Published:Updated:

'எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது கிடைக்கும் காலம் வரும்'

 'எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது கிடைக்கும் காலம் வரும்'
'எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது கிடைக்கும் காலம் வரும்'

'எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது கிடைக்கும் காலம் வரும்'

சென்னை: எம்.எஸ்.விஸ்வநாதன்,ராமமூர்த்திக்கு நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும்.அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்று சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்மைச்சர் ஜெயலலிதா கூறினார்.

மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்,டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த விழாவுக்கு,ஜெயலலிதா தலைமை தாங்கி,எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு `திரை இசை சக்கரவர்த்தி' என்ற பட்டத்தை வழங்கினார்.அதையடுத்து எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 60 பொற்காசுகள் கொண்ட பொற்கிழியையும், போர்டு பியஸ்டா' காரையும் வழங்கி கவுரவித்தார்.

 'எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது கிடைக்கும் காலம் வரும்'



அதைத்தொடர்ந்து மூத்த இசைக் கலைஞர்களான டி.எம்.சவுந்தரராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ்,பி.சுசீலா,ஏ.எல்.ராகவன்,எம்.எஸ்.ராஜேஸ்வரி, வாணி ஜெயராம், ஜமுனாராணி, ஜெயச்சந்திரன்,எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய ஜெயலலிதா,"நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த ``ஜெனோவா'' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எஸ்.விஸ்வநாதன், `பணம்' திரைப்படம் முதல் ``ஆயிரத்தில் ஒருவன்'' திரைப்படம் வரை டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்து 700-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 1,200-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டிசைத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனையே சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான்.

எல்லையே கிடையாது

 'எம்.எஸ்.வி.க்கு பத்ம விருது கிடைக்கும் காலம் வரும்'

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான `நீராருங் கடலுடுத்த' என்ற பாடலுக்கு இசையமைத்து அனைத்து தமிழர்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர் எம்.எஸ். விஸ்வநாதன்.

சி.ஆர்.சுப்பராமன் என்ற மிகப்பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தவர் டி.கே. ராமமூர்த்தி. அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். எதிர்பாராத சூழ்நிலையில் சுப்பராமன் இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாக பல திரைப் படங்களுக்கு இசையமைத்து நம்மை எல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள்.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது. 1950-களிலும், 1960-களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன.

இவர்களுடைய பாடல்கள் ஜனரஞ்சகமாகவும், கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும்.அதனால்தான் இவர்களுடைய பாடல்கள் எல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன.தியேட்டரில் ஒரு முறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் மனதில் பதிந்துவிடும்.என் மனதில், குழந்தையாக இருந்தபோது, அப்படித்தான் பதிந்துவிட்டன.என் உயிர் மூச்சு உள்ளவரை, அந்தப் பாடல்கள், என் மனதைவிட்டு அகலாது.

இந்தியாவை எத்தனையோ அரச வம்சங்கள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தை தான் "பொற்காலம்'' என்று சொல்வார்கள். அதுபோல, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் என்று சொல்லலாம்.

பத்ம விருது


இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும், அவர்களுக்கு தேசிய விருது, பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதிற்கு இவர்களின் பெயர்களை மத்திய அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு,அதற்கு செவி சாய்க்கவில்லை.

"ஜனாதிபதி அவார்டு வேண்டாம்,ஜனங்க அவார்டு போதும்''என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம்.எஸ்.வி. கூறினாலும்; நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இந்த விழாவில்,அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள்,நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன் உள்ளிட்ட  நடிகர், நடிகைகள்,இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள்,திரைப்படத் தயாரிப்பாளர்கள், சினிமா டைரக்டர்கள்,  ஜெயா டி.வி. குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
 

அடுத்த கட்டுரைக்கு