Published:Updated:

மணிரத்னம் கேள்வி, ரஹ்மான் கில்ட்டி, யாஞ்சி அர்த்தம், பாலா அழுகை..! பாடலாசிரியர் மோகன் ராஜன் ஷேரிங்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மணிரத்னம் கேள்வி, ரஹ்மான் கில்ட்டி, யாஞ்சி அர்த்தம், பாலா அழுகை..! பாடலாசிரியர் மோகன் ராஜன் ஷேரிங்ஸ்
மணிரத்னம் கேள்வி, ரஹ்மான் கில்ட்டி, யாஞ்சி அர்த்தம், பாலா அழுகை..! பாடலாசிரியர் மோகன் ராஜன் ஷேரிங்ஸ்

மணிரத்னம் கேள்வி, ரஹ்மான் கில்ட்டி, யாஞ்சி அர்த்தம், பாலா அழுகை..! பாடலாசிரியர் மோகன் ராஜன் ஷேரிங்ஸ்

‘சோலோ' படத்தின் `ரோஷோமான் ரோஷோமான்...' பாடல் சிங்கிள் ட்ராக்காக வெளியானதிலிருந்து ஆன்லைனில் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்க, `யார் அந்தப் பாடலாசிரியர்?’ எனத் தேடினால் அதே படத்துல `தேவதைபோல் ஒருத்தி...', `உயிராக...' என இன்னும் இரண்டு பாடல்களையும் எழுதியிருந்தார் மோகன் ராஜன். அழைத்துப் பேசினால், ``ஆமா பிரதர், `விக்ரம் வேதா' படத்துல `யாஞ்சி’ பாடலுக்குப் பிறகு இதுவும் இப்போ ஹிட்... சந்தோஷம்'' என உற்சாகமானார்.

“பாபுனு எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு சினிமா மீது பெரிய காதல். சினிமா பற்றி நிறைய சொல்வான். நான் அப்போல்லாம் சும்மா ஏதாவது கிறுக்கிட்டிருப்பேன். அந்தச் சமயத்துலதான் `காதலுக்கு மரியாதை' படம் வந்திருந்தது. அதில் வர்ற `என்னைத் தாலாட்ட வருவாளா...' பாடலைச் சொல்லி, `இந்த மாதிரி ஒரு பாடல் எழுது’னு சொன்னான். அப்படி எழுதத் தொடங்கித்தான் எனக்கும் பாடல்களுக்குமான இணைப்பு ஆரம்பிச்சது.

12-வது படிக்கிறவரை  சினிமாவுல `பாடலாசிரியர்கள்'னு ஒரு ஏரியா இருப்பதே தெரியாது. ஆனா, பாடலாசிரியர் கனவோடு சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்ந்தேன். குருட்டு நம்பிக்கையில் கிளம்பியிருந்தாலும் என் நம்பிக்கை வீண்போகலை. பாடல்கள் வெளியாக ஆரம்பிச்ச பிறகு, பாபுகிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். `அடப்பாவி எப்படா கிளம்பின? சொல்லவே இல்லை'னான். எனக்கும் இது ஆச்சர்யமாத்தான் இருக்கு.''

“விஷுவல் கம்யூனிகேஷன் டு பாடலாசிரியர் எப்படி?"

