Published:Updated:

தெலுகுல கொண்டாடுறாங்க... இங்க திண்டாட வைக்கறாங்க... விளாசும் வித்யூலேகா

தெலுகுல கொண்டாடுறாங்க... இங்க திண்டாட வைக்கறாங்க... விளாசும் வித்யூலேகா
தெலுகுல கொண்டாடுறாங்க... இங்க திண்டாட வைக்கறாங்க... விளாசும் வித்யூலேகா

“என் பதிமூன்று வயசுல இருந்தே மேடை நாடகங்கள்ல நடிச்சுட்டு இருந்தேன். சில நாடகங்களை இயக்கியும் இருக்கேன். அதுலதான் எனக்கு ஆர்வமும்கூட. மற்றபடி சினிமாவில் நடிக்கிறதைப் பற்றி நான் யோசிச்சதே இல்லை. காலேஜ் முடிச்சுட்டு ஃபாரின் போய் மேடை நாடகங்கள் பற்றி படிச்சுட்டு இங்க வந்து நல்ல நாடகங்களை நடிச்சு இயக்கணும் என்பதுதான் என் திட்டம். சரியா அந்த நேரத்தில் கௌதம்மேனன் சாரின் அசிஸ்டென்ட் போன் பண்ணி, “சார் ஒரு படம் பண்றார். புதுமுகம் வேணும்னு கேட்கிறார். ஆடிஷனுக்கு வாங்க’னு சொன்னார். ‘ஃபாரின் போகலாம்னு பிளான் பண்ணியிருந்தோம். இப்ப நடிக்கக் கூப்பிடுறாங்களே, போகலமா, வேணாமா’னு ஒரு தயக்கம். ‘பெரிய டைரக்டர் கூப்பிடுறார். என்னனுதான் போய் பார்த்துட்டு வாயேன்’னு அப்பா சொன்னார். போனேன். எனக்கு மேடையில் நடிச்சுதான் அனுபவம். கேமரா முன் நடிச்சதே இல்லை. அதனால ஆடிஷன்ல சொதப்பினேன். 

வீட்டுக்கு வந்து, ‘கண்டிப்பா என்னை அவங்க செலக்ட் பண்ணமாட்டாங்கப்பா. நான் சரியாவே பண்ணலை’னு சொன்னேன். ‘மறுபடியும் முயற்சி பண்ணும்மா’னு அப்பாதான் என்னை என்கரேஜ் பண்ணினார். கௌதம் அசிஸ்டென்ட்டுக்கு போன் பண்ணி, ‘ஆடிஷன்ல நான் நடிச்ச ஃபுட்டேஜே கெளதம் சாருக்கு அனுப்பாதீங்க. மறுபடியும் பண்றேன்’னு அவங்களை ரெக்வெஸ்ட் பண்ணினேன். பிறகு நல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டுபோய் அந்த காட்சியை ஒரே டேக்ல நடிச்சேன். மூணு நிமிஷம் நடிச்சதை வெறும் 30 நொடிகள் மட்டுமே பாத்துட்டு என்னை நடிக்க ஓகே பண்ணினார் கெளதம் சார். இப்படித்தான் நான் சினிமாக்குள்ள வந்தேன்.” 'நீ தானே என் பொன்வசந்தம்' பட வாய்ப்பு எப்படி வந்தது என்பதைப்பற்றி இயல்பாக சொல்கிறார் வித்யூலேகா. கொஞ்சு தமிழ் நடிப்பும் இயல்பான உடல்மொழியும் இவரது ஸ்பெஷல். தமிழைவிட இப்போது தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இவர் சீனியர் நடிகர் மோகன்ராமின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

“நகைச்சுவை கேரக்டர்தான் நமக்கு பொருந்தும் என்பதில் உறுதியா இருக்கீங்களா?”
'நான் மேடை நாடகங்கள்ல நடிக்கும்போது லீட் ரோல், காமெடி, சென்டிமென்ட்னு எல்லா கேரக்டர்களுமே பண்ணுவேன். ஆனா, சினிமாவில் நான் காமெடியன்னு முடிவு பண்ணிட்டாங்க. அந்த சமயத்தில்தான், 'இனிமே இப்படித்தான்' படத்தில் சந்தானம் சார், சென்டிமென்ட் சீனில் நடிக்கச்சொன்னார். அந்த சீனில் நடிச்ச அஞ்சு நிமிஷம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாது. நிறைய பேர் பாராட்டினாங்க. என்னைப்பற்றி புரிஞ்சுக்க நல்ல வாய்ப்பை கொடுத்த சந்தானம் சார்க்கு நன்றி. டைரக்டர் பாலா சாரும் தன் படத்தில் சீரியஸான கேரக்டர்ல நடிக்க வாய்ப்பு தர்றேன்னு சொல்லியிருக்கார்.”

“முன்னணி நடிகர்களோட நடிச்ச அனுபவங்கள் சொல்லுங்க?”
'தமிழ்ல தல அஜித் சாருடன் ரெண்டு படம், தளபதி விஜய் சாருடன் ரெண்டு படம், தனுஷுடன் 'பவர்பண்டி', சூர்யாவுடன் 'மாசு'...னு நல்லநல்ல வாய்ப்புகள் அமைஞ்சுது. 'வேதாளம்' பட ஷூட்டில் ஒருமுறை அஜித் சார், 'உனக்கு பிரியாணி பிடிக்குமா'னு கேட்டார். நானும் பிடிக்கும்னு சொன்னேன். மறுநாள் அவரே பிரியாணி செஞ்சு கொண்டுவந்து கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணினார். உண்மையிலே அது செம அனுபவம். சந்தானம் சார் என் முதல் படத்துல இருந்து என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பார். இப்போ சார் ஹீரோவாகிட்டார். அவருக்கு ஆல் தி பெஸ்ட். தெலுங்கில் அல்லு அர்ஜுன், நானி, ரவி தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்னு எல்லாருமே சூப்பரான கேரக்டர்கள். அல்லு அர்ஜுனுடன்ன் நடிக்கும்போது நிறைய டிப்ஸ் கொடுப்பார், என்கரேஜ் பண்ணுவார்.”

“தெலுங்கு படங்களுக்கும் நீங்கதான் டப்பிங் பேசுறீங்க. தெலுங்கு எப்ப கத்துகிட்டீங்க?”
“தமிழ், தெலுங்கில் எடுத்த 'நீதானே என் பொன்வசந்தம்' படம் முடிஞ்சதும், ‘தெலுங்கு வெர்ஷனுக்கும் நீயே டப்பிங் பேசிடு’னு கௌதம் சார் சொன்னார். எனக்கு பயங்கர ஷாக். ஏன்னா எனக்கு தெலுங்குல ஒரு வார்த்தைகூட தெரியாது. அப்ப அவர், 'என்னை நம்பு. நீயே பண்ணாதான் அந்த கேரக்டருக்கு எனர்ஜி இருக்கும், இல்லைனா குரலுக்கும் நடிப்புக்கும் சம்மந்தமே இல்லாம போயிடும்’னு சொல்லி டப்பிங் சொல்லிக்கொடுத்து பேசவெச்சார். பிறகு நான் வாழ்க்கையில் பண்ணின முக்கியமான நல்ல விஷயம்னா, தெலுங்கு கத்துகிட்டதைத்தான் சொல்லுவேன். இப்ப நான் தெலுங்கு சினிமால பிஸியா இருக்கிறதுக்கும் அது ஒரு முக்கியமான காரணம். உண்மையை சொல்றேன், என்னை ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் கொண்டாடுறாங்க. நம் தமிழ் சினிமாவில் ஆண் காமெடியன்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை அவங்க எனக்கு தர்றாங்க. சொந்த குரலில் பேசுறது பெரிய பிளஸ். நான் பேசும் முறையை ரொம்ப விரும்புறாங்க.”

“அப்ப இனி தமிழ் சினிமாவுல அவ்வளவா கவனம் செலுத்தமாட்டீங்க?”
“அப்படி இல்லை. தெலிங்கில் பெண் காமெடியன்களுக்கு கொடுக்குற உற்சாகத்தை, முக்கியத்துவத்தை தமிழில் கொடுப்பது இல்லை. ஹீரோயின்களுக்கே முக்கியத்துவம் கொடுக்காத இவங்க பெண் காமெடியனுக்கா தரப்போறாங்க? தெலுங்கு சினிமாவில் ‘இந்த கேரக்டர் வித்யூலேகா தான்’னு ஸ்கிரிப்ட்லயே எழுதுறாங்க. ஆனா, தமிழ் படங்கள் அப்படி இல்லையேனு நினைக்கும்போதுதான் வருத்தமா இருக்கு. ஆனால் தமிழ்லயும் நல்ல வாய்ப்புகள் வந்தா நிச்சயம் பண்ணுவேன்.”

“இப்ப என்னென்ன படங்கள்ல நடிச்சுட்டு இருக்கீங்க?”
'‘தெலுங்கில் 5 படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். அனுஷ்கா மேம் நடிக்குற 'பாக்மதி', ரவி தேஜா சார் படம், 'பேப்பர் பாய்', ஆச்சர்ய அமெரிக்கா யாத்ரா', நாகர்ஜுனா சாரோட 'ராஜூ கரிகதி 2', தமிழ்ல தம்பி ராமையா சார் மகன் உமாபதி நடிக்கும் 'தண்ணி வண்டி'னு ஒரு படம்னு நானும் கொஞ்சம் பரபரப்பாதான் இருக்கேன்.”

“யார்கூட நடிக்கணும் ஆசைப்படுறீங்க? எந்தெந்த ஹீரோயின்கள் உங்களுக்கு நெருக்கம்?”
'தமிழ்ல சூப்பர் ஸ்டார் கூடவும் உலக நாயகன் கூடவும் ஒரு சீன்லயாவது வந்தா போதும். தெலுங்குல பிரபாஸ் சார் படத்துல நடிக்கணும்னு ஆசை இருக்கு. எல்லா ஹீரொயினுடவும் நல்ல ஃபிரண்ட்ஷிப் இருக்கு. நயன்தாரா என்னை சகோதரி மாதிரி பாத்துப்பாங்க. சமந்தாகூட நான் க்ளோஸ். ஷூட் முடிஞ்சவுடனே வெளியே போவோம், ஷாப்பிங், டின்னர்னு சுத்திட்டு இருப்போம்.”

“சினிமாவில் இப்படி ஒரு இடத்துக்குப்போகணும்னு சொன்னா எந்தமாதிரியான இடத்தை சொல்லுவீங்க?”
'வேற யாரா இருக்க முடியும் மனோரமா ஆச்சியும் கோவை சரளா மேடமும்தான் என் ரோல்மாடல்கள். ‘ஜில்ஜில் ரமா மணி’ கேரக்டரை பார்த்துதான் நான் இன்ஸ்பையர் ஆனேன். சின்ன வயசில காமெடி ரோல் பண்ணிட்டு கொஞ்சம் வயதானதும் சீரியஸான கேரக்டர்களும் பண்ணி தன்னை தக்கவெச்சுகிட்டதுதான் மனோரமா ஆச்சிட்ட எனக்கு பிடிச்ச விஷயம். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்திடுவாங்க. அதேபோல இப்ப கோவை சரளா மேம்கிட்ட நிறைய டிப்ஸ் வாங்கிப்பேன். மனசாரா பாராட்டி ஊக்கப்படுத்துவாங்க.”

“உங்க படங்களைப் பார்த்துட்டு அப்பா என்ன சொல்றார்?”
'அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா, மொழி தெரியாத ஒரு இடத்துல தன் பொண்ணு இருந்து சர்வைவ் பண்ணிட்டு இருக்காளேனு பெருமைப்படுவார். இதுவரை நான் அப்பா பேரை எங்கேயும் குறிப்பிட்டதே இல்லை. அவரும் என் பொன்னுனு வெளியே சொன்னதில்லை. உண்மையில் அப்பா செம ஹேப்பி.”