Published:Updated:

“விஜய் ரசிகர்களை இழுக்கிறேனா?” விஷால் பதில் #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“விஜய் ரசிகர்களை இழுக்கிறேனா?” விஷால் பதில் #VikatanExclusive
“விஜய் ரசிகர்களை இழுக்கிறேனா?” விஷால் பதில் #VikatanExclusive

“விஜய் ரசிகர்களை இழுக்கிறேனா?” விஷால் பதில் #VikatanExclusive

‘‘ஆமாம், ‘வேதம்’ படத்தில் நான் சாரின் உதவி இயக்குநர். அவர்தான் என்னை டைரக்ஷனிலிருந்து நடிப்புக்குத் தள்ளிவிட்டார். இப்ப அவர், ‘நான் அந்தப்பையனை ஹீரோவாக்கினேன். கடைசியில அவன் என்னை வில்லனாக்கிட்டான்’னு கேலியா சொல்லிட்டு இருக்கார். இதில் அவர் செம ஸ்டைலிஷ் வில்லன். ‘லீஜி’ங்கிற பிரபல ஹேக்கர் மாதிரி ஹை எண்ட் செக்யூரிட்டி உள்ள ஏரியாக்களைக்கூட அசால்டா ஹேக் பண்ற ஆள். எனக்கும் அவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் இன்னும் எடுக்கலை. க்ளைமாக்ஸல அவரோட மோதுற சண்டைக்காட்சி ஒண்ணும் இருக்கு. அதை நினைச்சாதான் பயமா இருக்கு. ஆனால் உண்மையில் இரண்டுபேரும் அதுக்காகத்தான் காத்திட்டு இருக்கோம்.” - ‘‘‘இரும்புத்திரை’யில் வில்லனா உங்க குருநாதர் அர்ஜுன் நடிக்கிறார். என்ன சொல்கிறார்?’’ என்ற கேள்விக்குத்தான் இப்படிப் பதில் சொல்கிறார் விஷால். நடிகர், தயாரிப்பாளர் சங்க வேலைகள், ‘சண்டக்கோழி-2’, ‘இரும்புத்திரை’... என அடுத்தடுத்த பட வேலைகளில் பரபரப்பாக இருந்த விஷாலை  சந்தித்தேன். அந்தப் பேட்டியிலிருந்து....

‘‘மிஷ்கினுடனான ‘துப்பறிவாளன்’ பயணம் எப்படி இருந்தது?’’

‘‘வெற்றி, தோல்வியைத் தாண்டி சில இயக்குநர்கள்கூட உள்ள நட்பு லைஃப் லாங் டிராவல் ஆகணும்னு நினைப்போம். பாலா சார், லிங்குசாமி, மிஷ்கின்லாம் அப்படியான உறவுகள். அந்த வகையில் மிஷ்கின் எனக்குக் கிடைத்த நல்ல சொத்து. ‘சைக்கோத்தனமா இருப்பார்’னு மிஷ்கினுக்கு வெளியில் வேறொரு முகம் இருக்கு. மனசுல இருந்து உண்மையா பேசுறதால இப்படி அவரைத் தவறா நினைச்சிருக்கலாம். ஆனால், அவர் ஒரு குழந்தை மாதிரி. அவ்வளவு மென்மையான மனிதர். ஷூட்டிங் ஸ்பாட்லயே ‘இவன் மட்டும்தான் இவர்ட்ட இப்படி பேச முடியும்’னு எல்லோரும் என்னை சொல்றாங்க.

முரடனா இருக்கிற ஒருத்தருக்குக் கல்யாணம் பண்ணிவெச்சா அந்தப் பெண் அந்த முரட்டு குணத்தையே மாத்திடுவானு சொல்லுவாங்கள்ல. அந்தமாதிரிதான் ‘துப்பறிவாளன்’க்குப்பிறகு மிஷ்கினிடம் மாற்றம் இருக்கும். அதுக்கு மத்தவங்க எனக்குதான் நன்றி சொல்லணும். வேறொரு ஹீரோ, அடுத்து மிஷ்கினுடன் படம் பண்ணும்போது அந்த மாற்றம் அவங்களுக்குத் தெரியலாம்.’’

‘‘இயக்குநர் பாலா, மிஷ்கின் இருவருடன் வேலை செஞ்சிருக்கீங்க. இருவரையும் ஒப்பிடணும்னா என்ன சொல்வீங்க?’’

‘‘ஒரு படம் பண்ணும்போது இயக்குநர்-நடிகருக்குமான நட்பு, உறவு தொழில்ரீதியா நீடிக்கும். ஆனால் படத்தின் வெற்றி தோல்விகளைத் தாண்டி சில இயக்குநர்களைக் குடும்பத்துல ஒருத்தரா நினைப்போம். பாலா அண்ணனும் மிஷ்கினும் எனக்கு அப்படியான உறவுகள். வெளியில இருந்து பார்க்கும்போது, ‘ஐயய்யோ பாலாட்ட வேலை செய்ய முடியாது. போட்டு உருட்டி எடுத்துடுவாப்ல’னு ஒரு தவறான பார்வை இருக்கு. ஆனால் அவர் ஒரு பல்கலைக்கழகம். அது அவர்ட்ட வேலைசெஞ்ச என்னைமாதிரியான ஆட்களுக்கு மட்டும்தான் தெரியும். 