“பழைய ஹிட் பாடல்களுடைய வரிகளை மாற்றி எழுதுறது, பி.சி.ஷிவன்னு என் நண்பருடைய ட்யூன்களுக்கு பாடல் எழுதுறதுன்னு தொடங்கினேன். அப்போ பாலகுமாரன்னு ஒரு இயக்குநர், ஒரு படத்துக்காக பி.சி.ஷிவன்கூட வேலைசெய்தபோது எனக்கு அறிமுகமானார். என்னுடைய வரிகள் அவருக்குப் பிடிச்சிருந்தது. அதனால அவருடைய `யாதுமாகி' படத்துல ஜேம்ஸ் வஸந்தன் சார் இசையில் `பேசும் மின்சாரம் நீயா...'கிற பாடல் எழுதும் வாய்ப்பு கிடைச்சது. அங்கிருந்துதான் பாடலாசிரியர் பயணம் ஆரம்பிச்சது. இந்தப் பாட்டு வெளியாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடி `ஈசன்' படத்துல வரும் `ஜில்லாவிட்டு ஜில்லா வந்த...' பாடல் எழுதுறதுக்காக அழைப்பு வந்தது. அந்தப் பாட்டுக்குள்ள கதை இருக்கிற மாதிரி அந்தப் பாட்டுக்கே ஒரு கதை இருக்கு. அது `ஈசன்' படத்துக்காக எழுதியது கிடையாது. ஒரு தெலுங்குப் படத்துக்காக எழுதினது. சில காரணத்தால் அதை படத்திலிருந்து நீக்கிட்டாங்க. இது நடந்து ஒரு வருடம் கழித்து ஜேம்ஸ் வஸந்தன் சார் கூப்பிட்டு, `சசிகுமாருடைய `ஈசன்' படம் பண்றேன். அதில் முதல்ல தேர்வாகியிருக்கும் பாடல் உன்னோடதுதான்'னு சொன்னார். அவங்க ரெண்டு பேருக்கும் நான் நன்றி சொல்லிக்கிறேன். ஏன்னா, இப்போ வரைக்கும் அந்தப் பாடல்தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்துக்கிட்டிருக்கு. `சுந்தரபாண்டியன்', `குட்டிப்புலி', `வெற்றிவேல்', `கிடாரி', `கொடிவீரன்'னு தொடர்ந்து சசிகுமார் சார் எனக்கு வாய்ப்பு கொடுத்துக்கிட்டே இருக்கார்னா அந்தப் பாடல்தான் காரணம்.

அடுத்து எனக்கு அதிக கவனத்தைக் கொடுத்த பாடல் `டேவிட்' படத்துல வந்த `கனவே கனவே...' அதுக்குக் காரணம் சுஹாசினி மேடம். நான் ஒரு தொலைக்காட்சியில் வேலைபார்த்திட்டிருந்தபோது சுஹாசினி மேடத்தைப் பார்த்தேன். அவங்களுக்கு என்னுடைய வேலைகள் பிடிச்சிருந்தது. அவங்க இயக்குநர் பிஜோய் நம்பியார்கிட்ட என்னைப் பற்றி சொன்னாங்க. `வாழ்க்கையே...', `மனமே...', `தீராது போகப் போக வானம்...', `மச்சி...'னு  `டேவிட்'ல  எல்லா பாடல்களையும் எழுதினேன். அந்த நட்பு, இப்போ `சோலோ' வரைக்கும் தொடருது. 

அதுபோல `சண்டிவீரன்' படத்துல `தாய்ப்பாலும் தண்ணீரும்...'னு ஒரு பாடல் எழுதியிருந்தேன். அந்தப் பாடலால் நெகிழ்ச்சியான இரண்டு சம்பவங்கள் நடந்தது. ஒண்ணு, பாலா சார் அந்தப் பாடலைக் கேட்டு கண்கலங்கினார். உடனடியா கூப்பிட்டு `நீ நம்ம படத்துக்கும் பண்ற'னு சொல்லி, `தாரை தப்பட்டை' படத்துல பாடல் எழுதச் சொன்னார். அந்தப் பாடல்தான் `வதன வதன வடிவேலனே...'. ராஜா சாருடைய ஆயிரமாவது படத்துல பாடல் எழுத வாய்ப்பு கிடைச்சது எப்போதைக்குமான பெருமை.

