Published:Updated:

“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்!” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்!” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி
“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்!” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி

“கிளாமர், கிராமியம்னு பாட்டுக்கேத்த மாதிரி மேக்கப் மாறும்!” - ‘சூப்பர் சிங்கர்’ வியூகம் சொல்கிறார் ஆனி

“நடிகர் அர்ஜூனின் மனைவி, நடிகர் மோகனின் மனைவி எனப் பலருக்கும் வீட்டில் மேக் ஓவர் செய்வேன். அவங்க எல்லாம், 'நீங்க தனியா பியூட்டி பார்லர் வைக்கலாமே'னு சொல்வாங்க. நானும் யோசிச்சுட்டே இருந்தேன். தி.நகருக்கு வீடு மாறினதும், ஒரு நண்பர் இந்த இடத்தைச் சொன்னார்” என்கிறார் ஆனி (annie). விஜய் டி.வியில் 'சூப்பர் சிங்கர்'களை 'ஸ்டார் சிங்கர்'களாக காட்டிய சிறப்புக்குரியவர் ஆனி. சென்னை, ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் 'ஓக் சலூன்' நிறுவனர். இந்தத் துறைக்கு வந்த பாதை, தான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பற்றி பேசுகிறார். 

“என் குழந்தைகளுக்கு பவுடர் பூசி பள்ளிக்கு அனுப்பும்போது, அவங்க அவ்வளவு அழகா இருப்பாங்க. ஒவ்வொரு நாளும் பூரிப்போடு ஸ்கூலுக்கு அனுப்பிவைப்பேன். இதேமாதிரி ஒருநாள் அவங்களை அனுப்பிவெச்சுட்டு, ஒரு ஃபேஷன் புக்கை படிச்சுட்டிருந்தேன். அதிலிருந்த மாடல்களைப் பார்த்ததும் நாமும் மத்தவங்கள இப்படி அழகாக்கலாமேனு தோணுச்சு. அதேநேரம் ஒரு நிறுவனத்தின் பியூட்டி கோர்ஸ் பத்தின அறிவிப்பையும் பார்த்தேன். நானும் என் தோழியும் விண்ணப்பிக்க முடிவு செஞ்சோம். ஒரு மாசத்துக்கு 2,500 ரூபாய் கட்டணம். விண்ணப்பிக்கவும் காசு. ஏதோ ஒரு காரணம் சொல்லி காசு வாங்கி, வீட்டுக்குத் தெரியாமலே விண்ணப்பிச்சுட்டோம். எங்களுக்கு அட்மிஷனும் கிடைச்சிடுச்சு. பயத்தோடு என் கணவர்கிட்ட, 'நான் வீட்டு வேலையெல்லாம் முடிச்சதும் ஃப்ரியாதானே இருக்கேன். இந்த கோர்ஸ் முடிக்கட்டுமா?'னு கேட்டேன். அதற்கு அவர், 'இந்த கோர்ஸைப் படிச்சுட்டு பியூட்டி பார்லரா வைக்கப்போறே?'னு கிண்டலோடுதான் சம்மதிச்சார்'' என்று சுவாரஸ்யமாக தொடர்கிறார் ஆனி. 

''ஒவ்வொரு மாசமும் 2,500 ரூபாய் என மூன்று மாசத்தில் கோர்ஸை முடிச்சேன். 21 வருஷத்துக்கு முன்னாடி அது பெரிய தொகை. கோர்ஸ் முடிச்சதும் சில பார்லர்களில் வேலை பார்த்தேன். அப்போதான் லண்டனில் இருக்கிற 'மாரீஸ் ஸ்கூல் ஆஃப் காஸ்மெட்டாலஜி அண்டு ஹேர்ஸ்டைல்' அகாடமியில் சேரும் வாய்ப்பு கிடைச்சது. நான் இவ்வளவு ஈடுபாட்டோடு இருக்கிறதைப் பார்த்து கணவரும் ஊக்கப்படுத்தினார். 1985-ம் வருஷம் அந்த அகாடமியில் சேர்ந்து கோர்ஸை முடிச்சேன். இன்னிக்கு இந்தியாவின் டாப் பியூட்டீஷியனில் ஒருவரான வித்யா ரஹத்துங்கா, டிரெய்னரா இருந்து பயிற்சி கொடுத்தாங்க. கோர்ஸ் முடிச்சதும் வீட்டிலேயே பயிற்சி மற்றும் பார்லர் ஆரம்பிச்சேன். அப்புறம், 1996-ம் வருஷம் பெண்களுக்காக ஆரம்பிச்சதுதான் 'ஓக் சலூன்'. 'ஓக்' என்பதற்கு ஆங்கிலத்தில் 'இன்றைக்கு என்ன டிரெண்ட்' என்று அர்த்தம். எல்லாக் காலத்துக்கும் ஏற்றது இந்தப் பெயர். அப்புறம் 1997-ம் வருடம், தமிழ்நாட்டிலேயே முதன்முறையா இருபாலருக்குமான சலூனை ஆரம்பிச்சேன்.

2010-ம் வருஷம், விஜய் டி.வியில் புரோகிராம் செய்யும் ஒருத்தர் வாடிக்கையாளரா வந்திருந்தார். எங்க வொர்கைப் பார்த்து சந்தோஷமாகி, 'நீங்க விஜய் டி.வியில் கலந்துக்கும் செலிபிரிட்டிகளுக்கு மேக் ஓவர் பண்ணிறீங்களா?'னு கேட்டார். நானும் சம்மதிச்சு செய்ய ஆரம்பிச்சேன். அடுத்து, 'சூப்பர் சிங்கர் - 2' நிகழ்ச்சியின் தொகுப்பாளினி சின்மயிக்கு மேக் ஓவர் பண்ணிவிட்டேன். பிறகு, நிகழ்ச்சிக்கு வரும் நடுவர்கள், டாப் 30, டாப் 20, டாப் 10, டாப் 5 என சிங்கர்கள், ஸ்பெஷல் கெஸ்ட் என எல்லாருக்கும் மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்களை செய்ய ஆரம்பிச்சேன். 'சூப்பர் சிங்கர் - 1' நிகழ்ச்சி எந்த மேக்கப்பும் இல்லாமல்தான் நடந்தது. இரண்டாவது சீசனில்தான், மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்ய ஆரம்பிச்சேன். இப்போவரை விஜய் டி.வி இதற்காக வேற யாரையும் பயன்படுத்தறதில்லை. 'ஜோடி நம்பர் - 1' மற்றும் விஜய் டி.வி ஸ்பான்ஸர் செய்யும் எல்லா முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் நான்தான் மேக் ஓவர் செய்தேன்'' என்று மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் ஆனி. 

''ஒவ்வொரு பாடலைப் பாடும்போதும் சிங்கர் மற்றும் நடுவர்கள் போட்டிருக்கும் டிரெஸ்ஸைப் பொருத்து மேக்கப்பை மாற்றுவோம். கிளாமர் பாட்டைப் பாடும்போது, அந்த டிரெஸூக்கு தகுந்த மாதிரி மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் இருக்கணும். நடுவர்களான திவ்யா, மால்குடி சுபா, பேபி ஷாலினி, சுதா ரகுநாதன், சுஜாதா, அனந்த் வைத்தியநாதன், ஹரிஹரன், செளமியா மற்றும் செலிபிரிட்டிகளான ஜானகி அம்மா, வைரமுத்து, எஸ்.பி.பி எனப் பலருக்கும் போட்டுவிட்டிருக்கேன். என்கிட்ட 16 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு வந்தாள். அவள் அம்மா ஒரு ஹோட்டலில் பாத்திரம் துலக்கும் வேலை செய்துட்டு இருந்தாங்க. அந்தப் பொண்ணு படிச்சது ஐந்தாம் வகுப்புத்தான். தமிழ்த் தெரிந்தாலும், சரியான வார்த்தைகளில் பேசத் தெரியாது. 'இன்னா மேடம் பண்ணோனோம்'னு பேசுவாள். அவளுக்குப் பேச்சிலிருந்து தொழில் வரை பழக்கினேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் முடிச்சு வேலையை விட்டுப்போனாள். அவள் சம்பாதிச்ச பணத்தில் வீடு வாங்கி, லீசுக்குவிட்டு அம்மாவை நல்லாப் பாத்துக்கிட்டா. இப்படி பலரை டிரெயின் பண்ணியிருக்கேன். 21 வருஷங்களுக்கு முன்னாடி சென்னையில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே பியூட்டிப் பார்லர்கள் இருந்துச்சு. இன்னிக்கு தெருவுக்குத் தெரு பியூட்டி பார்லர்கள் வந்தாச்சு. ஆனாலும். எங்களுக்கான மதிப்பு உயர்ந்துட்டே இருக்கு. 

கிளாரா இன்டர்நேஷனல் காஸ்மெட்டாலஜி அண்டு பியூட்டி அகாடமி (klara international cosmetology and beauty academy), 2006-ம் வருஷம் என்னை தமிழ்நாட்டு கிளையின் டைரக்டர் ஆக்கினாங்க. 2010 வரை அந்தப் பதவியில் இருந்தேன். என்கிட்ட பேசிக் கோர்ஸ் எடுக்க மூன்று மாதங்களும், அட்வான்ஸ் கோர்ஸ் எடுக்க நான்கு மாதங்களும் வகுப்புகள் வரலாம். ஒரு மாதம் பாடங்கள், இரண்டு மாதங்கள் பிராக்டிஸ் இருக்கும். கோர்ஸை முடிச்சவங்களுக்கு சான்றிதழ் கொடுப்போம். அதைவெச்சு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கலாம். 

நடிகை தேவதர்ஷினி, பாடகி சுஜாதாவின் குடும்பத்தினர், திவ்யா, திவ்யதர்ஷினி, 'கோலங்கள்' ஆதி எனப் பலரும் என் கிளைன்ட்ஸ். இப்போ விஜய் டி.வி., எங்கள் குடும்பத்தில் ஒண்ணாயிடுச்சு. 'ஓக் சலூன்' பெயரை ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் போடுவாங்க. இந்த வெற்றிகளுக்குக் காரணம், நாங்கள் மெருகேற்றி வரும் புதுப் புது அப்டேட்ஸ். 'சூப்பர் சிங்கர்', 'ஜோடி நம்பர் 1' போன்ற நிகழ்ச்சிகளின் அடுத்தடுத்த பார்ட் ஆரம்பிச்சதும் மறுபடியும் ஒரு கலக்கு கலக்கிட வேண்டியதுதான்'' என கலகலவென சிரிக்கிறார் ஆனி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு