Published:Updated:

“ ‘கரகாட்டக்கார’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா!” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி

“ ‘கரகாட்டக்கார’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா!” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி
“ ‘கரகாட்டக்கார’னில் குஷ்பு, ‘சின்னத்தம்பி’யில் கனகா!” ஃப்ளாஷ்பேக் சொல்லும் ராம்கி

‘1980களில் நான், ஆபாவாணன், அருண் பாண்டியன்னு பலர் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் படிச்சுட்டு ஒன்னா சினிமாவுக்கு வந்தோம். திரைக்கு வரும் முன்னே என் படத்துக்கு நீதான் ஹீரோனு எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருந்துச்சு. மாமா, மச்சான்னு ரொம்ப க்ளோஸா இருந்தோம். இப்பவும் அப்படிதான். நான் அசிஸ்டென்ட், அசோஸியேட் டைரக்டராகவும் வேலை செஞ்சிருக்கேன். சொல்லப்போனா, ஷூட்டிங் ஸ்பாட்ல ட்ராலி தள்ளுறதில் இருந்து எல்லா வேலைகளையும் பாத்திருக்கோம். 'செந்தூரப் பூவே', 'இணைந்த கைகள்', 'ஊமை விழிகள்' இது எல்லாமே நல்ல அனுபவத்தை கொடுத்துச்சு. எங்களோட உழைப்பு மேலயும், ‘இவங்க ப்ளான் பண்ணினபடி முடிச்சிடுவாங்க’ என்னுற நம்ம்பிக்கை மற்றவர்களுக்கு வந்துச்சு. இப்பதான் எல்லாமே செட்டிங், கிராஃபிக்ஸ்னு டெக்னாலஜி எங்கயோ போயிடுச்சு. ஆனா, டெக்னாலஜி பண்ற பல வேலைகளை அப்ப நாங்கதான் பார்த்தோம்...” மலரும் நினைவுகளை சுவாரசியமாகப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் ராம்கி. இப்போது, ‘இங்கிலீஷ் படம்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். 
 

“நீங்க பரபரப்பா நடிச்சிட்டு இருந்த நாளையும் இன்றைய சினிமாவையும் எப்படி பார்க்குறீங்க?”

'சினிமா நிச்சயம் அடுத்தடுத்த லெவலுக்கு போயிட்டு இருக்கு. ஆனா, ஃப்ரண்ட்ஷிப் அதே மாதிரிதான் இருக்கு. பாபி சிம்ஹா, நலன் இவங்கலாம் ஒரு க்ரூப்பாதான் இருக்காங்க. ஆனா, இதுக்கு எல்லாம் ஆரம்பம் நாங்கதான். இப்போ நிறைய திறமைசாலிகள் திரைத்துறைக்குள்ளே வந்துட்டே இருக்காங்க. அப்போலாம் எடிட்டிங் ரொம்ப சிரமமா இருக்கும். 'இணைந்த கைகள்' படத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போ லேப்டாப்லயே எடிட் பண்ணிக்கலாம். சுயமா திறமையும் உழைப்பும் இருந்தா உறுதியா சினிமாவில ஜெயிச்சுடலாம். அதே நேரத்துல, இப்போ போட்டிகள் அதிகமாயிருச்சு. அதிர்ஷ்டத்துல எல்லாம் மேல வரவே முடியாது. உழைத்தால் மட்டுமேதான் அடுத்த லெவலுக்கு முன்னேற முடியும்.'

“இடையில் ஒரு சின்ன இடைவெளி. அப்ப என்னமாதிரியான வேலைகள் போயிட்டு இருந்துச்சு?”

‘எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது. அந்த அளவுக்கு சினிமாவை நேசிச்சு உள்ள வந்தேன். எல்லாருடைய கரியர்லையுமே க்ராஃப் ஏற்ற இறக்கத்துல மாறிமாறிதான் இருக்கும். இதுவரை 80 படங்கள் பண்ணிருக்கேன். அந்தமாதிரி ஆகுறது சகஜம்தான். நம்ம ஒரு கம்பெனிக்காக தேதி கொடுத்திருப்போம், அப்போ இன்னொரு கம்பெனியில இருந்து கால்ஷீட் கேட்பாங்க. இந்த மாதிரியான விஷயங்களால்தான் அந்த இடைவெளி. 'என்னதான் எண்ணெய தேய்ச்சுகிட்டு உருண்டாலும் ஒட்ற மண்ணுதான் ஒட்டும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க. அது மாதிரி கிடைக்குற வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்திகிட்டா போதும். ‘ 'கரகாட்டக்காரன்' படத்துல குஷ்பூ, நிரோஷா நடிக்க வேண்டியதா இருந்ததாம். அதேமாதிரி, 'சின்னதம்பி'யில் முதலில் குஷ்பு கேரக்டரில் நடிக்கிறதா இருந்தவர் கனகா. ஆனால் மாறியதற்கு காரணம் தேதி பிரச்சனைதான். மத்தபடி நான் இதை பெருசா எடுத்துக்கிறது இல்லை.'

“ஆபாவாணன், அருண்பாண்டியனுடன் இன்னும் நெருங்கிய நட்பில் இருக்கிறீர்களா?”

‘‘சினிமாவுக்கு வரும் முன்னால் எப்படி ஜாலியா மாமா, மச்சான்னு பேசிட்டு நெருக்கமா இருந்தோமோ இப்பவும் அப்படித்தான் இருக்கோம். அதே கேங்க், அதே அன்பு. இது எப்பவும் மாறாது.”

“விஜயகாந்த், சரத்குமார் என்ன சொல்றாங்க?”

‘சரத்குமார் உண்மையில் கடின உழைப்பாளி. நல்ல தலைமைப் பண்பு உடையவர். எது செஞ்சாலும் கூட இருக்கிறவங்க எல்லாரும் நல்லாயிருக்கணும்னு யோசிச்சுதான் செய்வார். எப்படி இப்படி தெளிவா இருககார்’னு அவரைப் பார்த்து நிறையமுறை ஆச்சர்யப்பட்டு இருக்கேன். அதேபோல, கேப்டன் விஜயகாந்த் ஒரு குழந்தை மாதிரி. ஏதாவது ஃபன் பண்ணிட்டே இருப்பார். உதவி பண்ணனுங்கிற மனப்பான்மை உடையவர். நல்ல கதை இருந்தா அவர் ஆஃபீஸுக்கு போனால் நிச்சயம் வாய்ப்பு கொடுப்பார். எப்பவும் அவர் ஆபீஸ்ல 25 முதல் 40 பேர் இருந்துட்டே இருப்பாங்க. இப்படி கேப்டன், சரத் இரண்டுபேருமே எனக்கு மிகவுஜ்ம் நெருக்கமானவர்கள்தான்.' 
 

“நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அன்ட் கோவின் நடவடிக்கைகள் திருப்தியளிக்கிறதா?”

‘உண்மையாவே, நிறைய நல்ல விஷயங்கள் பண்றாங்க. கடுமையா உழைக்கிறாங்க. அவங்களுக்கு இருக்கிற ஷூட்டிங் பரபரப்புக்கு இடையிலும் இவ்வளவு விஷயங்கள் பண்றது பெரிய விஷயம். அதிலும், நடிகர் சங்க கட்டடம், நாடகக் கலைஞர்களுக்கு உதவினு நல்ல ஐடியாஸ் வெச்சுட்டு பண்ணிட்டு இருக்காங்க.”

“உங்க மனைவி நிரோஷா இப்போ என்னென்ன படங்கள் பண்ணிட்டு இருக்காங்க?”

“நிரோஷா தெலுங்கு படங்கள்ல நடிச்சுட்டு இருக்காங்க. தமிழில்ல விக்னேஷ் சிவன் டைரக்‌ஷன்ல சூர்யாக்கூட 'தானா சேர்ந்த கூட்டம்' படத்துல நடிக்கிறாங்க. நான் 'வேட்டை நாய்', 'அட்டி', 'இங்கிலீஷ் படம்'னு சில படங்கள்ல முக்கியமான கேரக்டர்கள் பண்ணிட்டு இருக்கேன். தவிர, 'ஆஹத்தாய்'னு ஒரு தெலுங்கு படமும் பண்ணிட்டு இருக்கேன்.’