Published:Updated:

“துப்பறிவாளன் இசையில் சந்தோஷ் நாராயணனின் பங்கும் உண்டு!” - நட்பாலஜி சொல்லும் அரோல் கொரேலி #VikatanExclusive

“துப்பறிவாளன் இசையில் சந்தோஷ் நாராயணனின் பங்கும் உண்டு!” - நட்பாலஜி சொல்லும் அரோல் கொரேலி #VikatanExclusive
“துப்பறிவாளன் இசையில் சந்தோஷ் நாராயணனின் பங்கும் உண்டு!” - நட்பாலஜி சொல்லும் அரோல் கொரேலி #VikatanExclusive

``மிஷ்கின் சாரின் `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் ரிலீஸான சமயம் நான் சினிமா வாய்ப்புகள் தேடிட்டிருந்தேன். அப்ப என் நண்பர் ஒருவர் மூலமா மிஷ்கின் சாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைச்சது. `இதுதான் தீம். இதுக்கு மியூசிக் பண்ணிட்டு வா’னு சொல்லி மிஷ்கின் சார் ஒரு தீம் சொன்னார். நானும் பண்ணிட்டுப் போனேன். அது அவருக்குப் பிடிச்சிருந்தது. பிறகு, இன்னொரு தீம் சொல்லி அதுக்கும் மியூசிக் பண்ணிட்டு வரச் சொன்னார். அதுவும் அவருக்குப் பிடிச்சிருந்தது. அப்படித்தான் எனக்கு `பிசாசு’ பட வாய்ப்புக் கிடைச்சது. இப்ப `துப்பறிவாளன்' '' - இயக்குநர் மிஷ்கினுக்கும் தனக்கும் ஏற்பட்ட அறிமுகத்திலிருந்து தொடங்குகிறார் இசையமைப்பாளர் அரோல் கொரேலி. 

`` `துப்பறிவாளன்’ படத்துக்குப் பாடல்களே தேவையில்லைனு முடிவுபண்ணி பண்ணியதா?”

``படம் கமிட்டானபோது `ஆறு பாடல்கள் இருக்கு’னு சொன்னார். ஆனா, ‘கடைசியில எந்தப் பாடலும் இருக்காது’னு எனக்கு அப்போதே தெரியும். பிறகு, அது நான்கு பாடல்களா குறைஞ்சது. அந்த நாலு பாடல்களை கம்போஸ் பண்ணினேன். ஆனால், அவை ஒரே ஒரு பாடலா சுருங்கிடுச்சு. அந்த ஒரு பாடலும் சில இடங்கள்ல சில நொடிகளே வரும். இந்தப் படத்தோட திரைக்கதையைப் பார்க்கும்போதே, `பாடல்கள் தேவையில்லை’னு புரிஞ்சுக்கிட்டேன்.”

``மிஷ்கின் ஏற்கெனவே இளையராஜாவுடன் பணிபுரிந்துள்ளார். உங்களுடன் அந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளாரா?”

``நிறைய சொல்லியிருக்கார். `இந்த இடத்துல இளையராஜா சார் இருந்தா இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவார்’னு அவரைப் பற்றி மிஷ்கின் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். இன்னும் அதிக எனர்ஜியோடு வொர்க் பண்றதுக்கு அவரோட வார்த்தைகள் உதவும்.’’ 

``மிஷ்கின், விஷால் என்ன சொன்னார்கள்?”

``மிஷ்கின் சார் எப்போதும் என் வொர்க்கைப் பற்றி என்கிட்ட கொஞ்சம்தான் பேசுவார். ஆனா மத்தவங்ககிட்ட அதிகமாப் பேசிப் பாராட்டுவார். இதில் என் வொர்க் ரொம்ப மெச்சூர்டா இருக்குனு சொன்னார். விஷால் எல்லாப் பேட்டிகள்லயும் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கார். `நீங்க ஒரு நல்ல இடத்துக்குப் போவீங்க'னு அவர் அடிக்கடி சொல்வார்.’’ 

``பாடல்களே இல்லாத படத்தில், ஓர் இசையமைப்பாளர் தன்னை நிரூபிக்க முடியுமா?”

``ஒரு படம்னா அதில் பாட்டு, சண்டை, காமெடி எல்லாம் இருக்கணும்னு நம்ம ஊருலதான் நினைக்கிறோம். ஆனா, உலக சினிமாக்களில் அந்தக் கதைக்குத் தேவைப்பட்டால்தான் அவை இருக்கும். அப்படிப் பாடல்களே இல்லாத படங்கள் ஒரு இசையமைப்பாளருக்குக் கிடைக்கும்போது, பின்னணி இசையில் அதிகக் கவனம் செலுத்தி வேலைசெய்யலாம். உணர்வுகளை ஒருங்கிணைச்சு அர்ப்பணிப்போடு வேலைபார்த்தா, எந்த வேலையும் மிகச்சிறப்பா வரும்.”

``உங்களுடைய திருமணத்துக்குப் பிறகு வொர்க் பண்ணின முதல் படம் இது. இதன் இசையைக் கேட்டுட்டு மனைவி என்ன சொன்னாங்க?”

``அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். `இந்தெந்த இடங்கள்ல இசை நல்லா இருந்துச்சு’ன்னு சொல்லி பாராட்டினாங்க. படத்தோட முக்கியமான கதாபாத்திரம் இறந்தபோது வரும் பின்னணி இசையைக் கேட்டுட்டு அழுதுட்டாங்க.”

``இப்போது என்னென்ன படங்கள் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?”

`` `சவரக்கத்தி’ படம் ரிலீஸுக்கு ரெடி. வெற்றி மாறன் தயாரித்து, `அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் `அண்ணனுக்கு ஜே’ படத்தின் வேலைகள் போயிட்டிருக்கு.”

’’இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் உங்களின் நண்பர்கள் யார்? சந்தித்துக்கொள்வீர்களா?”

“ஆரம்பத்தில் இருந்தே நிவாஸ்.கே.பிரசன்னா எனக்கு நல்ல நண்பர். நானும் சந்தோஷ் நாராயணனும் எந்த நிகழ்ச்சிகளில் மீட் பண்ணிக்கிட்டாலும் ஹாய் பாய் ஃப்ரெண்ட்ஸ் மட்டுமே. ஆனா, ‘துப்பறிவாள’னுக்குப் பிறகு நல்ல நண்பர்களாகிட்டோம். ’துப்பறிவாளன்’ படத்தோட பின்னணி இசையை நான் முடித்ததில் சந்தோஷுக்கும் பங்கு உண்டு. இந்தப் படத்தோட முதல் பாதி வேலைகள் முடிந்தபிறகு ஃபெப்சி ஸ்ரைக் வந்தது. இரண்டாவது பாதி வேலைகளை வெளிநாடு போய்தான் பார்க்க வேண்டிய கட்டாயம். சந்தோஷ் நாராயணன் அடிக்கடி வெளிநாட்டில்தான் ரெக்கார்டிங் பண்ணுவாருனு கேள்விப்பட்டிருக்கேன். அவர்கிட்ட கேட்டு அவரோட உதவியாலதான் வெளிநாட்டில் இருக்கிற டெக்னீஸியன்ஸை தொடர்பு கொண்டு ஃபாரின்லயே மீதி வேலைகளை முடிச்சோம். சந்தோஷ் நாராயணன் படம் பார்த்துட்டு, ‘என்னங்க ஒரு படத்துலேயே இவ்வளவு வொர்க் பண்ணியிருக்கீங்க’னு பாராட்டினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஷான் ரோல்டனும் நானும் எப்போதாவது பேசிப்போம். அது தூரத்து நட்புதான். ஜி.வி.பிரகாஷும் நானும் ஒண்ணா கிரிக்கெட் விளையாடுற ஃப்ரெண்ட்ஸ்!”

பின் செல்ல