Published:Updated:

“ஒரு குறும்படம்; 93 வயது தாத்தா; 80 விருதுகள்!” ஒரு பேரனின் கனவு நனவான தருணம்

“ஒரு குறும்படம்; 93 வயது தாத்தா; 80 விருதுகள்!” ஒரு பேரனின் கனவு நனவான தருணம்
“ஒரு குறும்படம்; 93 வயது தாத்தா; 80 விருதுகள்!” ஒரு பேரனின் கனவு நனவான தருணம்

ஒரு குறும்படம்... 80 விருதுகள், லிம்கா சாதனை, பணப் பரிசுகள் என பலரது கவனத்தையும் ஈர்க்கிறார் ஆருத்ரா சரவணக்குமார். தன் தாத்தாவை வைத்து இவர் இயக்கிய ’93 நாட் அவுட்’ என்கிற குறும்படம் இவரை புகழின் உச்சத்துககு கொண்டு சேர்த்துள்ளது. ஆருத்ராவிடம் பேசினோம்.

“ ’93 நாட் அவுட்’ குறும்படம் எப்படி உருவானது?”
“என் தாத்தா கலியபெருமாள், புத்தகங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது அறையில் சுமார் 20 ஆயிரம் புத்தகங்களை சேகரித்து வைத்து இருந்தார். 93 வயதிலும் உடல் தளராது சைக்கிள் ஓட்டினார். இதையெல்லாம் மனதில்வைத்துதான் அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த குறும்படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டேன். அந்த சமயத்தில் எனது மாமா இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கேமராவை எனக்கு பரிசாக தந்தார். அந்த கேமராவில்தான் இந்த குறும்படத்தை எடுத்தேன்.”

“எப்படி இருந்தது இந்த படப்பிடிப்பு அனுபவம்?”“

“நான் கட்டிட கான்ட்ராக்டர் பணியில் அப்பாவுக்கு உதவியாக இருக்கிறேன். ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமையில் மட்டுமே படப்பிடிப்பு. 2015 ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்கினேன். மொத்தம் 52 ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பை முடித்தேன். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் அதன் ட்ரெய்லர் காட்சியை பார்த்துவிட்டு இயக்குநர் விஜய் மில்டன் சார்என்னை பாராட்டினார். தான் இயக்கும் கோலிசோடா-2 படத்தில் என்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டார். தற்போது அவரிடம் உதவி இயக்குநராக இருந்துகொண்டே கான்ட்ராக்டர் வேலைகளையும் பார்த்துக்கொள்கிறேன்.” 

“இந்த குறும்படத்துக்காக லிம்கா விருதுகள் உள்பட நிறைய விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள்...”

“முதலில் குறிப்பிடவேண்டிய சிறப்பம்சம், லிம்கா விருது . ‘உலகின் அதிக வயது அறிமுக நடிகர் விருது’ எனது தாத்தாவுக்கு கிடைத்தது.  இரண்டாவது, "அதிக விருதுகள் வாங்கிய குறும்படம் " என்ற சிறப்பையும் இந்தப் படம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு மராத்தி குறும்படத்துக்குத்தான் அந்த பெருமை இருந்தது. அந்த குறும்படம் 44 விருதுகள் வாங்கியுள்ளது. ஆனால், ‘93 நாட் அவுட்’ குறும்படம் 80 விருதுகள் வாங்கியுள்ளது. மேலும், இந்தக் குறும்பட ட்ரெய்லரை இதுவரை, 1,25,000 பேர் யூடியூபில் பார்த்துள்ளனர். வேறு எந்த குறும்பட ட்ரெயிலரையும் இதற்கு முன்னர் இத்தனைபேர்  பார்த்தது இல்லை.  

தவிர இந்த குறும்படத்தில் பணியாற்றிய அத்தனை பேரும் விருதுகள் வாங்கியுள்ளனர். அது, இந்தப் படத்துக்கான சிறப்பம்சம். மேலும் மூன்று லட்ச ரூபாய் பரிசு தொகையையும் இதுவரை இந்தப்படம் பெற்றுள்ளது. தவிர, உலகளவில் அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து உள்பட மொத்தம்  22 நாடுகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு இருக்கிறது.”

“93 வயது தாத்தாவை இந்தக் குறும்படத்தில் நடிக்கவைத்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?”

“ஆரம்பத்தில் தாத்தாவுக்கு நடிக்கவே வரவில்லை. சமயங்களில் ஒரு ஷாட் 50 டேக் வரை போகும். ‘இயல்பா நடிங்க தாத்தா’ என்றால்  நடிக்கும்போது கேமிராவை பார்த்து விடுவார். ஒரு கட்டத்தில், தன்னை மறந்து இயல்பாக நடிக்க ஆரம்பிப்பார். அதுவரை காத்திருந்து ஷூட் பண்ண வேண்டும். தாத்தாவுக்கு எதற்காக இதெல்லாம் நடக்கிறது என்றே தெரியாது. சொல்வதை செய்வார். படத்தை பார்த்த பிறகுதான் இதெல்லாம் குறும்படத்துக்காக எடுத்தோம் என்று அவருக்கே தெரிந்தது,”

“குறும்படத்தை பார்த்துவிட்டு தாத்தா என்ன சொன்னார்?”

“ போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் முடிந்தவுடன்  தாத்தாவுக்கு படத்தை போட்டு காட்டினோம். படத்தை பார்த்தவர் கதறி அழுது விட்டார். அந்த நிமிடம் நாங்கள்  அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு நின்றோம். தாத்தாவுக்கு இரண்டு ஆசைகள் இருந்தன. ‘தம்பி இந்த படத்தை  தியேட்டரில் போட மாட்டார்களா?’ என்று கேட்டார். அவர் ஆசைப்பட்டபடி சுதந்திர தினத்தன்று திருச்சி ஸ்டார் தியேட்டரில் இந்த குறும்படம் வெளியானது. தாத்தா தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ந்தார். இரண்டாவது, நடிகர் ரஜினிகாந்தை தாத்தாவுக்கு மிகவும் பிடிக்கும். ‘அவர் நடித்த எல்லா படங்களையும் நான் பார்க்கிறேன். அந்தமாதிரி. நான் நடித்த இந்தப் படத்தை அவர் பார்ப்பாரா?’ என்று கேட்டார். அவரை சந்திக்க நிறைய முயற்சிகள் எடுத்தோம். ஆனால், அவரை சந்திக்கமுடியவில்லை. அதற்குள் தாத்தாவும் இறந்து விட்டார். அவரது ஆசை மட்டும் உயிரோடு இருக்கிறது.”

“திரையரங்குகளில் ’93 நாட் அவுட்’க்கு என்ன ரெஸ்பான்ஸ்?”

“இதற்கு முன்பும் திரையரங்குகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. ஆனால், முதன்முறையாக ஒரு குறும்படத்துக்கு கட்டணம் வசூலித்தது என்றால் அது இந்தப்படத்துக்குதான். ஒரு டிக்கெட்டுக்கு 100 ரூபாய் என விலை நிர்ணயித்தோம். ஆன்லைனிலியே 500 டிக்கெட்டுகள் விற்றன. திருச்சி ஸ்டார் திரையரங்கில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்து புதுவையில் திரையிட உள்ளோம்.” 

“ஏகப்பட்ட விருது வழங்கும் விழாவுக்கு சென்றிருக்கிறீர்கள். அதில் மிகவும் நெகிழ்ந்த தருணம் எது?

“கேரளா சுற்றுலாத்துறை நடத்திய விருது விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது ’93 நாட் அவுட்’க்கு கொடுத்தார்கள். அங்கே சிலர், ‘இங்க எப்பவுமே சிறந்த திரைப்படத்துக்கான விருதை கேரள திரைப்படத்துக்குதான் கொடுப்பாங்க. முதல்முறையா உங்களுக்கு தந்திருக்காங்க’ என்றனர். மேலும் விருது மட்டுமின்றி 30 ஆயிரம் ரொக்கப்பணமும் கொடுத்தனுப்பினர். இப்படி கேரளாவில் மட்டுமே 12 விருதுகள் வாங்கியுள்ளேன்.”

“அடுத்து இயக்கப்போவது படமா, குறும்படமா?”

“ ‘புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்’,‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற இந்த இரு குறும்படங்களை பார்த்தபிறகுதான், ‘படம் பண்ணினா இப்படித்தான் பண்ணணும்’ என தோன்றியது. அதுபோன்ற படங்கள்தான் எடுக்க வேண்டும் என நினைக்கிறேன்.அடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி  ‘திருநங்கை’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளேன். இந்த திரைப்பட பூஜையே மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்தான் நடந்தது. திருநங்கைகளை வைத்து எடுத்த படங்களிலேயே அதிக விருதுகளை வாங்கியதும் இந்த படம்தான். சென்னையில் நடந்த சர்வதேச இளைஞர் கலைவிழாவில் இது சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது.”