Published:Updated:

‘எப்போதும் இளமைத் தோற்றம்!’ எம்.ஜி.ஆருக்கு சாத்தியமானது எப்படி? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-4

‘எப்போதும் இளமைத் தோற்றம்!’ எம்.ஜி.ஆருக்கு சாத்தியமானது எப்படி? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-4
‘எப்போதும் இளமைத் தோற்றம்!’ எம்.ஜி.ஆருக்கு சாத்தியமானது எப்படி? ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-4

‘வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல்...’ என்ற பாடல், எம்.ஜி.ஆரின் 100-வது படமான ‘ஒளிவிளக்கு’ படத்துக்காக எழுதப்பட்டது (ஆனால் அது எதிர்நீச்சல் படத்தில் பயன்படுத்தப்பட்டது) எவ்வளவு பொருத்தம் என்பதை, அவரது சொந்த வாழ்க்கையிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

எம்.ஜி.ஆர் பிறந்தது முதல் அவர் மரணிக்கும் வரை அவருக்கு வாழ்க்கை மலர்ப்படுக்கையாக இல்லை. சிறுவயதில் வறுமை, பிறகு தனிமை, திரைத்தொழிலில் லேட் பிக்கப். அதில் தாக்குப்பிடிக்க அவர் கையாண்ட உத்திகள் அல்லது சிரமங்கள், அரசியலில் நெருங்கியவர்களே எதிரிகளாக மாறியது, கடைசிக்காலத்தில் கட்சிக்காரர்களும் குடும்பத்தினரும் ஆட்சி விவகாரங்களில் ஈடுபட்டதால், அவர்களை தலையிடவிட வேண்டாம் என்று நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டது என, தொடர் போராட்டங்களாகவே எம்.ஜி.ஆர் வாழ்க்கை அமைந்துவிட்டது.

எம்.ஜி.ஆரின் வயது என்ன?

‘மர்மயோகி’ படத்தில் நடிக்கும்போது “இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்'' என்று அதன் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரம்பிள்ளை எம்.ஜி.ஆரிடமும் அவர் நண்பர்களிடமும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது, “நாற்பது வயதுக்குமேல்தான் எம்.ஜி.ஆருக்கு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது'' என்றார். உடனே எம்.ஜி.ஆர் அவரிடம், “ஏன்யா வயசைப் பற்றி இப்போ பேசுற!'’ என்று அதட்டுகிறார். ‘மர்மயோகி’ 1951-ம் ஆண்டில் வெளிவந்தது. அதன் படப்பிடிப்பு 1950-ம் ஆண்டில் நடந்திருந்தாலும், அப்போது எம்.ஜி.ஆருக்கு வயது 40-க்குமேல். அதாவது 41 என்றுகூட வைத்துக்கொள்வோம். அப்படியிருந்தாலும் எம்.ஜி.ஆர் பிறந்தது 1910-ம் ஆண்டுக்கு முன்புதான் இருக்கவேண்டும். ஆக, அவர் பிறந்த வருடம் 1917 என்பது சரியல்ல. 

மேலும், ‘அவர் பத்து வருடங்கள் முந்திகொடுத்திருக்கிறார்' என்று எதிர் அணியினரின் விமர்சனத்தை மொத்தமாகவும் ஒதுக்கிவிட முடியாது. அவர் பரங்கிமலையில் தேர்தலைச் சந்தித்தபோது, அவர் தன் பிறந்த தேதியை வேட்பாளர் மனுவில் குறிப்பிடவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அப்போதுதான் இந்த 1917 விவகாரம் வெளியுலகுக்குத் தெரியவந்தது. நம்முடைய தேடல், அவர் எப்போது பிறந்தார் என்பதல்ல. அவர் சினிமாவில் வலுவாகக் காலூன்றியபோது அவருக்கு வயது 44-க்குமேல் இருக்கலாம். ஏனென்றால், ‘மர்மயோகி’ வெற்றிபெற்ற பிறகும்கூட 1952, 1953-ம் ஆண்டில் வெளிவந்த படங்களைக் காட்டிலும் 1954-ம் ஆண்டில் ‘மலைக்கள்ளன்’ வெளியான பிறகுதான் அவருக்கு தொடர் வெற்றிகள் குவிந்தன.

