Published:Updated:

கமல், அஜித், விக்ரம் என சொல்லியடித்த சரணா இது?! - 'ஆயிரத்தில் இருவர்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
கமல், அஜித், விக்ரம் என சொல்லியடித்த சரணா இது?! - 'ஆயிரத்தில் இருவர்' விமர்சனம்
கமல், அஜித், விக்ரம் என சொல்லியடித்த சரணா இது?! - 'ஆயிரத்தில் இருவர்' விமர்சனம்

ஏரியாவில் வாழ்ந்து கெட்டவர்களை 'ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்' என சலித்துக்கொள்வோமே, அப்படித்தான் இயக்குநர் சரண் பற்றியும் சொல்லவைக்கிறது அவர் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் இருவர்' படம். 

செவத்தக்காளை, செந்தட்டிக்காளை என்ற இரட்டையர்கள் எதற்கெடுத்தாலும் "ஏல செந்தட்டி... ஏல செவத்த" எனத் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ரகம். சின்ன வயதில் குடும்பப் பகையால் ஏற்படும் ஒரு குழப்பத்தில் செந்தட்டிக் காளை வீட்டைவிட்டு ஓடி ஹைதராபாத்தில் தஞ்சமடைகிறார். அவர் இறந்துவிட்டாரென மொத்தக் குடும்பமும் நம்புகிறது. மற்றொரு பக்கம், அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தன் சுவிஸ் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை தன் மகளின் உடம்பில் பச்சை குத்தி (க்யூ ஆர் கோட் உட்பட) வைக்க அந்தப் பெண் காணாமல் போகிறார். இன்னொரு பக்கம், தன் அப்பாவின் சாவிற்கு செவத்தக் காளைதான் காரணம் என நினைக்கும் ரவுடி தன் கும்பலோடு ஹீரோவைத் தேடி அலைகிறார். மற்றொரு பக்கத்தில் நான்கு பேர் ஒரு படம் பார்க்க திரையரங்கிற்கு வந்து வசமாக மாட்டிக்கொள்கிறார்கள். (வேற யாரு, நாங்கதேன்!)

ஹீரோவாக இரட்டை வேடத்தில் வினய். கடைசியாக ஹிட் கொடுத்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது என்ற குறையை கடந்தவாரம் வந்த துப்பறிவாளன்தான் போக்கியது. அதற்குள் கண் திருஷ்டி. அதுவும் திருநெல்வேலி பாஷை பேசுகிறேன் என 'ஏல அல்வால டேஸ்ட்டுல கம்மில' என வார்த்தைக்கு வார்த்தை 'ல' போட்டுப் பேசி அந்த வட்டார மொழியை வதைக்கிறார். டிம் மோரியார்டியாக போன வாரம் மிரட்டிய வினய்க்கு இதில் பெரிதாக வேலையே இல்லை. சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என பேரைப் போலவே அழகான ஹீரோயின்கள். ஹீரோவைப் பார்க்கிறார்கள், காதலில் விழுகிறார்கள், பாட்டுப் பாடுகிறார்கள், க்ளைமேக்ஸில் சிரிக்கிறார்கள். தட்ஸ் ஆல். பிரதீப் ராவத், இளவரசு, அருள்தாஸ், ஶ்ரீஜித் ரவி என எக்கச்சக்க திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள்... ம்ம்ம் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் மயில்சாமியும் அருள்தாஸோடு வரும் ரவுடியும் சிரிக்க வைக்கிறார்கள். மற்றபடி காமெடிக்கும் பஞ்சம்தான். ஒருவேளை நீங்கள் படம் பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் அருள்தாஸ் - காஜல் ஜோடிக்கு வைத்திருக்கும் காதல் எப்பிசோடு வரை பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நிச்சயம் ஜென் நிலைக்கு சென்றிருப்பீர்கள். அடுத்து எதைக் காட்டினாலும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை வந்துவிடும். 

இரட்டை சகோதரர்கள், அதில் ஒருவர் சின்ன வயதிலேயே தொலைந்து போகிறார், அதற்குக் காரணமானவர்களை பழிவாங்க ஆள்மாறாட்டம் செய்கிறார் - யெஸ், அதே 'அட்டகாசம்' கதைதான். ஆனால் சரண் ஆக்‌ஷன் படமாக எடுக்க நினைத்து, ரொமான்ஸ் கதையாக எழுதி காமெடி படமாக எடுத்திருப்பதால்... திரைக்கதை அநியாயத்திற்கு குழப்பியடிக்கிறது. அதனால் பாவம் எடிட்டர் கெவினும் இருக்கும் காட்சிகளை தொகுத்து படமாக்கியிருக்கிறார். அதனாலேயே படத்தில் இரண்டு வினய் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளவே நேரம்பிடிக்கிறது. படத்தில் இதுவரை பார்க்காத புதிய விஷயம் என்றால் சண்டைக்காட்சிகள்தான். ரெண்டு வினயும் தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு கண்களைக் கட்டிக் கொண்டு சண்டை போடும் அதிசயமான சண்டைக் காட்சிகளை இதற்கு முன்பு பார்த்ததுண்டா யுவன் ஹானர்? என்னதான் அஜித் உங்கள் நண்பராக இருந்தாலும், "உங்க தல கழுத்த பாத்துப் பேசுறவரு இல்லடி, கண்ணப் பாத்து பேசுறவரு" போன்ற அஜித் ரெஃபரன்ஸ் வசனங்கள் எல்லாம் அவசியம் வைத்திருக்க வேண்டுமா?

சரண் - பரத்வாஜ் இணை ஒரு காலத்தில் இளசுகளின் ஹார்ட்பீட்டாக பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் ஈர்க்க மறுக்கின்றன. அதிலும் "மாங்கா பீஸுல இந்த மாங்கா பீஸுல மொளகாப் பொடி முத்தத்தால் கலகம் செஞ்சுபுட்ட" பாடல் எல்லாம் ஏலியன் லெவல். 2012-ல் "செந்தட்டிகாளை செவத்தகாளை"யாகத் தொடங்கப்பட்ட படம் 2017ல் "ஆயிரத்தில் இருவர்" ஆக வெளியாகியிருக்கிறது. இந்த ஐந்தாண்டுகளில் தமிழ் சினிமா இசை நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிவிட்டது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காகக் கூட அந்த "ஏலேய்ய்ய்ய்" பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது பரத்வாஜ். ஒளிப்பதிவு ஒன்றிரண்டு காட்சிகளில் பளிச். படத்தில் ஒரு வினய் வெளிநாட்டுக்கு செல்வதாக காட்டப்படும் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு கேமிராவில் ஒளிப்பதிவு செய்து பிக்ஸல் உடைந்து புள்ளியடிக்கிறது. 

இருட்டுக்கடை அல்வா போல ஹீரோயினின் அம்மா வெளிச்சக்கடை அல்வா செய்பவர் என யோசித்த அளவுக்காவது வசனத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வாட்ஸ் அப் ஃபார்வேர்டு பாணியில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்... 

'என்னண்ணே இப்படி கொலைப் பட்டினியா கிடக்கீங்க?'

'கொலை பண்ணத்தான் இப்படி பட்டினியா கிடக்கேன்டா' என வில்லனும் அடியாளும் பேசிக்கொள்ளும் இந்த டயலாக் ஒரு சோறு பதம். 

கமல், அஜித், விக்ரம் என டாப் ஸ்டார்களை வைத்து சொல்லியடித்த சரணுக்கு இது சொல்லிக்கொள்ளும்படியான படம் இல்லை. பழைய ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க ப்ரோ!