Published:Updated:

எம்.ஜி.ஆர் பாடல்களும் கலைஞருடனான பிரிவும்! ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 5

எம்.ஜி.ஆர் பாடல்களும் கலைஞருடனான பிரிவும்! ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 5
எம்.ஜி.ஆர் பாடல்களும் கலைஞருடனான பிரிவும்! ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர்.100 #MGR100 அத்தியாயம் - 5

எம்.ஜி.ஆர் பாடல்களில் பிரசார உத்தி :

எம்.ஜி.ஆர் சிறு வயது முதல் நாடக மேடையில் நடித்துப் பழகியவர் என்பதால் பாடல்களின் செல்வாக்கு குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார். பாடல்கள் சுதந்திரப் போராட்டத்துக்குப் பயன்பட்ட விதத்தை அறிந்திருந்ததால் தேச விடுதலை போல சமூக விடுதலைக்கும் அவை நல்ல பிரசார உத்தியாகத் திகழும் என்று அவர் நம்பினார். இத்துடன் தன் சுய விளம்பரத்துக்கும் திரை இசைப் பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார். இந்த முன்னறிவுடன் அவர் பாடல் ஆசிரியர்களிடம் பாடல்களைக் கேட்டு எழுதி வாங்கினார். அவருக்கு உடன்பாடில்லாத எந்த ஒரு விஷயமும் அவர் பாடலில் இல்லாதபடி பார்த்துக்கொண்டார். எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும் தன் விருப்பத்துக்கேற்றபடி பாடல் அமையாதவரை அவர் விடுவதேயில்லை. படித்தவர்களிடமும் பண்புள்ளவர்களிடமும் தன் பாதையில் குறுக்கிடாதவரை அவர் எப்போதும் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தார். இருப்பினும் காதல் பாடல்களில் அவர்களின் விருப்பத்துக்கு இடம் அளித்த எம்.ஜி.ஆர், தத்துவப் பாடல் என்று ரசிகர்களாலும் வேறு பலராலும் அழைக்கப்படும் தனிப் பாடல்களில் அவர் பாடல் ஆசிரியரோடு எந்த சமரசமும் செய்துகொள்வதில்லை.

எம்.ஜி.ஆரின் திரைப்பட வரலாறு 1936-ல் தொடங்கி 1977-ல் நிறைவு பெற்றது. இந்த முப்பது ஆண்டுகளில் 1954-ல் வெளியான 'மலைக்கள்ளன்' படத்துக்குப் பிறகே அவர் படப்பாடல்கள் தீவிரமாக சமூக அக்கறை உள்ளனவாகப் படைக்கப்பட்டன. இந்த 22 வருட காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் ஒரிரு தனிப் பாடலாவது அவரது பிரசார பீரங்கியாகச் செயல்பட்டது. எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் குறித்து சான்றுகள் காட்டி எழுதினால் முந்நூறு பக்க அளவில் புத்தகமே எழுதலாம் என்றாலும், அதன் விரிவு அஞ்சி 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைக்கிறேன் அரங்க மாநகருளானே' என்பது போல இப்போதைக்குச் சுருக்கமாக சிலவற்றை மட்டும் காண்போம்.

மூன்று காலகட்டம் - மூன்று கருத்தாக்கம் :

