Published:Updated:

“நான் லவ் பண்ண இத்தனை பேர் இருக்கும்போது, ஆரவ்வை ஏன் காதலிக்கணும்!?” - காதலைக் கடந்த ஓவியா

“நான் லவ் பண்ண இத்தனை பேர் இருக்கும்போது, ஆரவ்வை ஏன் காதலிக்கணும்!?” - காதலைக் கடந்த ஓவியா
“நான் லவ் பண்ண இத்தனை பேர் இருக்கும்போது, ஆரவ்வை ஏன் காதலிக்கணும்!?” - காதலைக் கடந்த ஓவியா

நேற்றைய செய்தி, நாளை வேறொரு செய்தி என்று கடந்தும் மறந்தும் கொண்டிருக்கும் இந்த சமூக வலைதள வைரல் யுகத்திலும் உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை உண்டு என்பதற்கு சமீபத்திய உதாரணம் ‘பிக் பாஸ்’ ஓவியா. ‘100 நாள்கள் ஏகப்பட்ட கேமராக்கள், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட பிக் பாஸில் ஓடாமல் ஒளியாமல் தன் உண்மை முகம் காட்டினார் ஓவியா. பலன், பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஓவியாவுக்கு ‘ஓவியா ஆர்மி’யாக உருவாக்கிவுள்ளனர் ரசிகர்கள். 

இந்த பிரபல்யத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஓவியா பெரிய ஹீரோக்களுடன் படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் அவரைத் திரையில் பார்க்க ஆர்வமாகயிருந்த நிலையில், பல நிறுவனங்கள் அவரை தங்கள் நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடிக்கவைக்க முயற்சி செய்தன. இதில் வென்றது, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் தனது புதிய கிளையை சென்னை பழைய மகாபலிபுர சாலையில் புதிதாக 'தி கிரெளன் மால்' என்ற ஆறு மாடி விற்பனையகத்தைக் கட்டியுள்ளது. இந்தக் கடைக்கான விளம்பரத் தூதராகத்தான் ஓவியா ஒப்பந்தமாகி உள்ளார். 

இந்தக் கடை திறப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக ஓவியா பங்கேற்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. பிக் பாஸில் இருந்து அவர் வெளியேறியப் பிறகு, எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்ததால் இந்தநிகழ்ச்சிக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதையடுத்து அவரைப் பார்க்க #OviyaArmy ரசிகர்கள், இளைஞர்கள், பெண்கள் பலரும் கடை வாசல் முன்பாகக் காலை 7 மணிக்கே வந்து இடம்பிடித்தனர். 

ஓவியாவுக்காகக் கடை வாசல் முன்பு போடப்பட்டிருந்த மேடையின் அருகே கிட்டத்தட்ட 50 பவுன்சர்கள், காவல் துறையினர் என பரபரப்பாக வலம்வந்துகொண்டு இருந்தனர். கடையைச் சுற்றிலும் திருவிழாபோல் பலதரப்பட்ட திடீர் கடைகள். பொதுமக்கள் பலர் தங்களுடைய வீட்டின் மாடிகளில் நின்றுகொண்டு ஓவியாவைப் பார்க்க காத்திருந்தனர். ஊடகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு எனத் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அனைத்து பத்திரிகையாளர்களும் பலதரப்பட்ட பவுன்சரிகளின் பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஐ.டி கார்டு இல்லாதவர்களுக்கு அனுமதி முற்றிலும் மறுக்கப்பட்டது. 

இப்படி பரபரப்பான சூழலில்தான் நிகழ்ச்சி தொடங்க 15 நிமிடங்கள் இருக்கையில் ஓவியாவின் கார் அந்தப் பகுதிக்குள் நுழைந்தது. கேரளாவின் செண்டை மேளம் சத்தம் காதைப் பிளக்க காரில் இருந்து இறங்கினார் ஓவியா. நேராகக் கடைக்குள் நுழைந்தவர் கடையைச் சுற்றிப் பார்த்துவிட்டு மேடைக்கு வர அரைமணி நேரம் பிடித்தது.

