Published:Updated:

“ஆரம்ப நாள்களில் இசைக் கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன்!” மனம் திறக்கும் ரஹ்மான் #OneHeart #ARRahman

விகடன் விமர்சனக்குழு
“ஆரம்ப நாள்களில் இசைக் கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன்!” மனம் திறக்கும் ரஹ்மான் #OneHeart #ARRahman
“ஆரம்ப நாள்களில் இசைக் கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன்!” மனம் திறக்கும் ரஹ்மான் #OneHeart #ARRahman

``ஆரம்ப நாள்களில் இசை மேடைகள், இசைக்கச்சேரிகள் என்றாலே நடுங்குவேன். காரணம் என்ன தெரியுமா? பாடல்களுக்காக பல மாதங்களாக கஷ்டப்பட்டு நான் உருவாக்கிய நுட்பமான சத்தங்கள் ஆடியோவில் கேட்ட தரத்தில் மேடைகளில் இருக்காமல் வேறுமாதிரி ஒலித்து மொத்தப் பாடலையும் கெடுத்துவிடும். இதனாலேயே பல நாள்கள் தூக்கமிழந்து தவித்திருக்கிறேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் `பளிச்' புன்னகையில் தியேட்டரின்  ஸ்கிரீனில் தோன்றி கண்கள் விரிய இப்படி ஓப்பனாகப் பேசும்போது நம்மால் ரசிக்காமல் இருக்க முடியுமா? One Heart-ஐ பார்க்கையில் நமக்குச் சிலிர்ப்பாக இருக்கிறது.  

திரை இசைக்கு இசைப்புயல் வந்து 25-வது ஆண்டு கொண்டாட்டமாக வட அமெரிக்காவில் 14 நகரங்களில் அவர் மேற்கொண்ட இசைப்பயணங்களையும் அங்கே கான்சர்ட்டுகளில் அவர் பாடி அசத்திய நெகிழ்வான மொமன்ட்களையும் தொகுத்து ஒன்றரை மணி நேர டாகுமென்ட்ரியாக எடுத்திருக்கிறார்கள். 'one heart' என்ற இந்த ஏ.ஆர்.ரஹ்மானின் concert film தியேட்டரில் பார்க்கும் அனுபவமும் அசத்தலாகவே இருக்கிறது. நல்ல டால்ஃபி அட்மாஸ் சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டரில் பார்த்தால் இன்பத் தேன் வந்து நிச்சயம் உங்கள் காதில் விழும்! 

நலிந்த இசை கலைஞர்களின் வளர்ச்சி நிதிக்காக அவரின் வெளிநாட்டு இசைக்கச்சேரியின் பின்னணி விஷயங்களைக் கோக்கும் ஐடியாவே ரஹ்மானின் யோசனையில் வந்ததாம். அதற்காகவே இந்த முயற்சியை கைதட்டி வரவேற்கலாம்.  ரஹ்மானே இந்த கான்சர்ட் கான்செப்ட் படத்துக்காகக் களமிறங்கி வேலை பார்த்திருப்பார் போல. இசையில் அத்தனை நேர்த்தி...ஸ்படிக துல்லியம்!  அவரின் கச்சேரியை நேரில் சென்று ரசித்த... தரிசித்த அனுபவம் கிடைக்கிறது. முதல் டிவி பேட்டியிலிருந்து திரையில் விரியும் டாக்குமென்டரியில்  இறுதியில் குழந்தைச் சிரிப்போடு கான்சர்ட்டுக்கு வந்திருக்கும் ரசிகர்களோடு கை குலுக்கி கைகளால் தட்டிக் கொடுத்து, லேசான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் போட்டு `பை பை கய்ஸ்' சொல்லுவதோடு முடிகிறது.

