Published:Updated:

எம்.ஜி.ஆரைச் சந்திக்க ரசிகைகள் என்னவெல்லாம் செய்வார்கள்? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-3

எம்.ஜி.ஆரைச் சந்திக்க ரசிகைகள் என்னவெல்லாம் செய்வார்கள்? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-3
எம்.ஜி.ஆரைச் சந்திக்க ரசிகைகள் என்னவெல்லாம் செய்வார்கள்? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-3

‘எம்.ஜி.ஆர் வருகை என்பது, எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பது' எனச் சொல்வதைவிட, ரசிகர்களுக்கான திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். நாங்கள், மதுரையின் பிரதான சாலையில் குடியிருந்தோம். அந்த வழியாகத்தான் அவர் தங்கியிருக்கும் பாண்டியன் ஹோட்டல் மற்றும் சர்க்கியூட் ஹவுஸுக்குப் போய் வருவார். எம்.ஜி.ஆர் மதுரைக்கு வந்துவிட்டால், எங்கள் மனம் துள்ளும். ஆண்கள், பெண்கள் என அனைவரும் அவருடைய அன்றைய நிகழ்ச்சி விவரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப தங்களின் பணிகளை வரைமுறைப்படுத்திக்கொள்வர்.  எம்.ஜி.ஆர் அந்தச் சாலை வழியாக வரும்-போகும் நேரங்களில் அவரைப் பார்ப்பதற்காக தங்களைத் தயார்படுத்திக்கொள்வர்.

எந்தப் பக்கம் உட்காருவார் எம்.ஜி.ஆர்?

எம்.ஜி.ஆர் கார் ஓட்டுநருக்கு அருகில் உட்கார மாட்டார். அவர் பின் இருக்கையில்  இடதுபுறம் மக்கள் தன்னைப் பார்க்க வசதியாக உட்கார்ந்து கும்பிட்டபடியோ, டாட்டா காட்டியபடியோ போவார். இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா? எம்.ஜி.ஆர் பாண்டியன் ஹோட்டலுக்குப் போகும்போது எங்கள் வீட்டுப் பக்கமாக உட்கார்ந்திருப்பார். எங்கள் வீடு இருக்கும் பகுதியில் சுமார் 17 வீடுகள் இருந்தன. அடுத்த இரண்டு தெருங்களிலும் அதே மாதிரி பத்து பதினைந்து வீடுகள் இருந்தன. ஏறத்தாழ அனைவரும் எம்.ஜி.ஆரைப் பார்க்க நடைபாதையில் குழுமிவிடுவர். இதில் எங்கள் தெருக்காரர்கள் எம். ஜி.ஆர் எந்தப் பக்கம் உட்கார்ந்து இருக்கிறாரோ, அந்தப் பக்கம் போய் நின்று அவரைப் பார்க்க ஆவலாகச் செயல்படுவார்கள்.

பைலட் வண்டி, சைரன் சத்தம் எல்லாம் சென்றபிறகு, எம்.ஜி.ஆர் கார் வரும் நேரத்தில், ஒருத்தி கைப்பிள்ளையோடு ரோட்டைக் கடந்து ஓடுவாள். பாதுகாப்புக்கு நிற்கும் போலீஸ்காரருக்கு உயிரே போய்விடும். அடுத்து அவளின் சிறிய பிள்ளைகள் இருவர் ஓடுவார்கள். அதாவது இப்போது எம்.ஜி .ஆர் பாண்டியன் ஹோட்டல் அல்லது சர்க்கியூட் ஹவுஸில் இருந்து புறப்பட்டு செல்லப்போகிறார். அதனால் அவர் அந்தப் பக்கம் அமர்ந்து எதிர் நடைபாதையில் இருப்பவர்களைத்தான் பார்க்க வாய்ப்பு அதிகம். எனவே, ஆண்களும் பெண்களும் இந்த ஞாபகம் வந்தவுடன் இந்த பிளாட்பாரத்திலிந்து அந்த பிளாட்பாரத்துக்கு ஓடுவார்கள்.

ஒருமுறை கன்னியாகுமரிப் பகுதியைச் சேர்ந்த இளம் போலீஸ் ஒருவர் பந்தோபஸ்துக்கு வந்திருந்தார். அவருக்கு `சி.எம் வர்ற நேரத்தில் இந்தப் பெண்கள் ஏன் இங்கும் அங்கும் ஓடுகிறார்கள்?' என்று புரியவில்லை. மக்களின் ஆர்வத்தை அவரால் புரிந்துகொள்ளவே இயலவில்லை. `எங்கு இருந்து பார்த்தாலும் எம்.ஜி.ஆர்-தானே!' என அவர் நினைத்தார். முடிந்தவரை அருகில் இருந்து பார்க்கும் மனதிருப்தி, தொலைவில் இருந்து பார்க்கும்போது கிடைக்குமா என்பது அந்த போலீஸ்காரருக்குப் புரியவில்லை. பெண்களிடம் திட்டு வாங்கினார்.

இரவில் வரும்  எம்.ஜி.ஆர்.

தேர்தல் பிரசாரப் பணிகளில் எம்.ஜி.ஆர் ஈடுபடும்போது, இரவு இரண்டு மூன்று மணிக்குக்குத்தான் இருப்பிடம் திரும்புவார். வயதானவர்களும் இளைஞர்களும் பத்து பதினொரு மணி வரை பேசிக்கொண்டு இருப்பார்கள். `சரி, போய் தூங்குவோம். அவர் வரும்போது வருவோம்!' என்று சொல்லிக்கொண்டே தூங்கப் போய்விடுவார்கள்.

மக்கள் ஆழ்ந்து உறங்கும் வேளையில் திடீரென சைரன் ஒலிக்கும். அவ்வளவுதான், சேலையை மேலிலும் தோளிலும் அள்ளிப் போட்டுக்கொண்டு பெண்கள் ஓடிவருவார்கள். அப்படி ஒரு பரபரப்பு. அம்மாவோடு தூங்கும் கைக்குழந்தைகளை அப்படியே கையில் ஏந்திக்கொண்டு வந்து நிற்பார்கள். இவர்கள் ஓடி வந்ததில் மற்ற பிள்ளைகளும் மாமியார் மாமனார்களும் விழித்தெழுந்து தட்டுத் தடுமாறி வந்துவிடுவார்கள். பிளாட்பாரத்துக்கு வந்த பிறகு, சேலை ரவிக்கையைச் சரிசெய்து சீலையை இழுத்துக்கட்டிக்கொள்வார்கள். குழந்தைகளை இடுப்பில் வைத்துக்கொள்வார்கள். எம்.ஜி.ஆருக்குத் தெரியும், இங்கு நம் ரசிகர்கள், அபிமானிகள் நிற்பார்கள் என்பது.  சில மீட்டர் தொலைவிலேயே காருக்குள் லைட் போடப்படுவதைப் பார்க்கலாம். இங்கு நிற்கும் ரசிகர் ஒருவர், `எம்.ஜி.ஆர் வாழ்க' என்று கோஷம்போடுவார். எம்.ஜி.ஆரும் சிரித்தபடியே கையை அசைத்துச் செல்வார்.

அப்பாடா... பார்த்துவிட்டோம்!

`எம்.ஜி.ஆரைப் பார்த்தாகிவிட்டது. இனி தூங்கப்போகலாமே!' என்று பெண்கள் வீட்டுக்குப் போக மாட்டார்கள். உடனே கணவன்மாரை காபி வாங்கி வரச் சொல்வார்கள். அந்தப் பகுதியில் காபி கடைகள் இரவு இரண்டு இரண்டரை மணி வரை திறந்திருக்கும். பிறகு, அதிகாலை நான்கு மணிக்குத் திறந்துவிடும். அதுவும் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார் என்றால், அவர் ஹோட்டலுக்குத் திரும்பிப் போகும் வரை திறந்துதான் இருக்கும். இனி சில்வர் தூக்குவாளியை எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று பேர் காபி வாங்கி வருவார்கள். அதை ஆளுக்கு அரை டம்ளர் ஊற்றிக் குடிப்பார்கள். அரை மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். பிறகு, `அவர் தூங்கட்டும் காலையில் வருவார் பார்ப்போம்' என்று சொல்லிவிட்டு, தூங்கப் போய்விடுவார்கள்

இவ்வாறாக மதுரைக்கு வரும் எம்.ஜி.ஆர் ஒரு வாரம் வரைகூட இருப்பார். அந்த வாரம் முழுக்க மதுரை மக்களுக்கு உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக்கொள்ளும். அந்தச் சாலையில் நேருஜி, காமராஜர், இந்திரா காந்தி, சஞ்சீவ ரெட்டி, பக்ருதீன் அலி அகமது, நேப்பாளத்து ராஜா, தானே கார் ஓட்டிகொண்டு வந்த ராஜீவ் காந்தி, அண்ணா, கலைஞர், ஜெயலலிதா எனப் பலரையும் பார்த்திருந்தாலும் எம்.ஜி.ஆரின் வருகை மட்டுமே வீட்டு விசேஷம்போல கலகலப்பாக இருக்கும்.

`அடிமைப்பெண்' திரைப்பட விழாவுக்கு வந்த எம்.ஜி.ஆர்

`அடிமைப்பெண்' படம் சிந்தாமணியில் வெளியிடப்பட்டு வெற்றிநடைபோட்டது. அப்போது எம்.ஜி.ஆர் மதுரைக்கு வருகை தருவதாக செய்தி வந்தது. எம்.ஜி.ஆருடன் நடித்த மற்ற கலைஞர்களும் மேடையில் தோன்றுவார்கள் என்பது தெரிந்ததும், எல்லோரும் ஜெயலலிதாவைப் பார்க்கத் தயாரானார்கள். மே தினத்தன்று (1969) வெளியான இந்தப் படம், 25 வாரங்கள் ஓடிய பிறகு அக்டோபர் 22 அன்று வெற்றி விழா கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர்., விமான நிலையத்திலிருந்து நீல நிற வேனில் வந்துகொண்டிருந்தார். புஷ்குல்லா வைத்த எம்.ஜி.ஆர்.,  பச்சையும் இல்லாமல் நீலமும் இலாமல் ஒரு கலரில் சேலை கட்டி தலையில் பன் கொண்டை போட்ட ஜெயலலிதா, அவருக்குப் பின்னால் பண்டரிபாய் ஆகியோர் வேனில் வந்துகொண்டிருந்தனர். 

ஜெயலலிதாவைப் பார்த்தோம்

`அடிமைப்பெண்' விழாவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் முதலமைச்சராகி ஜெயலலிதாவை சத்துணவுத் திட்டத்தில் ஈடுபடுத்திய சமயம். வெள்ளை நிறத்தில் கட்சி பார்டர் போட்ட சேலை அணிந்து எங்கள் பகுதி வழியாக ஒருநாள் காரில் சென்றார். அப்போது அவரை நன்றாகப் பார்த்தோம். அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின் `வெள்ளி' என சிலர் சொல்ல, படித்த இளைஞர் ஒருவர் `அது பிளாட்டினம் தங்கத்தைவிட விலை அதிகம்' என்றார். எம்.ஜி.ஆரைப் பார்த்த மகிழ்ச்சியோ மன நிறைவோ இல்லை. ஒருவித பயமும் அந்நியத்தன்மையும் ஏற்பட்டன. ஜெயலலிதா, காருக்குள் கைகுவித்து கும்பிட்டபடி உட்கார்ந்திருந்தார். எம்.ஜி.ஆர் மாதிரி கார் சைடில் நின்றவர்களைப் பார்க்கவோ கை அசைக்கவோ இல்லை. அது, அன்று எங்கள் பகுதியினரால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. ``அந்தப் புண்ணியவான் ராத்திரி எந்நேரமானாலும் முழிச்சு, கையைக் காட்டிட்டுப் போவாரு. இது என்ன திரும்பிக்கூட பார்க்க மாட்டேங்குது!’’ என்று பேசினர்.

குங்குமப்பொட்டு வைத்த எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் வரும்போது அவரைப் பார்க்கும் பலருக்கும் `அவரைப் பார்த்துவிட்டோம்!' என்ற மகிழ்ச்சியும் மனதுக்குள் ஒரு துள்ளலும் ஏற்படுமே தவிர, என்ன பார்த்தோம், அவர் கறுப்பா சிவப்பா, என்ன சட்டை போட்டிருந்தார், என்ன வாட்ச் கட்டியிருந்தார் என்றெல்லாம் தெரிவது கிடையாது. அது ஒரு தெய்வ தரிசனம். என்ன பார்த்தோம் என்பது தெரியாது. ஆனால், பார்த்துவிட்டோம் என்ற பரவசம் தோன்றும். அது ஒரு மனநிறைவைத் தரும்.

இதில் நடுவயதுப் பெண் மட்டும் சற்று வித்தியாசமானவர். அவர் திருமணத்துக்கு முன்பு சிவாஜி ரசிகை. அவர் அப்பா ஒரு காங்கிரஸ்காரர். ஆனால், கணவர் எம்.ஜி.ஆர் ரசிகர். கணவரோடு சேர்ந்து மெள்ள மெள்ள ஒவ்வொரு எம்.ஜி.ஆர் படமாகப் பார்த்து எம்.ஜி.ஆர் ப்ரியர் ஆகிவிட்டார். இதற்கிடையே எம்.ஜி.ஆரும் முதலமைச்சராகிவிட்டார். இவர் கணவரும் கட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டார். எனவே, இந்தப் பெண் எம்.ஜி.ஆரை `பெரியாம்பிளை' என்றுதான் அழைப்பார். பெயர் சொல்லவும் பதவியை வைத்தும் குறிப்பிட மாட்டார்

இந்த நடுவயதுப் பெண் சில சமயம்  `எம்.ஜி.ஆர் வெற்றிலை போட்டிருக்கிறார். வாயெல்லாம் சிவந்திருக்கிறது' என்பார். சில சமயம் `பெரியாம்பிளை நெற்றியில் குங்குமம் வைத்திருக்கிறார்' என்பார். மற்றவர்கள் `ஐயய்யோ... அதை கவனிக்கவில்லையே!' என்பர். ஒருவேளை இவர் சிவாஜி ரசிகராக இருந்து எம்.ஜி.ஆர் ரசிகர் ஆனதால், இவரால் மட்டுமே இப்படி கவனிக்க முடிந்ததோ என்னவோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் வி. என்.சிதம்பரம் செட்டியார், எம்.ஜி.ஆர் மதுரை வரும்போது மீனாட்சி அம்மன் கோயிலின் ஸ்தானிகபட்டர் விமான நிலையத்தில் அவருக்கு பூரணக் கும்பமரியாதை செலுத்தி திருவிளையாடல் புராணத்திலிருந்து...
  

மல்குக வேதவேள்வி வழங்குக சுரந்து வானம்

பல்குக வளங்கள் எல்லாம் பரவுக அறங்கள் இன்பம்

நல்குக உயிர்கட்கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப்

புல்குக உலகமெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க 

என்ற பாடலைப் பாடி வாழ்த்தி, நெற்றியில் குங்குமம் இடுவாராம். அந்தக் குங்குமத்துடன் எம்.ஜி.ஆர் வந்திருக்கலாம். இவற்றைப் படித்த பிறகு, எம்.ஜி.ஆரின் நெற்றியில் குங்குமம் இருக்க வாய்ப்பு இருந்ததாக உணர்ந்தேன்.

வெற்றிலை போட்டு வாய் சிவந்த எம்.ஜி.ஆர்

`எம்.ஜி.ஆர்., வெற்றிலை போடுவாரா... மாட்டாரா?' என்ற கருத்து எங்களிடம் இருந்ததால், அந்த நடுவயதுப் பெண் கூறியதை பலரும் அப்போது மறுத்துப் பேசினர். எம்.ஜி.ஆர் ஒருமுறை சாப்பாடு ஜீரணிக்கவேண்டி வெற்றிலை கேட்டிருக்கிறார். அப்போது வழியில் ஒரு பெண் வெற்றிலை விற்றதைப் பார்த்தவர்கள், அந்த அம்மாவிடம் சென்று `எம்.ஜி.ஆருக்கு வெற்றிலை வேண்டும்' என்று கேட்டிருக்கிறார்கள் . அந்த அம்மா காசு வாங்க மறுத்தும், கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு வெற்றிலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தைப் படித்த பிறகு, `அவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதனால் அன்றுகூட அவர் வெற்றிலை போட்டிருக்கலாம்' என்று என் மனம் அமைதி அடைந்தது.

எம்.ஜி.ஆரின் கைராசி

எங்கள் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள், அக்காள் தங்கையை திருமணம் செய்துகொண்டு அசைவ உணவகம் ஒன்றை நடத்திவந்தனர். அந்தப் பெண்களில் இளையவர் எம்.ஜி.ஆர் ரசிகை. அவர் எம்.ஜி.ஆருடன் கை குலுக்க வேண்டும் என்று தன் கணவரிடம் தன் ஆசையைத் தெரிவித்தார். அவரும் சரியென ஒப்புக்கொண்டு, எம்.ஜி.ஆர் வரும் பாதையில் அவர் காரின் வேகம்  குறையும்படி தன் பணியாளர்களைக் கூட்டமாக நிற்குமாறு சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆர் வந்தார். கூட்டமாக நின்றவர்கள், எம்.ஜி.ஆரின் காருக்கு அருகில் ஓடினர். இந்தப் பெண்ணும் கூடவே ஓடிசென்று காருக்குள் இருந்த எம்.ஜி.ஆரிடம் கை கொடுத்தார். எம்.ஜி.ஆர் சிரித்துவிட்டார். இந்தப் பெண்ணுக்காகத்தான் இந்த ரகளை என்பது அவருக்குப் புரிந்துவிட்டது. இந்தப் பெண் கை கொடுத்ததும் அந்தப் பணியாளர்கள் விலகி நின்றுவிட்டனர். எம்.ஜி.ஆர் கைராசி, இன்று அவர்கள் உணவகம் மதுரையிலேயே டாப் உணவகமாக இருக்கிறது. மதுரையின் நவீன அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது.

எம்.ஜி.ஆரிடம் ஓர் ஆசை

ஒரு பெண்ணின் தாயார் மட்டுமல்ல, அவர் குடும்பமே  எம்.ஜி.ஆர் ரசிகர்கள்தான்.  அவர்களும் எங்கள் பகுதியில்தான் குடியிருந்தனர். இந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் கணவரும் எம்.ஜி.ஆர் ரசிகர்களே. இந்தப் பெண்ணின் முதல் குழந்தைக்கு எம்.ஜி.ஆரின் அம்மா பெயரான `சத்யா' என்பதைச் சூட்டியிருந்தனர். 1972-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகளில் பலருக்கு `சத்யா' என்று பெயர் சூட்டியிருப்பர்.

ஒருநாள் எம்.ஜி.ஆர் மதுரை வந்தபோது இந்தப் பெண்ணின் கணவர் தன் மனைவியிடம் `வா, நாம் எம்.ஜி.ஆரைப் பார்த்து நம் சத்யாவை அவரிடம் கொடுத்து வாழ்த்து பெறலாம்' என்றார். இந்தப் பெண்ணும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு கணவருடன் கிளம்பினார்.  அப்போது அவர் மனம் சலனமற்று இருந்தது. எம்.ஜி.ஆர் தன் அறையில் பல கட்சிக்கார்கள் சூழ, ஒளி பொருந்திய முகத்துடன் இருந்தார். அவரை நெருங்கியதும் இந்தப் பெண்ணுக்கு அந்தச் சூழ்நிலையே மறந்துவிட்டது. குழந்தை சத்யாவை எம்.ஜி.ஆர் காலடியில் போட்ட அந்தப் பெண், எம்.ஜி.ஆரை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டார். கண்களை மூடிக்கொண்டார். வெகுநேரம் அப்படியே இருந்தார். யார் விலக்கினார்கள். யார் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள் என அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை.

வீட்டுக்கு வந்ததும், ஏதோ பித்து பிடித்ததுபோல் இருந்தார். ஒரு வாரம், பத்து நாள் கழித்துதான் இயல்பு நிலைக்குத் திரும்பினார். அவருக்கு அப்போதும் பெரிய கவலை, `எம்.ஜிஆரைக் கட்டிப்பிடித்தோமே, அப்படியே அவரைத் தூக்கி ஆலவட்டம் சுற்றியிருக்கலாமே!' என்று. எம்.ஜி.ஆரைப் பற்றி யார் அவரிடம் பேசினாலும், இந்தச் சம்பவத்தைச் சொல்லி மாய்ந்துபோவார்.