இன்னொண்ணு, `முகவரி' பட இயக்குநர் துரை இயக்கும் `ஏமாளி' படத்துல நான் வேலைசெய்றேன். அதுக்கு முன்னாடி நான் அவரைச் சந்திச்சது கிடையாது. தண்ணீரைப் பற்றி ஒரு பாடல் வேணும்னு நண்பர் மூலமா அவர் கூப்பிட்டார். நான் போய் எல்லாம் பேசி முடிச்சதுக்குப் பிறகு, இந்த மாதிரி ஒரு பாட்டு வேணும்னு `தாய்ப்பாலும் தண்ணீரும்...' பாடலைப் போட்டார். நான் சிரிச்சுக்கிட்டே, `சார், இதை எழுதினது யார் தெரியுமா?'னு கேட்டேன். `தெரியலை சார்... நானே இன்னிக்கு காலையிலதான் கேட்டேன்'னு சொன்னார். அதை எழுதினது நான்தான்னு சொன்னதும், அவர் முகத்துல அப்படி ஒரு ஆச்சர்யம். அதைப் பார்த்ததும் எனக்கே என்னைப் பிடிச்சது. ஏதோ ஒண்ணு உருப்படியா செய்திருக்கோம்னு திருப்தி. 

அதே மாதிரி இசையமைப்பாளர் சாம் சி.எஸ்கூட ரொம்ப நாள் பழக்கம். `நாம சேர்ந்து பாடல் பண்ணலாம்'னு பேசிட்டே இருப்பேன். திடீர்னு ஒருநாள் இரவு 9 மணி இருக்கும். எனக்கு கால் பண்ணி `உடனே இங்கே வாங்க. நாளைக்கு பாடல் ரிக்கார்ட் பண்ணணும். இன்னிக்கே நீங்க பாடல் எழுதணும்'னு சொன்னார். நான் அங்கே போறப்போ மணி 10.30. நைட் முழுக்க பேசிப் பேசி விடியகாலையில 3 மணிக்கு முடிச்ச பாடல்தான் `யாஞ்சி'. `கனவே கனவே...' பாடலுக்குப் பிறகு நாலு வருஷம் கழிச்சு `யாஞ்சி' பாடல் ரிக்கார்ட்டிங்லதான் அனிருத்தைச் சந்திச்சேன். அப்போ அவர்கிட்ட சொன்னேன் ` `கனவே கனவே' மாதிரி இந்தப் பாடலும் ஹிட்டாகும் பாருங்க'னு சொன்னேன். அதே மாதிரி ஹிட்.''

"யாஞ்சி, நெஞ்சாத்தியே, ரோஷமான்னு நீங்க பயன்படுத்தும் வார்த்தைகள் வித்தியாசமா இருக்கே?"

`` `யாஞ்சி'னா என்ன அர்த்தம்?' இதை குறைஞ்சது நூறு பேராவது என்கிட்ட கேட்டிருப்பாங்க. `யாஞ்சி'ங்கிறது ஒரு சைனீஸ் வார்த்தை. அதற்கு அர்த்தம் எதிரொலி அல்லது திரும்பத் திரும்ப. சைனீஸ் வார்த்தைங்கிறதைத் தாண்டி அதுமேல ஈர்ப்பு வரக் காரணம், அதை உச்சரிக்கும்போதும் வஞ்சி, வாஞ்சி, செஞ்சி, காஞ்சி மாதிரி தமிழ் வார்த்தைக்கான சவுண்டிங்லேயே இருக்கும். 

`நெஞ்சாத்தி'ங்கிற வார்த்தை இதுக்கு முன்னாலயே நான் ரெண்டு பாடல்கள்ல பயன்படுத்தியிருக்கேன். ஆனா, கவனிக்கப்படலை. இருந்தும் அந்த வார்த்தைமேல எனக்கு பயங்கர காதல். எப்படியாவது இதைக் கவனிக்கவைக்கணும்னு `யாஞ்சி' பாட்டுக்குள்ள சேர்த்தேன். சாம் அதைப் பார்த்துட்டு `இது சரியா இருக்குமா?'னு கேட்டார், `எதை வேணாலும் மாற்றித் தர்றேன். ஆனா, நெஞ்சாத்திய மட்டும் மாற்றச் சொல்லாதீங்க'னு சொன்னேன். அது பாடல்ல இருக்குன்னு தெரிஞ்சதும்தான் நிம்மதியே வந்தது. எனக்கு மட்டும் பிடிச்ச வார்த்தை, எல்லாருக்கும் பிடிச்சதா மாறியதில் சந்தோஷம். 

`சோலோ' படத்துல ஒரு சூழல். ஹீரோ அவங்க டீம் எல்லாரும் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடுறாங்க. `ரோஷோமான்'கிற வார்த்தை பிஜோய் நம்பியாரே சொன்னதுதான். நானும் நாலு விதமா அந்தப் பாடலை எழுதிக் கொடுத்தேன். ஆனா, ரோஷோமான்னு வந்தால்தான் அது நல்லாயிருக்கும்னு சொன்னேன். அதேபோல அதையே பயன்படுத்தினாங்க. பாடலும் நல்லா பேசப்படுது. பிஜோய் சாருடைய பெரிய ப்ளஸ் என்னன்னா, அவர் படத்துல இசையமைப்பாளர்கள் நிறைய இருப்பாங்க, பாடலாசிரியர்கள் குறைவா இருப்பாங்க. ஒரே படத்துக்காக நிறைய இசையமைப்பாளருடன் வேலைசெய்ற அனுபவம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.''

"யுவன், அனிருத், சந்தோஷ் நாராயணன், இமான்னு விதவிதமான இசையமைப்பாளர்களுடனான பயணம் எப்படி இருக்கு?"

“பிரமாதமாயிருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு யுனீக் ஸ்டைல் இருக்கு. நண்பர் மூலமா நலன் குமரசாமி சார் அறிமுகம் ஆனார். `காதலும் கடந்து போகும்' படத்துக்காக `ககக போ' பாடலை அவர் அலுவலகத்திலேயே இருந்து எழுதிக் கொடுத்தேன். சந்தோஷ் நாராயணன் சாருக்கும் அனுப்பிவெச்சுட்டோம். சரி, ரிக்கார்ட் பண்றப்போ கூப்பிடுவார்னு காத்திட்டிருந்தேன். பார்த்தா ஆடியோவே ரிலீஸ் ஆகிடுச்சு. அவருக்கு நான் கால் பண்ணி `உங்களை ஒருநாள் சந்திக்கணும்'னு சொன்னேன். `அவசியம் பார்க்கலாம்'னு சொன்னார். ஆனா, இன்னிக்கு வரைக்கும் பார்க்க வாய்ப்பே அமையலை. சீக்கிரம் பார்க்கணும்.

அனிருத்தை நான் முதலில் பார்த்தது, ரஹ்மான் சார் ஸ்டுடியோவுல. அனி, ரொம்ப சிம்பிளான ஆளு. எந்த டென்ஷனும் இல்லாம வேலை செய்யக்கூடிய கூலான ஆள். `கனவே கனவே...' பாடலுடைய பல்லவி ட்யூன் மட்டும் அனுப்பியிருந்தார். பாடல் ரிக்கார்ட் பண்றதுக்கு முந்தைய நாள் கால் பண்ணி `நான் உங்களுக்கு சரணம் அனுப்பினேனா?'னு கேட்டார். `இல்லை ப்ரோ, நான் அதை லூப் சாங்னு நினைச்சு நாலு பல்லவி எழுதிவெச்சிருக்கேன்'னு சொன்னேன். `ஐயோ, அதுக்கு சரணம் இருக்கு'னு சொல்லிட்டு ட்யூன் அனுப்பினார். அதுக்குப் பிறகு எழுதினதுதான் `கண்கள் ரெண்டும் நீரிலே மீனைப்போல வாழுதே...' வரிகள். பாடலைக் கேட்டுட்டு `நாம இதை ஹிட் பண்றோம்'னு சொன்னார். அதேபோல இப்போ வரைக்கும் எனக்கான அடையாளமா `கனவே கனவே...' இருக்கு. அடுத்து இன்னொரு பாடலுக்காகச் சந்திக்கணும்னு பேசிட்டிருக்கோம். 

ஜேம்ஸ் வஸந்தன் சார் சில சமயம் நாம கொடுக்கும் வரிகளுக்கு ஏற்ற மாதிரி இசையமைப்பார். இமான் சார் மெட்டுக்குள்ள கச்சிதமா வார்த்தை பொருந்துதானு பார்ப்பார். யுவன் சங்கர் ராஜா சார்கூட `ராஜா ரங்குஸ்கி' படத்துல இணைஞ்சிருக்கேன். அது வேற லெவல் ஆல்பமா இருக்கும். ஜி.வி.பிரகாஷ், நிவாஸ் கே.பிரசன்னானு புதிய கூட்டணிகளுடன் சேர்ந்திருக்கேன். அவங்களோடு வித்தியாசமான அனுபவங்கள் இருக்கும்னு நம்புறேன்.''

"சரி, ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு வாரம் காத்திருக்க வெச்சீங்களாமே?"

“ஐயோ... அதை ஏன் கேட்கிறீங்க. சினிமாவுலகூட அந்த மாதிரி சீன் வந்துடக் கூடாது. `டேவிட்' பட பாடல் விஷயமா நாளைக்கு மும்பை போகணும். கையில ஃபிளைட் டிக்கெட் வந்திடுச்சு. வீட்ல நான் முதல்முறையா விமானத்துல போறேன்னு சொல்லி, செம சந்தோஷமா இருக்கேன். நைட் 10 மணிக்கு ஒரு கால் வருது. `நீங்க நாளைக்கு ரஹ்மான் சாரை மீட் பண்ணணும்'னு. எனக்கு அழுகையே வந்திடுச்சு. நாளைக்கு காலையில 8.30 மணிக்கு எனக்கு ஃபிளைட், நான் எப்படி மீட்பண்றது? நான் இங்கே இருக்கும் ஆள்கள்கிட்ட பேசிப்பார்த்தேன். அவங்க ரஹ்மான் சாருக்கு ரொம்ப க்ளோஸ். அதனால `நான் ரஹ்மான்கிட்ட பேசிக்கிறேன்'னு சொல்லிட்டாங்க. 
முதல்முறையா ஃபிளைட்ல போறது, இப்படி ஒரு சங்கடத்தோடவா போகணும். அங்கே போனதுக்குப் பிறகு ரெண்டு நாள் சும்மாவே இருந்தேன். ட்யூனும் வரலை.... `ஐயோ இந்த ரெண்டு நாள் கொடுத்திருந்தா, ரஹ்மான் சாரை மீட்பண்ணிட்டு வந்திருப்பேனே!'னு மனசு முழுக்க வருத்தம். ஒரு வாரம் கழிச்சு அவரை மீட்பண்ணும்போது எனக்கு பயங்கர கில்ட்டியா இருந்தது. எல்லாம் சரியா நடந்திருந்தா, என் பாடலும் `மரியான்' படத்துல வந்திருக்கும். சரி, அதுக்கான வாய்ப்பு சீக்கிரமே அமையும்னு மனசைத் தேத்திக்கிட்டேன். ''

"பாடல் எழுதும் போது இன்னொரு பாடலாசிரியர் சாயல் வருவது மாதிரியான பிரச்சனைகள் இருக்குமா?"

``நான் பாடல் எழுத வந்தது வைரமுத்து சாரைப் பார்த்துதான். சில சமயம் கிராமத்துப் பாணியில் எழுதினோம்னா அவரைத் தொடாம வர முடியாது. `தாட்டியரே...'னு ஒரு பாடல் எழுதினேன். `இந்தப் பாடல் வைரமுத்து சார் எழுதினதா?'னு கேட்டாங்க. ஏன்னா, அந்தப் பாணியிலான நிறைய வார்த்தைகள் அவர் பயன்படுத்தியிருக்கார். முடிஞ்சவரை புதுசா என்ன பண்றோம்னு யோசிக்கணும். ஆல்பம் பாடல் ஒண்ணுல `ராக்காச்சி...'னு ஒரு வார்த்தை எழுதியிருக்கேன். அது திமிறா இருக்கும் பொண்ணுங்களைக் குறிக்கும் வட்டாரச் சொல். எங்க அம்மா `குசலக்காரி'ங்கிற வார்த்தையை அடிக்கடி சொல்வாங்க. அதை நான் `தாரை தப்பட்டை' படத்துல பயன்படுத்தியிருப்பேன். இது மாதிரி அதிகம் பயன்படுத்தாத சொற்களைக் கொண்டுவரும்போது புதுசா இருக்கும்.''

"பாடல்களுக்குக் கிடைச்ச மறக்க முடியாத பாராட்டுகள்?"

“ `தாரை தப்பட்டை'க்கு `வதன வதன...' பாடல் எழுதிட்டு ஓகே ஆன, வரிகளை டைப் பண்ணி எடுத்திட்டுப் போனேன். அப்போ `சண்டிவீரன்'ல வர்ற `தாய்ப்பாலும் தண்ணீரும்...' பாடலின் எடிட்டிங் போயிட்டிருந்தது. அதைப் பார்த்திட்டிருந்த பாலா சார், கண்ணைத் துடைச்சிட்டிருந்தார். அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் அவர் கண் கலங்குவார். `சேது' படம் பார்த்து நான் நிறைய முறை அழுதிருக்கேன். இப்போ என்னோட பாடல் அவரை அழவெச்சிருக்குன்னு நினைச்சுக்கிட்டேன்,  பெருமையா இருந்தது. 

அதே மாதிரி `ஜில்லா விட்டு ஜில்லா வந்த...' பாடல் சுஹாசினி மேடமுக்கு ரொம்பப் பிடிக்கும். நான் மணி சார்கிட்ட உதவி இயக்குநரா சேர்ந்தா நல்லாயிருக்கும்னு அவங்க நினைச்சாங்க. `நீங்க பாடல்கள் நல்லா எழுதுறீங்களே... ஏன் உதவி இயக்குநரா வர நினைக்கிறீங்க?'னு மணி சார் கேட்ட கேள்வி, எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பாடல், என்னை மணி சார் முன்னாடி வரைக்கும் கொண்டுபோகுதுன்னா என்னோட பாடல் எழுதும் திறமை நல்லாயிருக்குன்னுதானே அர்த்தம். 

ஒரு முறை ட்ரெய்ன்ல போயிட்டிருக்கும்போது `ஜில்லாவிட்டு ஜில்லா  வந்து...' பாடலைக் கேட்டுட்டு, ரெண்டு பேர் அதைப் பற்றி பேசிட்டே வந்தாங்க. `பின்னிருக்கான்ல... செமயா இருக்கு பாட்டு'னு பயங்கரமா புகழ்றாங்க. `நான்தாங்க அந்தப் பாட்டை எழுதினேன்'னு சொல்லியிருந்தாகூட அவங்க நம்பியிருக்க மாட்டாங்க. ஆனா, எனக்கு அதைச் சொல்லணும்னு தோணலை. அவங்க பேசினதைக் கேட்டதே அவ்வளவு சந்தோஷத்தைக் கொடுத்தது.''

"இனி பாடலாசிரியரா மட்டும் தொடரணும்னு விருப்பமா, வேறு திட்டங்கள் இருக்கா?"

“இலக்கியக் கூட்டங்களுக்குப் போகும்போது, நான் கடைசி ஆளாத்தான் உட்காருவேன். அங்கே இருக்கவங்ககிட்ட பேசக்கூட அவ்வளவு தயங்குவேன். ஏன்னா, அவங்களுடைய அனுபவம் திறமை எல்லாம் பெருசு. தயக்கம் இல்லாம அவங்களோடு பேசுற அளவுக்கு தகுதியை வளர்த்திட்டிருக்கேன். ஒரு புத்தகம் போடணும்னு ஆசை. அது சீக்கிரமாவே பண்ணுவேன். இப்போதைக்கு பாடல்கள் எழுதுவதில் மட்டுமே கவனம் செலுத்திட்டிருக்கேன்.''