மொழி பேதமில்லாத கலவையான பாடல் தேர்வுகளாகட்டும், நார்மலான டோனில் பாடாமல் இன்னும் மெருகேற்றி குறும்புக் கொப்பளிக்க விதவிதமான மாடுலேஷனில் பாடி  அசத்தி இருக்கிறார் ரஹ்மான். ` ராக்ஸ்டார்'  படத்தின் 'நாதான் பரிந்தே', 'ஹைவே'   'பட்டகா குடி', 'நான் ஏன் பிறந்தேன்' போன்ற பாடல்களுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ். கெபா ஜெராமியா, ரஞ்சித் பரோட், மோஹினி டே, ஆன் மேரி, சிராஜ் உப்பல், ஜோனிதா காந்தி,  மற்றும் ஹரிச்சரண் என்று தமிழ் ஆல்பங்களில் அவருடன் பணியாற்றியவர்கள் இந்த பேண்டில் இருப்பதால் 'மல்ட்டி டாஸ்க்'காக பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்வதைப் பார்க்க முடிகிறது. 'நான் மட்டும் இல்லை. என் டீமும் என்னைவிட திறமைசாலிகள்தான்!' என்று ரஹ்மான் சொல்வதைப்போலவே இது இருந்தது. 

தன்னுடைய சினிமாவின் துவக்கப் புள்ளியான `சின்னச்சின்ன ஆசை'யில் ஆரம்பித்து ஆஸ்கரை அள்ளக் காரணமாக இருந்த `ஜெய் ஹோ'வரை இசைமழையில் நனைத்து விட்டார்கள் ரஹ்மானும் அவரது 10 பேர் கொண்ட குழுவும். ஒரு கான்சர்ட்டுக்குப் பின்னணியில் என்னெல்லாம் நடக்கும் என்று அவரும் அவரது நண்பர் ரஞ்சித் பரோட்டும் விவரித்திருக்கும் பாணி செம. ஆங்காங்கே ஒளிவுமறைவில்லாமல் தன் மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே பகிர்ந்திருக்கிறார்  இசைப்புயல். 

ரஹ்மானின் இந்த Bandல் இருப்பவர்கள் வெவ்வேறு நாடுகள், மொழிகள், கலாசாரங்களைக்கொண்ட Cross Cultural ஆக  இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. ‘தமிழன்’ என்ற 'மெர்சல்'  பெருமிதத்தையும் அளிக்கிறது. 

இத்தனை நிகழ்ச்சிகளில் வழிந்தோடும் இசையை ஒன்றரை மணிநேரத்துக்குள் அடக்க ரொம்பவே மெனக்கெட்டிருப்பது மேக்கிங்கில் தெரிகிறது. டக்கென முடிந்துவிடுவது சின்ன வருத்தம்.

டாக்குமென்டரி என்றதும் இன்னும் 'back stage surprise' இருக்கும் என நினைத்து படம் பார்க்கச் சென்றவர்களுக்குச் சின்னதாய் ஏமாற்றம் இருக்கும். கான்சர்ட் ஃபீல் மட்டுமே கிடைக்கிறது. ஆனாலும், ஆங்காங்கே இன்ப அதிர்ச்சியாக மனைவியோடு அவர் கொடுக்கும் ரகளையான போஸ்கள், குடும்பத்தோடு வெளிநாட்டில் அவர் செலவிடும் வீடியோ காட்சிகள், ஏர் பலூனில் வானுயற பறந்துகொண்டே தன் மகளோடு வீடியோ கான்ஃபரன்ஸில் பேசும் காட்சிகள் என ஆங்காங்கே வந்து  நம்மை சிலிர்க்க வைக்கிறார் ரஹ்மான்.  இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் மொத்த படமும் goosebump moment ஆகி இருக்கும். மொழி பேதமில்லாமல் அனைத்து மொழிப் பாடல்களையும் இதில் கோத்திருப்பதில் அவரது டீமின் உழைப்பு தெரிகிறது. 

``இசை எனக்கு அமைதி தருது. அதை நான் மத்தவங்களுக்குத் தர முயற்சி செய்கிறேன்!''

``இன்னும் நிறைய கனவுகள் இருக்கு!'' 

``எல்லாப் புகழும் இறைவனுக்கே!'' - தன் வழக்கமான, நமக்குப்  பழக்கமான வார்த்தைகளை ரஹ்மான் பேசினாலும், அந்த ஒன்றரை மணிநேரம் நம்மை கைபிடித்து தன் உலகிற்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார் இசைப்புயல்!.

ஜெய் ஹோ!