இந்த இடைவெளியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா மேடையில் ஏறி ஓவியா புகழ்பாடினார். அவரை ரசிகர்கள் சில கேள்விகளைக் கேட்டு கலாய்த்தபடி இருந்தனர். அப்போது ஒரு ரசிகர் பிக் பாஸ் பரணிபோல் ஆர்வமிகுதியில் தடுப்பைத்தாண்டி மேடையின் அருகே வர முயல சுற்றியிருந்த பவுன்சர்கள் அவரைக் கோழியைப் பிடிப்பதுபோல் அலேக்காகப் பிடித்து அப்புறப்படுத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும் 'வா வா ஓவியா வா வா' எனக் கோஷமிட்டனர். 

ஒரு பெண் ஆட்டோ டிரைவர், ஓவியாவின் பேனர் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு அவரைப் பார்க்க காத்திருக்க, வேறொருவர் ஓவியாவைப் பார்க்க இன்று தனக்கு இருந்த இன்டர்வியூவைக்கூட கேன்சல்செய்துவிட்டு வந்ததாகக் கூறினார். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கிடையே பச்சை, ஆரஞ்சு கலர் பார்டர் வைத்த பட்டு புடவையில் தனது லேட்டஸ்ட் ஹேர் ஸ்டைலுடன் மேடையில் ஓவியா ரசிகர்கள் முன்னால் தோன்ற, அவரின் ரசிகர்கள்  மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். விசில் சத்தம் காதைக் கிழித்தது.

தனது ரசிகர்களைப் பார்த்து ஒரு நிமிடம் வாய் பிளந்து நின்ற ஓவியா, 'லவ் யூ கைஸ்' எனக் கத்தினார். ''எனக்குப் பேசல்லாம் வராது. நீங்கள் எதாவது கேள்வி கேளுங்க. உங்கள் யார் முகத்திலும் ஸ்ப்ரே அடிக்க மாட்டேன். பயப்படாமல் கேளுங்க'' என்றார். அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'கொக்கு நெட்ட கொக்கு' பாடலைப் பாடியபடி மெதுவாக டான்ஸ் ஆடியும் காட்டினார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது எது பேசினாலும் எப்படி ஆடிக்கொண்டே பதில் சொல்லுவாரோ அதே ஆடலுடன்தான் பதில்கள் வந்தன 

“பிக்பாஸ் வீட்டில் உங்களுக்குப் பிடிச்ச போட்டியாளர் யார்?’ இது கேள்வி. “நடிகை அனுயாதான் என் ஃபேவரைட்  போட்டியாளர். அவர் என் நெருங்கிய தோழி’’ என்றார். மேலும், ''100 நாள்களுக்கு பிக் பாஸ் பற்றி பேசக் கூடாது என்பது ரூல்ஸ். அந்த ரூல்ஸை பிரேக் பண்ணக் கூடாது. அதனால், 100 வது நாள் அன்னைக்கு நான் அங்கே ஸ்டேஜ்ல இருப்பேன், அங்கே பார்ப்போம் வெயிட் பண்ணுங்கள். உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாகயிருக்கு. நிபந்தனையற்ற லவ் கிடைப்பது கஷ்டம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. ஐ லவ் யூ சோ மச் கைஸ்'' என்றார்.

“ஆரவ்வை இன்னும் காதலிக்கிறீர்களா” இது ஓர் இளம் ரசிகரின்கேள்வி. ''எனக்கு இவ்வளோ லவ் வரும்போது, நான் ஏன் ஒரு ஆளை மட்டும் லவ் பண்ணணும். இவங்க எல்லோரையும் லவ் பண்ணுறேன், ஐ லவ் யூ, பிக் பாஸ் நூறாவது நாள் அன்னைக்குப் பார்க்கலாம்'' என்று கூறி ரசிகர்களுக்கு சிலபல பறக்கும் முத்தங்களைப் பறக்கவிட்டபடி பறந்தார். ஓவியா சென்றபிறகும்கூட பலரும் ‘ஓவியா... ஓவியா...’ என்று கத்திக்கொண்டு இருந்தனர். 

ஆமாம், வா...வா.. ஓவியா.. வா... வா...!

அடுத்த கட்டுரைக்கு