‘மலைக்கள்ள’னுக்குப் பிறகு

தமிழுக்கு ‘வெள்ளித் தாமரை’ விருது வாங்கித் தந்த படமும், தமிழ் தவிர தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளிவந்து வெற்றிவாகை சூடியதுமான ‘மலைக்கள்ளன்’ குறித்து, பிறகு விரிவாகப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர்., தமிழ் திரையுலகின் வசூல் சக்கரவர்த்தியாக, வெற்றி நாயகனாக மாறியபோது எதிர்ப்பும் அதன் கூடவே வந்தது. ஆரம்பம் முதல் அவரை ‘கிழவன்’ என்றே பலரும் விமர்சித்தனர். தங்கள் பேச்சில் எம்.ஜி.ஆரைக் `கிழவன்' என்றே குறிப்பிட்டனர். வசனமும் நடிப்பும் இளமையும் திரைத் துறைக்கு முக்கியம் எனக் கருதியவர்கள், காதல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மட்டுமே எம்.ஜி.ஆர் முக்கியத்துவம் அளிப்பதாகக் கருதி, அவரை கடுமையாக விமர்சித்தனர். ‘நேற்று இன்று நாளை’ படம் எடுத்த அசோகன்கூட, ‘கிழவன் ரொம்ப இழுத்தடிக்கிறான்’ என்று சொன்னது, எம்.ஜி.ஆர் காதுகளுக்கு எட்டிவிட்டது. ஆக, திரையுலகில் வெற்றிபெற்ற நாள் முதல் எம்.ஜி.ஆர், ‘கிழவன்’ என்ற விமர்சனத்துக்கு ஆளானார். அதை அவர் எதிர்கொண்டவிதம் ஆச்சர்யமானது. 

`மீனவ நண்பன்' வரை [முதலமைச்சராகும் வரை]

எம்.ஜி.ஆர் எப்போதும் எந்தப் பேட்டியிலும் பேச்சிலும் தன் வயதைக் குறிப்பிட்டுச் சொல்ல மாட்டார். ‘அது உங்களுக்கே தெரியும்’ என்று பொதுவாகச் சொல்லிவிடுவார். ஆனால், தன் ரசிகர்களின் ஆதரவு தனக்கு இருப்பதை அழுத்தமாகச் சொல்லி விமர்சனக்காரர்களின் வாயை மூடிவிடுவார். அதேவேளையில், படத்தில் இளமையாகத் தோன்றுவதற்கு என்னென்ன தேவையோ அவற்றை மிகச்சரியாகச் செய்துவிடுவார். அந்த வகையில் தன் பிம்பம் சிதையாமல் பார்த்துக்கொள்வார். தன் திரைப் பிம்பம் வெறும் மாயை அல்ல, அதில் உண்மையும் உண்டு என்பதை அவ்வப்போது வெளியே வரும் வேளைகளில் சில வீரதீர சாகசங்களை நிறைவேற்றி உறுதிப்படுத்திவிடுவார். 

அவர் தன் எதிரிகளோடு போராடி ஜெயித்த அதே வேளையில், தன் வயதோடும் வயோதிகத்தின் பலவீனங்களோடும் போராடி ஜெயித்தார். `மீனவ நண்பன்’ [1977] படத்தில் கடற்கரை மணலில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் வாள் சண்டைபோடும் காட்சி எடுக்கப்பட்டது. ஒரு ஷாட் முடிந்ததும் ஓரமாகப் போய் அமைதியாக நின்றுகொள்வார். அவருக்கு மூச்சுவாங்குவது மற்றவருக்குத் தெரியாமல் இருப்பதற்காக அவர் இவ்வாறு சிறிது நேரம் யாரோடும் பேசாமல் நிற்பாராம். `மீனவ நண்பன்’, எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு 1977-ம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது அவர் கிட்டத்தட்ட எழுபது வயதை எட்டியிருந்தார்.