‘அவன் இவன்’ பண்ணும்போது முதல் 12 நாள் ஷெட்யூல் பார்த்துட்டு, நிச்சயம் பாலா சாரும் நானும் சண்டை போட்டுக்கப்போறோம்னு நினைச்சு ஆர்யா பயந்துட்டான். அதுக்குக் காரணம் அவர் நிறைய ரீடேக் எடுத்துட்டே இருந்தார். எனக்கு ஒரு ஷாட்டை மூணு டேக்குக்கு மேல நடிக்க முடியாது. மூணாவது டேக் தாண்டுனா நான் கான்சியஸ் ஆகிடுவேன். டயலாக் பேப்பரை முந்தினநாளே வாங்கிட்டுப்போய் படிச்சு, நடிச்சுனு ஹோம்ஒர்க் பண்றதுல எனக்கு உடன்பாடும் இல்லை. தப்புப் பண்ணிணாலும் ஸ்பாட்ல தப்புப் பண்ணணும். அன்னனைக்கு அதை திருத்திக்கிட்டு ஸ்பான்டேனியஸா பண்ணணும்னு நினைப்பேன்.

அப்படி ‘அவன் இவன்’ல ஒரு ஷாட் 40 டேக் எடுத்தார். ‘நீ என்ன பண்ணிட்டு இருக்க’னு ஒரு சின்ன டயலாக். ‘கட் ஒன்மோர்‘னு தொடர்ந்து சொல்லிட்டே இருந்தார். நானும் பல்லைக்கடிச்சிட்டு நடிச்சிட்டே இருந்தேன். ‘இந்த நாலு வார்த்தைகள்ல நம்மகிட்ட இவர் இன்னும் என்னதான் எதிர்பார்க்கிறார்’னு எரிச்சல். பிறகு மானிட்டர்ல உட்கார்ந்துட்டு, ‘என்ன பண்ணிட்டு இருக்க’னு நானா ஒவ்வொரு மாடுலேஷன்ல சொல்லிப்பார்த்துட்டு இருந்தேன். அப்ப டக்குனு, ‘இதுதான் இதேதான்’னு பக்கத்துல இருந்த பாலா சார் சொன்னார். 

எனக்குள்ள இருக்கிற விஷயத்தை என்னையறியாமலேயே இம்ப்ருவ் பண்ணி கொண்டுவர்றார்னு அப்பதான் எனக்குப் புரிஞ்சுது. கண்ணாடி முன் பயிற்சி, லாஸ் ஏஞ்சல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் முயற்சினு எங்க போயிட்டு வந்தாலும் அந்த அனுபவம் கிடைக்கவே கிடைக்காது. ‘இவனுக்குள்ள இது இருக்கு’னு அந்த மனுஷன் மெனக்கெடுறதாலதான் அது நிகழ்ந்தது. அதேபோலதான் மிஷ்கினும். இவர்ட்டயும் நிறைய கத்துக்கலாம்.

‘டான்ஸ் மாஸ்டர் வந்தார். அவர் சொன்னபடி ஐந்து பாட்டுக்கு ஆடினோம். அடுத்து ஃபைட் மாஸ்டர் சொன்னபடி ஐந்து ஃபைட் பண்ணினோம். இடையில 50 நமிஷங்களுக்கு பன்ச் டயலாக் பேசி முடிச்சோம்’னு இல்லாம டைரக்டர்களின் மைண்ட்ல உள்ள அந்த ஸ்கிரிப்டை அப்படியே நமக்கு மடை மாத்திக்கிட்டு நடிக்கணும்னு நினைக்கிறேன். என் வீட்டு வரவேற்பறையில அவார்ட்ஸை வைக்காம, இந்தமாதிரியான படங்களை வெச்சு ரசிக்கத்தான் எனக்குப் பிடிக்கும்.’’

‘‘அடுத்த படம், ‘இரும்புத்திரை’. அது எப்ப ரிலீஸ்?’’

‘‘பி.எஸ்.மித்ரன். புதுப்பையன். ‘ஸ்கிரிப்ட் சொல்லணும்’னு வந்தார். அந்தப் புது குதிரையின் மேல என் மொத்தப் பணத்தையும் பந்தயமா கட்டுறேன். ஆனால் அந்தக் குதிரை என் படத்துல மட்டுமில்லை, தன் கரியர்லயும் ஜெயிக்கும். படம் பிரமாதமான தீம். அறிவுசார்ந்த திரைக்கதை. இன்னைக்கு நடக்குற ஏடிஎம், கிரெடிட் கார்ட் மோசடிகள்னு டிஜிட்டல் ஹேக்கிங் உள்பட தற்போதைய டிஜிட்டல் இந்தியாவின் உண்மையான நிலை என்னனு சொல்லும் கதை. கருத்தா இல்லாம உங்களை ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’க்குத் தள்ளும் பிரமாதமான திரைக்கதை. நிச்சயம் தரமான படமா வரும். அந்தப்படம் பற்றி நான் பேச வேண்டிய அவசியமே இல்லை. அந்தப்படமே தன்னை வித்துக்கும். இன்னும் 20 நாள்கள் ஷூட்டிங் மீதி இருக்கு. டிசம்பர்ல ரிலீஸ். 

மித்ரனின் ஒருங்கிணைப்பு அபாரம். தன் கேமராமேன் ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்பட தன் டீமை உட்காரவெச்சு எல்லார்ட்டயும் மொத்தமா கதையைச் சொல்றார். அவங்கள்ட்ட இருந்து இன்புட் எடுத்துக்கிறார். பிறகு டான்ஸ் மாஸ்டரைக் கூட்டிட்டுபோய் மியூசிக் டைரக்டர்ட்ட உட்காரவைக்கிறார். ஃபைட் சீக்வென்ஸ்னா கேமராவை எங்கெங்க எப்படி வைக்கலாம்னு ஸ்பாட்டுக்குப்போய் பிளான் பண்ணிட்டு வர்றார்... இப்படி டீடெயிலா டீமா சேர்ந்து ஒர்க் பண்றார்.

இவங்களைப் பார்த்தபிறகு இனிமேல் ஒரு படத்துக்கு 100 நாள்கள், 150 நாள்கள் கால்ஷீட் கொடுக்கக் கூடாதுனு முடிவு பண்ணியிருக்கேன். ஏன்னா நாம ரசிகர்கள் முன் வைக்கப்போறது 60 சீன்கள், வெறும் இரண்டரை மணிநேர ஃபுட்டேஜ். அப்ப கிட்டத்தட்ட 30 நாள்கள் எடுக்கிறதை வேஸ்ட்னு தூக்கிப்போட்டுடுறாங்க. ஒருநாளைக்கு ஒரு சீன், இல்லைனா இரண்டு சீன் எடுப்போம். அதுக்கு ஒருநாளைக்கு 5 லட்சம் செலவு. அப்ப 30 நாள் எடுக்கிறதை வேஸ்ட் பண்றாங்கன்னா அதுக்கு ஆகுற செலவு ஒன்றரைக் கோடி. இந்தத் தொகையை பப்ளிசிட்டிக்குச் செலவு பண்ணுனீங்கன்னா படம் இன்னும் நல்லாப் போகும். ஒவ்வோர் இயக்குநரும் மித்ரன் மாதிரி திட்டமிட்டு எடுக்கணும் என்பதுதான் என் கோரிக்கை.’’

‘‘ஆமாம், மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கீங்க. அதுவும் வில்லன். ‘‘மோகன்லாலுடன் நடந்த அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘ ‘இரும்புத்திரை’யில் அர்ஜுன் சார் என்ன பண்றாரோ அதையேத்தான் நான் மலையாளத்தில் மோகன்லால் சார் படத்தில் பண்ணிட்டு இருக்கேன். இந்தப்பட டைரக்டர் உன்னிகிருஷ்ணன் இந்தக் கதை சொல்லும்போது, ‘எல்லா நல்லதுகள்லயும் கெட்டது இருக்கும். எல்லா கெட்டதுகள்லயும் நல்லது இருக்கும்’ என்ற அதோட கான்செப்ட் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. மலையாளத்துல மோகன்லால் சார்க்கு எதிரான பலமான கதாபாத்திரம் கிடைக்கும்போது ஏன் பண்ணக் கூடாதுனு தோணுச்சு.

லால் சார் என் குடும்ப நண்பர். தன் வீட்டுப் பையன்மாதிரி பார்ப்பார். அவர்கூட நடிக்கிறது, ஏதோ ஆர்யாகூட ஃப்ரெண்ட்லியா நடிக்கிறமாதிரி பயங்கர ஜாலியா இருந்துச்சு. லால் சார், ‘அவன் பண்ணட்டும். இந்த இடத்துல இப்படி பேசட்டும். க்ளாப்ஸ் வரும். நீ பண்ணு’னு அவ்வளவு ஸ்பேஸ் கொடுத்தார். 

ஆனால் க்ளைமாக்ஸ்ல நடுங்கிட்டேன். அவ்வளவு பெரிய லெஜன்ட் முன் நின்னு அவரின் கண்களைப் பார்த்து டயலாக் பேசணும். உள்ளுக்குள்ள இதயத்துடிப்பு எகிறுது. கையெல்லாம் நடுங்குது. அதை வெளிக்காட்டவும் கூடாது, அந்த பயம் நம்மக்குள்ளதான் இருக்கும். அந்த ஷாட் ஓகே ஆனதும் யாருக்கும் தெரியாம கேரவனுக்குள்ளப்போய் கதவைச் சாத்திக்கிட்டு ஐந்து நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிண பிறகுதான் வெளிய வந்தேன்.

450 படங்கள் தந்த அனுபவத்தோடு நிக்கிற ஒரு மனிதனோட கண்களைப் பார்த்து பேசி நடிச்சதுதான் மிகச்சிறந்த அனுபவம். அதை நான் ரசிச்சேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த அனுபவம் கிடைக்காது. இது, 8கே ரெசலியூஷன்ல பண்ற முதல் இந்தியப்படம். மோகன்லால், மஞ்சு வாரியர், ஹன்சிகா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்னு நிறைய நடிகர்கள். அடுத்து நம் மனோஜ் பரமஹன்சா, ஏகாம்பரத்தின் துல்லியமான ஒளிப்பதிவு. இந்தப்படத்துக்கு அங்க மிகப்பெரிய எதிர்பார்ப்பு. படம் இந்த மாசம் 28ம் தேதி ரிலீஸ்.’’

‘‘அடுத்து ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தை தமிழில் ரீமேக்குறீங்க. அதில் என்ன ஸ்பெஷல்?’’

‘‘தயாரிப்பாளர் சங்க தேர்தல், சென்னைப் புயல், ஜெயலலிதா அவர்களின் மரணம்னு பல காரணங்கள்ல தள்ளிப்போன படம். டிசம்பர்ல ஆரம்பிக்கிறோம். அது எனக்காக இல்லாட்டியும் இந்த சொசைட்டிக்காகப் பண்ணவேண்டிய படம். பாலியல் பலாத்காரங்களை இந்தச் சமூகம் எவ்வளவு அசால்டா கடந்துபோயிட்டு இருக்கு என்பதை முகத்தில் அடிச்சமாதிரி சொல்ற படம். ஏ.ஆர்.முருகதாஸ் சாரின் அசோஷியேட் மோகன் டைரக்ட் பண்றார். ‘ஸ்பைடர்’ தயாரிப்பாளர் மது தயாரிக்கிறார். ஹீரோயின், மற்ற டெக்னீஷியன்களின் தேர்வு நடந்துட்டு இருக்கு.’’

