Published:Updated:

"அண்ணன்டா... தம்பிங்கடா... பாசம்டா!" - 'ஜெய் லவ குசா' படம் எப்படி?

கார்க்கிபவா
பா.ஜான்ஸன்
"அண்ணன்டா... தம்பிங்கடா... பாசம்டா!" - 'ஜெய் லவ குசா' படம் எப்படி?
"அண்ணன்டா... தம்பிங்கடா... பாசம்டா!" - 'ஜெய் லவ குசா' படம் எப்படி?

ஜெய் லவ குசா என்றதும் ஜூனியர் என்.டி.ஆரும் அந்தக் காலத்துக்கு போய் விட்டாரா என நினைக்க வேண்டாம். ஜெய், லவ குமார், குசா ஆகிய மூன்று பேரின் "அண்ணன்டா... தம்பிங்கடா" கதைதான். 

படம் தொடங்கியதுமே மசாலே நெடி வீசத் தொடங்குகிறது. ”எங்கடா அந்த ராவணன்” என ஒரு பங்களாவுக்குள் துப்பாக்கியுடன் கும்பல் நுழைந்து, அவர் இல்லை என்ற கோவத்தில் ஹரீஷ் உத்தமனை கொன்றுவிட்டுச் செல்கிறது. 

அடுத்தக் காட்சியில் பின்னணியில் கலர் கோலப் பொடிகள் பறக்க கோலாகலமாக தவ்விக் கொண்டு அறிமுகமாகிறார் குசா (ஜூனியர் என்.டி.ஆர்). அமெரிக்கா செல்லும் கனவை நிறைவேற்ற பணத்தைத் திருடிச் சேர்த்து, அமெரிக்காவில் டாலர் டாலராக கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை, கனவு எல்லாம். எதிர்பாராத ஒரு தருணத்தில் அவரின் சகோதரர் லவ குமாரை சந்திக்கிறார் (இவரும் ஜுனியர் என்.டி.ஆர்தான்). பேங்க் மேனேஜர் ஆன லவாவுக்கு காதல் பிரச்னையும், பணப்பிரச்னையும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்கிறார் குசா. ”உன் இடத்திலிருந்து பேங்க் பிரச்னையை நான் சரிசெய்கிறேன், நீ உன் காதல் பிரச்னையைப் பார்” என ஆள்மாறாட்டம் செய்கிறார்கள் இருவரும். பணத்தை லவாவும், பெண்ணை குசாவும் கைப்பற்றிவிடும் தருணத்தில் வருகிறது மிகப்பெரிய பூதாகர பிரச்னை.

அந்தப் பிரச்னை பற்றி தெரிந்துகொள்ள, பங்களா காட்சிக்கு முன்னால் சொல்லப்பட்ட கதையை அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும். சிறுவயதில் ஜெய், லவ குமார், குசா மூவரும் தாய்மாமன் போசானி கிருஷ்ணாவுடன் இணைந்து ஊர் ஊராக சென்று நாடகம் போடுவார்கள். லவ, குசா போல ஜெய்க்கு நாடகத்தில் கதாபாத்திரம் வழங்கப்படாது. காரணம் அவருக்கு திக்குவாய். அதனாலேயே பல நிராகரிப்புகளையும் அவமானங்களையும் சந்திப்பார். ஒரு கட்டத்தில், நாடக மேடையில் தீ விபத்தை ஏற்படுத்திவிட்டு ஊரைவிட்டே சென்றுவிடுகிறார் ஜெய். இப்போது லவ, குசாவுக்கு பிரச்னை வருவது அந்த ஜெய் மூலம்தான்.  லவ, குசாவுக்கு என்ன ஆகிறது, பிரிந்த சகோதரர்கள் ஒன்றிணைந்தார்களா என்பதை நிறைய சென்டிமென்ட் கலந்து கண்கலங்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாபி என்கிற ரவிந்திரா.

மூன்று கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மேனரிசம். போதாதா? இறங்கி வெளுத்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். திக்கிக் கொண்டே மிரட்டும் ஜெய், அமைதியான நல்லவராக லவ குமாரைவிட கவர்வது குசாதான். அந்தத் துள்ளல் உடல்மொழியும், கேர்லெஸ் ஆட்டிட்யூடும் அசால்ட்டாக வருகிறது யங் டைகருக்கு. அதிகப்படியான காட்சிகள் ஜூனியர் என்.டி.ஆருக்கு மட்டும்தான் என்பதால் கதாநாயகிகள் ராஷி கண்ணா, நிவேதா தாமஸுக்கு விளம்பர இடைவேளை வேலைதான். வழக்கமான தெலுங்கு வில்லன்கள் போரடித்திவிட்டதாலோ என்னவோ இந்த முறை இந்தி சீரியல் நடிகர் ரோனித் ராயை வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் வழக்கம் போல க்ளைமக்ஸ் சண்டைக்காட்சிக்கு வழி செய்கிறார். 

"அசுர்ர்ர்ர அசுர்ர்ர்ர ராவாணாசுர்ர்ரா" பி.ஜி.எம் மட்டுமே தேவி ஸ்ரீபிரசாத். மற்றவை எல்லாம் முந்தையப் படங்களின் ரீமிக்ஸ். ஆர்யா 2வில் ரிங்க ரிங்கா, ஜனதா கேராஜில் பக்கா லோக்கல் இரண்டையும் கலந்து கட்டி ஸ்விங் ஸரா பாட்டை வழங்கியிருக்கிறார். அதற்கு தமன்னாவின் ஆட்டம் ஆசம் ஆசம். சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு நிறையவே உழைத்திருக்கிறது. குறிப்பாக மூன்று பேரும் தோன்றும் நாடக மேடைக் காட்சிகளில் கிராஃபிக்ஸ் டீமும், சோட்டாவும் கொடுத்திருக்கும் உழைப்பு பிரமிப்பு.

படத்தின் இடையிடையில் வரும் ஆள் மாறாட்ட ஐடியாக்கள் நன்றாக இருந்தாலும், ஒரு கட்டத்துக்கு மேல்  நாடகத்தனமாகி "அண்ணன்டா, தம்பிங்கடா... அம்மாக்கு செஞ்சு குடுத்த சத்தியம்டா" என சீரியல் டைப்பில் போவது அதுவரை படம் தேக்கி வைத்திருந்த ஜாலி மூடை காலியாக்குகிறது. ஜூனியர் என்.டி.ஆருக்கு நடிப்பு, நடனம், காமெடி, எமோஷன், சட்டில் ஆன ஆக்டிங் என எல்லாமே வரும் என ஒரே படத்தில் நிரூபிக்க மட்டுமே உதவியிருக்கிறது ஜெய் லவ குசா. 

பருப்புப் பொடி இல்லாத ஆந்திரா மீல்ஸ் சாப்பிடச் சொன்னால் எப்படி பாஸ்?