Published:Updated:

‘நீட் பற்றி படம் எடுங்கள்... இந்திக்கு போகாதீர்கள்!’ - முருகதாஸிடம் விஷால் வைத்த கோரிக்கை

‘நீட் பற்றி படம் எடுங்கள்... இந்திக்கு போகாதீர்கள்!’ - முருகதாஸிடம் விஷால் வைத்த கோரிக்கை
‘நீட் பற்றி படம் எடுங்கள்... இந்திக்கு போகாதீர்கள்!’ - முருகதாஸிடம் விஷால் வைத்த கோரிக்கை

டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு, தமிழில் முதன்முறையாக நடித்திருக்கும் படம் ‘ஸ்பைடர்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கான இசை வெளியீட்டு விழா, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அரங்கத்தைச் சுற்றிலும் பறந்துகொண்டிருந்தன வாழ்த்து பேனர்கள். ரசிகர்களைக் கட்டுப்படுத்த எக்கச்சக்க பெளன்ஸர்கள், வி.ஐ.பி-களுக்குத் தனியாக ரெட் கார்ப்பெட் வரவேற்பு என டெரர் காட்டினார்கள்.

நடிகர் சதீஷ்  மற்றும் பாடகி சின்மயி இருவரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். மகேஷ்பாபுவின் வெறித்தனமான ரசிகர்கள் பலருக்கும் டிக்கெட் இல்லாததால், பெளன்ஸர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. `எங்க வழி தனி வழி...' என எப்படியோ புது வழியைக் கண்டுபிடித்து ரசிகர்கள் விழா அரங்கினுள் உள்ளே வர, படக் குழுவினர் ஆடிப்போனார்கள். படத்தின் தயாரிப்பாளர், `நீங்க எல்லாரும் மகேஷ்பாபுவின் ரசிகர்கள். இந்த விழா சிறப்பாக நடைபெற உங்க ஒத்துழைப்பு அவசியம்' என தாஜா செய்ய, ரசிகர்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தனர்.

“பார்க்க நிறைய முடியுடன் சிநேகன் மாதிரி இருப்பார். ஆனால், மனசு அளவுல அவர் ஓவியா மாதிரி” என எஸ்.ஜே.சூர்யாவை வரவேற்றார் சதீஷ். 

“முருகதாஸ் படத்தில் வில்லனாக நடிப்பது நல்ல வாய்ப்பு என்று, அவர் கதை சொன்னவுடனே ஓகே சொல்லிவிட்டேன். தமிழ் சூப்பர் ஸ்டாருக்கு ‘சந்திரமுகி’ மாதிரி தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு இந்த ‘ஸ்பைடர்’ . சந்தோஷ் சிவன் மற்றும் முருகதாஸ் காம்பினேஷன் எப்பவுமே சூப்பர்தான். மூன்று மொழிகளில் படம் பண்ணி ஸ்டார் ஆகணும் என்பது என் ஆசை. அதுக்கு இது ஆரம்பமா இருக்கும்'' என தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மாறி மாறி பேசினார் எஸ்.ஜே.சூர்யா. 

ஆர்ஜே பாலாஜி, “முதன்முதலில் ஒரு சூப்பர் ஸ்டாருடன் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது. இந்தப் படத்தில் நடித்த கதாநாயகி ரகுலைவிட மகேஷ்பாபுதான் அழகு. அவரைப் பார்த்துட்டே இருக்கலாம்” என ஜாலியாகப் பேசியவர், “எப்போதுமே சமூகம் சார்ந்து சிந்தித்து அதைப் படமெடுப்பதுதான் முருகதாஸ் சார் ஸ்டைல். இப்ப இங்கே பல பிரச்னைகள் இருக்கு. படிப்புக்காக ஒரு பொண்ணு தன் உயிரையே பலிகொடுத்திருக்கு. அந்த நீட் பிரச்னை பற்றியும் முருகதாஸ் சார் படம் பண்ணணும்” என தன் வேண்டுகோளை முன்வைத்தார். 

பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ‘மிஸ் மிஸ்டீரியஸ்...’, ‘ஆலி ஆலி...’னு எல்லா பாடல்களுமே உங்களுக்குப் பிடிக்கும்னு நினைக்கிறேன். என் முதல்  வாய்ப்பு ‘எந்திரன்’ படத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு எழுதினேன். இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு பாடல்கள் எழுதியதில் மகிழ்ச்சியடைகிறேன். கலைக்கு, எல்லைகள் கிடையாது. அது எங்கே இருந்தாலும் கொண்டாடப்படும். தமிழ் ரசிகர்களின் அன்புமழையிலயும் மகேஷ்பாபு நனையவேண்டிய நேரம் வந்துடுச்சு” என்றார்.

“கம் ஆன் டார்லிங்...” என்று சதீஷ் அழைக்க, ரசிகர்களின் ஆராவாரத்தோடு மைக் பிடித்தார் விஷால். “மகேஷ்பாபுவை தமிழ் திரைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. முக்கியமான சமூகப் பிரச்னைகளையெல்லாம் தன் படத்தில் முன்பே காட்டுவதுதான் முருகதாஸ் சார் ஸ்டைல். தயவுசெய்து இங்கு நடக்கும் பிரச்னைகளை, குறிப்பாக ‘நீட்’ பற்றி மனதில் வைத்து உங்கள் கோபத்தை படம் மூலமா காட்டணும். இந்திக்குப் போகாதீங்க சார். தமிழ்லேயே படம் பண்ணுங்க” என்று முடித்தார். 

அடுத்து பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய் “மகேஷ்பாபுவுக்கே தெரியாத  ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன்”  என்று ஆரம்பித்தவர் சஸ்பென்ஸ் உடைத்தார். “ ‘மதராசபட்டினம்’ படத்தின் கதையை நான் முதன்முதலில் மஞ்சுளா மேடத்துக்கிட்டதான் சொன்னேன். அப்ப இந்தக் கதை ஓகே ஆகியிருந்தா, மகேஷ்பாபுதான் படத்தின் ஹீரோவா நடிச்சிருப்பார். மிஸ்ஸாகிடுச்சு. தமிழில், பெயர் சொல்லும் இடத்தை மகேஷ்பாபு நிச்சயம் பிடிப்பார்” என வாழ்த்தினார்.

இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் “மகேஷ்பாபுவின் முதல் படத்தின்போது, இசையமைப்பாளர் மணிசர்மாவிடம் கீபோர்டு பிளேயராக வேலைசெய்தேன். மகேஷ்பாபு இப்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார். இவர் முதன்முதலில் தமிழில் நடிக்கும் படத்தில் நான் இசையமைப்பாளராக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. படத்தின் பாடல்கள் எல்லாமே உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என முடித்தார்.

அடுத்ததாக வந்த நடிகை ரகுல், மேடையில் தன் ரசிகர் ஒருவரோடு  ‘சிசிலியா...’ பாடலுக்கு நடனம் ஆடி அசத்தினார். 

இயக்குநர் முருகதாஸ் வந்தபோது பலத்த கைதட்டல்... “இந்த மேடை ஏறுவதற்காக, நான் ரெண்டு வருஷம் காத்திருந்தேன். 10 வருடங்களுக்கு முன்பே மகேஷ்பாபுவுடன் படம் பண்ண ப்ளான் இருந்தது. ஆனா, ரெண்டு முறை மிஸ்ஸாகிடுச்சு. மகேஷ்பாபு படம் பற்றி ‘வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான ஹீரோயிசம் காட்டுகிறார்’னு விகடனில் எழுதினாங்க. அது இன்னும் என் நினைவில் இருக்கு.

இந்தப் படத்துல தமிழ், தெலுங்கு எனத் தனித்தனி ஷாட் எடுத்தோம். நாலு நாள் ஷூட்டிங் போன பிறகுதான் `ரொம்ப ரிஸ்க் எடுத்துட்டமோ!'னு தோணுச்சு. இப்படி இரு மொழிகள் எடுக்கும் படத்தில் க்ளோஸப் ஷார்ட் மட்டும்தான் ரெண்டு ஷாட் எடுப்பாங்க. ஆனா, நாங்க ஒரு சின்ன சைலென்ட் சீன் இருந்தால்கூட அதையும் ரெண்டு முறை எடுத்திருக்கோம். அதுக்கு முக்கியக் காரணம் மகேஷ்பாபுதான்.

ஷூட்டிங் எல்லாம் முடிஞ்ச பிறகு, ‘சீன் எதுவும் கூடுதலா எடுக்கணும்னு நினைச்சா சொல்லுங்க சார், 10 நாள் டேட் தரேன்’னு சொன்னார். என்கிட்ட அமீர் கானுக்குப் பிறகு இவர்தான் அந்த வார்த்தையைச் சொன்னவர். உண்மையாவே, ஒரு படத்தை ரெண்டு மொழிகளில் தனித்தனியா எடுப்பதன் கஷ்டம் இப்பத்தான் புரியுது. இனிமேல் இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பேனான்னு தெரியலை. 

அடுத்து ஸ்க்ரீன் பிளே தெரிஞ்ச இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருடன் மூன்றாவது படம், சந்தோஷ் சிவனுடன் ரெண்டாவது படம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஸ்டன்ட்டுக்கு பீட்டர் ஹெயின் உழைப்பு அபாரமானது. என்னோட உதவி இயக்குநர்கள் ரொம்பக் கடினமா உழைச்சிருக்காங்க” என்றவர், அவர்களையும் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி பேசி முடித்தார். 

சதீஷ், “ ‘தீனா’ படத்தில் அஜித்துக்கு ‘தல’ங்கிற பட்டத்தை நீங்கதான் கொடுத்தீங்க. அப்படி மகேஷ்பாபுவுக்கு ஒரே வார்த்தையில சொல்ற மாதிரி ஒரு பட்டம் கொடுங்க” என்று முருதாஸிடம் கேட்க, 

“ஓர் உண்மையைச் சொல்லணும்னா, மகேஷ் பாபு பட்டத்தையே விரும்பாதவர். ‘டைட்டிலில் சூப்பர் ஸ்டார்னு போடவேண்டாமே'னு என்னிடம் அடிக்கடி சொல்வார். ‘ரசிகர்கள் மனசுல இடம்பிடிச்சாச்சு. அதைத் தாண்டி வேற என்ன பட்டம் தேவை?’னு சொல்வார்.  

“ரஜினி சார் நடித்த எந்தப் படத்தை மகேஷ்பாபுவுக்கு ரீமேக் செய்ய ஆசை?” என்று கேட்டதற்கு, பட்டென “மூன்று முகம்”  என பதில் அளித்து அமர்ந்தார் முருகதாஸ்.

ரசிகர்கள் ஆர்ப்பரிப்புடன் பேசத் தொடங்கினார் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு. “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 10 வருஷம் முன்னாடியே படம் பண்ண ப்ளான் போட்டு, இப்போதான் வாய்ப்பு கிடைச்சது. முருகதாஸ் சாருடன் வேலை செய்ததை பெருமையா நினைக்கிறேன்” என்றவர் இசையமைப்பாளர் ஹாரிஸ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ஃபைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின், ரகுல் ப்ரீத் சிங் என அனைவரது உழைப்பைப் பற்றியும் உளமாரப் பேசினார்.

சின்மயி, “விஜய் பட பன்ச் ஒண்ணு சொல்லுங்க” எனக் கேட்க, “ஐ யம் வெயிட்டிங்...” என மாஸ் காட்டினார்.  முருகதாஸ்,  ஹாரிஸ் ஜெயராஜ்  மற்றும் பீட்டர் ஹெயின்  குடும்பத்துடன் மேடை ஏறி, பாடல்கள் அடங்கிய ஒலித்தகட்டை வெளியிட்டனர். 

விழாவில் இயக்குநர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, கலைப்புலி தாணு, ஆர்.பி.செளத்ரி, ஞானவேல் ராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மகேஷ்பாபுவை வாழ்த்தினார்கள்.