கட்டுடல் பராமரிப்பில் தொடர் முயற்சி

எம்.ஜி.ஆர் ., வயதான காலத்திலும் தனக்கு வாய்ப்பு வந்தால் அதற்கு, தான் தகுதி உடையவனாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறு வயதிலேயே குஸ்தி, சிலம்பம், பளுதூக்குதல். உடற்பயிற்சி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். ஐசோமெட்ரிக் பயிற்சிக்குரிய கருவி வாங்கக் காசு இல்லாத காரணத்தால், ஒரு மரத்தில் குனிந்து சாய்ந்து நின்று அந்தப் பயிற்சியைச் செய்து வயிற்றையும் மார்பையும் வனப்பாக வைத்திருந்தார். பளுதூக்குவதில் சாண்டோ சின்னப்பா தேவர் மற்றும் நம்பியாரைத் தோற்கடிக்கும்வகையில் அதிக பளுதூக்கிக் காட்டுவார். இதனால்தான் ‘அன்பே வா’ படத்தில் ‘ஃபைட்டிங் புல்’ என்ற வீரரை அவரால் உயரே தூக்கி கீழே எறிய முடிந்தது. வேறு பல சண்டைக் காட்சிகளிலும் அவர் வில்லனையும் ஸ்டன்ட் ஆள்களையும் முதுகில் தூக்கி கீழே எறிவது அவருக்கு சிரமமில்லாமல் இருந்தது. 

எம்.ஜி.ஆர் பெரிய நடிகர் ஆனதும், வடபழனியில் இடம் வாங்கி அங்கு மணல் கொட்டி தன் ஸ்டன்ட் நடிகர்களை வீர விளையாட்டுகளில் பயிற்சி பெறவைத்தார். இன்று அந்தத் திடல் அவர் பெயரில் `ஜானகி ராமச்சந்திரன் கலாலயம்' [ஜே. ஆர். கே] என்ற பள்ளிக்கூடமாக மாறியுள்ளது. தன்னைபோல தன் ஸ்டன்ட் பார்ட்டியும் தினமும் வீர விளையாட்டுகளில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் இருக்கவேண்டும் என்பதில் அக்கறைகாட்டினார். அவர்களுக்கு திருமங்கலத்தில் 48 வீடுகள் கட்டித்தரவும் முன்வந்தார். ஆனால், அவர்கள்தான் `அந்தப் பகுதி சிட்டியைவிட்டு தூரமாக இருக்கிறது' என மறுத்துவிட்டார்கள். 

யானைக்கவுனி பகுதியில் அவர் வாழ்ந்தபோது செய்த பயிற்சிகளை, தன்னுடன் சண்டைபோடும் சங்கர் போன்ற ஸ்டன்ட் நடிகர்கள் தொடர்ந்து செய்து பழக வேண்டும் என வலியுறுத்திவந்தார். அவர்களுக்கும் ஸ்டன்ட் திறமைகளை வளர்த்துவிட்டு அவர்களாலும் தனது சண்டைக்காட்சிகள் பிரமாதமாக அமையும்படி பார்த்துக்கொண்டார்.  கடின முயற்சிகளை மேற்கொண்டு, எம்.ஜி.ஆர் தன் முதுமையை வென்று காட்டினார். இந்த வகையில் அவர் விதியை தன் மதியால் வென்றார்.

சுட்டதால் வந்த இளமை!

‘பட்டுச்சேலை காத்தாட...’ பாடல், மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து மாலைக்குள் ஷூட் செய்த பாடல். அதில் நடித்த எம்.ஜி.ஆர் ‘நான் ரொம்ப குண்டா இருக்கிறேன்ல’ என்று இந்தப் பாடல் காட்சியைப் பார்த்துச் சொன்னாராம். இவ்வாறு தன் உடல் எடைகுறித்து கவலைப்பட்ட எம்.ஜி.ஆருக்கு, உடல் எடை குறைப்பு தானாகவே ஏற்பட்டது. அதுதான் கடவுள் அளித்த கொடை. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையில் தங்கி இருந்த எம்.ஜி.ஆர் வீடு திரும்பியதும், அவர் எடை குறைந்து இளமைத் தோற்றத்துடன் காட்சியளித்தார். 

ஜெயலலிதாவுடன் நடிக்க உயரத்திலும் தோற்றத்திலும் நிறத்திலும் பொருத்தமாகத் தோன்றினார். ‘காவல்காரன்’ ஷூட்டிங்கில் கலந்துகொண்டபோது, அவரைப் பார்த்தவர்கள் இருபது வயது குறைந்ததுபோல தோன்றியதைச் சுட்டிக்காட்டி மகிழ்ந்தனர். கடைசிவரை தன் எடை கூடாமல் பார்த்துக்கொண்டார். இப்படி இயற்கை அவ்வப்போது அவருக்கு சில வரங்களை அனுகூலமாக அளிக்கும். அது அவரது முற்பிறவி பலனோ அல்லது அவரது கொடையின் பலனோ தெரியவில்லை.

