Published:Updated:

‘விவேக’த்துக்கு முன்னோடி இந்த ‘காவியம்’! - வல்லதேசம் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
‘விவேக’த்துக்கு முன்னோடி இந்த ‘காவியம்’! -   வல்லதேசம் விமர்சனம்
‘விவேக’த்துக்கு முன்னோடி இந்த ‘காவியம்’! - வல்லதேசம் விமர்சனம்

`அணு அளவும் பயமில்லை' அனு நாயகியாக நடித்து வெளியாகியிருக்கும் படம் `வல்லதேசம்'. ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம்,  இதேபோன்று ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட வேறொரு படத்தையும் நினைவுபடுத்துகிறது. ஆமா நண்பா... `விவேகமே'தான்.

பல்கேரியாவில் மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட `விவேகம்' படத்துக்கும், லன்டனில் எடுக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ரிலீஸாகாமல் இருந்த `வல்லதேசம்' படத்துக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. வெறியேறாமல் படிக்கவும் நண்பா.

இரண்டு படங்களின் முக்கியமான கதாபாத்திரங்களும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள். அதில் அஜித் கவுன்டர் டெரரிஸ்ட் ஸ்குவாடில் ஏஜென்டாக இருப்பார். இதில் அனு `என்.எஸ்.எஸ்' வீராங்கனையாக இருக்கிறார். என்.எஸ்.எஸ் என்றதும் பள்ளி, கல்லூரிகளில் சாயங்கால நேரத்தில் கிரவுண்டை சுற்றி ஓடிக்கொண்டிருப்பார்களே... `நேஷனல் சர்வீஸ் ஸ்கீம்', அவர்கள் என நினைத்துவிடாதீர்கள். இங்கே என்.எஸ்.எஸ் என்றால் நேஷனல் செக்யூரிட்டி சர்வீஸ்!  

இரண்டு படங்களிலும் வில்லன் வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவை அழிக்கவே முயற்சிக்கிறார்கள். ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் கதாபாத்திரம் உள்ளது. ஹேக்கிங், ட்ராப்பிங், மானிட்டரிங் போன்ற ஐயிட்டங்களும் இரு படங்களிலும் இருக்கின்றன. இந்த இடத்தில், `விவேகம்' முன்பே `வல்லதேசம்' தயாராகிவிட்டது என்பதை கூறிக்கொண்டு... 

உலகின் மோஸ்ட் வான்டட் கிரிமினல் டேவிட். `பில்லா' டேவிட் பில்லா மாதிரி எப்போதும் கோட் ஷூட், கூலர்ஸோடு திரியும் கூல் வில்லன்.  இந்தியாவின் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்த திட்டம் தீட்டுகிறான். சென்னையில் குண்டுவெடிப்பு நிகழ்த்த, அவனது ஆட்கள் பின்னி மில்லை உள் வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார்கள். அது என்.எஸ்.எஸ்-ன் மூத்த அதிகாரி நாசருக்கு தெரியவர, தனது டீமை அனுப்பி தீவிரவாதிகளை போட்டுத்தள்ளுகிறார். இவர்களின் மூளையாக செயல்படும் டேவிட்டை பிடிக்க, ஸ்பை ஒருவரையும் லண்டனுக்கு ஃப்ளைட் ஏற்றிவிடுகிறார். அந்த ஸ்பை டேவிட்டைப் பிடித்தாரா, அல்லது டேவிட் ஸ்பையின் கதையை முடித்தாரா என்பதே மீதிக்கதை.

நாயகியாக அனு ஹாசன். சிறப்பாக நடித்திருக்கிறார். நாசர் படம் முழுக்க ஒரே காஸ்ட்யூமில்தான் வருகிறார். ஆனாலும், நடிப்பு சிறப்பு. மற்ற நடிகர்களின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எல்லாமே நான் ஸின்க்கில் இருக்கிறது. `ட்ராலி ஃபார்வார்ட்' என்பதை கூட வசனமாக பேசியிருப்பார்கள் போல தெரிகிறது. இதுபோன்ற படங்களில் கணேஷ் வெங்கட்ராமை அதிகம் காணலாம். அவர் கால்ஷீட் கிடைக்காததாலோ என்னவோ அவரைப் போலவே வேறொருவரை புக் செய்திருக்கிறார்கள். அவருடைய கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்கும்போது நாலைந்து இடியாப்பத்தை கொசகொசவென பிசைந்து கையில் கொடுத்தது போலவே இருக்கிறது. ஒளிப்பதிவு பக்கா. இயக்குநர் என்.டி.நந்தாவே ஒளிப்பதிவையும் கையாண்டிருக்கிறார். சில காட்சிகள் உண்மையிலேயே ஹாலிவுட் படங்களைப் பார்த்தைப் போன்ற ஃபீல் தருகின்றன.

எடிட்டிருக்கு லண்டனை மிகவும் பிடித்துபோயிருக்கிறது. ஒளிப்பதிவாளரும் அதற்கேற்ப லண்டனின் அனைத்து பஞ்சாயத்து வார்டுகளிலும் ஹெலிகேமை பறக்கவிட, நடிகர்களைவிட லண்டனைத்தான் படம் முழுக்க வெட்டி ஒட்டியிருக்கிறார் படத்தொகுப்பாளர். எல்.வி.முத்துகுமாரசாமியின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது. `விவேகம்' மற்றும் `வல்லதேசம்' படங்களிடையே மேலும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளன. ஒன்று, இரண்டு படங்களின் பெயர்களுமே `V' என்ற எழுத்தில் ஆரம்பித்து `M' என்ற எழுத்தில் முடிகிறது. அடுத்தது, இரண்டு படங்களுக்கும் ஒரே ரிசல்ட்தான். லலலலலாலாலா சர்வைவா...

அப்படியே `ஆயிரத்தில் இருவர்' விமர்சனத்தையும் படிச்சு பயன் அடையுங்கள் மக்கா...