‘‘பிரபுதேவா டைரக்ஷன்ல நீங்களும் கார்த்தியும் நடிக்கிறதா இருந்த ‘கருப்பு ராஜா, வெள்ளை ராஜா’ படம் என்னாச்சு?’’

‘‘தொடங்கிட்டு இப்ப தள்ளிவெச்சிருக்கோம். சீனியர் டைரக்டர் கே.சுபாஷ் சாரின் சூப்பரான ஸ்கிரிப்ட். அவர் உடம்புக்கு முடியாம டயலிசிஸ் பண்ணிட்டு இருந்த சமயத்தில் இந்தக் கதையை நான், கார்த்தி, நாசர் சார், ஐசரி கணேசன் எல்லோரும் கேட்டோம். இப்படி ஒரு கதை அமைவது கஷ்டம். அதை மோல்ட் பண்ணி ஸ்கீரின்பிளேவா வரும்போது திருப்தி இல்லை. சில மாற்றங்கள் மேற்கொள்ளணும். அதுக்காக டைம் எடுக்கிறோம். இதுக்கிடையில் பிரபுதேவா மாஸ்டரும் வேறுசில படங்களில் நடிக்கிறார். நாங்களும் வெவ்வேற படங்கள்ல நடிச்சிட்டு இருக்கோம். ஃபைனல் டிராஃப்ட் வந்ததும் அதையும் ஆரம்பிச்சிடுவோம்.’’

‘‘நீங்களும் லிங்குசாமியும் சண்டக்கோழி-2’வில் மறுபடியும் இணையுறீங்க. அது எப்படி வந்துட்டு இருக்கு?’’

‘‘ஆகஸ்ட் 3ம்தேதி ஆரபிக்கவேண்டிய படம். என் தங்கச்சியின் கல்யாணம், எனக்கு முட்டி வலினு சில விஷயங்களால் தாமதமாகிடுச்சு. பின்னி மில்லில் மிகப்பெரிய திருவிழாசெட் போட்டு எடுக்கிறோம். மதுரையில் ஒரிஜினல் லொக்கேஷன்ல எடுத்தா இதைவிட செலவு அதிகம் என்பதால் இங்கயே செட்போட்டு எடுத்துட்டு இருக்கோம். இது என் 25வது படம். 2வது படத்திலேயே என் கரியரை ஷேப் பண்ணி படம் சண்டக்கோழி. இப்ப அதோட 2வது பார்ட் என் 25வது படமா அமையிறது ரொம்ப சந்தோஷம்.”

“அடுத்த நடிகர் சங்க தேர்தலிலும் நிப்போம்!”

‘‘வரும் அக்டோபர் வந்தால் நீங்க நடிகர் சங்கப் பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையுது. இந்தப் பயணம் எப்படி இருக்கு?’’
‘‘சங்க உறுப்பினர்களைப் பற்றிய டேட்டாபேஸ், மூத்த உறுப்பினர்களுக்கு பென்ஷன், மீதி இருந்த சம்பள பாக்கியைப் பெற்றுத் தர்றதுனு எங்க வாக்குறுதிகளை முடிச்சிட்டு இப்ப அட்வான்ஸா போயிட்டு இருக்கோம். ஆனால் சொல்லி செய்யாதது இன்ஷூரன்ஸ். அடுத்து சங்கக் கட்டடம். அது வந்துடக் கூடாதுனு பலரும் பலமாதிரி முயற்சி பண்றாங்க.

சிஎம்டிஏ, மாநகராட்சினு முறையா அனுமதி பெற்று வேலைகளைத் தொடங்க தாமதமாச்சு. வேலையைத் தொடங்கும்போது, ‘33 அடி ரோடு உள்ள இருக்கு’னு வழக்குபோட்டு தடை பெற்றதால் 2 மாசம் தாமதம். இப்பத் தீர்ப்பும் எங்களுக்குச் சாதகமா வந்ததைத்தொடர்ந்து கட்டட வேலைகள் தொடங்கி நடந்துட்டு இருக்கு. 28 கோடி பட்ஜெட்ல எந்த வங்கிக் கடனும் இல்லாம நாங்களே திரட்டிப் பண்றோம். ஹேட்ஸ் ஆஃப் டு நடிகர் சங்க டீம். 2018 டிசம்பர்ல முடிச்சிடுவோம். 2019 ஜனவரில் தொடக்க விழா நிச்சயம். அடுத்த வருஷம் அக்டோபர்வரை எங்க பதவிக்காலம் உள்ளது. பில்டிங் முடிக்காம யார் கையிலயும் சங்கத்தைக் கொடுக்க முடியாது. அதனால் அடுத்த தேர்தலிலும் நிப்போம்.’’

“நடிகர் சங்க நிலத்தைக் காணோம்!”

‘‘நட்சத்திர கிரிக்கெட்டில் முறைகேடு என்பது உள்பட உங்கள்மீதும் ராதிகா புகார் கூறியிருந்தாரே?’’

‘‘அந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து இதுவரை எந்தச் சங்கமும் செய்யாததை நாங்க செய்தோம். பில்கள் உள்பட ஒட்டுமொத்த அக்கவுன்ட்ஸையும் ஆன்லைன்ல வெளியிட்டோம். குற்றச்சாட்டை நிரூபிச்சாங்கன்னா நாங்களா விலகிடுவோம். அந்தப் பணத்துல கை வைக்கணும்னு எங்களுக்கு அவசியமே இல்லை. ஆனால், ஏற்கெனவே வெச்ச கைகளைச் சும்மா விடமாட்டோம். நடிகர் சங்கத்துக்காக வேங்கடமங்கலத்தில் தந்த இடம் சங்கச் சொத்துப் பட்டியலில் வந்ததும் தெரியலை, போனதும் தெரியலை. தாம்பரம் பக்கத்துல நடிகர் சங்கத்துக்கு இலவவசமா கொடுக்கப்பட்ட அந்த நிலத்தை வித்திருக்காங்க. இன்றைய சூழல்ல அந்த நிலம் ஒரு கோடிக்கும் மேல போகும். அது பெரிய மோசடி.

இதுக்கு முன்னதா, கணக்கு வழக்குகளில் குழறுபடி. 2011ல் நடந்த சிசிஎல்க்கு 2010ல் ஒரு கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்காங்க. என்ன செலவுனு தெரியலை. பணத்தை டிரஸ்ட்ல இருந்து டிராப் பண்ணக் கூடாது என்பது விதி. ஆனால் இவங்க 30 லட்சத்தை ஜனவரியில் எடுத்துவிட்டு பிறகு அதை அக்டோபரில் டெபாசிட் செய்வதுனு பலமுறை பணத்தை டிராப்பண்ணி டெபாசிட் பண்ணினு விளையாடியிருக்காங்க. இதனால் நிறைய வட்டி இழப்பு. இதேபோல ஐந்து வருஷம் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்யாததால் 80ஜி சலுகை ரத்தாகிவிட்டது. பிறகு வருமானவரித்துறை கமிஷனரிடம் கார்த்தி நேரில் சென்று கெஞ்சிக் கூத்தாடி திரும்ப அந்தச் சலுகையைப் பெற்று வந்தார்.

அதனால்தான் மழை, வெள்ள சமயத்தில் பிரபலங்களிடம் நிவாரணத்தொகை பெற முடிஞ்சது. பிறகு பொதுக்குழுவைக் கூட்டி சரத்குமார், ராதாரவி இருவரையும் அடிப்படை உறுப்பினரில் இருந்து நிரந்தரமா நீக்கினோம். இப்ப வேங்கடமங்கலம் நிலம் தொடர்பாக விளக்கம் அளிக்க சம்பந்தப்பட்டவங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கோம். சம்பந்தப்பட்டவங்கமேல கிரிமினல் வழக்குப் பதிவு பண்ணணும்னு செயற்குழு உறுப்பினர்கள் கேட்குறாங்க. ராதாரவியண்ணன், சரத்குமார் சார்மீது காழ்ப்பு உணர்ச்சியில் பண்றதா சிலர் நினைக்கலாம். ஆனா எங்க நோக்கம் அதுவல்ல.’’

“டிக்கெட் விற்பனையைக் கணினிமயமாக்கணும்!

‘‘இந்த அரசு சினிமாத்துறையை எப்படி பார்க்குதுன்னு நினைக்கிறீங்க?’’

‘‘முன்ன 2 ஆயிரம் தியேட்டர்கள், ஆனால் வருஷத்துக்கு 80 படங்கள் ரிலீஸ் ஆச்சு. இப்ப வெறும் 850 தியேட்டர்கள். ஆனால் ரிலீஸ் ஆகும் படங்களோ 250க்கும் மேல். எப்படி அக்காமடேட் பண்ணுவீங்க. அதனால தொகுதிக்கு ஒண்ணா 234 தொகுதிகள்லயும் 200 முதல் 250 இருக்கைகள்கொண்ட தியேட்டர் கட்டிக்க கோயில் நிலத்தைத் தயாரிப்பாளர் சங்கத்துக்குக் குத்ததைக்குக் கொடுங்க. அதுல சென்னை சத்யம்ல இருக்கிற வசதியளவுக்கு நல்ல தியேட்டர்களை அமைக்கிறோம். அதன்மூலம் உங்களுக்கு வரி அதிகரிக்கும். சின்னப்படங்களும் ரிலீஸ் ஆக வாய்ப்பா இருக்கும்னு கோரிக்கை வெச்சிருக்கோம். ஜி.எஸ்.டி தவிர 30 சதவிகித லோக்கல் வரினு அரசு அறிவிச்சாஙக. அதை எங்களால கட்ட முடியாதுனு கடந்த ஜூன்ல சொன்னோம். அதுபற்றி பேச ஒரு குழுவை அமைச்சாங்க. ஆனால் அந்தக்குழு இதுவரை ஒருமுறைகூட கூடலை. 

கர்நாடகா, வங்காளம் உள்பட பல மாநிலங்கள்ல ஜிஎஸ்டியில வரக்கூடிய ஸ்டேட் கோட்டா 9 சதவிகிதத்தைத் திரும்பி இன்டஸ்ட்ரிக்கே கொடுக்குறாங்க. இதுதவிர இப்ப கார்ப்பரேஷன் டாக்ஸ் கேக்குறாங்க. எந்தத் தெளிவும் இல்லை. ஆனால் 9 வருடங்களா அறிவிக்கப்படாம இருந்த மானியம் அறிவிக்கணும்னு எங்க கோரிக்கையை ஏற்று 150 படங்களுக்கு மானியம் அறிவிச்சிருக்காங்க. அடுத்து நாங்க எதிர்பார்க்கிறது, தமிழ்நாடு முழுக்க கேரளா மாதிரி தியேட்டர் டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டரைசேஷன் பண்ணணும். ஒரு டிக்கெட் பதிவாச்சுன்னா அது அன்றே தயாரிப்பாளருக்குத் தெரியவரணும். அப்பதான் எவ்வளவு வசூல் வந்திருக்குனு தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோவுக்குத் தெரியும். தப்பும் நடக்காது. 100 கோடி, 200 வசூல்னு டிவிட்டர், ஃபேஸ்புக்ல சொல்லிட்டு இருக்கோம். அதெல்லாம் உண்மையா இல்லையானு புரியும். ‘இதுதான் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்’னு காட்டி எங்களால பேங்க்ல லோன்கூட வாங்க முடியும்.’’

‘‘இதை அரசு ஒப்புக்கிட்டாலும் தியேட்டர் ஓனர்கள் ஒப்புக்குவாங்களா?’’

‘‘அவங்களும் ஒப்புக்கிட்டாங்க என்பதுதான் நல்ல விஷயம். ஏன்னா, ‘நடிகர்களுக்கு அவங்களோட உண்மையான வசூல் என்னனு தெரியணும். அப்பதான் அவங்க கேக்குற கோடிகள் நியாயமானதா, இல்லையானு தயாரிப்பாளருக்குத் தெரியவரும்’ என்பது விநியோகஸ்தர்கள், தியேட்டர் ஓனர்களின் எண்ணம். ஏன்னா, ‘இந்தப்படம் 100 கோடி வசூல்’னா ஆர்ட்டிஸ்ட் அடுத்த படத்துக்கு சம்பளத்தை ஏத்தத்தான் செய்வார். தயாரிப்பாளர் ஏற்கெனவே நஷ்டத்துல இருந்தாலும் ஹீரோவோட தேதிக்கா அதிகச் சம்பளம் கொடுத்து படம் பண்றார். அப்ப மேலும் நஷ்டமாகுறார். ‘உங்க போன படத்தோட கலெக்ஷன் இதுதான்சார்’னு கிளாரிட்டி இருந்தா சரியான சம்பளம் கொடுக்கலாம். இல்லைனா பாலிவுட் மாதிரி லாபத்துல பங்குனு போயிடலாம்.’’

‘லோக்கல் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள்மீது வழக்கு. பிறகு அவர்களைச் சென்னைக்கு வரவழைத்து மீட்டிங் போட்டீங்க. என்ன அப்டேட்?’’
‘‘லோக்கல் கேபிள்ல புதுப்படம், பாடல்கள், கிளிப்பிங்ஸ் போடுறாங்க. அதை எங்க ஆன்ட்டி பைரஸி ஸ்குவாட் டீம் மூலம் புடுச்சு கேஸ் போட்டோம். அதுல என்ன கொடுமைன்னா அப்படிச் சிக்கின மூணு பேர்கள்ல ஒருத்தர் எங்க சங்க உறுப்பினர். கோவையில் லோக்கல் கேபிளில் ‘காஷ்மோரா’ படம் போட்டு சிக்கினார். ‘உங்கட்ட 600 லோக்கல் சேனல்கள் இருக்குதுன்னா, மாதாமாதம் ஒரு தொகையை கவுன்சிலுக்குக் கொடுத்திடுங்க. ரிலீஸ் ஆகுற படங்களோட கிளிப்பிங்ஸ், மேக்கிங்...னு எங்க வாட்டர் மார்க்கோட முறையா தர்றோம்’னு பேசி 70 முதல் 80 லட்சம் தொகைக்குக் கொண்டுவந்திருக்கோம். 

டெவிலிஷன் ரைட்ஸ் விக்காத படங்களை லோக்கல் கேபிள்ல சிங்கிள் டெலிகாஸ்ட் பண்ண சின்ன பட்ஜெட் படத்துக்கு 6 லட்சம் ரூபாய்னு வருவாயைக் கொண்டு வந்திருக்கோம். முன்ன எஃப்.எம்.எஸ் ரைட்ஸை ஒட்டுமொத்தமா அள்ளிக்கொடுத்துடுவோம். ஆனால் இப்ப ஏர்லைன்ஸ், கப்பல், மலேசியா, சிங்கப்பூர், கனடா, யூ.எஸ்.ஏ, யூ.கே., யூரோப், மொரிசியஸ், துபாய், ஸ்ரீலங்கானு தனித்தனியா விக்க ஆரம்பிச்சிருக்கோம். 

தவிர அந்தந்த ஊர்களுக்குப் படம் வந்த 40 நாளுக்குப்பிறகு டிவிடி ரைட்ஸ், மலேசியா ஆஸ்ட்ரோ வானவில், சிங்கப்பூர் வானவில் டிவி மாதிரி அந்தந்த நாட்டு சேனல்கள், இதுபோக நெட்ஃபிலிக்ஸ் மாதிரி ஓவர்சீஸ் டிஜிட்டல்னு நிறைய பிளாட்ஃபார்ம்களைக் கண்டறிஞ்சிருக்கோம். சாட்டிலைட் விக்காத 160, ரிலீஸ் ஆகாத 200 படங்கள்ல 100 படங்களை 2 கோடிக்கு வாங்கிக்கிறோம்னு அமேசானுடன் ஒரு டீல் பேசிட்டு இருக்கோம். 

யூடியூபில் முறைகேடா நம் கன்டென்டை போடும்போது எங்க ஆன்டி பைரஸி ஸ்குவாட் அந்த சேனலை ஸ்ட்ரெயிக்டவுன் பண்றாங்க. இப்படி மூணு முறை வீடியோவை இறக்கினால் அந்த யூடியூப் சேனல் பிளாக் ஆகிடும். இப்படி பிளாக் ஆகும்போது சம்பந்தப்பட்ட பலர் எங்களை போனில் அழைத்து மிரட்டுகிறார்கள். அதில் ஒருவர் நேரிலேயே வந்துவிட்டார். ‘நான் 400 படங்களின் ரைட்ஸ் வைத்திருக்கேன்’னு பத்திரங்களை எடுத்துக்காட்டினார். ஆனால் அனைத்தும் போலியான அக்ரிமென்ட். தவறான மீடியேட்டர் மூலம் ஒரு படத்துக்கு 10 ஆயிரம்னு அவரிடம் டிஜிட்டல் ரைட்ஸை விற்றிருக்கிறாரகள். அதன்மூலம் அவர் மாதத்துக்கு ஒன்றரைக் கோடிவரை சம்பாதித்தாக கூறினார். அதிர்ச்சியாக இருந்தது. 

‘அவன் இவன்’ படத்துக்காக ஏஜிஎஸ் என்டர்டெயிமென்ட் உடன் போடப்பட்ட அக்ரிமென்ட் என்று ஒன்றைக் காட்டினார். அதில் ஏ.ஜிக்கு பக்கத்தில் ஒரு அப்பாஸ்டெஃபி கமா போட்டு எஸ் என்ற போலிப் பெயர். சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இதைப்போன்ற மோசடிகளை முந்தின நிர்வாகங்கள் எதுவும் தட்டிக்கேட்கவில்லை என்பதுதான் வேதனை. வெறும் பஞ்சாயத்து செய்தே காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சேர்த்துவைத்த அந்த அழுக்குகளைச் சுத்தம் செய்ய மட்டுமே எங்களுக்கு இந்த நாலு மாத காலம் தேவைப்பட்டது. இனிமேல்தான் யூனியனில் நல்லவற்றைச் சேர்க்கப்போறோம்.’’

‘‘ஃபெஃப்சிக்கூட ரொம்ப வருஷமா பயணப்படுறீங்க. திடீர்னு அவங்களை வேணாம்னு விளக்கிவெச்சு, புதிதா டெக்னீஷியன்களை எடுக்க விளம்பரம் கொடுத்தது எந்த வகையில் நியாயம்?’’

‘‘அவங்களுக்கான சம்பளத்தை நாங்க குறைக்கவே இல்லை. ஜெர்னி பேட்டானு ஒண்ணு இருக்கு. தூங்கிட்டுப்போகுறதுக்கு எதுக்கு பேட்டா? அதனால நோ ஜெர்னி பேட்டா. மொட்டை ராஜேந்திரனுக்கு எதுக்கு ஹேர் டிரஸ்ஸர்? ஃபைட் நடக்கும்போது உங்களுக்கு எதுக்கு நாகரா? எங்களோட இந்த முடிவை காரணங்களா வெச்சு இனிமே எந்த ஷூட்டிங்கையாவது யாராவது நிறுத்தினா நாங்க பொறுத்துக்கமாட்டோம். ஒரு இயக்குநர் கஷ்டப்பட்டு ஒரு கோடியில ஒரு படம் எடுக்குறார்னா அவனால் 150 பேரை உட்காரவெச்சுட்டு படம் எடுக்க முடியுமா?

‘நான் பைக்லகூட போறேன். எனக்கு கார்கூட வேணாம். புதுமுகம்தானே, கேரவேன் வேணாம். என் நடிகர், நடிகைகளை பைக்ல அழைச்சிட்டு எங்கவேணும்னாலும் போய் படம் எடுப்பேன். எனக்கு மேக்கப்மேன் தேவையில்லை. என் அசிஸ்டென்ட் டைரக்டர் மேக்கப்போடுவான். என் லேடி அசிஸ்டென்ட் டைரக்டர் ஹேர் டிரஸ்ஸரா இருப்பாங்க. அடுத்து மேக்கப்பே இல்லாமல் நேச்சுரல் மேக்கப். நான் ஏன் மேக்கப் மேனுக்குக் காசு தரணும்’னு கேக்குறாங்க. இதுக்கு என்ன பதில்?

அவனவன் செல்போன்லகூட படம் எடுத்துட்டு போயிட்டு இருக்கான். அதனால எல்லா கிராஃப்ட்டும் வெச்சுக்கணும்னு நினைக்கிறது தவறு. என்ன தேவையோ அதை வெச்சுக்கிறோம். ‘ஆட்கள் தேவை’னு அறிவிச்சது, எக்ஸ்பீரியன்ஸுக்காக வேலை செய்ய விரும்பும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்கள், விஸ்காம் ஸ்டூடன்ட்டைக் கண்டறிய கொடுத்த விளம்பரம். இது வெறும் டேட்டா பேஸ்தான். ‘இத்தனை பேர் இருக்காங்க’ என்ற தற்காப்புக்காகத்தான்.’’

‘‘ இப்பவெல்லாம் விஜய் படம் ரிலீஸ் ஆகும்போது உங்க படமும் ரிலீஸ் ஆகுது. அவரோட ரசிகர் மன்ற தலைவரா இருந்தவர் இப்ப உங்கள்ட்ட இருக்கார். இவை, நீங்களும் விஜய்யும் எதிரும்புதிருமா இருக்கிறமாதிரியான ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கே?’’