எம்.ஜி.ஆர் திமுக கட்சிக்கு வந்த பிறகு அவர் பாடல்களில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கினார். அப்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்ததால் அந்த ஆட்சி அக்கட்சி பெரியவர்கள் சிலரின் ஏமாற்றுத்தனம் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லும் கடமை தனக்கிருப்பதாகக் கூறிய எம்.ஜி.ஆர் தன் தனிப்பாடல்களில் இந்த கருத்துக்களைப் புகுத்தினார். இவை சமூகச் சாடல், சமூக அக்கறை, இளைய சமுதாயத்தின் நியாயமான கோபம் கொப்பளிக்கும் பாடல்களாக அமைந்தன. பின்பு திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடப்பது போன்ற பாடல்களையும், திமுக-வின் வரலாறு மற்றும் பெருமை பேசும் பாடல்களையும் தனிப்பாடல்களாக அமைத்தார். இவை மகிழ்ச்சி ததும்பும் பாடல்களாக ஒலித்தன. அடுத்து அதிமுக கட்சி உருவானதும் மீண்டும் பாடலின் கருத்தாக்கம் மாற்றம் அடைந்தது. திமுக அரசு ஊழல் மலிந்த அரசு என்னும் கருத்து வலுவாக பரப்பப்பட்டது. 'புதிய சமூகம் தோன்ற வேண்டும்', 'புதிய ஆட்சி மலர வேண்டும்', 'ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்' என்ற கருத்துக்கள் எம்.ஜி.ஆரின் படங்களிலும் பாடல்களிலும் மையக் கருத்தாக மாறின. 

ஆரம்பகட்ட காங்கிரஸ் எதிர்ப்பு பாடல்கள் :

1952-ல் திமுக அரசியலில் தலைதூக்கிய காலத்தில் அக்கட்சியில் எஸ்.எஸ்.ஆர், எம்.கே.ராதா, நாரயணசாமி போன்ற நடிகர்கள் இருந்தாலும், எம்.ஜி.ஆர் அளவுக்குக் கட்சியால் தானும் தன்னால் கட்சியும் வளர உழைத்தவர்கள் எவரும் இல்லை. கட்சிக்காக உழைத்த கலைஞர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மேடையில் பிரகாசித்த அளவுக்குத் திரையில் ஜொலிக்கவில்லை. அந்த வருடம்தான் நாராயணசாமி மூலமாக எம்.ஜி.ஆருக்கு அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது கருத்துரைகளுக்கு இளைஞர் கூட்டம் மயங்கிக் கிடந்ததை அறிந்த எம்.ஜி.ஆர், திமுக-வுக்கு தமிழக அரசியலில் நல்ல வாய்ப்பு இருப்பதை யூகித்தார். இந்த முன்னறிவு அவரை திமுக-வின் பக்கம் ஈர்த்தது. காங்கிரஸ் கட்சியின் வேகமும் விவேகமும் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நமத்துவிட்டதைப்போல எம்.ஜி.ஆருக்குத் தோன்றியது. எனவே இளைஞர்களைக் கவர்ந்த திமுக-வில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இக்கட்சிக்குத் தன் பங்களிப்பாக தன் படங்களிலும் பாடல்களிலும் கட்சி கருத்துகளைப் புகுத்தினார். 1954-ல் கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதி பட்ஷி ராஜா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த 'மலைக்கள்ளன்' படத்தில் நேரடியாக தனது காங்கிரஸ் தாக்குதலைத் தொடங்கினார். டி.எம்.சவுந்தரராஜன் குரலில் 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்ற பாடலைச் சேர்த்தார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு வெளிவந்த 'குலேபகாவலி' படத்தில் 'நியாயமில்லே இது நியாயமில்லே...' என்ற பாடலும், 1956-ல் வெளிவந்த 'மதுரை வீர'னில் 'ஏய்ச்சு பிழைக்கும் பிழைப்பே சரிதானா எண்ணிப்பாருங்க நீங்க எண்ணிப்பாருங்க...’ என்ற பாடலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களின் எண்ணிக்கையை ஏற்றிவிட்டது. அதே ஆண்டு வெளிவந்த 'தாய்க்குப்பின் தாரம்' படத்தில் அவர் பாடிய 'மனுசனை மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே...' பாடல் இளைஞர்களைடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

களத்தில் இறங்கிய எம்.ஜி.ஆர் :

