Published:Updated:

“ஒரு புடவை கொடுக்கிறதா சொன்னா பெண்கள் ஏமாந்திருவாங்களா?!” - தமிழ் சினிமா முதல் தெலங்கானா சண்டை வரை..! #RespectWomanhood

எம்.ஆர்.ஷோபனா
“ஒரு புடவை கொடுக்கிறதா சொன்னா பெண்கள் ஏமாந்திருவாங்களா?!” - தமிழ் சினிமா முதல் தெலங்கானா சண்டை வரை..! #RespectWomanhood
“ஒரு புடவை கொடுக்கிறதா சொன்னா பெண்கள் ஏமாந்திருவாங்களா?!” - தமிழ் சினிமா முதல் தெலங்கானா சண்டை வரை..! #RespectWomanhood

‘ஒரு புடவை கொடுக்கிறேன்னு சொன்னா போதும்... பொம்பளைங்க கூட்டத்தைக் கூட்டிடலாம்' என்ற ஆண் புத்தியின் வெளிப்படைச் சான்றாக சமீபத்தில் இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

முதலாவது...

அந்தத் திரையரங்கில், 'மகளிர் மட்டும்'  திரைப்படம்  ஒடிக்கொண்டிருந்தது. படத்தில் இடைவேளையின்போது, ஒரு குரல் அரங்கத்தில் ஒலிக்கிறது. “எல்லாரும் அப்படியே  கொஞ்ச நேரம் உட்காருங்க!  இங்கு குலுக்கல் போட்டி நடக்கப்போகுது. இங்குள்ள  ஓர்  அதிர்ஷ்டசாலிக்கு ஒரு பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும்!” என்று ஒருவர் அறிவிக்கிறார். அந்த திரையரங்கம் முழுவதும் சலசலப்பு.  ஒரு குறிப்பிட்ட இருக்கை எண்ணை அந்த அறிவிப்பாளர் தெரிவிக்க, புதிதாகத் திருமணமான அந்தப் பெண் கொஞ்சம் வெட்கத்துடனும் நிறைய சந்தோஷத்துடனும் அரங்கத்தின் முன் வருகிறார். மகிழ்ச்சியுடன் அந்தப் பட்டுப் புடவையை வாங்கிக்கொண்டு, புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். அங்கிருந்தவர்கள் சிலர், ‘நமக்கில்லை! நமக்கில்லை!’ என ‘திருவிளையாடல்’ தருமி கணக்காக புலம்புவதும் காதில் கேட்டது. 

இராண்டாவது...

தெலங்கானா மாநிலத்தில், 'பத்தும்மா’ என்ற பண்டிகை மிக பிரபலம். இந்த பண்டிகையை முன்னிட்டு தெலங்கானா அரசுப் பெண்களுக்கு இலவசப் புடவை கொடுக்கத் திட்டமிட்டது. ஆனால், அந்தப் புடவையைப் பெறுவதற்கான போட்டி, பெண்களிடையே குடுமிப்பிடி சண்டையாக மாறியது. இந்தக் கலவரத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, நீண்ட நேர வரிசையில் நின்றவர்களுக்கு, பற்றாக்குறையின் காரணமாக இலவசப் புடவை கிடைக்காமல் போனது. மற்றொன்று, அங்கு வழங்கப்பட்ட புடவை தரமாக இல்லை என்பது. இதற்காக சில பெண்கள் புடவையை எரித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் இவையெல்லாமா செய்தித் தலைப்பில் வருகின்றன? 'பெண்கள் புடவைக்காக அசிங்கமாக அடித்துக்கொண்டார்கள்' என்று, ஏதோ அது பெண் இனத்தின் இயல்பாகிப்போன ஈன புத்தி என்பதுபோலவே செய்திகளை சில மீடியா மக்களுக்குத் தந்திருக்கின்றன. 

மீண்டும் 'மகளிர் மட்டும்' சினிமாவுக்கு வருவோம். பெண்ணியத்தையும், பெண் சுதந்திரத்தையும் பேசும் படம் இது. ஆனால் அதன் விளம்பரத்துக்குக்கூட, 'பட்டுப் புடவையைப் பரிசாகக் கொடுத்தால் பெண்கள் கூட்டம் அலைமோதும்' என்ற ஆணாதிக்க மனோபாவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வணிக உத்தியும், புத்தியும் எவ்வளவு கீழ்த்தரமானவை... தெலங்கானாவைப் பொறுத்தவரை, அரசியல் லாபத்திற்காக பெண்களுக்குப் புடவை வழங்கும் திட்டம் என்று உருவாக்கப்படுகிறது. ஆனால் அதில் அத்தனை குளறுபடிகள். பெண்களுக்கு நியாயமாகக்  கிடைக்கவேண்டிய உரிமைகள்  கிடைத்தாலே, இந்த இலவசங்களுக்குப் பின்னால் ஒடத் தேவையிருக்காது அல்லவா? 

'ஒரு சேலை வாங்கிக்கொடுத்தா போதும், பொண்டாட்டியை ஏமாத்திடலாம்' என்று நினைக்கும் ஆண்களின் மனோபாவம்தான், இப்படி சினிமா விளம்பரம் முதல் அரசுத் திட்டம்வரை விரிந்திருக்கிறது. சமீபத்தில் ஓர் அறிவுசார் அரங்கில், பெண்களுக்கான பொதுஅறிவுப் போட்டி நடந்தது. வெற்றியாளருக்குப் பரிசாக, ஒரு டிசைனர் புடவையை வழங்கினார்கள். அறிவு சார்ந்து நடத்தப்படும் போட்டிக்கு எதற்கு அழகு சார்ந்த பரிசு?! இதுவே, ஓர் ஆண் வெற்றியாளருக்கு வேட்டியை, சட்டையைப் பரிசளிப்பது என நீங்கள் யோசிப்பீர்களா? 

'புடவை கொடுக்கிறதா சொன்னா பெண்கள் வரத்தானே செய்றாங்க?' என்று இப்போதும் குற்றச்சாட்டை பெண்கள் பக்கமே திருப்புகிறீர்களா... ஆனால், அதற்குக் காரணமும் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ந்துவரும் ஆண்களின் அடக்குமுறைதானே... அவளுக்கு வீடு, புடவை, நகை தவிர வேறென்ன பெரிய மகிழ்வை நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்... அதனால், இதுவே நமக்கான ஆனந்தம் என்று அவள் நம்பவைக்கப்பட்டு, அதற்கு இன்னமும் பலியாகிக்கொண்டிருக்கிறாள். அன்பளிப்பு என்ற பெயரில் உண்மையில் அவள் மீது செலுத்தப்படுவது அதிகாரம், அடிமைத்தனம் என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை. 

அந்த விலங்குகளையும் மீறி வந்து, இங்கு 'நீட்'டுக்கு எதிராகப் போராடும் அனிதாக்கள் இருக்கிறார்கள், ஹைட்ரோ கார்பன்  பிரச்னைக்காக  சிறை வரை சென்று போராடிய வளர்மதிகள் இருக்கிறார்கள், 21ம் நூற்றாண்டிலும் அரசியல் பொதுத்தளத்தில் வெளிப்படையாக 'பொம்பள' என்று விமர்சிக்கப்படுவதை கம்பீரமாக எதிர்கொண்டபடி களத்தில் நிற்கும் பாலபாரதிகள் இருக்கிறார்கள். இவர்கள் பெருகுவார்கள். பெண் முன்னேற்ற நம்பிக்கையைப் பெருக்குவார்கள். 'ஒரு புடவை கொடுக்கிறதா சொன்னா போதும்... பொம்பளைங்க கூட்டத்தைக் கூட்டிடலாம்' என்ற ஆண்புத்தி அரசியலுக்கு ஒருநாள் சவுக்கடி கொடுப்பார்கள்.