Published:Updated:

துப்பறிவாளன் பாக்குறதுக்கு முன்னாடி ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

தார்மிக் லீ
துப்பறிவாளன் பாக்குறதுக்கு முன்னாடி ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
துப்பறிவாளன் பாக்குறதுக்கு முன்னாடி ஷெர்லாக் ஹோல்ம்ஸ் பத்தி இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

ஷெர்லாக் எனும் கற்பனை கதாபாத்திரத்துக்கு சர் ஆர்தர் கானன் டாயல் எனும் நாவலாசிரியர் 1887ல் உயிர் கொடுத்தார். இதை மையமாக வைத்து பல படங்களும், சமீபமாக சீரியலும் கூட வெளியாகியிருக்கின்றன. தற்பொழுது ‘துப்பறிவாளன்’ படத்திலும் இதன் டச் இருப்பதை வெளியான டிரெய்லரின் மூலம் தெரிந்துகொள்ளலாம். முதலில் யார் இந்த ஷெர்லாக்? ஒரு சின்ன அலசல்!

யார் இந்த ஷெர்லாக் ஹோல்ம்ஸ்?

பெரிய பெரிய போலீஸால் கூட கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை 'நான் கண்டுபிடித்தே தீருவேன்' என்று வாண்டடாக வண்டியில் ஏறும் ஒரு ஆள்தான் ஷெர்லாக் ஹோல்ம்ஸ். ஒரு விஷயத்தை வழக்கமாக பார்க்காமல் வேறு ஒரு கோணத்தில் பார்த்தல், தடயங்களை வைத்து மர்மத்துக்கான விடைகளைக் கண்டுபிடிக்கும் திறமை, சின்ன சின்ன லாஜிக்குகளை வைத்து வாதாடுவது போன்ற ஏராளமான குணாதிசயங்களைக் கொண்டவர்தான் இந்த ஷெர்லாக் ஹோல்ம்ஸ். சுருக்கமாக சொன்னால் 'கன்சல்டிங் டிடெக்டிவ்'. இந்த ஜானரில் தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் வந்திருந்தாலும் 'துப்பறிவாளன்' பட டிரெய்லரை வைத்துப் பார்க்கும் போது ஷெர்லாக் ஹோல்ம்ஸின் டச்தான் பல இடங்களில் தெரிகிறது. 'ஷெர்லாக் ஹோல்ம்ஸ்' -  பெயருக்குத் தகுந்தார் போல் ஆளும் வித்தியாசமானவர்தான். தன் மூளைக்கு சவால் கொடுக்கும் எந்த ஒரு வேலையாக இருந்தாலும், அதற்குக் காசு கூட வாங்காமல் செய்து முடிப்பார். பீட்டர் பாஷையில் இவர் ஒரு 'Workaholic'.  ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது வயலின் வாசிப்பார், வேலையே இல்லையென்றால் ஒரே ரூமுக்குள் பல நாள்கள் அடைபட்டுக்கிடப்பார். இவரது தனித்துவங்களில் முக்கியமான ஒன்று 'மைண்ட் பேலஸ்'. உடல் மட்டும் இங்கிருக்க மனதை வேறொரு இடத்தில் குவித்து அங்கு நடக்கும் சின்ன சின்ன மாற்றங்களைக் கூட கவனிப்பதுதான் இந்த மைண்ட் பேலஸ். அங்குத் தனக்குத் தேவையான விஷயங்களை சேகரித்துவிட்டு மீண்டும் நார்மல் நிலைக்கு வந்துவிடுவார். காலப்போக்கில் இந்தக் கதாபாத்திரத்துக்கு மேலும் மெருகூட்டி வலுவான ஒரு கதாபாத்திரமாக தற்பொழுது வெளியாகும் படைப்புகளில் வடிவமைத்துவிட்டனர்.

வேறு சில முக்கியமான கதாபாத்திரங்கள் :

ஷெர்லாக்கின் நெருங்கிய நண்பர் டாக்டர் ஜான் வாட்சன். இவர் ராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்தவர். ஷெர்லாக்குடன் சேர்ந்து பல கேஸ்களில் உதவுவார். இவர் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்டான ஆள். எதை செய்தாலும் அதில் நியாய தர்மம் இருக்க வேண்டும் என்று நினைக்கும் கேரக்டர். சமயங்களில் ஷெர்லாக் தன் கட்டுப்பாட்டை இழந்து பிரச்னையில் மாட்டிக் கொள்ளும்போது இவர்தான் காப்பாற்றுவார். 

கதையில் ஹீரோ இருந்தால் அவருக்கு நிகரான வில்லனும் இருக்கணும்தானே? அவர்தான் ஜிம் மொரியார்ட்டி. ஷெர்லாக்கிடம் என்னென்ன குணாதிசயங்கள் இருக்கின்றனவோ, அது அத்தனையும் இவரிடமும் இருக்கும். என்ன ஒரே வித்தியாசம், ஷெர்லாக் ஆக்குவதற்காக பயன்படுத்துவார், மொரியார்ட்டி அழிப்பதற்காக பயன்படுத்துவார். ஷெர்லாக்கிற்கு தொல்லைக் கொடுப்பதுதான் மொரியார்ட்டியின் வேலையே. பல இடியாப்பச் சிக்கல்களை மொரியார்ட்டி உருவாக்குவதும், அதை அரும்பாடுபட்டு தீர்ப்பதும்தான் இந்த துப்பறியும் கதைகளின் மையப்புள்ளி. மொரியார்ட்டி செய்யும் சில சிக்கல்கள் போலீஸின் வாயிலாகதான் ஷெர்லாக்கிற்குத் தெரியவரும். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் க்ரெக் டெஸ்ட்ரேட். ஷெர்லாக், வாட்சன் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் Mrs.ஹட்ஸன். கதையில் இவருக்கும் பெரும் இடமுண்டு. ஷெர்லாக்கின் அண்ணனாக வருபவர் மைக்ராஃப்ட் ஹோல்ம்ஸ். இவர்களைத் தவிர ஐரின் அட்லர், மோலி ஹூப்பர் எனப் பல கதாபாத்திரங்கள் இருக்கின்றன. 

சரி இதற்கும் 'துப்பறிவாளன்' படத்துக்கும் என்ன சம்பந்தம்? வெளியான டிரெய்லரில் பல இடங்களில் ஷெர்லாக்கின் டச் இருந்ததை நம்மாள் முழுமையாக உணர முடியும். முதல் காட்சியிலேயே விஷால் கையில் இசைக்கருவியை வைத்து வாசித்துக் கொண்டிருப்பார். இந்தப் பக்கம் ஷெர்லாக் ஆழ்ந்த சிந்தனைகளில் இருக்கும் போது வயலின் வாசிக்கும் பழக்கம்  இருக்கிறது. தன்னிடம் தேடி வரும் ஆட்களின் சிக்கலின் அளவை உணர்ந்துதான், அதைச் செய்யலாமா வேண்டாமா என்ற தீர்மானத்திற்கு வருவார். அதேபோல் விஷால் தலைவாசல் விஜய்யிடம் 'உங்க கேஸ் என்ன?' என்ற கேள்வியைக் கேட்பார். ஷெர்லாக்கிற்கு பல கலைகள் தெரியும். அதில் முக்கியமாக மார்ஷியல் ஆர்ட்ஸ். விஷாலின் சண்டைக் காட்சிகளில் அந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் பிரபதிபலிப்பதையும் நம்மால் காண முடிந்தது. விஷால் உட்கார்ந்திருக்கும் அந்த சோபா, அருகில் இருந்த செஸ், பின்னாடி இருந்த புத்தகங்கள் என எல்லாமே ஷெர்லாக் ஹோல்ம்ஸின் டச் இருக்கும். இது எல்லாவற்றையும் விட விஷால் அணிந்திருக்கும் தொப்பி, அவரது நக்கலான பேச்சு, பாடி லாங்குவேஜ் என எல்லாமே ஷெர்லாக்கை நினைவுப்படுத்துகிறது. மொரியார்ட்டி கதாபாத்திரத்தில் வினயும், ஜான் வாட்சன் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நடித்திருப்பதாக தெரிகிறது. தமிழ் சினிமா என்பதால் ஆங்காங்கே சில மசாலாத் தூவல்களை எதிர்பார்க்கலாம்.

நம் ஜெனரேஷனில் ஷெர்லாக்கை மையமாக வைத்த எடுத்த இரண்டு விஷயங்கள் ஹிட் அடித்தது. ஒன்று, ராபர்ட் டௌனி நடிப்பில் வெளிவந்த ஷெர்லாக் ஹோல்ம்ஸ் இரு பாகங்கள், மற்றொன்று பெனிடிக்ட் நடித்த டி.வி சீரிஸ். அந்த இரண்டு விஷயங்களுக்குமே தமிழ் சினிமா ரசிகர்களும் அடிமை. எனவே, முழுக்கவே தமிழ் சினிமா பாணியில் வெளிவந்தால், அதுவும் மிஷ்கின் போன்ற இயக்குநர் இயக்கத்தில் வெளிவந்தால் படம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஷெர்லாக் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த ரசிகர்களுக்குமே இருக்கிறது. பார்ப்போம்.