Published:Updated:

இச்சாபி என்கிற இர்ஷாத்தும், சஹூபும் இன்னும் சில புறாக்களும்! - `பறவ' படம் எப்படி?

இச்சாபி என்கிற இர்ஷாத்தும், சஹூபும் இன்னும் சில புறாக்களும்! - `பறவ' படம் எப்படி?
இச்சாபி என்கிற இர்ஷாத்தும், சஹூபும் இன்னும் சில புறாக்களும்! - `பறவ' படம் எப்படி?

இச்சாபி என்கிற இர்ஷாத், ஹசீப் என இரண்டு தோழர்கள், அவர்களின் குடும்பங்கள், அவர்களின் புறாக்கள் என இனிமையான கதை ஒன்றைச் சொல்கிறது `பறவ' படம்.

நண்பர்களான இர்ஷாத் - ஹசீப் இருவருக்கும் புறா பந்தயத்தில் ஆர்வம். அதற்காக, புறாக்களைத் தயார்படுத்துகிறார்கள். பின்னணியில் இர்ஷாத் குடும்பத்திலிருந்து தொடங்குகிறது முன்னாள் கதை ஒன்று. அந்த ஊருக்கே செல்லப்பிள்ளை இம்ரான் (துல்கர்). அவரை ஒரு தாக்குதலின்போது கொன்றுவிட்டு தப்பிவிடுகிறது கும்பல் ஒன்று. `அவர்களால் மற்ற நண்பர்களுக்கும் ஆபத்து உண்டு!' என எச்சரிக்கிறது காவல் துறை. அந்த நண்பர்களில் ஒருவர் இர்ஷாதின் அண்ணனான ஷைன் (ஷான் நிகம்). துல்கர் எதற்காகக் கொல்லப்பட்டார்? அதன் எதிர்வினைகள் என்ன? இதற்கும், நிகழ்காலத்தில் இர்ஷாத் ஒருதலையாகக் காதலிக்கும் பெண், அவனின் புறா பந்தயக் கனவு இரண்டும் என்ன ஆகின்றன என்பதையும் ஒரு புள்ளியில் இணைத்து, மிக இயல்பான சினிமாவாக்கியிருக்கிறார் இயக்குநர் சௌபின் சாஹீர். முதல் சினிமாவிலேயே தன் வருகையை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் சௌபின் சாஹீர். பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவருக்கு, இந்தப் படத்தை இயக்கியதோடு நடிப்பிலும் இன்னொரு முகம் காட்டி மிரட்டியிருக்கிறார். 

இந்தப் படத்தின் அனுபவம் உங்களுக்கு மறக்க முடியாததாக மாறுவதற்கு அது கோவையாகச் சொல்லப்பட்டிருப்பதும் மிக முக்கியமான காரணம். ஒரு காட்சியிலிருந்து அடுத்த காட்சி தாவும்போது அதன் சவுண்ட் டிசைனிங் முதற்கொண்டு திட்டமிடுதலுடன் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் பிரமாதமான ஒன்று. படத்தின் பின்னணியில் ஒட்டிக்கொண்டே வரும் பழிக்குப்பழி உணர்வு, அதை வெளிப்படவிடாதபடி மேல் அடுக்கில் சிறுவர்களின் பள்ளி, காதல், விளையாட்டு, பதின்வயது குறும்புகள் எனச் செல்கிறது படம். 

இர்ஷாத்தாக நடித்திருக்கும் அமல் ஷா மற்றும் ஹசீபாக நடித்திருக்கும் கோவிந்த் வி பய் இருவரும் வியக்கவைக்கும் நடிப்பை மிக அநாயசமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து இருவரும் அடுத்த நாள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஹசீப் ஒன்பதாவது முடித்து பத்தாம் வகுப்புக்குச் சென்றுவிடுவான். ஆனால், இர்ஷாத் பரீட்சையில் தோல்வியடைந்து, வேண்டா வெறுப்பாக மீண்டும் ஒன்பதாம் வகுப்புக்கே செல்வான். மீண்டும் ஒரு வருடம் ஒன்பதாம் வகுப்பு படிக்க வேண்டும் என சோகமாக வகுப்பில் அமர்ந்து அழுவான் இர்ஷாத்.

``நீ எதுக்கு அழற இப்போ? நான் உனக்கு எல்லா பாடங்களையும் சொல்லித்தர்றேன். வந்து முதல் பெஞ்ச்ல உட்காரு" என்பதோடு க்ளாஸ் லீடராகவும் அவனை அறிவிப்பார் ஆசிரியை. தோல்வி, சோகம், அழுகை, நம்பிக்கை என அடுத்தடுத்த ஷேட்களாகப் பிரியும் இந்தக் காட்சியை முடிக்கும்போது, ``என்ன நீ க்ளாஸ் லீடரா... நானும் ஃபெயிலாகியிருக்கவேண்டியது" என ஹசீப் சொல்லும்படி காமிக்கலாக முடித்திருப்பார்கள். இப்படி படம் முழுக்கக் கதை சொல்லும் உத்தியை வழக்கத்துக்கு மாறான முறையில் கையாண்டிருப்பதாலேயே சினிமா என்பதையும் தாண்டி ஓர் அனுபவத்தைக் கொடுக்கிறது படம். 

கூடுதல் நேரம் வரக்கூடிய கெஸ்ட்ரோலில் துல்கர் சல்மான். `சிக்ஸ், ஃபோர்' கிரிக்கெட் டீமின் ஸ்டார் ப்ளேயர். கிரிக்கெட்டில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நண்பர்கள் குழுவுக்கு இவர்தான் கேப்டன். இவரின் வழிகாட்டுதலால், கோபத்தால், சமாதானப்படுத்துதலால் எல்லோரின் பிரச்னைகளையும் சரிசெய்வார். துல்கர் இப்போது முழுமையாகவே நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில இடங்களில் கோபப்பட்டுக் கத்தும்போது நமக்கே பதற்றம் வருகிறது.

ஷைன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷான் நிகம், படத்தில் நிறைய நேரம் வெறுமையான முகத்துடன்தான் இருக்கவேண்டியதிருக்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சியில் காதலுக்காகத் தவிப்பது, பிறகு அதே காதலை நிராகரிப்பதும் என கிடைக்கும் சின்னச் சின்ன இடங்களில் முழுமையாக நடித்துவிட்டுப்போகிறார். `ஏ' படத்துக்குச் சென்று வரும் மகனை, ``இனி அப்படிப் பண்ணக் கூடாது, சரியா..." எனப் பொறுமையாகக் கையாளும் சித்திக்காக இருக்கட்டும், சில காட்சிகளே வரும் ஆஷிக் அபுவாக இருக்கட்டும். ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டுப் போகிறார்கள். 

முன்பு சொன்னதுபோல படத்தின் ஒலிக்கோவையும், ரெக்ஸ் விஜயனின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் மிகச்சிறப்பு. மிகக் குறுகலான மட்டஞ்செரி பகுதியின் ஒவ்வொரு தெரு மடிப்புகளுக்குள்ளும் நம்மை அழைத்துச் செல்கிறது ஸ்வயம்ப் ஒளிப்பதிவு. புறா பந்தயக் காட்சிகளும் குறிப்பிட்டு சொல்லவேண்டியவை. துல்கர் சம்பந்தப்பட்ட பகுதியோ அல்லது இச்சாபி - இர்ஷாத் பகுதியோ இரண்டில் ஒன்று நிச்சயம் உங்களை அமைதியாக உட்கார்ந்து படம் பார்க்கவைக்கும். 

இரண்டிலும் இருக்கும் ஒற்றுமை, நட்பும் புறாவும். இரண்டு கதைகளையும் ஒருசேர எந்த இடத்திலும் தொய்வில்லாமல் கூறியிருந்த விதத்தால் கவனம் கவர்கிறது. இந்தப் `பறவ', சினிமாவையும் தாண்டிய அலாதியான ஓர் அனுபவம்.