Published:Updated:

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கு இன்று ஹேப்பி பொறந்தடே..! #14YearsOfKaipulla

தார்மிக் லீ
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கு இன்று ஹேப்பி பொறந்தடே..! #14YearsOfKaipulla
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கு இன்று ஹேப்பி பொறந்தடே..! #14YearsOfKaipulla

“தல... தல... தமிழ் சினிமாவுக்கு நீ வந்து இன்னையோட 14 வருஷம் ஆச்சு, சீக்கிரம் வா தல...'' இதே டயலாக் மாடுலேஷனில், வேறு வசனத்துடன் வெளிவந்த கைப்புள்ளைக்கு வயது இன்றுடன் 14. தமிழ் சினிமா காமெடிகளுக்கு மெருகூட்டிய 'கைப்புள்ள' எனும் கதாபாத்திரம் என்ட்ரி கொடுத்து இன்றுடன் 14 வருடம் ஆகிறது. அதற்கான சிறப்புப் பதிவுதான் இது!

படத்தில் இவரின் என்ட்ரியே மாஸ்தான். ஹீரோவுக்கு நிகரான என்ட்ரியில் அசால்ட் கொடுத்திருப்பார் ‘வைகை புயல்' வடிவேலு. வரைந்த மீசை, கலர் கலர் சட்டை, இந்தப் படத்துக்கென்றே இவரின் தனித்துவமான பாடி லாங்குவேஜ் என இவரைப் பார்த்ததும் ரசிர்கர்களுக்கு பிடித்துவிட்டது. பேசிய ஒவ்வொரு வசனமும் பட்டாசாக வெடித்தது. இந்த அளவு மாஸ் ஹிட் அடித்திருக்குமா என்பது அப்பொழுது தெரிந்திருக்க வாயப்பு குறைவுதான். தியேட்டரில், ரசிகர்ளின் கைதட்டல்களை எதிர்பார்த்து பெரியபெரிய ஹீரோக்களின் ரெஃபரன்ஸை தற்பொழுது வெளிவரும் படங்களில் பயன்படுத்துவது வழக்கம். அதையெல்லாம் தகர்த்தெரிந்து ஒரு காமெடி நடிகராக, தான் பேசிய ஒவ்வொரு வசனங்களை வெளியாகும் எல்லாப் படங்களிலும் பயன்படுத்த வைத்தார். இவரின் சரவெடி காமெடிகள் அன்றாட வாழ்க்கையில் நண்பர்கள் மத்தியில் கலாய்ப்பதற்காக பயன்படுத்தும் கவுன்டர்களாக அனல் பறந்தது. அதற்கு அடுத்த படியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ரிங்டோன்கள், காலர்டியூன்கள் போன்ற விஷயங்களாக வலம் வந்ததன. 'டப்ஸ்மாஷ்' என்ற அப்ளிகேஷன் வந்தவுடன், பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களின் வசனங்கள் அதில் இருந்தும், 'கைப்புள்ள' கதாபாத்திரத்தின் வசனங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ஃபேமஸ் ஆனவர்கள் ஏராளம். 

இது எல்லாவற்றுக்கும் மேலாக இவரின் வசனங்களை வெளிவரும் படங்களுக்குக் கூட சூட்டினர். அப்படி வெளியான படம்தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்று இதைச் சொல்லலாம். அதே படத்தில் காமெடி ரோலில் கலக்கியிருப்பவர்தான் சூரி. தற்பொழுதைய நிலையில் மோஸ்ட் வான்டட் காமெடி நடிகனாக தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். வெளிவரும் 80 சதவிகிதப் படங்களில் இவரைக் காமெடி கதாபாத்திரத்தில் காணலாம். இவருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கும் நிறையவே பந்தம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத்தானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. இதனுடைய ஒரிஜினல் வெர்ஷன், அதாவது வின்னர் பட 'வருத்தப்படாத சங்கத்தில் இவரும் ஒரு உறுப்பினர். சிலருக்குத் தெரிந்த உண்மை, பலருக்குத் தெரியாத உண்மை. படம் முழுவதும் வடிவேலுவுடன் க்ரேன் மனோகர், போண்டா மணி, முத்துக்காளை என இவர்களைக் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். வடிவேலு பஞ்சாயத்தில் இடம்பெறும் காமெடிக் காட்சியை நன்றாக கவனித்திருந்தால் கண்டிப்பாக மற்ற ஆட்களோடு தற்பொழுது தமிழ்ச் சினிமாவைக் கலக்கும் சூரியையும் கவனித்திருக்கலாம். ஆரம்பக் காலத்தில் பல படங்களில் சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் சூரி, அதில் இந்தப் படமும் அடக்கம். 

இயக்குநரைவிட மீம் கிரியேட்டர்கள்தான் இந்தப் படத்தை கொண்டாட வேண்டும். நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் பல ஆரம்ப காலத்து மீம்களுக்கு உயிர் கொடுத்ததே வடிவேலுவும், இந்தப் பட காமெடிகளும்தான். இன்னும் கூட பயன்படுகிறது. விளம்பரம் போட்டால் சேனலைக் கூட மாற்றாமல் டி.வியை வெறித்துப் பார்க்க வைக்க பல மாஸ் படங்கள் இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் இந்த க்ளாஸ் காமெடி படமும் இருக்கும். இந்தப் பட காமெடிகளை அன்றும் சரி, இன்றும் சரி, சிரிப்புக்குக் குறையே இருக்காது. ஒவ்வொரு கேங்கிலும் ஒரு கைப்புள்ளை இருப்பான். அவர்களுக்கு பெருமை சேர்த்தவர்தான் இந்த 'கைப்புள்ள'. தீப்பொறி திருமுகம், புல்லட் பாண்டி, திகில் பாண்டி, ஸ்னேக் பாபு, பாடி சோடா என பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், கைப்புள்ளதான் என்றும் டாப்.

இப்பேர்பட்ட கதாபாத்திரத்தை தமிழ் சினிமா வாயிலாகக் கொடுத்தமைக்கு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும், படத்தின் இயக்குநருக்கும் நன்றிகளும், பாராட்டுகளும்! இதை படிச்சிட்டு லைக், ஷேர் பண்ணா அண்ணே உங்களுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித் தருவேன்... வர்ர்ர்ட்டா..!

பின் செல்ல