Published:Updated:

சினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக எதையுமே செய்யவில்லை!

பாலுமகேந்திரா பகீர் குற்றச்சாட்டு

சினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக எதையுமே செய்யவில்லை!

பாலுமகேந்திரா பகீர் குற்றச்சாட்டு

Published:Updated:
##~##

திரைப்படங்களின் மீது கரிசனம் கொண்டு மாற்று சினிமாவை மக்களிடம் கொண்டுசெல்லும் ஆர்வலர்களால் 'சலனம்’, 'நிழல்’, 'செவ்வகம்’, 'அகவிழி’, 'காட்சிப்பிழை’ போன்ற சினிமா சிற்றிதழ் கள் வெளி வருகின்றன. அந்த வரிசையில் ஒரு புது வரவு... 'படப்பெட்டி’! இதன் வெளியீட்டு விழா, சமீபத்தில் அண்ணா சாலை 'புக் பாயின்ட்’டில் நடைபெற்றது. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய இயக்குநர் பாலுமகேந்திராவின் பேச்சில் அவ்வளவு ஆதங்கம்.

''இந்த இதழின் அட்டையில் என் நண்பர் எம்.பி.சீனிவாசனின் படம் வெளிவந்து இருப்பது மகிழ்ச்சி. இடதுசாரிச் சிந்தனை உள்ள இவரை சென்னைக்கு வந்த புதிதில் சந்தித்து இருக்கிறேன். சினிமாபற்றிய எழுத்துக்கள் பத்திரிகைகள் வாயிலாக வெளி வர வேண்டும். இந்த இதழில் அப்படிப்பட்ட கட்டுரைகள் இருக்கின்றன. ஆனால், சராசரி வாசகன் படிக்க முடியாத அளவுக்குக் கடினமாக இருக்கிறது. செழியன், ஆனந்த விகடனில் உலக சினிமாபற்றி எழுதியது மிகப் பெரிய பங்களிப்பு. அப்போது அவர் எழுதிய சினிமாக்களை மக்கள் தேடிப் பிடித்துப் பார்த்தார்கள். அது பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். அந்தப் படங்களின் டி.வி.டி. விற்பனையும் அதிகரித்தது. இதுதான் நமக்குத் தேவை! சினிமா மாணவன் என்கிற முறையில் விகடனுக்கு மனமார்ந்த நன்றி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக எதையுமே செய்யவில்லை!

குழந்தைகளுக்கான ஆறாவது திரைப்பட விழாவில் நான் ஜூரியாக இருந்தபோது, 'சினிமா ரசனை என்பதைப் பள்ளிகளில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்’ என்றேன். ஆனால், யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்வர் கலைஞரிடமும் இதே வேண்டுகோளை வைத்தேன். ஒப்புக்கொண்ட அவர், பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது அவருக்கும் தெரியாது... எனக்கும் தெரியாது.

இன்றைக்கு 'இசை’ என்றால், அது சினிமா இசை. 'கவிதை’ என்றால், சினிமா பாடல்கள். 'ஓவியம்’ என்றால், சினிமா பேனர். 'உடை’ என்றால், அது சினிமா உடை. 'பேச்சு’ என்றால், அது சினிமா வசனம் என்றுதான் மாணவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

அன்று முதல் இன்று வரை சினிமாக்காரர்கள்தான் நாடாளுகிறார்கள். ஓ.பன்னீர் செல்வத்தை விட்டுவிடுங்கள். அது ஒரு ஜோக் அல்லது விபத்து. சினிமாவில் இருந்தவர்கள், சினிமாவால் வந்தவர்கள், சினிமாவால் ஆட்சியைப் பிடித்தவர்கள் சினிமாவுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் சோகம்.உதாரணத்துக்கு, இன்றுவரை தமிழகத்தில் திரைப்பட ஆவணக் காப்பகம் என்ற ஒன்று இல்லை. தேசிய அளவில் பி.கே.நாயர் என்பவரின் முயற்சியால் ஒரு திரைப்பட ஆவணக் காப்பகம் செயல்படு கிறது. என்னுடைய 'வீடு’, 'சந்தியா ராகம்’ போன்ற படங்களின் நெகட்டிவ்கள் இன்று எங்குமே இல்லை. இப்படி எத்தனை பேரின் படைப்புக்கள் ஆவணக் காப்பகங்கள் இல்லாததால் பாழாகி இருக்கும்?

ஒரு நாளைக்குப் பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்கள் உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே வருகின்றன. அவற்றில் எது நல்ல படம், எது நச்சுப் படம் என்பது குறித்து ஒரு மாணவனுக்கு விளங்க வேண்டும். இதற்காகப் பள்ளிகள் தனியாக ஒருவரை நியமிக்கத் தேவை இல்லை. இருக்கும் ஆசிரியர்களில் ஒருவரை தேசிய திரைப் பட ஆவணக் காப்பகம் நடத்தும் திரைப்பட ரசனை குறித்த பயிற்சிக்கு அனுப்பலாம். அவர் களை 10-ம் வகுப்பில் இருந்து மாணவர் களுக்கு வகுப்பு எடுக்கவைக்கலாம். பாரதிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தவர் என ஒருவர் இருந்திருப்பார். ஆனால், அவர் கவிதை எழுதக் கற்றுக்கொடுத்து இருக்க மாட்டார். அது போலத்தான் இதுவும். திரைப்படங்கள்பற்றிய அடிப்படை விஷயங்களை, சினிமா மொழியைக் கற்றுத் தந்தால் போதும். நல்லது எது... கெட்டது எது என மாணவனே தெரிந்துகொள்வான்.

சிறுகதையை சினிமாவாக எடுக்கிறார் கள். எழுத்தாளனுக்கு சினிமாக்காரர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். நான் என் மனைவிக்கே விசுவாசமாக இல்லை. இப்படிச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்படி இருக்கையில் நான் எதற்காக எழுத்தாளனின் விசுவாசம் பற்றி கவலைப்பட வேண்டும்? சிறுகதையில் இருக்கும் அந்த 'ஆத்மா’வை சினிமாவுக்குக் கடத்துவதுதான் முக்கியம்.

போகும் இடம் எல்லாம் என் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார்கள். நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன். அதற்குக் காரணம், சினிமாவை நான் காதலிக்கிறேன்!'' என்று முடித்தார் அந்தக் 'காதலர்’!

- ந.வினோத்குமார், படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்