தலைமுடி பராமரிப்பு

எம்.ஜி.ஆர் படங்களில் விதவிதமான விக் வைத்திருப்பார். அவர் ஹேர்ஸ்டைலைப் பார்த்தவுடனேயே, ‘இது இந்தப் படம்’ எனச் சொல்லிவிடலாம்.  சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில், அவருக்கு தலைமுடியில் முன்பக்க கர்லிங் வரவேண்டும் என்பதற்காக அடுப்பில் கம்பியைக் காயப்போட்டு முடியில் நெட்டு நெட்டாக சூடு வைப்பாராம். இதனால் அந்த முடி சூடுபட்ட இடத்தில் கருகி, அதற்குமேல் வளராமல் நின்றுவிடும். இதை இப்போது `ஃபயரிங் டெக்னிக்' என்கின்றனர். அவருடைய வறுமையும் தொழில் பக்தியும்தான் இதுபோன்ற விஷப் பரீட்சைகளுக்கு இட்டுச்சென்றன. இவ்வாறு சூடு வைத்ததால், அவருக்கு தலைமுடி அவர் நினைத்தவகையில் அமையவில்லை. அங்கங்கே எரிந்து வளராமல் நின்றுவிட்டது. 

இதனாலும் முன் வழுக்கை விழத் தொடங்கியதாலும், அவர் ‘திருடாதே‘ படம் முதல் தொடர்ந்து விக் வைத்துக்கொள்ள தொடங்கினார். வெளியே விழாக்களுக்கு வரும்போது நிஜ முடியுடன்தான் வந்தார். ‘அடிமைப்பெண்’ வெற்றி விழாவுக்கு வரும்போது தலையில் புஷ்குல்லா வைக்க ஆரம்பித்திருந்தார். மொத்தமாக வழுக்கை விழுந்து விக் வைத்துக்கொள்வதற்குப் பதிலாக ஆரம்பத்திலேயே விக் வைத்து விதவிதமாக முடியலங்காரம் செய்துகொள்வது புத்திசாலித்தனமானது என்று எம்.ஜி.ஆர் கருதியிருக்கலாம். 

இளமை உணர்வு

‘ஓர் ஆண், இளமையாக உணரும் வரை இளமையாக இருக்கிறான். ஒரு பெண்ணோ, இளமையாகத் தோன்றும் வரை இளமையாக இருக்கிறாள்’ என்பர். அதுபோல எம்.ஜி.ஆர் தான் படங்களில் நடிக்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் தோற்றத்திலும் தான் இளைஞன் என்பதை உறுதிப்படுத்தும்விதமாகக் காட்டுவார். `அடிமைப்பெண்’ படத்தில் ராணி பவளவல்லி அவருக்கு தண்டனை கொடுக்கும் காட்சியில் அவர் ஆர்ம்ஸ் காட்டுவதை ரசிப்பதற்காக பலமுறை அந்தப் படத்தைப் பார்க்க திரை அரங்குக்குப் போனதாக கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதுபோன்ற காட்சிகள் இளைஞர்களைக் கவரும் என்பதால், எம்.ஜி.ஆர் இவற்றில் அதிக அக்கறை காட்டுவார். அரங்கில் இந்தக் காட்சிக்கு அதிக கரகோஷமும் ஆர்ப்பரிப்பும் இருக்கும். பாடல் காட்சி ஒன்றில்கூட எம்.ஜி.ஆர் சும்மா நிற்க மாட்டார். தனது காட்சி எதையும் வீணாக்க மாட்டார். ஒவ்வொரு காட்சியும் தனக்கு அனுகூலமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். இதை எடிட்டிங்கில் தானே ஈடுபடுவது மூலம் சாதித்துக்காட்டுவார்.

‘வேட்டைக்காரன்’ படக் காட்சிகளில் இவருடைய துள்ளல் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். `மதுரை வீரன்' படத்தில் பொம்மியை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய பிறகு டி.எஸ்.பாலையாவிடம் கேலி பேசும்போது அவர் துள்ளலும் குதியாட்டமும் அவர் வயதை மறைத்துவிடும். இந்தக் காட்சியை எதிரியும் வெகுவாக ரசிப்பர். அதுவும் அவர் சிரித்துக்கொண்டே இரண்டு கால்களையும் சேர்த்து ஒரு குதி குதிப்பார் பாருங்கள். அந்த முகபாவம், கலகலவென்ற சிரிப்பு. உண்மையில் ஒரு வாலிபன் அந்த இடத்தில் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பான். அவ்வளவு பொருத்தமான, உற்சாகச் சித்திரிப்பு மற்றும் காட்சியமைப்பு. 

எம்.ஜி.ஆர் டான்ஸ் மூவ்மென்ட்டுகளில் அவர் மண்டிபோட்டு ஆடும் ஸ்டெப்ஸ் மற்றவர்களைவிட அவரை வித்தியாசமாகக் காட்டும். இது வயதானவர்களால் போட முடியாத கடினமான ஸ்டெப்கள். அவர் மிகவும் எளிதாகப் போட்டுவிடுவார். இதனால் அவர் நிஜ வயதை மறக்கடிக்கச் செய்யும் வகையில் இளமை உணர்வை ஏற்படுத்துவார். அவர் படங்களில் பல்வேறு விசேஷ அம்சங்களுடன் நடனக் காட்சிகள் அமைக்கப்பட்டாலும், அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பவை அவரது விரைவான உடல் அசைவும் துறுதுறுப்பும் சிரித்த முகமும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவ்வாறு முகம், உடல் அசைவு, துறுதுறுப்பு என அனைத்து அம்சங்களும் இளமையாக இருக்கும்படி பார்த்துக்கொண்டதுதான் அவரை இளைஞராக உணர்த்தியது. 

எம்.ஜி.ஆர், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை தானே பல முறை இயக்குவதன் ரகசியம், தன் இளமைத் தோற்றத்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதுதான். அவர் கேமரா கோணம், எடிட்டிங் போன்ற விஷயங்களை ஆரம்ப காலத்திலிருந்தே தெரிந்துவைத்திருந்ததால், தன் காட்சிகளைச் சிறப்பாகக் கொண்டுவருவதில் அவர் தேர்ச்சிபெற்றிருந்தார். தன் தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவர் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுத்ததே இல்லை. தன்னை பற்றிய தவறான இமேஜை ஏற்படுத்தும் படங்களை, செய்திகளை யாராவது வெளியிட்டால், அவர்களை உண்டு இல்லை எனச் செய்வதிலும் அவர் தயங்கியதேயில்லை. எதிரிகளை ஒடுக்கிவைப்பதில், அவர் கடைசிவரை கவனமாகவே இருந்தார். அவர் எது செய்தாலும் அது சரியாக இருக்கும் என்று நம்பும் மக்களும், அவருக்கு ஆதரவாக நின்றனர். 

புறநானூற்று பாடல் ஒன்றில், ‘மன்னன் கரிகாலன், பகைவனுக்கு சுட்டெரிக்கும் சூரியனாகவும்... நண்பருக்கு குளிர் தரும் நிலவாகவும் விளங்கினான்' என்று புலவர் பாராட்டி பாடியிருப்பார். அதுபோல எம்.ஜி.ஆரும் ‘மர்மயோகி’ படத்தில் ``கரிகாலன், குறிவைத்தால் தவற மாட்டான்; தவறும் என்றால் குறிவைக்க மாட்டான்’’ என்று பேசிய வசனம், படத்துக்கு மட்டும் பேசிய வசனம் அல்ல; அவர் தன் வாழ்விலும் ஒரு மாமன்னனைப்போலவே வாழ்ந்தார்.

தோற்றப் பொலிவு

எம்.ஜி.ஆர் தன் இமேஜைக் காப்பாற்றுவதில் காட்டிய கவனங்களில் உடை தேர்வும் முக்கியமானது. அவர் தன் முண்டா தெரியும்வண்ணம் கையை இறுக்கமாக வைத்து சட்டை போடுவார். எதிர் அணியினர், ‘ஜாக்கெட் போட்டிருக்கிறார்’ எனக் கேலி செய்தாலும், அது பற்றி கவலைப்பட மாட்டார். பேன்ட்டை உயர்த்திப்போடுவார்; இறக்கிப்போட மாட்டார். இதனால் அவருக்குக் கடைசி வரை தொந்தி விழவில்லை. உடற்பயிற்சியோடு உடை உடுத்தும் பாங்கும் ஒருவரின் தோற்றப்பொலிவுக்கு முக்கியம் என்பதை அவர் நன்கு உணர்ந்து அதன்படி செயல்பட்டார். 

இடுப்பில் அரைஞாண் கயிறு கட்டுவதால், ஹெர்னியா பாதிப்பு வராமல் தவிர்க்கலாம் என்று நம் பெரியவர்கள் சொல்வதுண்டு. அதுவும் ஃபேமிலி ஹிஸ்டரி இருப்பவர்கள் நிச்சயமாக இதைப் பின்பற்றுவது நல்லது. இப்போது பேன்ட்டை மிகவும் இறக்கிப் போட்டு தொப்பை விழவைத்துவிட்டனர். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாழ வேண்டும் என்பது உணவுக்கட்டுப்பாட்டை மட்டும் அல்ல, இடுப்பில் இறுக்கிக்கட்டும் உடை கட்டுப்பாட்டையும் சேர்த்து சொல்லும் முதுமொழி.

பாடலும் உடையும்

1964, 65, 66-ம் ஆண்டுகளில் வந்த படங்களில் எம்.ஜி.ஆர் பாடல் காட்சிகளில் காலர் வைத்த டி-ஷர்ட் போட்டிருப்பார். இதை அவர் தனது ஸ்டைலாகவே பின்பற்றினார். `எனக்கொரு மகன் பிறப்பான்’ பாடல், ‘ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்...’ பாடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்த டி-ஷார்ட், அவரது கழுத்துச் சுருக்கத்தையும் மறைத்தது. உடம்பையும் கட்டுடலாகக் காட்டியது.  

பாடலாசிரியர்களையும் தன் இளமைத் தோற்றத்தை வர்ணிக்கும் பாடல்களை எழுதும்படி கவனித்துக்கொண்டார். இவர் படத்துக்குப் பாடல் எழுதும்போது பாடலும் பிரபலமானது; அதிக பணமும் கிடைத்தது. அதனால் பலரும் இவர் சொல்படி கேட்டனர். பணமும் புகழும் ஒருசேரக் கிடைக்கும்போது, மறுத்துச் சொல்ல எவருக்கும் மனம் வராது. அப்படி மறுத்தாலும் அவருக்குத்தான் நஷ்டமே! 
கண்ணதாசன் ‘குடும்பத்தலைவன்’ படத்தில் இவருக்காக எழுதிய,  
`கட்டான கட்டழகு கண்ணா - உன்னைக் 
காணாத பெண்ணும் ஒரு பெண்ணா?’
பாடல் வரிகளும் `நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் இவருக்காக எழுதிய
`தேக்கு மரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது’ பாடல் வரிகளும் 
கவிஞர் முத்துலிங்கம் ‘மீனவ நண்பன்’ படத்தில் இவருக்கு எழுதிய 
`தங்கத்தில் முகம் எடுத்து
சந்தனத்தில் உடல் எடுத்து’ பாடல் வரிகளும் இவரது உடல் உறுதியை எடுத்துக் கூறுவதாக அமைந்தன. இவ்வாறு தன் படத்தில் பணியாற்றும் ஆள்களை தனக்கு ஏற்றபடி வளைக்கத் தெரிந்தவராக எம்.ஜி.ஆர் இருந்தார்.

ஜோடி நடிகைகள்

எம்.ஜி.ஆர்., திருமணமான நடிகைகளை பெரும்பாலும் தனக்கு ஜோடியாகப் போடுவது கிடையாது. பானுமதி, சாவித்திரி இருவரும் அதற்கு விதிவிலக்கு. பானுமதியோடு அவரை ஜோடியாகப் போட்டபோது, பானுமதி திரையுலகில் உச்சத்தில் இருந்தார். அப்படியிருந்தும் அவரை தன் படமான ‘நாடோடி மன்னன்’ படத்தில் பாதியிலேயே நீக்கிவிட்டார். ‘மகாதேவி’ படம் கதையின் நாயகிக்கு அதிக வெயிட்டேஜ் கொடுத்த காரணத்தால், சாவித்திரியை தயாரிப்பாளர் கண்ணதாசன் புக் செய்தார். சிவாஜி ரசிகர்கள் `எங்கள் நடிகையர் திலகம் சாவித்திரியோடு ஜோடி போட்டு நடிக்க முடியுமா?' என்று சவால்விட்டதற்கு பதில் சவால் விடும்வகையில், `வேட்டைக்காரன்’ படத்தில் நடித்தார். அதில் வெற்றியும் பெற்றார். இரு தரப்பினரும் சவாலுக்குச் சவால்விடும் பழக்கம் இன்றும் இருந்துவருகிறது. கே.ஆர்.விஜயா தானே நெருங்கிவந்து நடிப்பார். மேலும், பெண் ரசிகைகளை ஏராளமாகக்கொண்டவர். குடும்பப்பாங்கான வேடங்களுக்குப் பொருத்தமானவர் என்பதால், அவர் திருமணமான பிறகும் சில படங்களில் எம்.ஜி.ஆர் அவரோடு நடித்தார். பொதுவாக, எம்.ஜி.ஆர் திருமணமான பெண்களைத் தவிர்த்து இளம் பெண்களோடு மட்டுமே நடித்துவந்தது தன் இளமை இமேஜைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் என்பதில் ஐயமில்லை.

‘அரசகட்டளை’ படம் எடுத்து வெளிவருவதற்கு முன்பு சரோஜாதேவி திருமணம் செய்துகொண்டதால், அந்தப் படத்தில் அவரின் கேரக்டரைச் சாகடித்துவிட்டு ஜெயலலிதாவை தன் புதிய ஜோடி ஆக்கிவிட்டார். சரோஜாதேவியின் திருமணத்துக்கு முன்பு இந்தப் படம் வெளிவந்திருந்தால் அவர் முதன்மை கதாநாயகியாகவும் ஜெயலலிதா இரண்டாம் கதாநாயகியாகவும் இருந்திருப்பர். திருமணமாகாத இளம்பெண்களோடு நடித்தால் அது தன் இளமை இமேஜை உயர்த்தும் என்றும் நம்பிய எம்.ஜி.ஆர்., 1970-ம் ஆண்டுக்குப் பிறகு 16 முதல் 17 வயது பெண்களோடு நடிக்க ஆரம்பித்தார். அப்போது ஜெயலலிதா நடித்துக்கொண்டிருந்தாலும், எம்.ஜி.ஆர் அவரை தன் படங்களில் கதாநாயகியாகப் போடாததற்குக் காரணம் ஜெயலலிதா மிகவும் குண்டாகிவிட்டதுதான். ஆளும் குண்டு அதிகாரமும் அதிகம் என்ற நிலையில், அவருக்காக உருவாக்கியிருந்த கதாபாத்திரத்தில் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் சந்திரகலாவை நடிக்கவைத்தார். சந்திரகலாவோ, பாட்டி மாதிரி இருந்தது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இருந்தாலும் இவர்கள் எல்லாரும் துணைக்கருவிகள்தானே. முக்கியமானவர் எம்.ஜி.ஆர் மட்டுமே என்பதால், இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டாலும் மற்ற அம்சங்கள் படத்தை வெற்றிபெற செய்துவிடும்.

வெளியிடங்களில் மனத்துணிவும் உடல்வலுவும்

எம்.ஜி.ஆரை எதிர் அணியினர் ‘டோப்பா தலை’ என்றும் ‘அட்டைகத்தி வீரர்’ என்றும் விமர்சித்தபோதும் அவர் தன் தொழில் உத்திகளை விடாமல் பின்பற்றிவந்தார். திரை பிம்பத்தில் அவர்  மிகவும் கவனமாக இருந்துவரும் அதே வேளையில், அவர் ஒரு நிஜ வீரர் என்பதை உறுதிப்படுத்தும் விஷயங்களும் நிஜ வாழ்வில் அவ்வப்போது நடக்கத்தான் செய்தன. 

ஒரு சமயம் அவர் மதுரைக்கு இரவில் காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது கொள்ளையர்கள் அவரின் காரை வழிமறித்தனர். எம்.ஜி.ஆர்., ‘நீங்கள் கொள்ளையடித்துச் செல்ல என்னிடம் ஏதும் காசு பணம் இல்லை’ என்று சொல்லிப் பார்த்தார். அவருடன் பயணித்த சிரிப்பு நடிகர் தங்கவேலுவுக்கோ ஒரே நடுக்கம். இன்றைக்கு நம்மை இவர்கள் அடித்து உதைக்கப்போகிறார்கள் என அவர் பயந்துவிட்டார். சொன்னதைக் கேட்காமல் கொள்ளையர்கள், ‘காரைவிட்டு இறங்கு’ என்றதும் எம்.ஜி.ஆர் கீழே இறங்கி அவர்களுடன் சண்டைபோட தயாரானார். அவரது துணிச்சலைப் பார்த்து கொள்ளையர்கள் சற்று தயங்கினர். `யார் இவர், பெரிய பயில்வானோ! நாம் இத்தனை பேர் இருக்கிறோம், நம்மை எதிர்க்க முன்வருகிறாரே!' என்று தயங்கி நின்ற வேளையில் அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர், `இவர் எம்.ஜி.ஆர்’ என்பதை கண்டுபிடித்துவிட்டார். பிறகென்ன. மன்னிப்புகேட்டு தலை வணங்கி வழிவிட்டனர்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்பு ஜப்பானில் நடந்தபோது, ஒருவர் சந்திரகலாவிடம் சில்மிஷம் செய்தார். அப்போது எம்.ஜி.ஆர் பட்டென அவரை அடித்துவிட்டார். இது வெளிநாடு என நினைத்து அவர் தயங்கவில்லை. ‘உரிமைக்குரல்’ ஷூட்டிங்கின்போது ஓடிப்போய் இரு திசைகளிலும் பிரிந்து செல்லும் ஒரு மாமரக் கிளையின் நடுவே குதிக்கவேண்டிய ஷாட்டுக்கு டூப் நடிகர் தயாராக இருந்தபோதும் இவர் அவரை கையமர்த்திவிட்டு, தானே ஓடி குதித்தார். இதுபோன்ற ரிஸ்குகளை இவர் எடுத்து பொதுமக்கள் மத்தியில் தன்னை இளமையும் சுறுசுறுப்பும் குறையாதவர் என்று நேரில் நிரூபித்துக்கொள்வார். இது ரிஸ்கான ஷாட் என்பதால், டூப் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயத்தில் இவர் இப்படிச் செய்தது இயக்குநர் ஸ்ரீதருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களின் உற்சாகம் இவரது இமேஜை உயர்த்தியது. எதிரியைத் தேர்ந்தெடுத்தல்

`தனக்கு எதிரியாக இருப்பவன்கூட தனக்குச் சமமாக இருக்க வேண்டும்' என்று ‘சந்திரோதய’த்தில் வசனம் பேசிய எம்.ஜி.ஆர்., அதை தன் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றினார். எதிரியைத் தேர்ந்தெடுத்து தனக்கு அவரை எதிரியாகத் தக்கவைத்துக்கொள்வதிலும் எம்.ஜி.ஆர் கவனமாக இருந்தார். எம்.ஜி.ஆர்-சிவாஜி என திரையுலகிலும் எம்.ஜி.ஆர்-கருணாநிதி என அரசியலிலும் தன் எதிரிகளை அவர் வரைமுறைப்படுத்திக்கொண்டார். தன் சக்தியை இவர்களை நோக்கியே செலுத்தினார். தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில்முறை எதிரிகள் என்பதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படி செய்தார்.  சில சமயம் இந்த எதிரித்தனம்கூட போலியானதோ என நினைக்கும்படி இவர்களின் நடவடிக்கைகள் இருந்தன. 

ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி போன்றோர் எம்.ஜி.ஆரை எதிர்த்து நாவல்கள் எழுதியபோது, இவர் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் துறைக்கும் நமது துறைக்கும் தொடர்பில்லை என விலக்கிவிட்டார். அவர்கள் நிஜத்தில் நடப்பதைத்தானே எழுதுகிறார்கள் என்று அவர்களை அலட்சியப்படுத்திவிட்டார். ஆனால், பத்திரிகையாளரிடம் இவர் மேம்போக்காக இல்லை. அவர்களிடம் தன் விஷயத்தில் கடுமையாகத்தான் நடந்துகொண்டார். எம்.ஜி.ஆர்., தான் சாதிக்கவேண்டிய திறமை பெற்றிருக்கும் துறைகளில் மட்டும் அதீத கவனம் செலுத்தி தன் நோக்கு நிலையை ஒருமுகப்படுத்தி எதிரிகளின் சவால்களை எதிர்கொண்டார்.

இவ்வாறு பல விஷயங்களிலும் எதிரிகளை வீழ்த்தும் வழிமுறைகளை தொடர்ந்து கையாளுவதில் இவர் மிகவும் கவனமாக இருந்தார். திரையிலும் நிஜத்திலும் தம்மை ஒரே மாதிரி காட்டிக்கொண்டதால், எதிரிகள் இவரை கடைசி வரை ஜெயிக்கவில்லை.