Published:Updated:

'மகளிர் மட்டும்'ல வர்ற மாதிரி எங்களைக் காப்பாத்தியிருந்தா..?' - கலங்கும் கெளசல்யா சங்கர்

'மகளிர் மட்டும்'ல வர்ற மாதிரி எங்களைக் காப்பாத்தியிருந்தா..?' - கலங்கும் கெளசல்யா சங்கர்
'மகளிர் மட்டும்'ல வர்ற மாதிரி எங்களைக் காப்பாத்தியிருந்தா..?' - கலங்கும் கெளசல்யா சங்கர்

'கெளசல்யா சங்கர்' - அத்தனை எளிதில் மறக்க முடியாத பெயர். வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, சாதி அரக்கர்களால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார் சங்கர் . திருமண தாலியின் நிறம் மாறுவதற்குள் தன் கண்முன்னே சங்கரை ரத்தச் சகதியில் பார்க்க நேர்ந்த கொடுமைக்கு ஆளானார் கெளசல்யா.  

முடங்கிப் போவார் என்று எதிர்பார்த்து இறுமாப்பு கொண்டிருந்த சாதி வெறியர்களை, சாதி ஒழிப்பு போராளியாக வலம் வந்து தன் நடவடிக்கை மூலம் சம்மட்டியடித்துக்கொண்டிருக்கிறார் கெளசல்யா. 'சராசரி பெண்களைப் போன்று புடவை கட்டிக்கொள்ள மாட்டேன். நீளமாகக் கூந்தலை பின்ன மாட்டேன். பெண்ணுக்கென இந்தச் சமூகம் வரையறை செய்திருக்கும் எவற்றையும் நான் தேர்வுசெய்ய மாட்டேன்' என மேடைகளில் முழங்கி வரும் கெளசல்யாவின் மன வலியை, அவரைத் தவிர்த்து யாராலும் உணர முடியாது. 

எதற்காக இத்தனை பீடிகை என்பவர்களுகு... தற்போது வெளியாகி இருக்கும் 'மகளிர் மட்டும்' படத்தில் சங்கர் - கெளசல்யா கதாபாத்திரங்களை திரையில் நுழைத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. திரையில்... சங்கர் கேரக்டரை ஜோதிகா காப்பாற்றுவது போல ஒரு காட்சி வந்துள்ளது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் 'சங்கர் உயிருடன்' மகளிர் மட்டும் எனப் பதிவிட்டிருந்தார் கெளசல்யா. சங்கரின் நினைவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அவரிடம் பேசினோம். 

''நானும் சங்கரும் பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றி யோசிச்சதே கிடையாது. ஏன்னா, நிகழ்காலத்தில் நாங்க வாழ்ந்ததே அவ்வளவு போராட்டமான நிமிடங்களாக இருந்துச்சு. நான் படிப்பை பாதியில் நிறுத்திட்டு திருமணம் செய்துக்கிட்டேன். சங்கர் வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், 'நீயும், என் தம்பி குட்டியும் சேர்ந்து படிக்கப் போகணும்'னு சங்கர் சொல்லிட்டே இருப்பான். அதேமாதிரி, திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாதுனு முடிவு பண்ணியிருந்தோம். 'நாட்டில் எத்தனையோ குழந்தைகள், பெற்றோர் இல்லாமல் ஆதரவற்று இருக்காங்க. அந்த மாதிரி குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்'னு சங்கர் சொன்னான். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. சந்தோஷமா சம்மதிச்சேன். 

சங்கர் ரொம்பவே அமைதியான பையன். ஆனால், நான் கலகலனு பேசிட்டே இருப்பேன். நாங்க லவ் பண்ணிட்டிருந்தப்போ, அவன் அம்மா மாதிரியே நான் இருக்கிறதா அடிக்கடிச் சொல்வான். இதை நான் நம்பினதே இல்லை. கல்யாணம் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு வந்தபோதுதான் அவன் சொன்னது உண்மைனு புரிஞ்சது. ஏன்னா, சங்கர் அம்மாவின் முகமும், என் முகமும் ஒரே மாதிரிதான் இருக்கும். அவங்களும் என்னை மாதிரியே ஜாலி டைப். இப்போ என் பக்கத்தில் இருந்திருந்தால், அவன் தோளில் சாய்ந்து பூரிச்சிருப்பேன்'' என்று சொல்லி நம் மனதில் பாரத்தை ஏற்றுகிறார் கெளசல்யா.

''நான் ரொம்பவே செல்லமா வளர்ந்த பொண்ணுனு, என்னை வீட்டில எந்த ஒரு வேலையும் செய்யவிட மாட்டான். என்னுடைய துணியையும் அவன்தான் துவைப்பான். காலையில் சீக்கிரமா எழுந்து சமைச்சு வெச்சுட்டு காலேஜுக்குப் போவான். தினமும் நைட் எனக்குச் சாப்பாடு ஊட்டிவிடுவான். ஒரு குழந்தை மாதிரி என்னைப் பார்த்துப்பான். ஆணாதிக்கங்கிற வார்த்தையை, அதோட சாயலை கூட நான் சங்கர்கிட்ட பார்த்ததில்லை... உணர்ந்ததில்லை. சங்கர் கூட வாழந்தப்ப எனக்கு பெண்ணியம்ங்கிற வார்த்தையோ, சுயமரியாதைங்கிற வார்த்தையோ பரிட்சயமே இல்லாததா இருந்தது. ஆனால், இப்போ அதுக்கான அர்த்தம் தெரிஞ்சு யோசிக்கும்போது, சங்கரோடு சுயமரியாதையான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கோம்னு ஃபீல் பண்ண முடியுது.

இப்போ சங்கர் இருந்திருந்தால், சுயமரியாதை மிக்க ஒரு மனைவியாக அவன் கைகோத்து அன்போட என் வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன். என் கல்லூரிப் படிப்பை நிச்சயம் தொடர்ந்திட்டிருப்பேன். தனியா இருக்கேன். அடிக்கடி சங்கரோட நினைவுகள் மனசை, மூளையை நிரப்பும். அப்ப எல்லாம் அவன் சட்டையை எடுத்துப் போட்டுப்பேன்'' என்று கலங்குகிறார் கெளசல்யா.

'மகளிர் மட்டும்' படத்தின் இயக்குநர் பிரம்மா, அந்தப் படத்தை எடுக்கும்போது என்னிடம் பேசினார். 'உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை இந்தப் படத்தில் பயன்படுத்துகிறேன். சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டப்போது அந்தச் செயலை யாருமே தடுக்கலைங்கிற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்குது. அதை, இந்தப் படத்தின் காட்சிமூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கிறோம்'னு சொன்னார். 'மகளிர் மட்டும்' படத்துல வர்ற மாதிரி யாராவது ஒருத்தர் சங்கரை காப்பாத்த முன்வந்திருந்தா எங்க வாழ்க்கை தொடர்ந்திருக்கும். ஆனா அத்தனை கூட்டமும் வேடிக்கைப் பார்த்தது, காப்பாத்த முன் வராதது எனக்கு வேதனையா இருந்தது. நிஜத்துல முடியல... அட்லீஸ்ட் நிழல்லேயாவது சங்கர் நிம்மதியா, சந்தோஷமா வாழட்டும்'' என்பவரின் வார்த்தை அடர்த்தியை, அது தரும் வலியை தாங்க முடியவில்லை.