Published:Updated:

‘கும்கி’யின் அந்த 30 நிமிடம்... ‘தரமணி’யின் அந்த 300 மணிநேரம்..! - வசந்த் ரவி

‘கும்கி’யின் அந்த 30 நிமிடம்... ‘தரமணி’யின் அந்த 300 மணிநேரம்..! - வசந்த் ரவி
‘கும்கி’யின் அந்த 30 நிமிடம்... ‘தரமணி’யின் அந்த 300 மணிநேரம்..! - வசந்த் ரவி

‘கும்கி’யின் அந்த 30 நிமிடம்... ‘தரமணி’யின் அந்த 300 மணிநேரம்..! - வசந்த் ரவி

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியான, ராமின் தரமணி, நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இந்தப் படத்தில் வசந்த் ரவியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தனது முதல் படத்திலேயே தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற்ற வசந்த் ரவியின் பர்ஷனல் பக்கங்களைத் தெரிந்துக்கொள்ள அவரிடம் பேசினோம். 

தரமணிக்கு முன்பு வசந்த் ரவி என்ன செய்துகொண்டிருந்தார்..?

“நான் சென்னைப் பையன்தான். சென்னையிலதான் பிறந்து, வளர்த்தேன். ஸ்கூல் படிப்பில் இருந்து பேச்சுலர் டிகிரி வரை சென்னையிலதான் படித்தேன். மாஸ்டர் டிகிரி மட்டும் மான்செஸ்டரில் படிச்சுட்டு, சென்னையில ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில ஆப்ரேஷன் மேனேஜரா வேலைப் பார்த்துட்டு இருந்தேன். கல்லூரி காலத்தில் இருந்தே நடிப்பு மேல பயங்கர ஆர்வம் இருந்ததனால, மாஸ்டர் டிகிரி பண்றதுக்கு முன்னாடியே சில ஆக்டிங் கோர்ஸ் பண்ணுனேன். அப்போது வாய்ப்புகள் எதுவும் சரியா கிடைகாதனால மாஸ்டர் டிகிரி படிக்கப்போயிட்டேன். பின்னர், சென்னையில வேலைப் பார்த்துட்டு இருக்கும் போதுதான் ராம் சார் ஆஃபிஸ்ல இருந்து போன் வந்தது. இப்படித்தான் தரமணி படத்துக்குள்ள நான் வந்தேன்.’’ 

உங்களோட ஃபேமிலி பற்றிச் சொல்லுங்க..?

“எங்க குடும்பத்துல என்னையும் சேர்ந்து மொத்தம் நாலு பேர். அம்மா, அப்பா, தம்பி. என்னைத் தவிர அவங்க எல்லோரும் பிசினஸ் பண்றாங்க. நான் அவங்க பிசினஸ்ல எப்போதுமே தலையிட்டது கிடையாது. எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம். நான் நடிகனாகணும்னுதான் முயற்சி பண்ணிட்டு இருந்தேன். எந்தச் சூழ்நிலையிலும் அவங்களோட சப்போர்ட்டை நான் எதிர்பார்க்கலை. தரமணி பிரச்னையில இருக்கும்போதும் நான் அவங்ககிட்ட எந்த உதவியும் கேட்கலை. அவங்களுக்கும் நான் சினிமாவுல இருக்கிறது விருப்பமில்லை. இப்போ படம் ரிலீஸானதுக்கு அப்பறம் என் நடிப்பை பல பேர் பாராட்டுறதைப் பார்த்துட்டு அவங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்போ கொஞ்சம் சப்போர்ட்டிவ்வா இருக்காங்க. மூணு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. என் மனைவி ஒரு கம்பெனியில வேலைப் பார்த்துட்டு இருக்காங்க.’’ 

உங்க மனைவி தரமணி படம் பார்த்துட்டு என்ன சொன்னாங்க..?

“அவங்களுக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. மூணு தடவை பார்த்துட்டாங்க. என் நடிப்பும் நல்லா இருக்குனு சொன்னாங்க. இதே மாதிரி நல்ல நல்ல ஸ்கிரிப்ட்டா செலக்ட் பண்ணி நடிக்கச்சொன்னாங்க. என் மனைவிக்கும் நான் சினிமாத்துறையில இருக்கிறது பிடிக்கலை. ஆனா, எனக்கு ஆக்டிங்தான் பிடிச்சிருக்கிறனால, அதையே பண்ணுனு சொல்லிட்டாங்க. சப்போர்ட்டும் பண்றாங்க. அவங்க சப்போர்ட் இல்லாம என்னால நடிக்க முடியாது. நான் செலக்ட் பண்ற படங்கள் அவங்களுக்கும் பிடிக்கிற மாதிரி இருக்கணும்னு பார்த்துட்டு இருக்கேன்.’’ 

அடுத்து படங்கள் கமிட் ஆகிட்டீங்களா..?

“நிறைய ஸ்கிரிப்ட் பேசிட்டு இருக்காங்க. அதில் சில படங்கள் கமிட் ஆகுற நிலையில் இருக்கு. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும்.” 

தரமணி படத்தைப் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத விஷயங்கள் ஏதாவது இருக்கா?

“படத்தோட டப்பிங்கிற்காக நாங்க அதிகம் மெனக்கெட்டோம். நடிப்பைவிட டப்பிங்கிற்கு அதிக நேரம் எடுத்துக்கிட்டோம்னா பாத்துக்கோங்களேன். படத்துக்கு மொத்தம் 300 மணி நேரம் டப்பிங் போச்சு. படத்தோட ஆடியோவில் அதிக மாடிலேஷன்ஸ் இருக்கும். லைவ் ரெக்கார்டிங் பண்ணுனீங்களானு பல பேர் கேட்டாங்க. அந்த அளவுக்கு லைவ்வா இருக்கும் எல்லாரோட வாய்ஸும்.
‘பாவங்களை...’ சாங்ல, ஆத்துல இருந்து ஒரு பிணத்தை நான் இழுத்து வரமாதிரி ஒரு சீன் இருக்கும். ஆக்சுவலா அது ஆறே கிடையாது. அது சாக்கடை. அந்த சீன்ல பிணமா நடிச்சது ஒரு உதவி இயக்குநர்தான். நாங்க யாருமே அது சாக்கடைனு ஃபீல் பண்ணவே இல்லை. அந்த அளவுக்கு ஈடுபாடோட நடிச்சோம். நீங்க கேட்டதும் இந்த இரண்டு சம்பவங்கள்தான் ஞாபகத்துக்கு வருது.’’ 

நீங்க நடிகனாகணும்னு முயற்சி செய்துட்டு இருக்கும்போது ஏதாவது படம் கமிட் ஆகுற மாதிரி வந்து கேன்சல் ஆகியிருக்கா..?

“ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நான் நடிக்கிற மாதிரி இருந்து, அப்பறம் சில காரணங்களுக்காக அதை என்னால பண்ண முடியாம போச்சு. இதுவரைக்கும் இதை நான் யார்கிட்டையும் சொன்னது இல்ல. கும்கி படத்தில் நான் நடிக்கிறதா இருந்தது. அந்தப் படத்தோட தயாரிப்பாளர் லிங்குசாமி, போஸ் ரெண்டு பேரும் ஓகே சொல்லிட்டாங்க. பிரபு சாலமனைப் பார்க்க போகும்போது ஜி.வெங்கட்ராமை வைத்து போட்டோஷூட் எல்லாம் பண்ணிட்டு போனேன். அப்போ பிரபு சாலமன் வெளிநாட்டிற்குப்போக ரெடியா இருந்தார். வந்ததும் மீட் பண்ணலாம்னு சொல்லியிருந்தார். அப்பறம் சில காரணங்களால் அந்தப் பட வாய்ப்பு எனக்கு கிடைக்கலை. அதுக்கு அப்பறமும் பிரபு சாலமனும் நானும் நல்ல நட்பில்தான் இருக்கோம். கண்டிப்பா என்னை வச்சு அவர் படம் பண்றேன்னு சொல்லியிருக்கார்’’ என்றவர், “கும்கி படத்துக்காக 30 நிமிடங்கள் போட்டோஷூட் பண்ணினதும், தரமணி படத்திற்காக 300 மணி நேரம் டப்பிங் ஒர்க் பண்ணினதும் என் சினிமா கெரியருக்கு ரொம்ப முக்கியமானதா இருந்துச்சு” என்று கூறி முடித்தார் வசந்த் ரவி.

அடுத்த கட்டுரைக்கு