Published:Updated:

``த்ரிஷா பற்றிய கேள்விகளை மீடியா தவிர்க்கணும்" - ராணா

``த்ரிஷா பற்றிய கேள்விகளை மீடியா தவிர்க்கணும்" -  ராணா
``த்ரிஷா பற்றிய கேள்விகளை மீடியா தவிர்க்கணும்" - ராணா

ராணாவின் பெருமையைச் சொல்ல, `பாகுபலி’ பல்வாள்தேவன் கதாபாத்திரம் ஒன்று போதும். `நான் ஆணையிட்டால்’ என்று கேட்டபடி தமிழில் ஹீரோவாகக் களமிறங்கி இருக்கிறார். இந்த வில்லன் டு ஹீரோ பயணம்குறித்து ராணாவிடம் பேசினேன்...

``நான் பிறக்கும்போதே என் வீடு நிறைய நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இருந்தாங்க. வீட்டிலேயே போஸ்ட் புரொடக்‌ஷன் லேப் இருக்கு. நான் நடிகனா ஆகலைன்னாலும் ஒரு சினிமா டெக்னீஷியனா நிச்சயமா மாறியிருப்பேன். நான் சினிமாவுல இருக்கிறதைத்தான் வீட்டுலயும் விரும்புறாங்க. வாழ்க்கை, கலர்ஃபுல்லா போயிட்டிருக்கு.” 

`` `பாகுபலி பார்ட்-3' வருமா?''

``பார்ட்-3 வருமா... வராதாங்கிற சந்தேகம் எனக்கும் இருக்கு. `பாகுபலி' மக்கள்கிட்ட சென்றடைந்த விதத்தைப் பார்க்கும்போது `பாகுபலி உலகம்' என்னைக்குமே அழியாதுனு நினைக்கிறேன். சினிமா மட்டுமே வரலாற்றுக் கதை சொல்றதுக்கான ஒரே வழி இல்லை. அது காமிக்ஸ், விளம்பரம், கதைகள், அனிமேஷன் புத்தகங்கள் இப்படியான பல வடிவங்கள்ல மக்கள்கிட்ட எப்போதுமே வாழும். அது போதாதா ஒரு நடிகனுக்கு?"

`` `பாகுபலி'க்கு அப்புறம் ராணாவை எல்லாரும் எப்படிப் பார்க்கிறாங்க?"

``எந்த ஒரு நடிகனுக்கும் கிடைக்காத பெருமை எனக்குக் கிடைச்சிருக்கு. நாளைக்கே மகாபாரதம் மாதிரியான புராணக் கதைகளைப் படமா எடுக்கிறதுன்னா, இயக்குநர்கள் என்னை தயக்கமில்லாம அணுகுவாங்க. அதுதான் `பாகுபலி' மூலமா எனக்குக் கிடைத்த வெற்றி."

`` `வில்லன் - ஹீரோ'... இனி எதுல நீங்க அதிகமா கவனம் செலுத்தப்போறீங்க?"

``நான் ஒரு நடிகன். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நல்லா நடிக்கணும். தெலுங்குல ஹீரோவா அறிமுகமானேன். இந்தியில் கேரக்டர் ரோல் பண்ணேன்; வில்லனாவும் நடிச்சேன். இப்ப திரும்பவும் ஹீரோவா பண்றேன். ஒரு நடிகன்கிட்ட வெளிப்படைத்தன்மை இல்லைன்னா அவங்களால எதுவுமே சாதிக்க முடியாது. என்கிட்ட அந்த வெளிப்படைத்தன்மை இருக்கு. எந்த மாதிரியான ரோல்லயும் நடிக்கத் தயாரா இருக்கேன். நான் விரும்புறது நடிப்பைத்தான்; கேரக்டரை அல்ல."

``வரலாறு சம்பந்தமான கதைகள்ல நடிக்கிறதுக்கு எப்படித் தயாராகுறீங்க?"

``ஒவ்வொரு கதைக்களத்தையும்  நல்லா புரிஞ்சுக்கணும். நம்ம ஏதோ ஒரு வகையில அந்தக் கதையோடு தொடர்புடையவங்களா இருப்போம். வரலாற்றுக் கதாபாத்திரங்கள்ல நடிக்கும் அனுபவம் முழுக்க முழுக்க நம்மளோட கற்பனைத்திறன் சம்பந்தப்பட்டது. அதுக்காக நாம தயாராகணும்னு அவசியமில்லை. நடிப்புத்திறனை முழுமையா வெளிப்படுத்தினாலே போதும்."

“தெலுங்கு ரசிகர்கள் தமிழைவிட கொஞ்சம் மசாலா தூக்கலா இருக்கணும்னு நினைப்பாங்க. `நான் ஆணையிட்டால்' எப்படி இருக்கும்?”

``தமிழ் - தெலுங்குனு சினிமா ரசிகர்களைப் பிரிச்சுப் பார்க்கக் கூடாது. `தென்னிந்திய சினிமா'னு ஒட்டுமொத்தமா அடையாளம் காணலாம்கிறது என்னுடைய விருப்பம். கதைக்களம் `காரைக்குடி'. தெலுங்கு மக்களுக்கு காரைக்குடியைப் பற்றி ஒண்ணுமே தெரியாது. ஆனா, அங்கே படம் ரிலீஸ் ஆகியிருக்கு. அவங்க எல்லாரும் பார்த்துட்டிருக்காங்க. ஏன்னா, நம்மளோட கலாசாரம் ஒண்ணுதான்."

``இதில் காஜல் அகர்வால், கேத்ரீன் தெரசானு இரண்டு ஹீரோயின்கள். அவங்களுக்கான கேரக்டர் எப்படி இருக்கும்?”

``காஜலுக்கு, குடும்பப் பாங்கான கேரக்டர்; என் மனைவியா நடிச்சிருக்காங்க. கணவனை மீறி எதையும் யோசிக்கக்கூட மாட்டாங்க. ஆனா கேத்ரீன், அல்ட்ரா மாடர்ன் பெண். அவங்க மது அருந்துவாங்க; சிகரெட் பிடிப்பாங்க. எனக்கும் அவங்களுக்கும் தவறான தொடர்பு இருக்கிறதா மத்தவங்க புரிஞ்சுக்கிற மாதிரி கதை போகும். ஆனா, அது இல்லைங்கிறது அப்புறம்தான் தெரியவரும்.”

``அடுத்தடுத்து என்னென்ன படங்கள்ல நடிக்கிறீங்க?"

`` `மடை திறந்து.' இது, 1945-ல் நடக்கும் கதை. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த செட்டியார் இனத்தைச் சேர்ந்த ஒரு சிப்பாய் பற்றிய கதை. அந்த ராணுவ வீரர் வாழ்க்கையில ஏற்படுற காதல் கதையை, போர் பின்னணியில் சொல்லியிருக்கோம். இந்த மாதிரியான வரலாற்றுக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்போம், படிச்சிருப்போம். ஆனால், பார்த்திருக்க மாட்டோம். சினிமா மூலமா அந்தக் காலத்தை மறுபடியும் உருவாக்கும் முயற்சிதான் இந்த ‘மடை திறந்து'.”

``த்ரிஷா உடனான காதல் என்னாச்சு?”

`` `காதலிக்கிறாங்க. நிச்சயதார்த்தம் ஆகிடுச்சு...’னு ஏகப்பட்ட செய்திகள். (கோபப்படுகிறார்) கடைசி மூணு வருஷத்துல ஆறு படங்கள் நடிச்சுட்டேன். குறிப்பா, இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த `பாகுபலி' பண்ணியிருக்கேன். இதுதவிர, பல சினிமா நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளரா இருந்திருக்கேன். சொந்தமா ஒரு சினிமா நிறுவனம் வெச்சிருக்கேன். இப்படி ஏகப்பட்ட வேலைகள்ல பரபரப்பா இருக்கேன். இந்தப் பரபரப்புல மீடியா கேட்கிற த்ரிஷாவுக்கும் எனக்குமான தொடர்பு பற்றி நானும் கவலைப்படலை; மக்களும் கவலைப்படலை. அவ்வளவு ஏன், த்ரிஷாவே கவலைப்படலை. இப்படியான கேள்விகளை மீடியா தவிர்க்கணும்.” 

அடுத்த கட்டுரைக்கு