Published:Updated:

ஜோதிகா செல்லம் யார்... ஊர்வசி எதில் ஸ்பெஷல்!? - குட்டி ஊர்வசி, பானுபிரியாவின் ’மகளிர் மட்டும்’ அனுபவம்

ஜோதிகா செல்லம் யார்...  ஊர்வசி எதில் ஸ்பெஷல்!? - குட்டி ஊர்வசி, பானுபிரியாவின் ’மகளிர் மட்டும்’ அனுபவம்
ஜோதிகா செல்லம் யார்... ஊர்வசி எதில் ஸ்பெஷல்!? - குட்டி ஊர்வசி, பானுபிரியாவின் ’மகளிர் மட்டும்’ அனுபவம்

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் `மகளிர் மட்டும்'. சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா, ஊர்வசி நடித்திருக்கும் இந்தப் படம், பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் சின்ன வயது பானுப்ரியாவாகவும், பானுப்ரியாவின் மகளாகவும் வந்து இயல்பான நடிப்பை தந்திருப்பார் ஷோபனா. இதேபோல இளம் வயது ஊர்வசியாக நடித்து இருந்த வந்தனாவும் நன்றாக நடித்து இருந்தார்.  `மகளிர் மட்டும்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி தெரிந்துகொள்ள இருவரிடமும்  பேசினேன்.

முதலில்  பானுப்பிரியாவின் இள வயது கேரக்டரில் நடித்த ஷோபனா:

``நான் பக்கா சென்னை பொண்ணு. காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறேன். சினிமாவுல நடிக்கணும்னு சின்ன வயசுலயிருந்தே ஆசை. வீட்டுலயும் ஓகே சொல்லிட்டாங்க. என் சொந்த முயற்சியில் சான்ஸ் தேடினேன். அப்பதான் ``மகளிர் மட்டும்' படத்துக்காக ஆடிஷன்ஸ் நடக்கிறது'னு வாட்ஸ்அப்பில் ஒரு ஃபார்வேர்டு மெசேஜ் வந்தது. `முயற்சி பண்ணிப் பார்ப்போம்'னு சென்னையில நடந்த ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். 

முதல்நாள் ஆடிஷனில், என்னை செலக்ட் பண்ணின  உதவி இயக்குநர் ’அம்புலி’ கோகுலுக்குதான் நன்றி சொல்லணும். பிறகுதான் பிரம்மா சாரை சந்திச்சேன். இதில் கமிட்டாகும்போது, ஃப்ளாஷ்பேக் காட்சி உள்பட படம் முழுவதும் என் கேரக்டர் இருக்கும்னு எனக்குத் தெரியாது. பானுப்ரியா மேடமின் ராணி அமிர்ந்தவள்ளி கேரக்டரில்தான் நடிச்சேன். அந்த கேரக்டரின் குணம்தான் என் ரியல் குணம் என்பதால் நடிக்கிறது ரொம்ப எளிதா இருந்தது.

அதுதவிர பானுப்ரியா மேடமின் பொண்ணு கேரக்டர் செய்ததும் ரொம்ப சந்தோஷம். உருவத்தில் அம்மா மாதிரியே பொண்ணு இருப்பா என்கிற ஒரு விஷயத்தை யோசித்து, டைரக்டர் என்னையே அந்தக் கேரக்டரையும் செய்யவெச்சார். இதில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நடிச்சதைவிட ரியல் லைஃப் கேரக்டரில் நடிச்சதுதான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. ஏன்னா பயந்த பொண்ணு மாதிரி நடிக்கிறதுதான் எனக்கு கஷ்டம்.

ஜோதிகா மேடத்துடன் நடிச்சதை என்னால் மறக்கவே முடியாது. அவங்க ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. அதேபோல பானுப்ரியா மேடமும் எப்பவும் என் பக்கத்தில் இருந்து டிப்ஸ் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. படத்தில் பல காட்சிகள்ல ஒரே ஷாட்டில் பேசுவதுபோல்தான் பிரம்மா சார் எடுத்தார். அதனால் நிறைய விஷயங்கள் கற்றுக்கிட்டேன். நான், வந்தனா உள்பட மூணு பேருமே ‘மகளிர் மட்டும்’ யூனிட்டின் செல்லம்னு சொல்லலாம். அதுவும் குறிப்பா ஜோதிகா மேடம், எங்களை அப்படி பார்த்துப்பாங்க. அதேபோல, ‘இப்படி நடிச்சா நல்லாயிருக்கும்’னு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. ’அதிக மேக்கப் கூடாது’ இது பிரம்மா சாரின் உத்தரவு. ஆனால், ஊர்வசி மேடம் மேக்கப் இல்லாத என் முகத்தைப் பார்த்து வருத்தப்படுவாங்க. ‘கொஞ்சமா லிப்ஸ்டிக்காவது போட்டுட்டு வாயேன்டி’னு சொல்லிட்டு அவங்களே லிப்ஸ்டிக் எடுத்து லைட்டா போட்டுவிடுவாங்க. ஃபர்ஸ்ட் சீனில் சுவர் ஏறி குதிக்கிற அந்த ஒரு விஷயத்துக்குதான் பயந்தேன். மற்றபடி மாடு பக்கத்துல நிக்கிற காட்சிகளுக்கெல்லாம் பயப்படலை. தமிழ்ப் பொண்ணுங்க மாட்டுக்குப் பயப்படுவாங்களா?'' என்று கேட்டு சிரிக்கிறார் ஷோபனா.  

அடுத்து ஊர்வசியின் இள வயது கேரக்டரில்  நடித்த வந்தனா:

``தமிழ் கொஞ்சம் கொஞ்சம் அறியும். என் சொந்த ஊர் கேரளா. மாடலிங் செய்துகிட்டே படிச்சிட்டு இருக்கேன். சென்னையில் நடந்த இந்தப்பட ஆடிஷன்ல நான் கலந்துக்கலை. பிறகு பிரம்மா சார் என் போட்டோவை பார்த்துட்டு கொச்சினுக்கே வந்துட்டார். என் அம்மாவிடம் பேசி என்னை நடிக்கவைக்க பெர்மிஷன் வாங்கினார். 

இதுதான் என்னுடைய முதல் படம். என்னைப் பார்த்த பலரும், ’அப்படியே சின்ன வயது ஊர்வசிபோலவே இருக்கீங்க’னு சொன்னாங்க. படத்தின் போட்டோஷூட்லதான் ஜோதிகா-சூர்யாவை நேரில் பார்த்தேன். செம ஹேப்பி. எனக்கு ஜோதிகா, சூர்யா படங்கள் ரொம்பப் பிடிக்கும். சூர்யா சார் என்னை வாழ்த்தினார். அப்ப அங்க வந்த ஊர்வசி மேடம், ‘சின்ன வயசுல நான் இருந்தமாதிரியே இருக்க’னு சொன்னார். 

படத்தில்  எல்லா காட்சிகளிலும் எளிதா நடிச்சிட்டேன். ஆனால் என்னையும் என் தோழிகளையும் ஒரு ஸ்டோர் ரூமில் அடைச்சு வெச்சிடுவாங்க. ஆனால் என்னை மட்டும் ரூமில் வைத்துவிட்டு மற்ற இரண்டு தோழிகளையும் வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. அந்த சீனில் நடிச்சதுதான் ரொம்ப சவாலா இருந்துச்சு. கேரளாவுல மகளிர் மட்டும்' அடுத்த வாரம் ரிலீஸ். எண்ட தேசத்துல ரிலீஸ் ஆகி, குறைச்ச காலங்களிலேயே ஞான் வல்லிய ஹீரோயினாயிட்டு வரும்’' என்றார்.

தொடர்ந்து நல்ல படங்களில், நல்ல  கேரக்டர்களில் நடிக்க இருவரையும் வாழ்த்துவோம்.