Published:Updated:

''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்!"  - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum

''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்!"  - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum
''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்!"  - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum

''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்!"  - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum

டிரெய்லர் பார்த்துவிட்டு, 'பல வருசங்களுக்கு அப்புறமா  சந்திக்கிற பள்ளித் தோழிகள், ஒரு பயணம் போறாங்க. அதுல கொஞ்சம் ஜாலி, சோகம், நாலு பாட்டு இருக்கும். இதுதானே..?' என நினைத்து தியேட்டருக்குப் போய் அமர்ந்தால்... படம் தொடங்கியதும் ஒவ்வொரு காட்சியிலும் 'ஸ்வீட் ஷாக்' கொடுக்கிறார் இயக்குநர் பிரம்மா. 'இது வெறும் ட்ரைலர் தான் கண்ணா, மெயின் பிக்சர் இன்னும் பாக்கலையே?' என்பதுபோல,  டிரெய்லர் பார்த்து நாம் யூகித்த கதையிலிருந்து மாறுபட்ட கதையாக விரிகிறது 'மகளிர் மட்டும்'. 

தமிழ் சினிமா வழக்கப்படி, 40, 50 வயதைக் கடந்த கதாநாயகர்களுடன் டீன் ஏஜ் நாயகிகள் டூயட் பாடுவார்கள். அந்தக் கதாநாயகர்களுடன் ஒரு காலத்தில் ஜோடியாக நடித்த நடிகைகள், அந்தப் படத்தில் அவர்களுக்கு அக்காவாகவோ, அம்மாவாகவோ நடிக்கும் கேலிக்கூத்தை இன்றும் கோடம்பாக்கம் உடைக்கவே இல்லை. ஆனால், இந்தப் படத்தில் ஜோவின் கம் பேக்குக்கு, 100% நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர். 36 வயதினிலே ஜோதிகாவை 20களில் கொண்டுவந்து, கதைக்களத்தையும் அவருக்கு ஏற்றார் போல் உருவாக்கி, கதையை அதற்குள் திறமையாக நகர்த்தி, கமர்ஷியல் எலிமென்ட்களை சரியான அளவில் உப்பு-புளி- காரம் சேர்த்து, நேர்த்தியாக பல குறியீடுகளையும் கோத்திருக்கிறார் இயக்குநர்.


நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் நிகழ்வுகளை படத்தில் அடுக்கி இருப்பதால், படம் சலிப்புத் தட்டாமல் செல்கிறது. பேரன், பேத்தி எடுத்த பானுப்பிரியா, கணவரை இழந்து, திருமண வயதுக்கு வளர்ந்துவிட்ட மகனோடு இருக்கும்  ஊர்வசி, திருமணமாகி குழந்தை இல்லாத சரண்யா... இவர்களுக்கு மத்தியில் நவீன காலத்து மருமகள் ஜோ. இப்படி நம் கண் முன்னே பார்க்கும், கேட்கும், நாமே அனுபவிக்கும் கதாபாத்திரங்களால், கதைக்களத்தால் காட்சிகள் கண் முன்னே விரிகின்றன. ஊர்வசியின் ட்யூஷன், பானுப்பிரியாவின் சமையலறை, சரண்யாவின் வீடு இவையெல்லாம் நம் உலகில் நாம் அறிந்த பல முகங்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. 

அது 1978 ஃபிளேஷ்பேக். மிகவும் கண்டிப்பான பள்ளி விடுதியில் கூண்டுகளை வெறுக்கும், கூண்டைத் தாண்டும் பறவைகளாக இருக்கிறார்கள் தோழிகள் ஊர்வசி, சரண்யா மற்றும் பானுப்ரியா. பள்ளிக் காலங்களில் அசாத்திய துணிவு கொண்டிருந்த பானுப்பிரியா, குக்கர் விசிலுக்கு முன்பு எழுந்து, கடைசி விசிலுக்கு பின்னுறங்குபவராக காலப்போக்கில் மாறிப்போகிறார். இவர்களுடைய பள்ளிக்கால ரகளை, வாழ்வின் வசந்த காலத்தை மீண்டும் கொண்டு வந்து கண்முன்னே நிறுத்துகிறது. படத்தில் நாம் கேட்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள்; திண்டுக்கல் தொடங்கி சத்திஸ்கர் வரை என படத்தில் நாம் பார்க்கக் கிடைக்கும் பல நிலங்கள், படம் முடிவதற்குள் நிறைய 'பண்'பாடு’களை நமக்குக் காட்டிவிடுகின்றன. அதிலும், பச்சை உடம்புக்காரியாக இருக்கும் தன் மனைவியை, கார்த்திக் அவரின் தந்தை காலில் விழக் கட்டாயப்படுத்தும் காட்சி, ஆணாதிக்கத் திமிரையும் அதன் அறிவுகெட்டதனத்தையும் நெற்றிப் பொட்டில் அடித்தது போல் ஒரே ஃபிரேமில் காட்சிப்படுத்திக் காட்டுகிறது.


21ம் நூற்றாண்டிலும் அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பு சொல்லிக்கொள்ளும் அளவில் கிடையாது. சமூகக்கட்டமைப்பு அப்படி. ஆனால் திரைப்படத்தில், ஆவணப்பட இயக்குநராக, சமுகச் செயற்பாட்டாளராக வரும் ஜோ ‘கருப்புச்சட்டை’ போட்டுக்கொண்டு ஒரு ஜோடிக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கிறார்; மேடையில் பேசுகிறார். பறையிசையோடு பெரியாரும் அம்பேத்கரும் ஆங்காங்கே வந்துபோகிறார்கள். ஜோதிகாவின் கதாப்பாத்திரத்தை பார்த்து பார்த்துச் செதுக்கியிருக்கிறார் பிரம்மா. போகிற போக்கில் 'ஸ்வச் பாரத்'தை கலாய்க்கிறார். தண்ணீர் பஞ்சம், மதுக்கடை என்று அடுத்தடுத்த ஃபிரேம்களில் ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணாமல் காட்டுகிறார். ‘நினைவேந்தல்’ நடத்தியது, துண்டுப்பிரசுரம் கொடுத்தது போன்ற மாபெரும் குற்றங்களுக்காக குண்டர் சட்டம் பாயும் இந்த நெருக்கடியான சூழலில், பாலச்சந்திரன் புகைப்படத்துடன் நினைவேந்தல் காட்சியை வைத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. இதற்கு விளக்கம் கேட்டு, பிரம்மாவிற்கு எந்தச் சம்மனும் அனுப்பப்படாது என நம்புவோமாக.

பட்டப்பகலில், நடுரோட்டில் வைத்து நிகழ்த்தப்பட்ட சங்கர்-கௌசல்யா மீதான ஜாதியத் தாக்குதலும், அந்த தாக்குதலில் வெட்டப்பட்டுச் சரிந்த சங்கரின் மரணமும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தின. பெரும் துயரத்தோடு முடிந்துபோன சங்கர்-கௌசல்யாவின் வாழ்வை படத்தில் கதையாகச் சேர்த்திருக்கும் இயக்குநர், அவர்களை இதில் 'வாழவைத்து’ இருக்கிறார். உண்மைச் சம்பவத்தை நிஜத்தில் வேடிக்கை பார்த்தவர்கள், படத்தில் காப்பாற்றுவதாக காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நிஜத்தில் வேடிக்கை பார்த்த நம் அனைவரின் கையாலாகாத்தனத்தைச் சுட்டிக்காட்டவும், நம்மை குற்றஉணர்ச்சியில் ஆழ்த்தவும் படத்தில் அடிக்கடி ஒலிக்கச் செய்யப்படும் சங்கர்-கெளசல்யா என்ற பெயர்களே போதுமானதாக இருக்கின்றன. 

பானுப்பிரியா இருளர் சமூகத்தைச் சேர்ந்தவரைக் காதலிக்கிறார். அவர் காதலன் திடீரென மர்மமான முறையில் இறந்து பிணமாகக் கிடக்கிறார். அது தற்கொலையா, கொலையா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில்  ‘முகத்தில் காயங்கள்’ இருக்கின்றன. அது தற்கொலையா, கொலையா என்று பானுப்பிரியாவிடம் கேட்கப்படும் கேள்விக்கு, பானுப்பிரியாவின் கண்கள் வெறுமையைப் பதிலாகக் காட்டுகின்றன. அந்த வெறுமையான பார்வையில் ஆயிரமாயிரம் வார்த்தைகள் புதைந்து கிடக்கின்றன.


தேர்தல்களில் பெண்களுக்கான தனித்தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்று குரல் கொடுக்கும் நேரத்தில், உள்ளாட்சித் தேர்தல்களில் கொடுக்கப்பட்ட தனித்தொகுதிகளில், கணவன் திருகும் பொம்மைகளாக இருக்கும் பெண் கவுன்சிலர்களின் நிலையை ‘நச்’ என்று பதிய வைத்திருப்பது அருமை. படத்தில் இரண்டு வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த பெண்கள், சந்தோஷமாக இருப்பதைப் பற்றியும், சுதந்திரமாக இருப்பதைப் பற்றியும் பேசுகிறார்கள். “உன் வீட்டுக்காரர் உன்ன நல்லா வச்சிக்கலையா?” என்ற ஊர்வசியின் கேள்வியை எதிர்கொள்ளும் பானுப்பிரியா “எது டீ சந்தோஷம்?” என்று மறு கேள்வியை கேட்கிறார். “என்னைக்கு இந்த நாட்டுல ஒரு பெண் உடல் முழுக்க நகை போட்டுட்டு, நடுராத்திரி தனியா...” போன்ற மொன்னை வரையறைகளை, “புடிச்சவன் கூட இருக்கிறதுதான் சுதந்திரம்” என்ற வசனத்தின் மூலம் அடித்து நொறுக்குகிறார் ஜோ.

குக்கர் விளையாட்டில் மூன்று பெண்களையும் அவர்களுக்குள்ளாக இருக்கும் வெம்மல்களையும், இதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை கோபங்களையும் அடித்துத் தீர்த்துவிடுகிறார்கள். அதிலும் சரண்யா, “நீ தானே முதல் புள்ள பொம்பளப்புள்ளன்னு சொல்லி கலைக்க வச்ச? மறுபடியும் குழந்த பிறந்துச்சா?” என்ற இடத்தில் உடைத்துவிடுகிறார்.சரண்யா, ஊர்வசி, பானுப்பிரியா மூவரும் அவர்களுடைய நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார்கள். அதிலும் ஊர்வசியின் குழந்தைத்தனமான சிரிப்பு அவ்வளவு அழகு. “இந்த வீட்டுக்கு இன்னொரு வேலக்காரி வச்சிக்க வேண்டியதுதான?” என்ற ஊர்வசியின் கேள்விக்கு, பானுப்பிரியாவின் பார்வையும், புன்னகையுமே அடுத்து வர வேண்டிய வசனத்திற்கு வேலை இல்லாமல் செய்கின்றன. மூவரின் இளைய வெர்ஷன்களும் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்கள். குறிப்பாக சின்ன வயது பானுப்பிரியாவாகவும், பானுப்பிரியாவின் மகளாகவும் நடித்தவரின் நடிப்பு செம்ம. பிரம்மாவின் படங்களில் இடம்பெறும் சிறு சிறு உள் கதைகளை அவரைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எடுப்பதாக, 'குற்றம் கடிதல்' திரைப்பட விமர்சனக்கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்திலும், ஒவ்வொரு நாளும் பெண்கள் எதிர்கொள்ளும் ‘முடி’ பிரச்னையையும் விடாமல் அட்ரஸ் செய்திருப்பது பிரமாதம். ட்ரைலரில் எதிர்பார்த்த தோசை சீன் படத்தில் மிஸ்ஸிங். 

பழங்குடி மக்களிடையே இருக்கும் ஆண்-பெண் சமத்துவம், பழங்குடிகளின் நாகரிகம் பலர் அறியாதது. ஆனால், அந்தக்காட்சியை இன்னும் இயல்புபடுத்தி இருக்கலாமோ என்ற நெருடல் இருக்கிறது. நடுவில் ஆங்காங்கே வரும் பன்ச் வசனங்கள் ரசிக்க வைத்தாலும், சில இடங்களில் வலிந்து திணித்ததுபோல துருத்திக் கொண்டிருக்கின்றன. படத்தின் தன்மையை தக்கவைக்க, கடைசிக் காட்சிகளை விரைவுபடுத்தியதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  மொத்தத்தில், 'மகளிர் மட்டும்' அதன் பாணியில் தனித்து நிற்கிறது.

ஆனால், 'ஒவ்வொரு ஷோவுக்கும் குலுக்கல் முறையில் ஒரு பட்டுப்புடவை பரிசு!' என்று யோசித்திருக்கும் படக்குழுவினரின் மார்கெட்டிங் மைண்ட்... கொடுமை.  'மகளிர் மட்டும்' என்று முழங்கிவிட்டு, 'பொம்பளைங்களுக்கு ஒரு புடவை கொடுக்கிறதா சொன்னா தியேட்டருக்கு வந்துடுவாங்க' என்ற அவர்களின் நினைப்புக்கு உங்களின் பதில் என்ன மக்களே..? 
 

அடுத்த கட்டுரைக்கு