Published:Updated:

`தமிழ் கன்' அட்மின் கைதுசெய்யப்பட்டது எப்படி?

`தமிழ் கன்' அட்மின் கைதுசெய்யப்பட்டது எப்படி?
`தமிழ் கன்' அட்மின் கைதுசெய்யப்பட்டது எப்படி?

தமிழ் சினிமாவை அச்சுறுத்தும் மிகப்பெரிய பிரச்னை என்றால், அது பைரசி பிரச்னைதான். வெள்ளிக்கிழமை படம் வெளியானால், அன்று மதியமே ஆன்லைனில் முழுப் படமும் `தமிழ் ராக்கர்ஸ்', `தமிழ் கன்' போன்ற  தளங்களில் வெளிவந்துவிடுகிறது. இந்த பைரசியைத் தடுத்து நிறுத்த, காவல் துறையில் செயல்பட்டுவரும் சைபர் க்ரைம் பிரிவு, தயாரிப்பாளர் சங்கத்தில் இதற்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட `Anti piracy squad' என பல டீம்கள்  செயல்பட்டுவந்தாலும் அந்த பைரசி தளங்களின் நபர்களை நெருங்கக்கூட முடியவில்லை.  இந்த நிலையில்தான் முதன்முதலாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

`தமிழ் கன்' இணையதளத்தின் அட்மினாகச் செயல்பட்ட கெளரி சங்கரை, காவல்துறை நேற்று கைதுசெய்தது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட கெளரி சங்கரிடம் முதற்கட்ட விசாரணை நடக்கும்போதே, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் காவல் நிலையம் வந்தார். காவல் ஆய்வாளர் சோ.பிரவுவைச் சந்தித்தவர், கைதுசெய்யப்பட்ட கெளரி சங்கருடனும் பேசியிருக்கிறார். `கெளரி சங்கரைப் பிடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கக் கண்காணிப்புக் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் காவல் ஆய்வாளரிடம் விஷால் விளக்கினார்.

திருவல்லிக்கேணி ஆய்வாளர் சோ.பிரபுவிடம் பேசினோம், ``நாங்க சினிமாவுல காட்டுற மாதிரி சேஸுங் எல்லாம் செஞ்சு  அவனைப் பிடிக்கலை. 12-ம் தேதி மாலை 7 மணிக்கு தயாரிப்பாளர்கள் ராஜசேகர், மணிமாறன், முகமத்னு மூணு பேர் வந்தாங்க. `தமிழ் கன்' என்ற இணையதளத்தின் நிர்வாகி, சட்டத்துக்குப் புறம்பாக திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் அட்மின், இப்ப எங்க ஆபீஸில் இருக்கிறார். நீங்க வந்தால் அரெஸ்ட் பண்ணலாம்'னு சொன்னாங்க. நாங்களும் எங்க டீமோட திருவல்லிக்கேணியில் உள்ள அவர் அலுவலகத்துக்குப் போனோம். விசாரித்தோம். அவர்தான் அந்தத் தளத்துக்கு அட்மின்னு தெரிந்ததும் அங்கேயே அவனை அரெஸ்ட் பண்ணிட்டோம். `நான் அந்த இணையதளத்துக்கு அட்மின் இல்லை சார்'னு சொன்னதையே சொல்லிட்டிருக்கான். இனி கஸ்டடியில எடுத்து விசாரித்தால்தான், உண்மை என்னென்னு தெரியும்" என்றவரிடம் கைதுசெய்யப்பட்ட கெளரி சங்கர் குறித்த தகவல்களைக் கேட்டோம். 

கைது செய்யப்பட்ட கெளரி சங்கர்

``அந்தப் பையனுக்கு வயசு 24. சொந்த ஊர் திருப்பத்தூர். வாணியம்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிச்சிருக்கான். `நல்லா படிப்பேன்'னு சொன்னான். அவனுடைய மொபைல்போன், லேப்டாப், ஐபேட் எல்லாத்தையும் சீஸ் பண்ணி சைபர் க்ரைம்ல கொடுத்துட்டோம். இனி  விசாரிக்க விசாரிக்கத்தான் முழுமையான உண்மை தெரியவரும்'' என்று முடித்துக்கொண்டார். 

தயாரிப்பாளர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிய, அந்தச் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசினோம்.

``இது மிகப்பெரிய நெட்வொர்க். கடந்த 60 நாள்களாக இவனைப் பிடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு, தற்போது பிடித்து போலீஸில் ஒப்படைத்துவிட்டோம்'' என்றவர், தயாரிப்பாளர்களுக்கு இந்த பைரசியால் ஏற்படும் பாதிப்புகளைப் பகிர்ந்துகொண்டார். 

``இன்னமும் இந்த பைரசி குற்றம் குறித்த விழிப்புஉணர்வு நம்ம சமூகத்துக்கு ஏற்படலை. இப்ப பல சமூகப் பிரச்னைகளுக்குக் குரல்கொடுக்கும் நம் இளைஞர்கள், பைரசி சம்பந்தப்பட்ட இணையதளங்களில் படம் பார்ப்பதைக் குற்றமாகவே கருத மாட்றாங்க. அதனால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் இழப்புகள் ஏராளம். `தமிழ் கன்' அட்மினைக் கைதுசெய்ததும் பல இளைஞர்களும் இவர்களுக்கு ஆதரவாக விளையாட்டாக மீம் போடுறாங்க. `இது தவறுன்னே' நினைக்க மாட்றாங்க. அரசாங்கமும் இந்த பைரசிக்கு எதிரான போரில் வேகம் காட்டலை. தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நாங்களே ஒரு டீம் அமைத்திருக்கிறோம். இந்த கெளரி சங்கர்போல இதில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைப்போம்'' என்று உறுதியாகச் சொன்னார். 

தயாரிப்புச் சங்கத்தைச் சேர்ந்த ஆன்டி பைரசி டீம்  சிவா,  ``இந்த பைரசி குரூப்கள்  இனி ஓடி ஒளிய முடியாது. கெளரி சங்கரை நாங்க அரெஸ்ட் பண்ணுறதுக்கு முன்னாடி, நாங்க யாருனு சொல்லாமலே பேச்சுக்கொடுத்தோம். அவன் பேசும்போதுதான் இதில், எவ்வளவு தூரம் டெக்னிக்கலாக விளையாடுறாங்கனு புரிஞ்சது. பைரசி சைட்டை நாம டிராக் செய்தால், அது ஒரே நேரத்திலிருந்து அமெரிக்கா, யூரோப், மும்பைனு பல இடங்களில் காட்டும். அதை எப்படிப் பண்ணவைக்கிறாங்க. அந்த சர்வருக்குப் பணம் கட்டும் முறை எப்படினு அவன் பேசப் பேச எங்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.  அதை எல்லாம் இப்போது வெளியே சொல்ல மாட்டோம். விரைவில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட அட்மின்களையும் பிடித்துவிடுவோம்'' என்றார்.

`தமிழ் கன்' அட்மினாக இருந்த கெளரி சங்கரை, தயாரிப்பாளர் சங்கத்தின் டீம்  பிடித்ததே சுவாரஸ்யமான கதைதான். `Skyend.in' என்ற இணையதளத்தின் சர்வரும், `தமிழ் கன்' மற்றும் 23 போனோகிராஃபி இணையதளத்தின் சர்வரும் ஒரே சர்வரிலிருந்து செயல்பட்டிருக்கிறது. அந்த சர்வருக்குச் சொந்தக்காரர் இந்த கெளரி சங்கர்தான். அதில் தனது இமெயில் முகவரியைப் பதிவுசெய்திருக்கிறார் கெளரி சங்கர். அந்த மெயில் முகவரியை வைத்துதான், தயாரிப்பாளர் சங்கத்தின் டீம் முதலில் இந்த அட்மினிடம் நெருங்கியிருக்கிறது. கெளரி சங்கரிடம் டெக்னிக்கலாக சில உதவிகள் தேவை எனக் கேட்டு, சென்னைக்கு வரவைத்திருக்கின்றனர்.  

`நீ ரொம்பப் பெரிய ஆளாக இருக்கியேப்பா... இந்தச் சின்ன வயசுலேயே டெக்னிக்கலா புகுந்து விளையாடுறீயேப்பா... இந்த சினிமா பைரசி எல்லாம் தடுக்கவே முடியாதா?' எனக் கேள்விகள் கேட்க, எப்படி எல்லாம் பைரசியில் விளையாடலாம் என ஒவ்வொன்றாகப் புட்டுபுட்டு வைக்க, ஆடிப்போய் இருக்கிறார்கள். அதன் பிறகு கெளரிதான் `தமிழ் கன்' அட்மின் எனத் தெரிந்த பிறகே அவரை காவல் துறையினரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்கள். உடனே காவல்துறை கைதும் செய்திருக்கிறார்கள். 

காவல்துறை விசாரணையில் `நான் அவனில்லை' என்ற ரேஞ்சிலேயே மிகவும் கூலாகப் பேசிய கெளரி சங்கர், ‘ `தமிழ் கன்' சர்வர் எப்படி என் சர்வருக்குள் வந்தது என்பதே தெரியாது’ என முதலில் சொல்லியவன், தற்போது ‘ `தமிழ் கன்' என் சர்வருக்குள் இருந்தது தெரியும்’ என்று குற்றத்தை ஒப்புக்கொடுள்ளான். இதில் யாரெல்லாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், எப்படியெல்லாம் பணம் விளையாடுகிறது என்ற உண்மை விசாரணையில் தெரியவரும். 

பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு