Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`` ஆர்ட் டைரக்டர் ஜி.கே-வுக்கு `நோ' சொல்லத் தெரியாது!'' - இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா உருக்கம்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநர் ஜி.கே. வெள்ளை நிற உடையும் சிரிப்பும் அவரது வசீகரத் தோற்றத்தின் அடையாளங்கள். கோடம்பாக்கத்தில் நூற்றுக்கும்  மேற்பட்ட படங்களில் வேலைபார்த்த ஜி.கே., சமீபகாலமாக தொலைக்காட்சித் தொடர்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தார். கடந்த 14-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் ஜி.கேஅனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல், 20-ம்தேதி அன்று  இறந்துவிட்டார். தனது 60-வது வயதில் காலமான ஆர்ட் டைரக்டர் ஜி.கே-வுக்கு நாகேஸ்வரி என்கிற மனைவியும், கிருஷ்ணா என்கிற மகனும், ஹேமச்சந்திரா என்கிற மகளும் உள்ளனர். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும் கோபிகிருஷ்ணா என்கிற ஜி.கே-வும் அசப்பில் ஒரே மாதிரியான தோற்றம்கொண்டவர்கள்.  இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் ஜி.கே மறைவு குறித்துப் பேசினோம்.

``என்னையும் அவரையும் ஒன்றாகப் பார்ப்பவர்கள் இருவரையும் அண்ணன் - தம்பி என்றே சொல்வார்கள். ஜி,கேஒரே மாதிரியான உயரம், சிரிப்பு, குணாதிசயம்  என இருவருக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. நான் சினிமாவுக்கு வந்து நிறைய படங்களை இயக்கியிருக்கிறேன். நிறைய ஆர்ட் டைரக்டர்களோடு சேர்ந்து வேலை பார்த்திருக்கிறேன். அப்படி ஜி.கே-வுடன் `பாபா' படத்தில் பணிபுரிந்ததை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது.

இமயத்தில் இருக்கும் பனிமலையின் பின்புலத்தில் பாபாஜி பெரிய  ஆலமரத்தில் அமர்ந்து இருப்பது போன்று  ஒரு காட்சி எடுக்க வேண்டும். இமயமலையில் ஷூட்டிங் செய்ய முடியாது. ஆகையால், அதேபோன்று பனிப்பொழிவுகொண்ட சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையின் பின்புலத்தில் அந்தக் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டோம். ரஜினி சார், ஜி.கே., நான் உள்பட அந்தக் காட்சியில் இடம்பெறும் நடிகர்களோடு சுவிட்சர்லாந்துக்குச் சென்றோம்.

இமயமலை போன்று லொகேஷன் இருக்கிறது. அங்கே ஆலமரம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. நான்  மிகுந்த யோசனையோடு `என்ன செய்வது ஜி.கே?' என்று கேட்டேன். அவரது முகத்தில் கொஞ்சம்கூட சலனமில்லை `நோ ப்ராப்ளம், ரெடி பண்ணிடலாம் சார்' என்று கூலாகச் சொன்னார். அதன் பிறகு சென்னைக்கு போன்செய்து விமானம் மூலம் சின்னச் சின்ன ஃபைபர்களை சுவிட்சர்லாந்துக்கு வரவழைத்தார். சென்னையிலிருந்து ஆள்கள் யாரையும் அழைத்துச் செல்லவில்லை. சுவிட்சர்லாந்தில் உள்ள இருவரை மட்டும் துணைக்கு வைத்துக்கொண்டு அச்சுஅசலாக ஆலமரத்தை உருவாக்கினார். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ரஜினி சார், ஆலமர செட்டைப் பார்த்துவிட்டு ஸ்தம்பித்துவிட்டார். அருகில் இருந்த ஜி.கே-வைக் கட்டியணைத்து பாராட்டினார்.

அடுத்து படப்பிடிப்பு சென்னை கிண்டி கேம்பகோலாவில் நடந்தது. `பாபா'வில் நட்சத்திரப் பட்டாளம் ஏராளம். ஆனால் அவர்கள் மேக்கப் போடுவதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ, பாத்ரூம் செல்வதற்கோ ஓர் இடம்கூட கிடையாது. எனக்குள் குழப்பம் ஏற்பட, மீண்டும் ஜி.கே-விடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அப்போதும்  `கவலையேபடாதீங்க சார்...' என்று சிரித்த முகத்தோடு சொன்ன ஜி.கே, சென்னை துறைமுகத்திலிருந்து இருபது கன்டெய்னர்களை கேம்பகோலாவுக்கு வரவழைத்தார். அதற்குள்ளேயே மேக்கப் அறை, ஓய்வு அறை, பாத்ரூம்  போன்றவற்றை உருவாக்கினார். அனைத்து கன்டெய்னர்களிலும் ஏ.சி-யை அமைத்தார்.

பாபாவின் வீடு உள்ளே வெளியே, மேம்பாலம் என அனைத்துக்கும்  செட் போட்டார். காளிகாம்பாள் கோயில் செட் போடும் திட்டம் உருவானது. சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்ற ஜி.கே., அங்கு உள்ள ஒவ்வோர் இடத்தையும் போட்டோ எடுத்துக்கொண்டார். `பாபா' படப்பிடிப்புத் தளத்துக்கு வந்தவர்,  அப்படியே ஜெராக்ஸ் செய்ததுபோல் அசத்தலான  காளிகாம்பாள் கோயில் செட் போட்டு எங்களை பிரமிக்கவைத்தார்.

சென்னை காளிகாம்பாள் கோயிலில் இருக்கும் அறங்காவலர்கள், பூசாரிகள் அனைவரும் `பாபா' படத்துக்காகப் போடப்பட்ட செட்டைப் பார்க்க வந்தனர். ஒவ்வோர் இடமும் தத்ரூபமாக இருப்பதைப் பார்த்துப் பார்த்து வியந்தனர். அதுமட்டுமல்ல, `காளிகாம்பாள் கோயில் செட்டுக்குள் நுழையும்போது, உண்மையான கோயிலுக்குள் நுழையும்போது ஏற்படும் உணர்வு எழுந்தது' என்று ஜி.கே-வை மனதாரா பாராட்டினார்கள்.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தைத் தொட்ட அசாத்திய திறமைசாலி ஜி.கே. `ஓகே சார்', முடிச்சுடலாம் சார்' என்று ஜி.கே-வுக்கு `நோ' சொல்லத் தெரியாது. அதனால்தான் கடவுள் அழைத்தபோதும் ‘நோ’ சொல்லாமல் சென்றுவிட்டார் என நினைக்கிறேன்’' என்று கண் கலங்கினார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்