸ்பாண்டி சிவனாண்டியிடம் மோதல், லதாபாண்டியிடம் காதல், கோடியுடன் செய்த அலப்பறை, இமானின் அசத்தல் இசை, ராஜேஷின் கலாய் வசனங்கள் அனைத்தையும் திருவிழா தோரணம் போல் இயக்குநர் பொன்ராம் கச்சிதமாய் கட்டிமுடிக்க, பட்டிதொட்டியெங்கும் பட்டயைக் கிளப்பியது இந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இதே பார்முலாவில் அடுத்தடுத்து வந்தப் படங்கள், `வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை டிரெண்ட் செட்டர் சினிமாகவே மாற்றியது. 

அடுத்த கட்டுரைக்கு