Published:Updated:

இந்தக் காதல் கதை இனிக்குதா... கசக்குதா? - ‘காதல் கசக்குதய்யா’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இந்தக் காதல் கதை இனிக்குதா... கசக்குதா? - ‘காதல்  கசக்குதய்யா’ விமர்சனம்
இந்தக் காதல் கதை இனிக்குதா... கசக்குதா? - ‘காதல் கசக்குதய்யா’ விமர்சனம்

மெச்சூரிட்டி + புறத்தோற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் தன்னைத் தேடி வரும் காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் தவிக்கும் ஓர் இளைஞனின் கதையே, 'காதல் கசக்குதய்யா'.

லவ் பண்ற பொண்ணுக்காக சண்டை போடுறது, அந்தப் பொண்ணு வேற ஒருத்தனோட ரிலேஷன்ஷிப்ல இருக்குறான்னு தெரிஞ்ச உடனே அவளுக்கான மவுசு அதிகமாகுறது எல்லாம் வழக்கமான ஸ்கூல் லவ் ஸ்டோரில வர்ற டெம்ப்ளேட் காட்சிகள்தான். அதுவே அந்த ஸ்கூல் பொண்ணு லவ் பண்ற பையனுக்கு  25 வயசுனா.. என்னெல்லாம் நடக்கும்? அவங்களுக்குள்ள எந்த மாதிரியான ஈகோ  மோதல் வரும்? ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிற அளவுக்கு ஸ்பேஸ் இருக்குமா? - இப்படி பல கேள்விகள் நம்ம மனசுக்குள்ள வரலாம். அதெப்டிங்க... வீட்ல பொண்ணு பார்க்கும்போது மட்டும் பையனைவிட பொண்ணு அஞ்சு பத்து வயசு சின்னப் பொண்ணாத்தான் பார்ப்போம். அதே ஃபார்முலாவை லவ்ல கொண்டு வந்தா என்ன தப்புங்கிற கேள்வியைத்தான் அறிமுக இயக்குநர் துவாரக் ராஜா கேட்கிறார்.  `மாலை நேரம்' என்ற பெயரில் முன்புதான் எடுத்த குறும்படத்தை இன்னும் சில சுவாரஸ்யங்கள் சேர்த்துப்  படமாக்க முயற்சித்திருக்கிறார். 

அறிமுக கதாநாயகி வெண்பா, பன்னிரெண்டாவது படிக்கிற ஸ்கூல் பொண்ணு. காதலிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் போது ஹீரோ துருவா கண்ணுலபடுறாரு. அறிமுகக் காட்சியே ஹீரோ ரெண்டு கையில சிகரெட்டை வெச்சு மாத்தி மாத்தி புகை விட்டுட்டு இருக்கிறதுதான். அந்த ஹீரோயிசத்தைப் பார்த்து வெண்பா காதல்ல விழறாங்க. ரீசார்ஜ் கடையில இருந்து துருவோட போன் நம்பரை திருட்டுத்தனமா எடுத்து போன் பண்ணிப் பேசுறாங்க. ரெண்டு பேரும் மறுநாள் சந்திக்கலாம்னு முடிவெடுக்குறாங்க. பல எதிர்பார்ப்புகளோட ஹீரோ வெண்பாவுக்காக பூங்காவுல காத்திருக்கும்போது, வெண்பா ஸ்கூல் யூனிஃபார்ம்ல வர்றாங்க. அவங்களைப் பார்த்ததும், ஹீரோ மனசுல கட்டி வச்சிருந்த கனவுக்கோட்டை, அப்படியே சிதைஞ்சு சின்னா பின்னமாப் போயிருச்சு. அத்தனைக்கும் காரணம், வெண்பாவோட தோற்றமும், ஸ்கூல் பொண்ணுன்ற காரணமும்தான். இந்தச் சின்ன பொண்ணையா பார்க்க வந்தோம்னு ஹீரோ சங்கடத்துக்கு ஆளாகுறாரு. அதுக்குப் பிறகு அவங்களுக்குள்ள எப்படி லவ் வளருது. அதனால வர்ற சங்கடங்கள்னு மாறிமாறி கதை டிராவல் ஆகுது. வயது வித்தியாசத்தையும் தாண்டி இவங்க காதல் கைகூடியதா, இல்லையா என்பதுதான் மீதிக் கதை. 

படத்தின் ஹீரோ துருவா துறுதுறுவென நடித்திருக்கிறார், ஹீரோயின் 'யாருப்பா இந்த பொண்ணு, எனக்கே பாக்கணும் போல இருக்கே' என கேட்க வைக்கிறார், செம க்யூட் டால். இவர்கள் இருவரையும்விட கொஞ்ச நேரமே வந்தாலும் படத்தில் முக்கிய பாத்திரத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார் நடிகை கல்பனா. இதுதான் இவங்களுக்கு கடைசி படமாம்ல? வீ மிஸ் யூ கல்பனா மேம். 

பிரேக்அப்-களுக்குக் காரணம் மனப்பக்குவம்தான். தட் மெச்சூரிட்டி லெவல். இதையெல்லாம் தாண்டி ஒரு ஸ்கூல் பொண்ணும், சாஃப்ட்வேர் இன்ஜினியரா வேலை பாக்குற 25 வயசு பையனும் லவ் பண்ணா என்ன நடக்கும்? அதுல அந்த 'மெச்சூரிட்டி லெவலை' திணிக்கப் பார்த்தா, அவங்களுக்குள்ள ஏற்பட்ட காதல் எப்படியெல்லாம் வாழ்க்கையில மாற்றங்களைக் கொண்டுவரும்?னு சொல்லி இருக்குற விதம் ஓகே. பள்ளி மாணவிக்குத் தன்னைவிட வயது கூடிய ஆணின் மீது காதல் என்ற கான்செப்ட் சினிமாவுக்குப் புதிதல்ல. 'விடுகதை', 'சீனி கம்' போன்ற முந்தைய சினிமாக்களைப் புரட்டிப் பார்த்தால் நிறைய இருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் எடுக்காமல் அன்றாடம் நம் தெருவில் நாம் சந்திக்கும் யூத்துகளின் சேட்டைகளையும் அவர்களுக்கிடையே இயல்பாக அரும்பும் க்ரஷின் இன்னொரு பக்கத்தை விரசமில்லாமல் பாஸிட்டிவாக காட்டியிருப்பது புதுசு.  நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் லிங்கா மற்றும் ஜெய கணேஷின் கலாய் சீன்கள் ஆபாசம் துளியுமின்றி இயல்பாக இருப்பதால் ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. 

வயது பிரச்னை, பள்ளிப்பருவத்தில் காதல், மெச்சூரிட்டி எனப் பெரிய பெரிய வார்த்தைகள் படம் நெடுக இருக்கிறது. ஆனால், அதற்கான தெளிவுகளோடு இன்னும் அழுத்தமான காட்சிகளை வைத்திருக்கலாம்.  இறுதியில் சாராசரியான காதல் படமாகவே முடிகிறது. சமீபகாலமாக இரண்டாவது ரவுண்டு வரும் சார்லியை இன்னும்கூட நன்கு பயன்படுத்தியிருக்கலாம். தரணின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பெரியளவில் கவரவில்லை.. 

இன்னும் கொஞ்சம் பழுத்திருந்தால், காதல் இனித்திருக்குமய்யா..!