திமுககாரர் என்ற முத்திரை கிடைத்ததில் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் அடுத்த ஆண்டு [1957] முதல் திமுக-வின் தேர்தல் பணிகளுக்கு நிதி உதவி அளிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அண்ணாவே 'தம்பி நீ தரும் தொகையைவிட உன் முகம் எனக்கு ஆயிரக்கணக்கான ஓட்டுகளை அள்ளித்தரும். எனவே தேர்தல் பிரசாரத்துக்கு வா' என்று எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தார். இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த எம்.ஜி.ஆர், தேர்தல் நிதி அளிப்பதுடன் களத்தில் இறங்கிப் பொது மக்களை, குறிப்பாகத் தன் ரசிகர்களை நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இவருக்கு தன்னைப் பற்றி மக்கள் நேரடியாக அறிந்துகொள்ள உதவியாக இருந்தது. தன் இமேஜை உயர்த்திக்கொள்ள இந்தத் தேர்தல் மேடைகளையும், பயணத்தையும் மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். திமுக அரசியல் கூட்டங்களுக்குப் பெண்கள் அதிகமாக வருவதில்லை என்ற நிலை மாறியது. எம்.ஜி.ஆரைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர் வரும் வழியெங்கும் பெண்கள் தம் குழந்தைகளுடன் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்றனர். இந்த நல்வாய்ப்பு இவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது. செல்லும் இடங்களில் எல்லாம் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் ஒலித்தன.

எம்.ஜி.ஆர் திமுகவின் முக்கிய பிரசார பீரங்கியாக மாறினார். சிறந்த மேடை பேச்சாளர்களும், மற்ற திரைக்கலைஞர்களும் செல்வாக்கை இழக்கத் தொடங்கினர். எம்.ஜி.ஆர் அண்ணாவிடம் பெற்ற செல்வாக்கைப்போல, கலைஞரையும் தன் அன்புப் பிடிக்குள் வைத்துக்கொண்டார். ஆனால், அதே சமயம் 'மலைக்கள்ள'னோடு அவரைத் தன் படங்களுக்கு வசனம் எழுத வைப்பதையும் நிறுத்திக்கொண்டார். ஆருர்தாஸ், சொர்ணம் [கலைஞரின் மைத்துனர்], ஆர்.கே.சண்முகம் போன்றோரையும், பிற்காலத்தில் கா.காளிமுத்து, நாஞ்சில் மனோகரன், கே.எஸ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரையும் தமக்கு வசனம் எழுத அமர்த்திக்கொண்டார். தன் நன்மையைக் கருதியும், கட்சியின் நன்மையைக் கருதியும் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞரை முதலமைச்சராக முன்மொழிந்தார். 

எம்.ஜி.ஆர் திரையுலகிலும் அரசியலிலும் எது செய்தாலும் அதில் ஒரு பொதுநலமும், சுயநலமும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். இதில் அவரது கொடைத்தன்மைக்கு விலக்கு அளிக்கலாம். ஏனென்றால் கொடுப்பதற்கு அவர் தேடிக்கொண்ட விளம்பரத்தைவிட அவர் கொடுத்தது ஏராளம். இதை அவர் விளம்பரத்துக்காக மட்டும் செய்யவில்லை. அவருக்கு இயல்பாகவே அந்தக் குணம் அமைந்திருந்தது. முகம் தெரியாத நபர்கள் பலருக்கு அவர் மாதந்தோறும் வருடக்கணக்கில் மணி ஆர்டரில் பணம் அனுப்பியிருக்கிறார். துன்பப்படுவோரைப் பார்த்தால் அவர்கள் கேட்காமலேயே கொடுத்து உதவும் குணம்  எம்.ஜி.ஆருக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தது. உதவி என்று நாடி வந்தவர் எதிரியாக இருந்தாலும், அவருக்கு உதவும் குணம் அவருக்கு இருந்தது. இதுபோக 'தர்மம் தலைகாக்கும்' என்று படத்தலைப்பும் பாடலும் அமைத்து அதில் நடித்தார். குண்டு சுட்டு பிழைத்தபோதும், சிறுநீரகம் மாற்றிப் பிழைத்தபோதும், இந்தப்பாடல் அவர் தர்மம் அவரது தலையை காத்ததை ஊருக்குப் பறை சாற்றியது. எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை ஆரத்தி எடுக்கும் பெண்களுக்குப் பளபளப்பான நோட்டுகளைக் காணிக்கையாகக் கொடுத்தார். எம்.ஜி.ஆரை மனதாரப் பாராட்டிய பெண்கள், அரசியலுக்கு வரவும் இச்செயல் ஒருவகையில் காரணமாக இருந்தது.

