Published:Updated:

`த மில்க்மெய்டு' மூலம் மிஷ்கின் உணர்த்துவது என்ன? `துப்பறிவாளனி’ன் ஓவியக் குறியீடுகள்

விகடன் விமர்சனக்குழு
`த மில்க்மெய்டு' மூலம் மிஷ்கின் உணர்த்துவது என்ன? `துப்பறிவாளனி’ன் ஓவியக் குறியீடுகள்
`த மில்க்மெய்டு' மூலம் மிஷ்கின் உணர்த்துவது என்ன? `துப்பறிவாளனி’ன் ஓவியக் குறியீடுகள்

குறியீடுகளின் வழியே சினிமாவில் தான் சொல்லவரும் காட்சியையும் கதையையும் சொல்வது மிக நுட்பமான கலை. இதை ராம், மிஷ்கின், மணிகண்டன் என சமீபகால இயக்குநர்கள் மிக நேர்த்தியாக கையாளுகிறார்கள். அந்த வகையில் தன் ‘துப்பறிவாள’னில்  மிஷ்கின் அப்படி சில குறியீடுகளைக்  கையாண்டுள்ளார். அதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது `த மில்க்மெய்டு' என்ற ஓவியம். அப்படி இந்த ஓவியத்தில் என்ன ஸ்பெஷல்... பார்ப்போம் வாருங்கள்.

`பெரோக் மூவ்மென்ட்' என்றழைக்கப்படும் ஒரு பாணி, 16-ம் நூற்றாண்டில் ரோம், இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவி இருந்தது. மிகைப்படுத்தப்பட்ட அசைவுகளின் மூலம் தெளிவான, துல்லியமான முறையில் உணர்வுகளை வெளிப்படுத்துவதுதான் இந்தப் பாணியின் சிறப்பு. யொஹான்னஸ் சர்மீர் (Johannes Vermeer: 1632 – 1675) என்கிற டச்சு நாட்டு ஓவியர்தான், இந்தக் கட்டுரையின் நாயகன். தனது கேன்வாஸ் ஓவியங்களில் ஆயில் பெயின்டிங் முறையில் (மிகவும் விலை உயர்ந்த நிறமிகளைப் பயன்படுத்தி) வெளிச்சத்தையே பிரதானமாகக் காட்சிப்படுத்தியவர் இவர்.

பிரான்ஸ், டச்சு நாட்டின்மீது படையெடுத்தபோது ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் அப்போது நிலவிய அசாதாரணச் சூழலின் காரணமாக இவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். எந்த ஒரு போரின் விளைவுகளால் அதிகமாகப் பாதிக்கப்படுவது கலைஞர்கள்தானே? ஆக, போருக்குப் பிறகு நிலவிய சூழலில், ஓவியங்களை விற்க முடியவில்லை என்ற எண்ணம் மேலிட, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர், (ஒன்றரை நாளில்) இறந்துவிட்டார். தன் மனைவியையும் வாரிசுகளையும் கடனிலும் சோகத்திலும் ஆழ்த்திவிட்டு, தனது 43 வது வயதிலேயே இறந்த இவர், மிகக் குறைவான ஓவியங்களையே வரைந்தார். அதில், `த மில்க்மெய்டு' என்ற ஓவியம் மிகப் பிரபலம்.

ரைக்ஸ் மியூசியம்: ஆம்ஸ்டர்டாமின் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் எட்டாயிரத்துக்கும் மேலான கலைப்பொருள்களில், அனைவரையும் கவரும் ஒரு கலைப்படைப்பாக `The Milkmaid' என்ற ஓவியத்தைக் குறிப்பிடுகிறார்கள். ``சர்மீர் வரைந்த ஓவியங்களிலேயே இதுதான் மிகவும் பிரபலமானது'' என்றும் சொல்கிறார்கள். 45.5cm உயரமும், 41cm அகலமும்கொண்ட இந்த ஓவியம், தோராயமாக 1658-ம் ஆண்டு வரையப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கிறார்கள். புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தைப்போல, இந்த ஓவியத்தின் பேசுபொருளும் கணிக்க இயலாததுதான்.

ஓவியமும் பின்னணியும்:

`த மில்க்மெய்டு' எனத் தலைப்பிடப்பட்டிருந்தாலும், உண்மையில் இந்த ஓவியத்தில் இருப்பது ஒரு பணிப்பெண்தான். ஹாலந்தில் இந்த ஓவியம் வரையப்பட்ட காலத்துக்கு 200 ஆண்டுகள் முன்னும் பின்னும், பணிப்பெண்களை அவர்கள் வீட்டில் வேலைசெய்யும் போகப்பொருளாகவே வரலாற்றில் சித்திரித்துள்ளனர். இதைக் கருத்தில்கொண்டு, இனிவரும் விஷயங்களைப் படிக்க வேண்டும்.

அந்தப் பணிப்பெண் பாலை ஊற்றுவதுபோல சித்திரித்திருப்பது ஒரு குறியீடு ஆகும். டச்சு வரலாற்றில் பால் என்பது காமத்தின் ஒரு வெளிப்பாடாகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் கடந்து, அந்தப் பெண்ணின் காலருகே இருக்கும் குறியீடுகளைக் கவனியுங்கள். காதலின் கடவுளான க்யூபிட் (மன்மதன்) வரையப்பட்டிருக்கிறது. இதை, அந்தப் பணிப்பெண்ணின் காதலாக, தனது காதலனை நினைத்து அவள் ஏங்குவதன் உருவகமாகக்கொள்ளலாம். மன்மதனுக்கு அந்தப் பக்கமாக, கையில் ஒரு பெரிய தடியுடன் ஓர் உருவம் வரையப்பட்டிருப்பதையும் காணலாம்.

`துப்பறிவாளன்' படத்தில், விஷாலின் வீட்டுக்குச் செல்லும் வில்லன் ஒரு காப்பி கேட்க, கதாநாயகி சமையலறையில் காப்பி தயாரிப்பதற்கு முந்தைய காட்சியில் மிஷ்கின், விஷாலின் ஹாலில் இருக்கும் இந்த ஓவியத்தைக் காட்சிப்படுத்தியிருப்பார். அதற்கு முன்பாக, படத்தில் பல இடங்களில் அதே ஹாலைக் காண்பித்திருந்தாலும் (வெகுஜன ரசிகர்களுக்காக) நிறுத்தி நிதானமாக இந்த ஓவியத்தை அப்போதுதான் காண்பிப்பார். இதற்கு அடுத்த ஃப்ரேமிலேயே கதாநாயகி காபி தயாரிக்கும் காட்சியைக் காண்பிப்பார். ஏறக்குறைய இதே காம்போஸிஷனில் அந்த ஃப்ரேம் (மெனக்கெட்டு) அமைக்கப்பட்டிருக்கும்.

மன்மதன் அம்பினால் காதல்கொண்டு, தன் காதலனை எண்ணியவாறு இருக்கும் நாயகி (ஓவியத்தில் கையில் தடியுடன் இருக்கும் ஒருவனைப்போல) தனக்கு ஆபத்து வருவதைக் கவனிக்கவில்லை. இந்தப் படத்தில் நாயகி ஒரு பிக்பாக்கெட். ஆக, அவளது புலன்களும் உணர்வுகளும் மிகவும் துல்லியமாக இருக்கும். ஆனால், காதலனை நினைத்தவாறு இருக்கும் அவள், தனது சுயநிலையை இழந்து, கவனத்தை இழந்த நிலையில் இருக்கிறாள். ஆக, இந்த ஒரு காட்சியிலேயே நாயகிக்கு இருக்கும் காதலையும், அதனால் அவளுக்கு வர இருக்கும் ஆபத்தையும் ஓர் ஓவியத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

குறியீடுகள்:

ஒரு படைப்பாளி, அவனது படைப்பில் தான் சொல்லவரும் விஷயத்தைத்தான் பிரதானமாக முன்வைக்கிறான். ஆக, ஒரு நாவலிலோ திரைப்படத்திலோ, கதையும் அது சொல்லப்படும் விதமும்தான் முக்கியம். ஒரு படைப்பாளி அவனுடைய அதிதீவிர ரசனையுள்ள நண்பர்களுடன் விளையாடும் ஒரு வகையான ஆட்டமே குறியீடுகள். இதில், ரசனை முதல் புரிதல் வரை பல விஷயங்கள் உள்ளன. மேம்போக்கான விஷயங்களைக் கடந்து, படைப்பாளியின் ரசனையும், பார்வையாளனின் புரிதலும் சந்திக்கும் ஒரு புள்ளியே குறியீடு. ஆனால், அவை மேம்போக்காக, மேலோட்டமான பார்வையில் மலிவான ஒரு விஷயத்தைத் தூண்டுவதாக இருக்கக் கூடாது. ஒரு பிரதியைப் படிக்கும்போது, வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையே இருக்கும் தூரம் குறைந்து, அவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டும். இதில், படைப்பாளி சொல்லாத விஷயத்தைக்கூட ஒரு பார்வையாளன் அவனது பார்வையில் புரிந்துகொள்வதற்கு நிறைய சாத்தியங்கள் உண்டு.

ஒரு படைப்பை உருவாக்கும்வரைதான் அது அந்தப் படைப்பாளிக்குச் சொந்தம். எப்போது அது பொதுவில் வைக்கப்படுகிறதோ, அப்போதே அதை ஒவ்வொருவரும் அவரவர் ரசனை, அனுபவத்துக்கேற்ப கட்டுடைப்பு செய்துக்கொள்வர். படைப்பாளி உருவாக்கிய அதே கண்ணோட்டத்தில்தான் அனைத்து பார்வையாளர்களும் அதைப் பார்த்தாக வேண்டுமென்று எந்தக் கட்டாயமும் இல்லை.

குறிப்பாக, இந்தப் படத்தில் அடுத்தடுத்த காட்சிகளில் ஓவியத்தையும் நாயகியையும் காண்பித்து அவற்றுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையை ஷாட் காம்போஸிஷன் மூலம் மிகவும் நேரிடையாகக் காண்பித்துவிட்டார் இயக்குநர். ஆனால், அவர் சொல்லாமல்விட்ட விஷயம் என்னவென்றால், எவ்வளவோ ஓவியங்கள் இருக்க, ஏன் அந்த ஓர் ஓவியத்தை மட்டும் அங்கே வைத்து, அதற்கு தொடர்பு இருக்கும்படியான ஒரு ஷாட்டை வைக்க வேண்டும் என்பதுதான். அங்கேதான் ஒரு படைப்பாளிக்கும் அவனின் ரசிகனுக்கும் இடையேயான ஆட்டம் ஆரம்பிக்கிறது. இந்தக் காட்சியைப் பார்க்கும் ஒரு நல்ல ரசிகன், உடனடியாக அந்த ஓவியத்தைத் தேடிப்பிடித்து, அதைப் பார்த்து அதன் பொருளை உணர்ந்து, அதன் பிறகு அந்தக் காட்சியின் அழகியலை ரசிக்க வேண்டும் என்பதுதான் மிஷ்கின் இங்கே சொல்லாமல்விட்ட அடுத்த லெவல் கருத்து.

ஒரு (நல்ல) படைப்பாளி, ரசிகனின் பார்வையையும் ரசனையையும் உயர்த்த வேண்டும் என்றுதான் விரும்புவார்; இதற்கான முயற்சியில் நிச்சயமாக தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். என்ன... வாசகன்தான் தன்னைச் சிரமப்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஒரு சிறிய ஆரம்பம்தான் தேவை. அந்த முனைப்பு இருந்தாலே போதும். அந்தப் படைப்புடனான உங்கள் ஆட்டம் அருமையாகத் தொடங்கிவிடும்.