"உங்களுடைய பாடல்களுக்கு ஊர்ல, வீட்ல என்ன மாதிரியான ரெஸ்பான்ஸ் இருக்கு?"

“என் ஊர் திருச்சி. அங்கே இப்போதான் என்னைப் பற்றிய தேடல் ஆரம்பிச்சிருக்கு. அது இன்னும் அதிகமாகணும். ஏன்னா, நீங்க எவ்வளவு பெரிய ஆளானாலும் சொந்த ஊரில் நம்மளப் பற்றித் தெரிஞ்சுக்கிறதும், நம்ம பையன் வந்திட்டான் பாருன்னு அவங்களுக்கு உள்ள இருக்கும் பாசமும் வேற மாதிரி உற்சாகத்தைக் கொடுக்கும். 

`பயம் அறியான்' படத்துல நான் எழுதின பாடல்களில் ஒண்ணு எஸ்.பி.பி சாரும், இன்னொண்ணை ஜேசுதாஸ் சாரும் பாடியிருந்தாங்க. `நாம எழுதின பாடல்களை இவ்ளோ பெரிய ஜீனியஸ் பாடியிருக்காங்க'னு எனக்கு சந்தோஷம் தாங்கல. அன்னிக்கே கிளம்பி, நைட் வீட்டுக்குப் போய் நின்னேன். அம்மா கதவைத் திறந்திட்டு `என்னடா இந்த நேரத்துல வந்திருக்க?'ன்னாங்க. `அம்மா, நான் எழுதின பாடல்களை எஸ்.பி.பி-யும் ஜேசுதாஸும் பாடியிருக்காங்கம்மா' சொல்லிட்டு, அவங்களோட சந்தோஷத்தைப் பார்க்க ரொம்ப ஆவலா இருந்தேன். `ஆமா... இவங்க ரெண்டு பேரும் யாரு?'ன்னாங்க. 

திரும்பி வந்து அந்தப் பட இசையமைப்பாளர்கிட்ட, `எங்க அம்மா அவங்க ரெண்டு பேரும் யாருன்னு கேட்டாங்க சார்'னு சொன்னேன். `நீங்க சந்தோஷப்படுங்க மோகன், எஸ்.பி.பி., ஜேசுதாஸ் யாருனே தெரியாத அம்மாவுக்குப் பையனா பிறந்து, சினிமாவுல பாடலாசிரியர் ஆகியிருக்கீங்கன்னா, உங்க உழைப்பு எவ்வளோ பெரியது'னு சொன்னார். 

என் மனைவி பிருந்தா எனக்கு அவ்வளவு உறுதுணை. லயோலா காலேஜ்ல படிக்கும்போது ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம். பிறகு காதல், கல்யாணம். அவங்க ரொம்பத் திறமையான ஆவணப்பட இயக்குநர். ஆனா, அதை எல்லாம் எனக்காக விட்டுட்டு, குடும்பத்தைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்களைப் பற்றி நான் எங்கேயும் சொன்னதில்லை. ஒரு பதற்றத்துல அவங்களைப் பற்றி சொல்லாம விட்றுவேன். ஆனா, இப்போ நான் அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவங்களுடைய கண்கள் ரொம்ப அழகா இருக்கும்.  `பாகன்' படத்துல ஒரு பாடலில் `இப்படி ஓர் கண்களைக் கண்டதில்லை'னு ஒரு வரி அவங்களுக்காக எழுதினேன். இப்ப வரைக்கும் அதை அவங்களுக்காகத்தான் எழுதினேன்னு நம்பவே மாட்டாங்க. அவங்களும் எனக்காக நிறைய எழுதியிருக்காங்க. அதுல ஒண்ணு மட்டும் என்னுடைய ஃபேவரைட்.''

முதல் பக்கத்தில்,

"நீ ஒரு இரும்பு மனிதன்"னு இருக்கும்

அடுத்த பக்கத்தில்

"என்னிடம் அடிவாங்கும் பொழுது"னு இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு