Published:Updated:

மிஷ்லாக் ஹோம்ஸ்கினின் வியூகம் ஈர்க்கிறதா? - துப்பறிவாளன் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
மிஷ்லாக் ஹோம்ஸ்கினின் வியூகம் ஈர்க்கிறதா? - துப்பறிவாளன் விமர்சனம்
மிஷ்லாக் ஹோம்ஸ்கினின் வியூகம் ஈர்க்கிறதா? - துப்பறிவாளன் விமர்சனம்

கொலைகளை நிகழ்த்திவிட்டு, அதை 'விபத்துகள்' போல மாற்றிவிடும் சதிகாரக் கும்பலைத் ‘துருப்பு’களை வைத்துத் துப்பறியும் துப்பறிவாளன் கதை.

சிம்ரனின் வீட்டில் நடக்கிறது விபத்து என்ற பெயரில் ஒரு கொலை. அடுத்த காட்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் காவல்துறை அலுவலகத்தில் மர்மமான முறையில் இறக்கிறார். ஒரு சுவாரஸ்யமான வழக்கு கையில் சிக்காதா என்று காத்திருக்கும் துப்பறிவாளர் கணியன் பூங்குன்றனிடம் (விஷால்) ஒரு சிறுவன் தன் நாய் கொல்லப்பட்ட கேஸைக் கொண்டுவருகிறான். இதுமட்டுமல்லாமல் வெவ்வேறு சம்பவங்களுக்கு இடையிலான முடிச்சுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அவிழ்த்து, கொலையாளிகளைப் பிடிக்கும் கதையை ஷெர்லாக் ஹோம்ஸ் பாணி பாதி, தன் பாணி மீதி என்று படமாக்கியிருக்கிறார் மிஷ்கின். படத்தின் முக்கால்வாசி வரை சஸ்பென்ஸை மெயின்டெய்ன் செய்தவகையிலும் கதையோட்டத்திலும் பிரமாண்டத்தைக் கொண்டுவந்த வகையில் வெல்டன் மிஷ்கின்! 

அறை முழுக்க புத்தகங்கள்; தன் மூளைக்குச் சவால் விடும் புதிருக்காக நாட்கணக்கில் காத்திருப்பது; உணவுகளை வெறுப்பது என்று விஷாலின் கேரக்டர் முழுக்க ஷெர்லாக்கின் சாயல்.இப்படி ஷெர்லாக் பாதி மிஷ்கின் மீதி என இவன் மிஷ்லாக் ஹோம்ஸ்கினாக செயல்படுகிறான்.  பொதுவாக வெத்து பன்ச் டயலாக் பேசி, குத்துப்பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்த விஷாலுக்கு இது வித்தியாசமான சினிமாதான். சின்னச் சின்ன க்ளூக்களை வைத்துக்கொண்டு கொலையாளிகளை நெருங்குமிடம் புத்திசாலித்தனம். ஆனால் எதிரில் அமர்ந்திருப்பவர் யார் என்றாலும் அவரைப் பற்றிய தகவல்களைச் சகட்டுமேனிக்குப் புட்டுப்புட்டு வைப்பதும் அவர் எதற்குத் தன்னைப் பார்க்க வந்தார் என்பதை அவர் சொல்வதற்கு முன்பே சொல்வதும் சலிப்பு. ஓவர் புத்திசாலித்தனம் உடம்புக்கு ஆகாது சாரே! அதேபோல் கதாநாயகியை விஷால் ட்ரீட் செய்யும் இடங்கள் எல்லாம் நெருடல். வித்தியாசமான கதாபாத்திரம் என்பதற்காக இப்படிக் கிறுக்குத்தனங்களா?

விஷாலின் நண்பனாக பிரசன்னா. அவரின் கேரக்டரை சுஜாதாவின் 'கணேஷ் வசந்த்' பாத்திரங்களில் வசந்த் பாத்திரம் என்று சொல்லலாம். இவருக்கு படம் முழுவதும் ஹீரோவுடன் டிராவல் செய்யும் கேரக்டர். சென்னை டு பிச்சாவரம் டிராவல் மட்டுமே செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் அவருக்கு கொஞ்சம் முக்கியத்துவம். மற்ற காட்சிகளில் விஷால் என்ன செய்கிறார், ஏன் செய்கிறார் என்று பிரசன்னாவுக்கே புரிவதில்லை. 

'அஞ்சாதே பிரசன்னாவின் வாட்ச் மேனரிசம்போல், ' ஒரு கப் காபி ' என கிளின் ஷேவ் வினயின் மேனரிசம் ஷார்ப். வில்லத்தனத்தில் ஸ்மார்ட்டாக அசத்துகிறார்.  மலையாளத்தில் கவனம் ஈர்த்த அனு இமானுவேல் அழகு. ஆனால் தொடக்கக்காட்சியிலும் (அவருக்கான) இறுதிக்காட்சியிலும் தவிர வேறெங்கும் அவருக்குப் பெரிதாக வேலை இல்லை. அதுவும் கையில் துடைப்பத்தைக் கொடுத்து விஷால்  அவரை உள்ளே தள்ளிக் கதவைச் சாத்துவதும் அவரும் ஏதோ 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் கிடைத்த ஃபீல் காட்டுவதும்....சத்தியமா முடியல்ல!

பாண்டியராஜன், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரா என மூத்த நடிகர்கள் வரிசையில் மிஷ்கினின் பார்வை பாக்யராஜ் பக்கம் விழுந்திருக்கிறது. 'அதுல ஒரு சமாச்சாரம் என்னன்னா...' என்று எப்போதும் நிறையப் பேசும் பாக்யராஜைக் குறைவான வசனங்களுடன் பார்க்கும்போது வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்குப் பாக்யராஜின் பாத்திரம் கனமாக இல்லையே. ஆண்ட்ரியா சாகசம் செய்து அசத்துகிறார். ஆனால் அவருக்கும் அந்த மொட்டைத்தலை பாத்திரத்துக்கும் என்ன மாதிரியான உறவு, அவர் இறந்ததும் ஆண்ட்ரியா ஏன் ஃபீல் செய்கிறார், பாக்யராஜ் கொல்லப்பட்டதற்கு அவர் ஃபீல் செய்தாரா இல்லையா என்றெல்லாம் எந்த டீட்டெய்லிங்கும் இல்லை. 

ஒரு டிடெக்டிவை நம்பி ஒட்டுமொத்த காவல்துறையும் விஷால் பின்னால் போவது, போலீஸிடமி ருந்து ஆண்ட்ரியா தப்புவது... காதலி இறக்கும் காட்சியில் விஷால் அழுவது எல்லாம் மிஷ்கினிஸம். ஜான் விஜய், ஆண்ட்ரியா , ஷாஜி, 'ஆடுகளம்' நரேன், தலைவாசல் விஜய், சிம்ரன், ஜெயப்பிரகாஷ், அபிஷேக், ரவி மரியா எனத் தெரிந்த முகங்கள் ஏராளம். அடுத்தடுத்துக் கதையை நகர்த்துவதற்கு அணிலைப்போல் உதவியிருக்கிறார்கள்.

 படத்தில் அந்த சிறுவன் “எல்லா டிடெக்டிவும் தொப்பி போட்டிருந்தாங்க... நீங்கதான் பேர் மட்டும் போட்டு சிம்பிளா இருந்தீங்க” என்கிறான். ஆனால் சென்னை வெயிலிலும், ஸ்கார்ஃப் அணிந்து, தொப்பி போட்டுக்கொண்டுதான் சுற்றுகிறார்  துப்பறிவாளர் ஷெர்லாக் பூங்குன்றன்.  அவ்வளவு மெனக்கெட்டு விஷாலின் அறையை 221B பேக்கர் ஸ்டிரீட்டாக (ஷெர்லாக்கின் அறை எண்) மாற்ற முயற்சி செய்திருக்கும் மிஷ்கின், செஸ் போர்டை எப்படி சரியாக வைப்பது என்றும் கவனித்திருக்கலாம்.

மிஷ்கின் டிரேட்மார்க் ஃபிலிம் மேக்கிங் இதிலும் தொடர்கிறது. கேமரா கோணங்கள் மற்றும் காட்சிக்கோர்வைகள் மிரட்டல். யுத்தம் செய் படத்தில் வரும் 'ப்ரிட்ஜ் ஃபைட்' காட்சி; அஞ்சாதேவில் வரும் மருத்துவமனை அடியாள் சண்டை; பாணியில் மிஷ்கினின் ஸ்டன்ட் நுண்ணறிவு இதிலும் நேர்த்தி. மிஷ்கினின் சொல்கேட்டு நகர்ந்திருக்கிறது கார்த்திக் வெங்கட் ராமின் கேமரா. ‘இதுக்கு நீ பிக்பாக்கெட்டாவே இருந்திருக்கலாம்’ என அனுவைப் பார்த்து விஷால் கலங்கும்போது, ‘இப்பயும் நான் பிக்பாக்கெட்தான்’ என்று அவர் சொல்லும் இடம், க்ளைமாக்ஸில் சிறுவனுக்கு வினய் சொல்லும் பதில்... இப்படி சில இடங்களில் மிளிர்கிறார் வசனகர்த்தா மிஷ்கின்.

பேமென்ட் கேட்டு வரும் அடியாளைக் கொலை செய்யதை எல்லாம் டீடெயிலிங் பண்ணிய மிஷ்கின், வினய்யின் பின்னணி தகவல்களை விஷால் கண்டறிந்ததை வெறும் வசனங்களில் கடத்துவதும் எல்லாக் கதாபாத்திரங்களும் மிஷ்கினை அப்படியே நகலெடுத்து இருப்பதும் போர். ஆனால், காலில் தொடங்கும் காட்சிகள், குமிருட்டு போன்ற மிஷ்கினின் க்ளிஷேக்கள் இதில் குறைவு என்பது ஓர் ஆறுதல். 

ஒரு காட்சியில் , பிக் பாக்கெட் அடிக்கும் இரு சிறுவர்கள் மாட்டிக்கொள்ள அங்கிருக்கும் பொதுமக்கள் அவர்களை அடிப்பார்கள். அதை தட்டிக்கேட்கும் விஷால், ' போலீஸே அடிச்சாலும் தப்புதான் என்பார்'. பின்னர் விஷாலுடன் மஃப்ட்டியில் இருக்கும் ஒரு போலீஸ் , ஷாப்பிங் மாலின் சிசிடிவி ஃபுட்டேஜை  அதே போலீஸ் பாணியில்தான் அடித்துக் கேட்கிறார். கண் தெரியாத அம்மா; என் அப்பா பிக் பாக்கெட்; குடிகார சொந்தக்காரர்; கோமாவில் இருக்கும் மனைவி என ஏகத்துக்கும் திணிக்கப்பட்ட மெலொ டிராமா கதாபாத்திரங்கள் அலுப்பு. அதிலும், போலீஸில் மாட்டிக் கொள்ளும் ஒருவன் (பைக் சேஸிங்கில் ஹார்லி டேவிட்சனில் நாற்பதில் செல்லும் அளவுக்கு நல்லவர்) ஜப்பானிய பாணியில் (ஹரகிரி) வயிற்றை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்வதெல்லாம் டூ மச் ஜப்பான் சினிமாயிஸம்.

கடைசியில் விஷால் துப்பறிந்து சொல்வது வினயின் பின்னணியைத்தானே தவிர பாக்யராஜ், ஆண்ட்ரியா மற்றும் ஐவர் கேங் எப்படி சேர்ந்தது, அவர்களின் பின்னணி என்ன என்ற எந்த விவரங்களும் இல்லையே?

படத்தின் ஆரம்பித்திலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் கதாப்பாத்திரத்திற்கும், அதன் எழுத்தாளர் சர் ஆர்தர் கொனான் டாய்லுக்கு நன்றி சொல்லியதற்கு பாராட்டுகள். படத்தின் மிகப்பெரிய பிளஸ் அரோல் கொரேலியின் இசை. பல காட்சிகளின் வீரியத்தை பலமடங்கு கூட்டுகிறது. பிசாசுவைப் போல், இதிலும் தன் வயலின் கரங்களால் அழகுபடுத்தியிருக்கிறார். 

பலப்பல கேள்விகள் இருந்தாலும் ஸ்டைலான மேக்கிங்கில் நீண்டநேரம் சஸ்பென்ஸைத் தக்கவைத்தவகையில் கவர்கிறான் 'துப்பறிவாளன்'.