Published:Updated:

“விஜய் சேதுபதிக்கு தம்பி, 'கயல்’ ஆனந்திக்கு ஜோடி!" - ‘விவசாயி' பக்கோடா பாண்டி

“விஜய் சேதுபதிக்கு தம்பி, 'கயல்’ ஆனந்திக்கு ஜோடி!" - ‘விவசாயி' பக்கோடா பாண்டி
“விஜய் சேதுபதிக்கு தம்பி, 'கயல்’ ஆனந்திக்கு ஜோடி!" - ‘விவசாயி' பக்கோடா பாண்டி

பக்கோடா பாண்டி. பாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க’ படத்தில் சிறுவனாக அறிமுகமானவர். இவர் தற்போது தன் பெயரை தமிழ் என மாற்றிக்கொண்டு ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இதில் இவருக்கு ஜோடி ‘கயல்’ ஆனந்தி. குழந்தை நட்சத்திரம் ஹீரோ பயணத்தை கலகலப்பாக பகிர்ந்துகொள்கிறார் பாண்டி என்கிற தமிழ்.

“புதுக்கோட்டை பக்கம் பனையப்பட்டிதான் என் ஊர். அப்பா ஒரு விவசாயி. எங்களுக்கு சொந்தமா ஒரு பரோட்டா கடை இருக்கு. ஸ்கூல் முடிஞ்சதும் நேரா கடைக்குப்போய் அப்பாகூட சேர்ந்து நானும் பரோட்டா போடுவேன். இப்படி போயிட்டு இருந்த சமயத்தில், ஒருமுறை இயக்குநர் பாண்டிராஜ் சார் எங்க ஸ்கூலுக்கு வந்தார். சாருக்கு எங்க ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி உள்ள விராச்சிலைதான் சொந்த ஊர். அவரை எங்க வீட்ல உள்ளவங்களுக்கும் நல்லா தெரியும். நான் படிச்ச ஸ்கூல்லதான் பாண்டிராஜ் சாரும் படிச்சார். அவர் படிக்கும்போது ஹெச்.எம்மா இருந்தவர்தான் நான் படிக்கும்போதும் ஹெச்.எம். 

ஏதோ ஒரு புத்தகத்தை விற்க வந்திருக்கிறதா சொல்லித்தான் பாண்டிராஜ் சார் அப்ப ஸ்கூலுக்கு வந்தார். எல்லா குழந்தைகளையும் பார்த்து போட்டோ எடுத்துக்கிட்டார். அப்ப அவரைச்சுற்றி ஏகப்பட்ட கூட்டம். ‘என்னடா கூட்டமா இருக்கேனு, நானும் போய் நின்னு வேடிக்கை பார்த்தேன். அப்ப என்னையும் ஒரு போட்டோ எடுத்துகிட்டார். அவர் தன் படத்தில் நடிக்க ஸ்கூல் பசங்களை தேடிட்டு இருந்த விஷயம் அப்ப எனக்கு தெரியாது. பிறகு இரண்டு நாள் கழிச்சு எங்க வீட்டுக்கு வந்த பாண்டி சார் என் அம்மாட்ட பேசினார். என் நல்ல நேரம் நான் சினிமாவுல நடிக்க அம்மாவும் ஒப்புக்கிட்டாங்க. 

‘பசங்க’ பட ஷூட்டிங் புதுக்கோட்டை பக்கத்துலதான் நடந்துச்சு. ஊரே கூடி நின்னு ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அந்தப் படத்தில் 'ஜீவாவுக்கு கோபம் வந்துருச்சு'னு நான் பேசின ஒரு டயலாக் பயங்கர ஃபேமஸ். ஷூட் பண்ணும்போது அதுதான் அதிக டேக் வாங்கின டயலாக். அதில் பல காட்சிகளை இப்பப் பார்த்தாக்கூட, ‘நாமளா இப்படி நடிச்சியிருக்கோம்’னு ஆச்சர்யமா இருக்கும். ரொம்ப நேரம் சைக்கிள் ஓட்டிகிட்டே ஜீவாட்ட பேசுற காட்சியையெல்லாம், எப்படி பண்ணுனேன்னு இப்பவும் ஆச்சர்யம்தான். படப்பிடிப்பில் டயலாக்ஸ் சரியா பேசலைனா தலையிலே ஒரு கொட்டு கொட்டிட்டு திரும்ப அந்த டயலாக்ஸை பாண்டி சார் சொல்லித் தருவார். அந்தக் கொட்டுகள் ஒவ்வொண்ணும் ஒரு பாடம். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. சென்னைக்கு எப்ப வந்தாலும் சார் வீட்லபோய் அவரை பார்த்துட்டுதான் வருவேன். 

இப்பக்கூட ‘பசங்க’ பட பசங்களோட தொடர்பில்தான் இருக்கேன். பிறகு நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது 'மெரினா' படம் பண்ணினேன். தவிர ‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’னு தொடர்ந்து பாண்டிராஜ் சார் தன் மூன்று படங்கள்லயும் என்னை நடிக்கவெச்சார். ‘பசங்க-2’வுலயும் ஒரு காட்சியில நடிக்கவெச்சார். அந்த சமயத்துலதான் சாரின் உதவி இயக்குநர் வள்ளிகாந்த் சார் எனக்கு அறிமுகம். அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டி. எப்ப எந்த உதவின்னாலும் செய்வார். பிறகு விஜய் மில்டன் அண்ணாவின் 'கோலி சோடா' படத்தில் நடிச்சேன். 

பாண்டிதான் என் ஒரிஜினல் பெயர். ‘பசங்க’ படத்தில் இருந்து என் பெயர் ‘பக்கோட பாண்டி’னு மாறினுருச்சு. எல்லாருக்கும் பக்கோட பாண்டினு சொன்னாதான் தெரியும். எனக்கு குட்டி தங்கச்சி பாப்பா இருக்காங்க. ஒண்ணாம் வகுப்பு படிக்குறா. என் பெயர் பாண்டியை சேர்த்து அவளுக்கு பாண்டி மீனாள்னு பேர் வெச்சிருக்கோம். ரொம்ப சுட்டி. நான் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆனாலும், ''ஹீரோ சார் சீக்கிரம் வீட்டுக்கு வாங்க’னு போன் பண்ணிடுவா. 

இப்ப என் பெயரை நியூமராலஜிபடி ‘தமிழ்’னு மாற்றியிருக்கேன். ‘என் ஆளோட செருப்பைக் காணோம்' படத்தில் ஹீரோவா அறிமுகமாவதால்தான் இந்த பெயர் மாற்றம். இந்தப் பட வாய்ப்பும் எனக்கு பாண்டிராஜ் சார் மூலமாத்தான் அமைஞ்சது. அவர்தான் என்னை இந்தப்பட இயக்குநர் ஜெகன் சார்ட்ட அறிமுகப்படுத்தி வெச்சார். படத்தில் கிருஷ்ணா என்கிற கிட்டா கேரக்டர். இதில் ஆனந்திகூட நடிக்கப்போறோம், அதுவும் ஹீரோவா நடிக்கப்போறோம்ங்கிற விஷயம் இந்தப்பட ஆடிஷனுக்காக சென்னை வந்தப்பக்கூட எனக்குத் தெரியாது. பிறகு ‘ஆனந்திகூட நடிக்கப்போறேன்’னு நண்பர்களிடம் சொன்னப்பக்கூட யாரும் அதை நம்பலை. படத்தோட ஸ்டில்ஸைப் பார்த்துட்டு ‘நீ சொல்றதை நம்புறோம்’னு இப்பதான் சொல்றாங்க. இப்ப அந்தப் பட ரிலிஸுக்காக என் காலேஜ் மொத்தமும் காத்திருக்காங்க. 

‘ஏற்கெனவே ஹீரோயினா நடிக்கிறவங்க, நான் புதுமுக ஹீரோ. அதனால ஆட்டிடியூட் காட்டுவாங்களோ; கொஞ்சம் தலைக்கணத்தோட நடந்துக்குவாங்களோ’னு ஆனந்திகூட நடிக்கும்போது பயந்தேன். ஆனா, அவங்க ரொம்ப கேஸுவலா பழங்குனாங்க. ஜெகன் சாரும் படத்தில் நடிக்கும்போது நிறைய சுதந்திரம் கொடுத்தார். அவர் எழுதி கொடுக்கும் வசனங்களை அப்படியே மனப்பாடம் செய்து சொல்லுணும்னு எதிர்பார்க்கமாட்டார். நாம அதில் யதார்த்தமான விஷயங்களை சேர்த்து பேச அனுமதிப்பார். கதைப்படி இதில் முக்கால்வாசி படம் கையில் கட்டுடன்தான் வருவேன். இதுக்காக கிட்டத்தட்ட 50 நாள்கள் கையில் கட்டுடன் இருந்தேன். படத்தின் ஷூட்டிங் முடியும்வரை வலது கையில் கட்டு இருந்தது. படப்பிடிப்பு முடிஞ்சு கட்டை பிடிச்சதும், ‘என்னடா எதோ மிஸ் ஆகுதே’னு நானே கைக்கட்டைத் தேட ஆரம்பிச்சுட்டேன். 

எனக்கு நடிக்கிறது பெரிய கஷ்டமா இருந்தது இல்லை. இந்த டான்ஸ்தான் பெரிய சவால். அதனால தீவிரமா டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன். நடிப்புங்கிற ஒண்ணு இல்லைனா நான் என்னவாகியிருப்பேன்னு நினைச்சுப்பார்க்கவே பயமா இருக்கு. வீட்டில் ஒரே பையன், அதனால் அதிக செல்லம். காலேஜுக்குகூட சென்னைக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்லிட்டாங்க. புதுக்கோட்டையிலேயே ஜெ.ஜெ. கல்லூரியில் விஸ்காம் ஃபைனல் இயர் படிக்கிறேன். படிப்பு, நடிப்பு தவிர எனக்கு விவசாயம் பண்றதுல ரொம்ப ஆர்வம். சொந்த நிலத்துல விவசாயம் பண்ணிட்டு இருக்கேன். 

எல்லாரும், ‘ஆனந்தியுடன் நடிச்சாச்சு. அடுத்த ஹீரோயின் யார்’னு கேக்குறாங்க. 'சத்தியமாக எந்த ஆசையும் இல்லை. என் கேரக்டரை மட்டும் நல்லா நடிச்சிட்டா போதும். மத்தபடி எனக்கு விஜய் சேதுபதி அண்ணாவை ரொம்பப் பிடிக்கும். அவரோட தம்பியா நடிக்க வாய்ப்பு வந்துச்சுன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன்.”