‘நாடோடி மன்னன்' படப்பாடல்கள் :

1958-ல் எம்.ஜி.ஆர் சொந்தப்படம் எடுத்தார். திமுக கட்சிக் கொடி ஏந்திய ஆணும் பெண்ணும் நிற்பது போல சின்னம் அமைத்தார். 'எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்' என்று பெயரிட்டார். முதல் பாடலே கொள்கை விளக்கப் பாடலாகவே ஒலித்தது. இன்றைக்கும் இது மதிமுக வின் கடவுள் வணக்க பாடலாக அங்கீகரிக்கபட்டுள்ளது. 'செந்தமிழே வணக்கம் நம் திராவிடர் வாழ்வினை சீரோடு விளக்கும் செந்தமிழே வணக்கம்’ என்ற இப்பாடல் வைகோவின் மனங்கவர்ந்த பாடலும் ஆகும். அடுத்து இப்பாடலில் இன்னொரு பாடலை அமைத்தார். இப்பாடலுக்கு பெரிய காட்சியமைப்பு சிறப்பு கிடையாது. எம்.ஜி.ஆரும் அமைச்சர் ஒருவரும் ஆளுக்கொரு குதிரையில் அமர்ந்து போவார்கள். அப்போது எம்ஜிஆர் 'உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா’ என்று கேட்பார். அமைச்சர் பதில் எதுவும் சொல்லமாட்டார். எம்.ஜி.ஆர் பதிலும் சொல்வார்.

‘உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா' என்பதுதான் அந்தப் பதில். இப்படிக் கேள்வி பதிலாக அமைந்த இப்பாடலுக்கு அமைச்சர் தலை அசைத்தபடி வருவார். இதுதவிர 'காடுவெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம்' என பானுமதி கேட்க எம்.ஜி.ஆர் 'காடு வெளையட்டும் பெண்ணே நமக்கு காலம் இருக்குது பின்னே' என்று பதில் அளிக்கும் பாடல்  'திமுக ஆட்சி வரட்டும்' என்ற நம்பிக்கையூட்டும் முன்னறிவிப்புப் பாடலாக அமைந்தது. இந்தப்பாடலில் தான் ‘நாளை போடப்போறேன் சட்டம் மிக நன்மை புரிந்திடும் சட்டம் நாடு நலம் பெறும் திட்டம்’ என்ற வரிகள் வரும். இந்த வரிகளே அவர் முதலமைச்சரானபோது அனைவரும் பாராட்டிய தீர்க்கதரிசன வரிகள் ஆகும். இந்தப்படல்கள் எம்.ஜி.ஆர் மீது மக்களுக்கு அதிக அன்பையும் நம்பிக்கையையும் ஊட்டின.

தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு :

1960-க்குப் பிறகு திமுக அரசு ஏற்கும் வரை எம்.ஜி.ஆர் படங்களில் காங்கிரஸ் எதிர்ப்புப் பாடல்கள் வலுப்பெற்றன. 1963-ல் வெளிவந்த 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'போயும் போயும் மனிதருக்கு இந்தப் புத்தியைக் கொடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் சேர்த்து பூமியைக் கெடுத்தானே’ என்ற பாடல், 'படகோட்டி (1964)'யில் 'கொடுத்ததெல்லாம் கொடுத்தான்' பாடலில் 'இல்லையென்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லயென்பார் - மடிநிறைய பொருளிருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்' என்ற வரிகள் 'ஆசைமுகம் (1965)' படத்தில் 'எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய குணமிருக்கு' என்ற பாடலும் 'பணம் படைத்தவன் (1965)' படத்தில் 'கண்போன போக்கிலே கால் போகலாமா' பாட்டில் 'மனிதன் போன பாதையை மறந்தும் போகலாமா' என்ற வரி வரும்போது காந்திஜி படத்தைக் காட்டி காங்கிரஸார் காந்திய வழியைப் பின்பற்றத் தவறிவிட்டனர் என்பதை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார். அதே வருடம் வெளிவந்த 'எங்க வீட்டுப்பிள்ளை' படத்தில் கறுப்புச் சட்டை அணிந்து எம்.ஜி.ஆர் பாடும் 'நான் ஆணையிட்டால்' பாட்டில் 'இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்' என்று காங்கிரஸ்காரர்களைக் குறித்து பாடியிருப்பார். இந்தப் பாடல் வரிகள் சென்சாரில் அனுமதி பெறாததால் 'கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என்று மாற்றப்பட்டது. ஆனாலும், இலங்கை வானொலியில் பழைய வெர்ஷனைக் கேட்க முடிந்தது. பின்பு அங்கும் விடுதலை புலி அமைப்பு தடை செய்யப்பட்டபோது இந்தப்பாட்டு ஒலிபரப்புவது நிறுத்தப்பட்டது. 

1966-ல் வெளிவந்த 'நாடோடி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த, ரசிகர்களுக்குப் பிடிக்காமல் போன  பாடல் ஒன்று. கண்தெரியாமல் பிச்சையெடுக்கும் சரோஜாதேவி பாடும் விரசமான பாடலை மாற்றி ‘நாடு அதை நாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு - பாடும்பொழுதெல்லாம் அதையே பாடு' என்ற பாடலைச் சொல்லித்தந்து பாடச்செய்வார். அதே ஆண்டு வெளியான 'நான் ஆணையிட்டால்' படத்தில் 'தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை குருடர்கள் கண்ணை திறந்துவைப்பேன் -  தனியானாலும் தலை போனாலும் தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்'  பாடல் திருடர்களைத் திருத்தும் பாடலாக அமைந்தாலும், சமூகத்தில் அது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பணத்தைக் கொள்ளயடிக்கும் திருடர்களைத்தான் குறித்தது. பாடல் கருத்து திரைக்கதைக்கு ஏற்றதாகவும் அதேசமயம் பொது அரசியலுக்கு ஏற்றதாகவும் அமைத்துத் தரச்சொல்லி அதைத் தன் படங்களில் பயன்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

1967-ல் வெளிவந்த 'அரசகட்டளை' படம் காங்கிரஸ் காலத்தில் தயாரிக்கப்பட்டதால், 'ஆடி வா...' பாடலில் 'முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நம் வரவேற்பதோ' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதில் முயல் கூட்டம் என்பது காங்கிரஸையும் சிங்கம் என்பது திமுகவையும் குறித்தது. 

திமுக புகழ் பாடும் பாடல்கள் : 

1967-ல் அண்ணா அரசு பொறுப்பேற்றதும் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களின் உள்ளடக்கமும் மாறியது. அண்ணா அவர்கள் போலீஸ் என்ற பெயரைக் காவல் துறை என்று மாற்றினார். எம்.ஜி.ஆர் 'காவல்காரன்' எனப் படம் எடுத்தார். அது எம்.ஜி.ஆரின் கணக்குப்பிள்ளை ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த படம். இவருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். ஜெயலலிதா கொஞ்சம் ஷார்ப்பாக இருந்தது அவரைச் சுற்றியிருந்த சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்கோ ஜெயலலிதாவின் படிப்பும் சுறுசுறுப்பும் துணிச்சலாகத் தன் கருத்தை எடுத்துரைக்கும் பாங்கும் மிகவும் பிடித்துப்போயிற்று. அடுத்த வீட்டுக்கு போகும்போது அங்கிருக்கும் பொம்மையை எடுத்து விளையாடும் பிள்ளைகள் அதை  என் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போகிறேன் என்று அடம் பிடிப்பதை போல எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவைச் சில காலம் தன் வீட்டில் வைத்திருந்தார். 'காவல்காரன்' படத்தில் வரும் 'ங்கொப்புறாண சத்தியமா நான்' பாடலில் ‘என் இல்லம் புகுந்தாலும் உள்ளம் கவர்ந்தாலும் நான்தான் காவலடி’ என்ற வரிகள் அர்த்தத்துடன் எழுதப்பட்டது. தன் உள்ளம் கவர்ந்த கதாநாயகியான ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர் கடைசி வரை காவல் காத்தார். ஜெயலலிதா மீறி நடந்த போதும்கூட எம்.ஜி.ஆர் அவர் பாதுகாப்பில் ஒரு கண் வைத்திருந்தார். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட பின்பு வந்த முதல் படம் என்பதால் இதில் இடம்பெற்ற 'நினைத்தேன் வந்தாய் நூறு வயது' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டது போல இருந்தது. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

'காவல்காரன்' என்பது திமுக அரசை சிம்பாலிக்காகக் குறித்தது. எம்.ஜி.ஆரும் அதில் காவல்துறையை சேர்ந்த ரகசிய போலீஸாக நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் . வெற்றிவிழாவில் எம்.ஜி.ஆர் உயரத்துக்கு வெள்ளித் தகட்டினால் அவர் உருவம் செய்து அவருக்கு வழங்கினர். அது இன்றும் எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் இருக்கிறது. இதில் அரசை சாடியோ கண்டித்தோ எந்தப்பாடலும் இல்லை. மாறாக மூன்று டூயட் பாட்டு. மேலும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை சீர்திருத்தத் திருமணம் செய்வதாகவும், குழந்தை பிறப்பதாகவும் அவர்களின் கனவு கற்பனைகளாகப் படம் எடுக்கப்பட்டிருந்தது. அப்போது சீர்திருத்தத் திருமணத்திற்கு அண்ணாவின் அரசினால் சட்ட அங்கீகாரம் கிடைத்த சமயம். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதுபோல படம் எடுக்கப்பட்டிருந்தது.

1968-ல் வெளிவந்த எம்.ஜி.ஆரின் நூறாவது படமான 'ஒளிவிளக்கு' படத்தில் எம்.ஜி.ஆர் தன் தீவிர ரசிகர்களான குறவர்களை போல மாறுவேடம் அணிந்து ஜெயலலிதாவுடன் ஒரு பாட்டு பாடுவார். அந்தப்பாட்டில் திமுக-வின் படியரிசி திட்டம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை பாடலில் வெளிப்பட்டது. திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்பதாகவும் இப்பாட்டும், காட்சியும், நடனமும் அமைக்கப்பட்டிருந்தது.

திமுக மற்றும் எம்.ஜி.ஆர் புகழ் பாடல்கள் : 

சமூகச் சாடல் குறைந்ததால் எம்.ஜி.ஆரை மையப்படுத்திய பாடல்கள் அவர் படத்தில் தோன்றின. 'நான் யார்  நான் யார் நீ யார்' மற்றும் 'என்னைத் தெரியுமா நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா', 'நான் உங்கள் வீட்டு பிள்ளை இது ஊரறிந்த உண்மை நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' போன்ற திமுகவின் பிரதிபலிப்பாக எம்.ஜி.ஆரைக் காட்டும் பாடல்கள் எழுதப்பட்டன. அதாவது எம்.ஜி.ஆர் என்றால் திமுக, திமுக என்றால் எம்.ஜி.ஆர் என்ற பிம்பத்தை  அவர் உருவாக்கினார். இது திமுக மூத்த உறுப்பினர்களுக்குச் சற்று காட்டமாக இருந்தாலும், இளைஞர்கள் எம்.ஜி.ஆர் மீது வெறியாக இருந்ததாலும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கு உச்சத்தில் இருந்ததாலும் எவரும் ஒன்றும் சொல்ல இயலவில்லை.

