Published:Updated:

‘உலகம் விலைக்கு வருது!’ - மகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா

சனா
‘உலகம் விலைக்கு வருது!’ - மகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா
‘உலகம் விலைக்கு வருது!’ - மகனுக்காக மீண்டும் இயக்குநராகும் தம்பி ராமையா

நகைச்சுவை, குணச்சித்திரம்... இப்படி எந்த வேடங்களாக இருந்தாலும் அதில் தன் முத்திரையை அழுந்த பதிப்பவர் ததம்பி ராமையா. 'மைனா', 'கும்கி', 'வனமகன்'' என அவரின் நடிப்புக்கு பல திரைப்படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். இப்படி அவர் நடிகராக ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தாலும் அவருக்கு ‘இயக்குநர்’ ஆக தொடரமுடியவில்லையே என்ற ஏக்கம் உண்டு. அவர் ஏற்கெனவே இயக்கிய முரளி நடித்த 'மனுநீதி', வடிவேல் நடித்த 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படங்களுக்குப்பிறகு இயக்குநராக தொடர வேண்டும் என்பதே அவரின் விருப்பம். ஆனால் எதிர்பாராத விதமாக முழுநேர நடிகரானவர், இன்று பரபரப்பாக வலம் வருகிறார். இந்த நிலையில் அவர் தன் மகனுக்காக மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார் என்பது தெரியவந்தது. இது குறித்து தம்பி ராமையாவிடம் பேசினேன். 

“என் மகன் உமாபதியை என் இயக்கத்தில் நடிகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. அதற்காக இந்தக் கதையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதி வைத்து இருந்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே இன்பாசேகர் இயக்கத்தில் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தில் உமாபதி அறிமுகமாகிவிட்டார். அதில் என் தலையீடு எதுவும் இருந்ததில்லை. எல்லோரும் என்னிடம், ‘உங்கள் பையன் அறிமுகமாகும் படத்தில் நீங்கள் எதுவும் செய்யவில்லையா’ என்று கேட்டனர். 

அதனால், நான் ஏற்கெனவே உமாபதிக்காக ரெடி பண்ணிவைத்திருந்த கதையுடன் அவரின் இரண்டாவது படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கிவிட்டேன். இந்தப் படம் முழுக்க, சார்லி சாப்ளினுடைய ஃபீல் இருக்கும். 'மழை பெய்யும்போது குடை பிடிக்காமல் நடந்துபோவது பிடிக்கும். அப்போதுதான், நான் அழுவது யாருக்கும் தெரியாது’ என்று சார்லி சாப்ளின் சொல்லியிருப்பார். அதேபோன்ற வலி இந்தப் படத்தின் கதையிலும் இருக்கும். ஆனால், ஆடியன்ஸூக்கு படம் முழுக்க காமெடி இருக்கும். 'உலகம் விலைக்கு வருது' இதுதான் படத்தின் பெயர். இந்தத் தலைப்பே தன்னம்பிக்கையை தருவதாக இருக்கும். நாம் உயர வேண்டுமென்றால் நாம்தான் சிந்திக்க வேண்டும். நமக்குப் பதிலாக வேறு யாரும் இந்த உலகத்தில் சிந்திக்க மாட்டார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு. 

இறைவனின் அருளாலும் மக்களின் ஆதரவாலும் நான் நன்றாக இருக்கிறேன். தற்போது நான் இருக்கும் நிலைமையில் மீண்டும் இயக்குநராகப் படம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், தம்பி ராமையா ஒரு நடிகன் என்பது என் மனைவிக்கு, என் பையனுக்கு கெளரவமாக இருக்கலாம். ஆனால், எனக்கு ஓர் இயக்குநர் என்பதுதான் கெளரவம். எப்போதும் ஒரு படைப்பாளியாக அறியப்படுவதுதான் பெருமை. அதனால் நானாக விரும்பியும் தார்மீகக் கடமையின் அடிப்படையில் இயக்குநராக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கால்பதிக்கிறேன். 

படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒரு முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. படத்தில் சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், ’நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். மலேசியாவிலிருந்து ஒரு புதுமுக வில்லனையும், இசையமைப்பாளராக ஒரு புதுமுகத்தையும் அறிமுகப்படுத்துகிறேன். அதுமட்டுமில்லாமல் இதில் என் பையனின் அப்பா கேரக்டரிலும் நானே நடிக்கிறேன். நவம்பர் 1-ம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம். தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மலேசியாவில் இருக்கும் என் தங்கை தேன்மொழி சுப்பிரமணியன் பெயரில் என் பேனரில் இந்தப் படத்தை தயாரிக்கிறேன்” என்றார்.