Published:Updated:

தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!

தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!
தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!

தமிழ் ராக்கர்ஸுக்கு ராஜபார்ட் ரங்கதுரையின் தில் சவால்!

நாற்பது வருடங்களுக்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான  படம் `ராஜபார்ட் ரங்கதுரை'. இது, தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மதுரை மீனாட்சி பாரடைஸ் தியேட்டரில் வெளியாகி நூறு நாள்கள் ஓடியதை, சிவாஜி ரசிகர்கள் பிரமாண்ட விழாவாகக் கொண்டாடினார்கள்.

இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் பலதரப்பட்ட வேடங்களில் வெளுத்துவாங்கியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவருக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை உணர்ச்சிப்பிழம்பில் நெகிழவைத்துவிடுவார். சிவாஜி கணேசனின் திரையுலகப் பயணத்தை அலங்கரித்த வெள்ளிவிழா திரைப்படங்களில் `ராஜபார்ட் ரங்கதுரை'யும் ஒன்று. 100-வது நாள் விழாவில் சிறியவர் பெரியவர் பாகுபடின்றி, கலைத்தாயின் பிள்ளைகளான மதுரை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது  பெங்களூரு, சித்தூர், கொச்சின் என, தென்னிந்திய சிவாஜி ரசிகர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டது விழாவின் மிகப்பெரிய ஹைலைட்!

புதுமுக நடிகர்களாக, துணை நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் நடித்த படத்தைப் பார்த்துவிட்டு, அவர்களுக்கு முதல்  ரசிகர் மன்றம்  உருவாக்கும் கலை ரசனையும் தாராள மனமும்கொண்டவர்கள் `மதுரை ரசிகர்கள்'. அதனால்தான் சினிமா நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது, அதை மதுரையில் தொடங்குவதை சென்டிமென்டாகக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உணர்வுபூர்வமான மதுரை  ரசிகர்கள், சமீபகாலமாக எவ்வளவு பெரிய நடிகர் நடித்த படத்தையும் ஒரு வாரத்துக்குமேல் பார்ப்பதில்லை. தரமில்லாத படங்களாக வருவது,  திருட்டு சிடி,  நெட்டில் டவுன்லோடு செய்து பார்ப்பது, டிக்கெட் விலை உயர்வு, அதிகமான திரையரங்குகளில் வெளியாவது  போன்றவையே முக்கியக் காரணங்களாக உள்ளன. இந்த நிலையில்தான் சிவாஜியின் சூப்பர் ஹிட் படமான `ராஜபார்ட் ரங்கதுரை', மதுரை மீனாட்சி பாரடைஸில் வெளியானது. வழக்கமாக, இதுபோன்ற பழைய படங்கள் மூன்று நாள்கள் அல்லது ஒருவாரம் வரைதான் ஓடும். ஆனால், `ராஜபார்ட் ரங்கதுரை'யோ கூட்டம் குறைவில்லாமல் ஓடத்  தொடங்கியது. இந்தப் பகுதியில்  நடுத்தர மக்கள், தினக்கூலி உழைப்பாளி மக்கள் பெருவாரியாக  வாழும் நிலையில்,  இந்தப் படத்தை குடும்பத்துடன் காண வரத்தொடங்கினர். தினமும் மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகளாக  ஐம்பது நாள் வரை ஓடியது. ஐம்பதாவது நாளன்று  படம் பார்க்க வந்தவர்களுக்கு, பிரியாணி பொட்டலம் கொடுத்தார்கள் ரசிகர்கள். 

அதையும் தாண்டி மக்களின் ஆதரவால் இன்று நூறாவது நாளைத் தொட்டது `ராஜபார்ட் ரங்கதுரை'. இதை பெரும் விழாவாகக் கொண்டாட நினைத்தனர் சிவாஜி ரசிகர்கள். தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களிலிருந்தும் ரசிகர்கள் மதுரையில் குவிந்தார்கள். சிவாஜி கட் அவுட்டுக்கு பிரமாண்ட மாலை அணிவித்தார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். தியேட்டர் வளாகத்தில் மேடை அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். வெடிகள் வெடித்து அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது.

சிவாஜி ரசிகர் அல்லாதவர்களும் அந்தப் படத்தின் கதைக்காக பார்க்க வந்ததாகக் கூறினார்கள். ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலர், இந்தப் படத்துடனான தங்கள் அனுபவங்களைக் கூறி ரசிகர்களை நெகிழவைத்தார்கள்.  ``இனி, சிவாஜியின் சிறந்த படங்கள் தங்கள் திரையரங்கில் தொடர்ந்து திரையிடப்படும்'' என்று மீனாட்சி பாரடைஸின் உரிமையாளர்கள் உறுதி அளித்தார்கள். சமீபகாலமாக மதுரையில் எந்த ஒரு முன்னணி நடிகர் படத்துக்கும் இப்படியோர் உணர்வுபூர்வமான விழாவைப் பார்த்ததில்லை என்று அசந்துபோய் கூறினர்  பொதுமக்கள். `சிவாஜி' என்ற மகா நடிகனை அவர் மறைவுக்குப் பிறகும் கொண்டாடிவருகிறார்கள் மதுரை மக்கள். 

படம் முடிந்து வெளியே வந்த ரசிகரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘இந்தப் படத்தைத்தான் ஏற்கெனவே பலமுறை பார்த்திருப்பீங்களே. திரும்பவும் தியேட்டர்ல வந்து பார்க்க என்ன காரணம்?’. ‘நடிகர் திலகம் படத்தை எத்தனை வாட்டினாலும் தியேட்டர்ல பார்க்கலாம்’ என்றார். ‘பழைய படத்தை எல்லாம் நெட்ல ரிலீஸ் பண்ணா, வீட்டுல இருந்தே பார்ப்பீங்களா’ என நாம் கேள்வியை முடிக்கும் முன்னரே,  ‘‘மாட்டவே மாட்டேன். தமிழ் ராக்கர்ஸோ, ஜோக்கர்ஸோ... எத்தனை நெட்டு வந்தாலும், தலைவர் நடிப்பை எல்லாம் தியேட்டர்ல வந்து பார்க்குறதுதான் சுகம்’’ என கிளம்பினார்.

அகண்ட திரையில் தன் ஆதர்ச நாயகனைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை பாகுபலி மட்டுமல்ல பராசக்தியை இன்று ரீ ரிலீஸ் செய்தாலும் ஹவுஸ் ஃபுல் போர்டு தொங்கும்.

அடுத்த கட்டுரைக்கு