Published:Updated:

'' 'ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி' பாடல் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்!" - பாடகி ப்ரியா சுப்ரமணியன்

கு.ஆனந்தராஜ்
'' 'ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி' பாடல் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்!" - பாடகி ப்ரியா சுப்ரமணியன்
'' 'ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி' பாடல் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்!" - பாடகி ப்ரியா சுப்ரமணியன்

"பாடகியாவேன்னு நினைச்சதில்லை. ஆனா, எதேச்சையா பாட வாய்ப்புக் கிடைக்க, அதை சரியா பயன்படுத்திக்கொண்டு, இன்னொரு பக்கம் என்னோட வழக்கறிஞர் பணியையும் செய்திட்டிருக்கேன்" - உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார், ப்ரியா சுப்ரமணியன். லேட்டஸ்ட் ஹிட் பாடல்களை கிளாஸிக்கல் வெர்ஷனில் பாடிப் புகழ்பெற்றவர், வழக்கறிஞராகவும், சினிமா பின்னணிப் பாடகியாகவும் கலக்கிவருகிறார்.

"கிளாஸிக்கல் பாடல்கள் மேல அப்படி என்ன ஆர்வம்?!" 

"அப்பா சுப்ரமணியனுக்கு பழைய கிளாஸிக்கல் பாடல்கள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். வீட்டுலயும், கார்ல பயணம் செய்யும்போதும் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா, ஜமுனா ராணி அம்மா, டி.எம்.செளந்திரராஜன் உள்ளிட்ட 50,60-களில் பிரபலமா இருந்த பின்னணிப் பாடகர்களின் பாடல்களைதான் அதிகம் கேட்பார். சின்ன வயசிலே அப்பாகூட அதிகம் பயணிச்சதால, நானும் அப்பாடல்களை அதிகமாகக் கேட்டு வளர்ந்தேன். அதனால எனக்கும் கிளாஸிக்கல் சாங்ஸ் மேல காதல் வந்திடுச்சு. 

எங்கம்மா ஒரு பாடகி. அவங்ககிட்ட கர்னாடிக் மியூசிக் கத்துக்கிட்டேன். அப்பா மாதிரி நானும் சட்டம் படிச்சேன். சொந்த ஊரான மாயவரத்துல வழக்கறிஞரா ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பிச்சு, 2003-ல் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துல ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன். கருப்பு கோட் மாட்டினாலும், வீட்டில், குடும்ப விசேஷங்களில் எல்லாம் என்னைப் பாடச் சொல்லிக் கேட்கிறது எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடிச்ச விஷயம்!" 

 "வழக்கறிஞர் எப்படி பாடகி ஆனீங்க..?" 

"2004-ல் ஒருமுறை ஒரு கல்யாண வீட்டுக்குப் போயிருந்தேன். 'அமுதைப் பொழியும் நிலவே'ங்கிற பழைய பாட்டை அங்கே பாடினேன். அந்தக் கல்யாணத்துக்கு வந்திருந்த பொதிகை சேனல் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூஸர், 'நல்லா பாடுறீங்க, ஆபீஸூக்கு வந்து பாருங்க'னு சொன்னார். போனப்போ, என்கூட நிறைய டிஸ்கஸ் செய்து, 'துள்ளாத மனமும் துள்ளும்' என்ற இசை நிகழ்ச்சியை பொதிகையில ஒளிபரப்பும் ஐடியா உதயமாச்சு. ரெண்டரை வருஷம் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஜெயா டிவியில 'ப்ரியம் என்டர்டெய்னர்ஸ்'ங்கிற என் சொந்த நிறுவனம் மூலமா, 'சொக்குதே மனம்'ங்கிற பெயர்ல ஞாயிறு தோறும் ஒரு  நிகழ்ச்சியை வழங்கினேன். ஹிட் ஆன லேட்டஸ்ட் பாடல்களை, பழைய கிளாஸிக்கல் சாங் மாடுலேஷன்ல பாடின அந்நிகழ்ச்சிக்கு பெரிய ரீச் கிடைச்சது. சேனல் மற்றும் எக்கச்சக்க வெளி மேடை நிகழ்ச்சிகளிலும் பாடிட்டிருந்தேன். ஆன்மிக ஆல்பம் வெளியீடு, திருப்பதி தேவஸ்தானத்துல கச்சேரினு இசைப் பயணம் சிறப்பாகப் போயிட்டிருக்குது!" 

"சினிமா பின்னணிப் பாடகியாவும் ஹிட்ஸ் கொடுத்தீங்களே..."

"என் உறவினரான பின்னணிப் பாடகர் உன்னிகிருஷ்ணன் சார் மூலமாக வித்தியாசகர் சார் இசையமைப்புல 'பரமசிவன்' படத்துல இடம்பெற்ற 'ஆச தோச அப்பள வடை' பாடலைப் பாடி சினிமா பின்னணிப் பாடகியானேன். வாய்ஸ் வித்தியாசமா இருக்குனு சொல்லி, அடுத்தடுத்து சினிமா மற்றும் மேடைக் கச்சேரி வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. 'இடை தழுவிக்கொள்ள(பெரியார்)', 'கோல கோலகா(கோ)', 'மாயா பஜார்(என்னை அறிந்தால்)', 'சோனே சோனே(சிங்கம் 3)'னு பல தமிழ் மற்றும் நிறைய தெலுங்கு, கன்னட படங்களிலும் பாடினேன்." 

"இரண்டு துறையிலயும் மறக்க முடியாத அனுபவங்கள்?"

"நிலம் சம்பந்தமான ஒரு வழக்குல என் அப்பாவையே எதிர்த்து வாதாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத அனுபவம். ரெக்கார்டிங், கச்சேரிகளுக்கு இடையே வழக்குகளை எதிர்கொண்டது எல்லாமே சவாலான அனுபவம்தான். மியூஸிக்ல சொல்லணும்னா, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாகூட நான் ஒரு படத்துல டூயட் பாடினது... மறக்கவே முடியாத அனுபவம். ஒருநாள் என் வீடு தேடிவந்து டி.எம்.செளந்தரராஜன் அப்பா பாராட்டிட்டுப்போனதோடு, அதன் பிறகு பல நிகழ்ச்சிகளுக்கு என்னையும் உடன் அழைச்சுட்டுப் போனார். 'இந்த சின்ன வயசுல எங்க காலத்துப் பாடல்களை எடுத்துப் பாடுறது பாராட்டுக்குரிய விஷயம்'னு அடிக்கடி பாராட்டுவார். ஒருமுறை ரஜினிகாந்த் சாரை சந்திச்சப்போ, 'உங்க வாய்ஸ் நல்லா இருக்கு. நல்லா பாடுறீங்க'னு அவர் பாராட்டினது மறக்க முடியாத விஷயம்."

"வழக்கறிஞர் டு பாடகி... சிரமமா இல்லையா?" 

"இசை எனக்குக் கொடுத்திருக்கும் அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் நினைச்சுப் பார்த்தா, நிச்சயமா அது சிரமமா இல்லை. அதனால வழக்கறிஞர் பணிக்குப் பிரச்னை ஏற்படாத வகையில, இசைக்கான நேரத்தை ஒதுக்கிக்கிறேன். அதுக்கான என் சீனியர்ஸ், ஃப்ரெண்ட்ஸின் சப்போர்ட் ரொம்பப் பெருசு.''

''மிஸ் ஆன வாய்ப்புகள் பற்றி..?"

'' 'மைனா' படத்துல 'ஜிங்கி ஜிங்கி' பாடலை முதல்ல நான்தான் பாடினேன். ஆனா, அன்னிக்கு என் வாய்ஸ் சரியில்லாததால, அப்புறம் வேற சிங்கரைப் பாடவெச்சாங்க. ஹிட் பாடலான அதை மிஸ் செய்த வருத்தம் எப்பவும் இருக்கும். இப்போ ரிலீஸூக்காக ஏழு பாடல்கள் வெயிட்டிங்ல இருக்கு. ஒரு முன்னணி சேனல்ல புது இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கப்போறேன். இனி அடிக்கடி என் குரலை நீங்க கேட்பீங்க" எனப் புன்னகைக்கிறார் ப்ரியா சுப்ரமணியன்.