Published:Updated:

மாய உலகிலிருந்து மனித உலகிற்கு வந்த சிறுமி! #BigFishAndBegonia

மாய உலகிலிருந்து மனித உலகிற்கு வந்த சிறுமி! #BigFishAndBegonia
மாய உலகிலிருந்து மனித உலகிற்கு வந்த சிறுமி! #BigFishAndBegonia

மாய உலகிலிருந்து மனித உலகிற்கு வந்த சிறுமி! #BigFishAndBegonia

மாய உலகிலிருந்து மனித உலகிற்கு வரும் ஒரு பெண்ணைச் சுற்றி நடக்கும் படம் big fish and begonia. மனிதர்கள் வாழும் இந்த உலகத்துக்குக் கீழே இருக்கும் மாய உலகம் அது. மந்திர சக்திகொண்டவர்கள் அங்குள்ளனர். சன் என்கிற சிறுமிக்கு பூப்படையும் வயது வரும்போது, அவள் மனித உலகுக்குச் சென்று தங்கி, ஏழு நாட்கள் கழித்து திரும்பி வர வேண்டும் என்பது ஒரு சடங்கு. 

சிவப்பு நிற டால்ஃபினாக மாறும் அவள், மனித உலகுக்குச் செல்ல தயாராகிறாள்.. ''ஜாக்கிரதை! அங்குள்ள மனிதர்களை நெருங்காதே. அவர்களையும் உன்னை நெருங்கவிடாதே. அது ஆபத்து'’ என தாய் எச்சரிக்கிறார். மனித உலகுக்குச் செல்கிறாள் சன். வெற்றிகரமாக ஆறாம் நாள் முடிகிறது. 

அவள், குன் என்கிற சிறுவனையும் அவனது தங்கையையும் மனித உலகில் காண்கிறாள். அந்தச் சிறுவனின் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. “அந்தச் சிவப்பு நிற டால்ஃபின் உன்னையே பார்க்கிறது” என்று சிறுவனிடம் சொல்கிறாள் தங்கை. சிறுவன், மீனை நெருங்க முற்படுகிறான். பயந்துபோன சன், விலகிவிடுகிறாள். 

இரவு நேரம். புயலும் காற்றும் அடிக்கிறது. மீனின் அழுகைச் சத்தத்தை குன் கேட்கிறான். “தங்கையே சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன். நீ பயப்படாமல் இரு” என்று சொல்லிவிட்டு மீனைக் காப்பாற்ற செல்கிறான். 

வலைக்குள் மாட்டிக்கொண்டு தத்தளிக்கும் சிவப்பு டால்ஃபினை குன் காப்பாற்றிவிடுகிறான். ஆனால், ஒரு பயங்கரமான நீர்ச்சுழிக்குள் மாட்டிக்கொள்கிறான். அவனால் மீள முடியவில்லை. தன்னைக் காப்பாற்ற வந்த சிறுவன் மறைந்துபோனது குறித்து சன் வருந்துகிறாள். 

தன்னுடைய உலகுக்குத் திரும்பிய பிறகும் இதே வருத்தத்தில் இருக்கிறாள். “இறந்தபோனவர்கள் எங்கே இருப்பார்கள்?” என்று தன் தாத்தாவிடம் விசாரிக்கிறாள். “சமுத்திரத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள பகுதியில் அவர்களின் ஆன்மா சேகரிக்கப்படும்” என்கிறார் தாத்தா. 

தனிமையான இடத்தில் அமர்ந்து, சிறுவனிடமிருந்து எடுத்துவந்த விநோதமான வாத்தியத்தைத் துயரத்துடன் வாசிக்கிறாள் சன். அருகிலிருந்த சிங்கமுக சிலை திடீரென்று உயிர் பெறுகிறது. “உன்னுடைய துயரம் என்ன?” என்று விசாரிக்கிறது. விஷயத்தைச் சொல்கிறாள். 

“இரவு நேரத்தில் பயப்படாமல் இங்கே வா. உனக்கு உதவுகிறேன்” என்கிறது. 

யாருக்கும் தெரியாமல் இரவு நேரம் கிளம்புகிறாள் சன். ஆனால், குய் என்கிற சிறுவன் அவளைப் பார்த்துவிட்டு “எங்கே போகிறாய்?” என்று விசாரிக்கிறான். அவனுக்குப் பதில் சொல்லாமல் விரைகிறாள் சன்.

சிலைக்கு அருகே வந்ததும் வாத்தியத்தை இசைக்கிறாள். ஒற்றைக்கண் யானை ஒன்று படகில் வருகிறது. அவளை ஏற்றிச்சென்று ஓரிடத்தில் விடுகிறது. அங்குள்ள பெரியவர் 700 வருடங்களுக்கும் மேலாக இறந்தவர்களின் ஆன்மாக்களைப் பாதுகாத்து வருகிறார். பூனைகள்தான் அவருக்குத் துணை. அவரிடம் சென்று 'குன் உயிரை மீட்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறாள். 

'‘அது அத்தனை எளிதல்ல பெண்ணே. அதற்காக உன் வாழ்நாளின் பாதியை தரவேண்டும் சம்மதமா?” என்று கேட்கிறார் கிழவர். சன் சம்மதிக்கிறாள். 

“இதில் எது உன் நண்பனின் ஆன்மா? தேடிக்கொள்” என்று கிழவர் சொன்னதும், பல ஆன்மாக்களின் இடையில் நண்பனைத் தேடுகிறாள். மனிதர்கள் மீனின் வடிவில் வாழ்கிறார்கள் என்பது அந்த உலகத்தின் நம்பிக்கை. அங்கிருக்கும் ஆன்மாக்களில் ‘குன்’னை சரியாகக் கண்டுபிடித்துவிடுகிறாள். நெற்றி மீது இருக்கும் சிவப்பு நிற கோடுதான் அடையாளம். 

“இந்த மீனை நீ வளர்த்து வர வேண்டும். அது பெரியதானதும் கடலில் விட்டால் மனித உலகத்துக்குச் சென்று மறுபடியும் சிறுவனாகிவிடும். அது மனிதனாதும் இந்த நிகழ்வு எதுவும் நினைவில் இருக்காது” என்கிறார் கிழவர். 

தன் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் ஆன்மா என்பதால், அந்த மீனை கண்ணுங்கருத்துமாக வளர்க்கிறாள் சன். நாளடைவில் அதன் மீது அன்பு உண்டாகிறது. ஆனால், மனித உலகம் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளுக்கும் அங்கே அனுமதியில்லை என்பதால், அவள் மீன் வளர்ப்பதை தாய் விரும்பவில்லை. தூக்கிப் போட்டுவிடுகிறார். 

பிறகு என்ன நடந்தது? மீன் வளர்ந்து பெரியதாகியதா? மனித உலககுக்குச் சென்று சிறுவனாக மாறியதா? சன் இந்தப் பிரிவை எப்படித் தாங்கிக்கொண்டாள் என்பதை வியப்பூட்டும் மாயாஜாலக் காட்சிகளோடு சொல்லியிருக்கிறார்கள். 

சீனாவின் தொன்மையான கதையாடல்களின் பின்னணியில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தின் கலாசார அடையாளங்கள் படம் முழுவதும் பதிவாகியுள்ளன. பின்னணி இசை பார்வையாளரை வசீகரிக்கும் விதமாகப் படம் முழுவதும் ஒலிக்கிறது. 

ஹாலிவுட் போன்ற இடங்களோடு ஒப்பிடும்போது, சீனாவில் அனிமேஷன் திரைப்படங்களுக்கான வரவேற்பு குறைவு. தயாரிப்பாளர்களின் பல்வேறு அலட்சியங்களுக்கும் தாமதங்களுக்கும் பின்பு, வெளியான இந்தப் படம், சீனாவில் அதிக வசூலைப் பெற்றுள்ளது. ‘சீன அனிமேஷன் திரைப்படங்களில் முக்கியமான மைல்கல்’ என்று விமர்சகர்கள் புகழ்ந்துள்ளார்கள். 

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர்கள் Liang Xuan மற்றும் Zhang Chun. படம் 3D தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், அடிப்படையில் இதன் சித்திரங்கள் கையால் வரையப்பட்ட ஓவியத்தன்மையை இழக்காமல் இருக்கின்றன. 

சிறுமிக்காக அவளது பால்யத் தோழன் குய் உதவும் காட்சிகள் அற்புதமானவை. அவள்மீதுள்ள அன்புக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருக்கும் அவனின் பாசம் நெகிழவைக்கிறது. அவளுக்கு தன் மீது விருப்பமில்லை என்பதை அறிந்து, ரகசியமாக அழும் காட்சியும், தன் துயரத்தை மறந்து ‘சன்’னை மனித உலகுக்கு அனுப்பும் காட்சிகளும் மனதைவிட்டு நீங்காதவை. சிறுமியின் தாத்தா, தன் மறைவுக்குப் பிறகு பிரமாண்டமான மரமாக மாறி அவளைக் காப்பதும், பாட்டி பறவையாக மரத்தைச் சுற்றிவருவதும், கீழைத் தேசத்தின் அழகான நம்பிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றன. 

குழந்தைகளுடன் காணவேண்டிய அற்புதமான அனிமேஷன் திரைப்படம் இது.

அடுத்த கட்டுரைக்கு