கலைஞர் முதல்வர் ஆக்கப்பட்டார் : 

1969-ன் தொடக்கத்திலேயே அண்ணா காலமாகிவிட்டார். கலைஞர் எம்.ஜி.ஆரை அடிக்கடி சந்திக்கிறார். கட்சியின் அடுத்த தலைவர் குறித்து இருவரும் விவாதிக்கின்றனர். 'தம்பீ வா... தலைமை ஏற்க வா...' என்று அண்ணாவால் அன்போடு அழைக்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் தன் ஆதரவாளர்களோடு 'தான் தன் அடுத்த முதல்வர்' என்ற நம்பிக்கையில் விவாதித்துக் கொண்டிருக்கிறார். இச்சூழலில் எம்.ஜி.ஆர் தன் சத்யா ஸ்டூடியோவில் கட்சியின் முக்கிய பிரமுகர்களைக் கூட்டி காங்கிரஸின் செல்வாக்கு இன்னும் முற்றிலுமாக ஒடுக்கப்படவில்லை, இந்நிலையில் படித்தவரைவிட காங்கிரஸை சமாளிக்கக் கூடியவரே கட்சிக்கும் ஆட்சிக்கும் பொறுப்பேற்பது நல்லது என்று சொல்லி அனைவரையும் கலைஞருக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் சம்மதிக்க வைத்து கலைஞருக்கு பிடித்தமான வால்நட் கேக்கை அவர் டிரைவரை விட்டு வாங்கிவரச் சொல்லி அவர் வாயில் ஊட்டினார்.

ஏமாற்றிய  ஆட்சி :

1969-ல் கலைஞர் முதல்வரானதும், எம்.ஜி.ஆர் நினைத்தபடி ஆட்சி நடக்கவில்லை. திமுகவினர் தறிகெட்டுத் திரிகின்றனர். ஊழலும் வன்முறையும் எம்.ஜி.ஆரை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை. கலைஞரும் எதையும் கண்டிக்கவில்லை. உள்ளூர் தாதாக்கள் கட்சிப் பொறுப்பேற்று கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஆகின்றனர். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. கலைஞரின் ஆட்சி அவர் நினைத்ததற்கு மாறாக இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர் அவசரப்படாமல் அமைதியாக ஒரு காரியம் செய்கிறார். அப்போது தமிழ்த் திரையுலகின் உச்சத்தில் அவர் கொடி கட்டி பறக்கிறார். அவரிடம் ஜெயலலிதா முழு செல்வாக்கு பெற்றிருக்கிறார். ஆழம் பார்க்க நினைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் அதை மற்றவர் காசில் பார்ப்பது கிடையாது. தன் பணத்தை போட்டு சொந்தப் படம் எடுக்கிறார். அந்தப்பட்த்தில் ஒர் கொடுங்கோலனைக் காட்டுகிறார். தாயை தாய்நாடாகவும் அதை ஒரு கொடுங்கோலனின் அடிமைப்பிடியில் இருந்து மீட்பதாகவும் கதை உருவாக்கிப் படமாக எடுக்கிறார். அந்தப் படம் 'அடிமைப்பெண்' என்ற பெயரில் வெளிவந்து வெற்றிவிழா கொண்டாடியது.

ஏமாற்றாதே ஏமாறாதே : 

'அடிமைப்பெண்' படத்தில் மீண்டும் அரசை எதிர்க்கும் பாடல் காட்சிகளை அமைக்கிறார். கொடுங்கோலனுக்கு எதிராக ஒரு க்ளைமாக்ஸ் பாடல் ‘உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது’ பாடல் ஹிட் ஆனது. படத்தின் நடுவில் கலைஞருக்கு நேரடியாக எச்சரிக்கை செய்வது போல ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே' என்ற இந்தப்பாடலும் ