Published:Updated:

“மயிலுக்கு நிஜத்துல இன்னும் கல்யாணமாகலை!” ‘ஆதித்யா’ அகல்யா

“மயிலுக்கு நிஜத்துல இன்னும் கல்யாணமாகலை!” ‘ஆதித்யா’ அகல்யா
“மயிலுக்கு நிஜத்துல இன்னும் கல்யாணமாகலை!” ‘ஆதித்யா’ அகல்யா

“அஞ்சு வருஷமா ஆங்கரா இருந்திருக்கேன். இப்போதான் நல்ல அங்கீகாரம் கிடைச்சுட்டிருக்கு. அதுக்கு, நான் நடிக்கும் 'மாமோய் நீங்க எங்க இருக்கீங்க' நிகழ்ச்சி, பெரிய அளவில் ரீச் கொடுத்திருக்கு" - உற்சாகமாகப் பேசுகிறார் ஆதித்யா சேனல் ஆங்கர், அகல்யா. 

“மீடியா வருகை எப்போது ஆரம்பிச்சது?" 

"சென்னைப் பெண்ணாகிய எனக்கு சின்ன வயசிலிருந்தே மீடியா மேலே பெரிய ஈர்ப்பு. பி.எஸ்ஸி படிக்கிறப்போ ஃப்ரெண்ட்ஸ் பலரையும் ஏதாவது சொல்லி கலாய்ச்சுட்டே இருப்பேன். 'நீ ஆங்கரிங் ட்ரைப் பண்ணுடீ'னு உசுப்பேத்துவாங்க. ஒரு பொங்கல் பண்டிகை சமயம், இமயம் சேனலிலிருந்து வந்து, எங்க காலேஜ் கல்சர் புரோகிராமை கவர் பண்ணினாங்க. ஆடல், பாடல், காமெடினு நான் ஆல்ரவுண்டரா கலக்கினதைப் பார்த்து, ‘எங்க சேனலுக்கு வந்து பாருமா'னு சொன்னாங்க. செகண்ட் இயர் படிக்கிறப்போ, அந்த சேனலின் 'இன்பாக்ஸ் லைவ்' நிகழ்ச்சி மூலமாக மீடியாவில் என்ட்ரி கொடுத்தேன்.” 

“ஆதித்யா சேனலுக்கு எப்படி வந்தீங்க?" 

"இமயம் சேனலைத் தொடர்ந்து, 'ராஜ் மியூசிக்', 'புது யுகம்' சேனல்களில் வொர்க் பண்ணினேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி, ஆதித்யா சேனலுக்கு வந்தேன். என் முகம் பலருக்கும் தெரிஞ்சது. காமெடி சேனல்களில் பெண் ஆங்கர்ஸ் பங்களிப்பு குறைவாகத்தான் இருக்கு. ஆண் ஆங்கர்களுக்கு டப் ஃபைட் கொடுத்து, பெண் ஆங்கர்ஸ் திறமைகளை வெளிப்படுத்தறோம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லா ரசிகர்களையும் கவரும் பலம் காமெடி சேனலுக்கு இருக்கு. இப்போ, 'வலைச் சிரிப்பு', 'ஆதித்யா திருவிழா', பண்டிகை கால நிகழ்ச்சிகள் என பிஸியா வொர்க் பண்ணிட்டிருக்கேன்." 

" 'மாமோய் நீங்க எங்க இருக்கீங்க' மயில் பற்றி சொல்லுங்க..." 

“ 'டாடி எனக்கு ஒரு டவுட்', 'கொஞ்சம் நடிங்க பாஸ்'னு ஆதியா சேனலில் மாசத்துக்கு ஒரு புது ஸ்கிரிப்ட் பண்ணுவோம். விளம்பர நேரத்தில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சிக்கு ஆடியன்ஸ் வரவேற்பு அதிகம். அப்படி எங்க பாஸ் ஜாலி வசந்த்தின் பிளானில் உருவானதுதான், 'மாமோய் நீங்க எங்க இருக்கீங்க'. என்னோடு ஜோடியா நடிக்கும் 'டவுட்' செந்திலுக்கும் எனக்கும் ஸ்மூத்தா ஆரம்பிக்கும் உரையாடல், கொஞ்ச நேரத்துல எங்கிட்ட அடிவாங்குற மாதிரி மாறும். சில நேரத்தில் ரியாலிட்டி தூக்கலா இருக்கணும்னு செந்திலுக்கு நிஜமாகவே அடி விழும். வாரத்தில் மூணு எபிசோடு ஷூட் பண்ணுவோம். அதில், ரெண்டு நாளைக்கு ஒரு எபிசோடு பிரேக் டைமில் ஒளிபரப்பாகும். இப்போ 150 எபிசோடு கடந்து சூப்பரா போயிட்டிருக்கு. எங்கே போனாலும், 'நீங்கதானே மயிலு. அந்தப் பையனை ஏம்மா இப்படி அடிக்கிறே. புரோகிராம் நல்லா இருக்கு'னு கமென்ட்ஸ் பண்ணுவாங்க. இதுநாள் வரை என்னை ஆங்கர்னு சொன்னவங்க, இப்போ பர்ஃபாமர்னு சொல்றாங்க. நடிப்புக்காக என் ஜோடியை அடிச்சாலும், நிஜத்தில் மயிலுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்க." 

“சினிமாவிலும் நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களோ...” 

“ஆரம்ப காலத்திலிருந்து எப்பவும் என் பெஸ்டை கொடுத்துட்டுதான் இருக்கேன். இதுக்கு முன்னாடி சரியான புகழ் கிடைக்கலையேனு நான் ஃபீல் பண்ணினதே இல்லை. எதுக்கும் சரியான நேரம் அமையணுங்கிறதை நம்புறேன். 'மாமோய் நீங்க எங்க இருக்கீங்க' நிகழ்ச்சி மூலமாக சினிமா வாய்ப்பு கிடைச்சிருக்கு. அசோக் செல்வன் ஹீரோவா நடிக்கும் 'நெஞ்சமெல்லாம் காதல்' படத்தில் காமெடி ரோலில் நடிச்சிருக்கேன். மனோரமா, 'கோவை' சரளாவுக்கு அடுத்து தமிழ் சினிமாவில் பெண் காமெடியன்ஸ் பங்களிப்பு ரொம்ப குறைவாகவே இருக்கு. திறமை இருந்தும் நிறையப் பெண் காமெடி கலைஞர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காம இருக்கிறது வருத்தமா இருக்குது. அந்த நிலையை மாற்றணும்னு ஆசை.” 

"அஜித் படத்தில் நடிக்கிறதும் உங்க பெரிய ஆசையாமே..." 

"ஆமாம்! நான் தலயோட மிகப் பெரிய ரசிகை. என் காரில் அவர் போட்டோவை ஒட்டிவெச்சிருக்கேன். அவரின் தங்கச்சியா நடிக்கிறது என் வாழ்நாள் ஆசை. தொடர்ந்து காமெடி ரோலில் கலக்குவேன்.'' எனப் புன்னகைக்கிறார் அகல்யா.