‘‘நான் விஜய்யை ஒரு ரசிகனா பார்த்து வளர்ந்திருக்கேன். என் அண்ணனும் விஜய்யும் நல்ல நண்பர்கள். நான் நடிக்க வராத அந்தச் சமயத்தில், ‘விஜய் நீங்க ஆன்ட்டி ஹீரோ பண்ணினா சூப்பரா இருக்கும்’னு சொல்லியிருக்கேன். ‘இப்படி பண்ணினா நல்லா இருக்கும்னு உள்ளுக்குள்ள எப்ப, எந்தக் கதை ஓடினாலும் அந்தக் கதையில் விஜய்தான் இருப்பார். நான் டைரக்ட் பண்ணினால், அவர்தான் என் ஹீரோனு சில பேட்டிகள்லகூட சொல்லியிருக்கேன்.

இதையெல்லாம் கடந்து போட்டி நிறைந்த இந்தக் காலகட்டத்துல நம் படத்தை சோலோ ரிலீஸ் பண்ணமுடியாது. அந்த டைம்ல எங்க படங்கள் கிளாஸ் ஆகியிருக்கும். அதேபோல அவரின் ரசிகர் மன்றத் தலைவரை நான் இழுக்கலை. அந்தச் சமயத்தில் அவர் அங்க வேலையைவிட்டு வந்திருந்தார். அந்த டைம்ல என் ரசிகர் மன்ற நிர்வாகம் சரியா செயல்படாததால சில நீக்கங்கள் இருந்துச்சு. எனக்கு ஒரு நிர்வாகி தேவைனு வந்தப்ப அவர் வந்து வேலை செய்கிறார். மற்றபடி ரசிகர்களை இழுக்கும் வேலையெல்லாம் எதுவும் இல்லை.’’

‘‘இன்றைய அரசியல் சூழல் எப்படி இருக்கு?’’

‘‘பேப்பர்ல முதல் பக்கம் மாநில அரசுக்கு 1500 கோடி கடன்னு இருக்கு. அப்படியே கீழ, சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்ட் குத்தகை 5 வருஷத்துக்கு முன்னாடியே முடிஞ்சிடுச்சு. அரசுக்கு டிஎன்சிசிட்ட இருந்து பல கோடி வரவேண்டி இருக்குனு போட்டு இருக்கு. அப்படியே மூணாவது பக்கம் திருப்பினா, எம்.எல்.ஏ-க்களின் சம்பளம் டபுள் ஆகி இருக்குனு செய்தி. அடுத்து ஹைட்ரோ கார்பன் தொடங்கி நீட் வரை மத்திய அரசு பண்றது எல்லாமே தமிழகத்துக்கு எதிராதான் இருக்கு.

இந்தியாவில் உள்ள மொத்த விவசாயக்கடன் 74 ஆயிரம் கோடி. ஆனால் கார்ப்பரேட் லோன் ஒன்றரை லட்சம் கோடியைத் தள்ளுபடி பண்றாங்க. அவங்களோட நாலு லட்சம் கோடி வரியைத் தள்ளுபடி பண்ணியிருக்காங்க. ஆனால் விவசாயிகள் கடனைத் தள்ளுபடி பண்ண மறுக்கிறாங்க. ஆனால் அவங்க ஆளுற,, உத்தரப்பிரதேம், மகாராஷ்டிரத்துல ஒரே அறிவிப்புல விவசாயக் கடனைத் தள்ளுபடி பண்ணியிருக்காங்க.

‘துப்பறிவாளன்’ ஷூட்டிங் ஸ்பாட்ல ஆண்ட்ரியாவின் ஆசிஸ்டென்ட், குடைபிடிக்கிறவர். ‘எந்த ஊர்’னு பேசிட்டு இருந்தேன். திருச்சி மாவட்டத்துக்காரர். 5 ஏக்கர் நிலம் வெச்சிருக்கார். தண்ணி இல்லை. போர் போட காசில்லை. அதான் குடைபிடிக்க வந்திருக்கேன்’னு சொன்னார். இப்படி எத்தனை விவசாயிங்க எங்கெங்க போயிருக்காங்கனு யாருக்குத் தெரியும்?’’

‘‘நீட் தேர்வுக்கு எதிராக அனிதாவின் தற்கொலை உங்களை எந்தளவுக்குப் பாதிச்சது?’’
‘‘அந்த முடிவு எடுத்த நேரத்துல அவள் எவ்வளவு வலியோட இருந்திருப்பாள்னு நினைச்சா அவ்வளவு வேதனையா இருக்கு. ‘இதுதானா சமுதாயம். அப்ப என்னைமாதிரியான ஆட்கள் டாக்டரருக்குப் படிக்கிற கனவு இனி காணவே முடியாதா?’னு யோசிச்சிருப்பாளா? அனிதாவின் இடத்திலிருந்து யோசிச்சுப்பார்த்தாதான் அவளோட வலியை உணர முடியும்.

அனிதா மாதிரியான குழந்தைகளைக் கனவு காணச்சொன்ன அப்துல்கலாமை இந்த அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்திட்டாங்க, மத்திய, மாநில அரசியல்வாதிகள். இனி யாரும் அந்த மேதாவிக்கு மாலைபோடக் கூடாது, அஞ்சலி செலுத்தக் கூடாது. அந்த அருகதை இவங்க யாருக்கும் கிடையாது.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு