Published:Updated:

‘என் கணவருக்கு நான் தற்கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான்!’ - சோனியா போஸ் வெங்கட்

வே.கிருஷ்ணவேணி
‘என் கணவருக்கு நான் தற்கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான்!’ - சோனியா போஸ் வெங்கட்
‘என் கணவருக்கு நான் தற்கொலை மிரட்டல் விடுத்தது உண்மைதான்!’ - சோனியா போஸ் வெங்கட்

டந்த சில நாள்களாகவே போஸ் வெங்கட் மற்றும் சோனியா பற்றிய வைரல் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சோனியா, தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கணவரை மிரட்டினார் என்பதுதான் அது. 'பொல்லாதவன்', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' உட்பட இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சோனியா. 'வெண்ணிலா கபடி குழு பார்ட் 2', 'தீரன்' போன்ற படங்களில் தொடர்ந்து நடித்துவருபவர். இப்படியொரு செய்தி பரவியதைப் பற்றி விசாரிக்க சோனியாவைத் தொடர்புகொண்டோம், 

“திடீர்னு இப்படி ஒரு செய்தி... என்ன ஆச்சு?” 

''அந்தச் செய்தி உண்மைதான். இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், என் கணவர் போஸ் வெங்கட் வில்லனாக நடித்த, 'கவண்' படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதில் அவர் நடிச்ச 'தீரன்' கேரக்டரை எல்லோரும் பாராட்டினாங்க. இந்த நிலைக்குக் காரணம், பதிமூன்று வருஷங்களுக்கு முன்னாடி அவருக்கு நான் விடுத்த தற்கொலை மிரட்டல்னாலதான்னு போஸ் வெங்கட் யார்கிட்டேயோ சொல்லியிருக்கிறார். அது இப்போ வெளியில் தெரிஞ்சிருக்கு. அவ்வளவுதான்!'' 

''எதற்காக அவருக்குத் தற்கொலை மிரட்டல் விடுக்கணும்? உங்க இரண்டு பேருக்குள்ளும் என்ன பிரச்னை?'' 

''எங்களுக்குள்ளே எந்தப் பிரச்னையும் இல்லை. அப்போ நான் சினிமாவில் நடித்து முடித்து அந்த அனுபவத்தோடு சீரியலில் கலக்கிக்கொண்டிருந்த நேரம். போஸ் வெங்கட்டுக்கு அப்போது ஒரு படத்தில் வெயிட்டான ரோல் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதற்காக, ஹேர்ஸ்டைல் எல்லாம் மாத்தி கெட்டப் மாத்த சொல்லியிருந்தாங்க. படத்தில் நடிப்பதற்கான கால்ஷீட்டும் கொடுத்துட்டாங்க. இதற்கிடையில்தான், அவர் நடித்துக்கொண்டிருந்த ஒரு சீரியலின் இயக்குநர், போஸோட புது கெட்டப் நல்லா இருக்குன்னு சீரியலிலும் அதே கெட்டப்பில் நடிக்கச் சொல்லியிருக்கிறார். 'நான் தொப்பி போட்டு நடிக்கிறேன் சார். இது படத்துக்காக மாத்திக்கிட்ட கெட்டப்'னு எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நடிக்கவெச்சுட்டாங்க. அதை அவர் எனக்கு போனில் சொன்னார். ஏற்கெனவே 'சீரியலில் நடிக்காதீங்க. சினிமாவில் கவனம் செலுத்துங்க. எந்தக் காரணத்துக்காகவும் இந்தப் படத்தை விட்டுடாதீங்க'னு சொல்லியிருந்தேன். ஆனால், இப்படியொரு செய்தியைச் சொன்னதும், ரொம்ப அப்சட் ஆகிட்டேன்.'' 

''அதுக்காகத் தற்கொலை மிரட்டல் விடணுமா?'' 

''தப்புதான்! அன்றைக்கு நானிருந்த மனநிலையில் அப்படி ஒரு முடிவை எடுத்தேன். அப்போ என் பையன் கைக்குழந்தை. அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து போன் பண்ணிச் சொன்னதும், என்னால் ஏத்துக்கவே முடியலை. 'தொப்பி போட்டு நடிங்க'னு சொன்னேன். 'ஒத்துக்கமாட்டேங்கறாங்க. அதனால், படத்துக்கான கெட்டப்பில் நடிச்சுட்டேன்'னு சொன்னார். என்னால் பொறுக்க முடியலை. 'இவ்வளவு சொல்லியும் கேட்காம நடிக்கவெச்சுட்டாங்களா'னு கோபத்தில் அந்த அடுக்கு மாடியின் மொட்டை மாடிக்குப் போய், தண்ணீர் டேங்க் மேல ஏறிட்டேன். அங்கிருந்து போன் பண்ணி, 'உடனே தொப்பி போட்டு ரீ ஷூட் பண்ணச் சொல்லுங்க. இல்லைன்னா இங்கிருந்து குதிச்சுடுவேன்'னு மிரட்டினேன். டைரக்டர், என் கணவர் என அங்கிருந்தவங்க எல்லாம் போன்மேல போன் போட்டு, 'நாங்க ரீ ஷூட் பண்றோம்'னு ஒத்துக்கிட்டாங்க. மறுபடியும் ஷூட் செய்தாச்சுன்னு உறுதிப்படுத்தின பிறகுதான் மாடியிலிருந்து இறங்கி வந்தேன்.'' 

''எப்படி உங்கள் குழந்தையை விட்டுட்டு இப்படி செய்ய மனசு வந்துச்சு?'' 

''உண்மையில் இன்னிக்கு நினைச்சாலும் கஷ்டமாக இருக்கும். என் மகன் தேஜஸ்வின் கைக்குழந்தையா இருந்தான். மதியம் ஒன்றரை மணிக்குத்தான் அப்படி நடந்துக்கிட்டேன். பால் கொடுக்கிற நேரம் அது. அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, எந்தப் படத்தில் கமிட் ஆகுறதா இருந்தாலும், என்னைக் கேட்காமல் பண்ண மாட்டார். இப்போ அவரது கிராஃப்பும் ஏறிட்டிருக்கு. இதுல, என்னைவிட கூடுதல் சந்தோஷப்படுறவங்க வேற யாரா இருக்க முடியும்? அந்தப் பழைய சம்பவத்தைப் பத்தி இப்பவும் சில சமயம் பேசிப்போம்.'' 

''அவர் கெட்டப் மாத்தி நடிச்ச அந்தப் படம் வெளியானதா?'' 

''இல்லை. எந்தப் படத்துக்காகக் கெட்டப் மாத்தினாரோ அந்தப் படத்தில் அவர் நடிக்கலை. ஆனால், அதே கெட்டப் போட்டு வேற படத்தில் நடிச்சு நல்ல பேர் எடுத்தார்.''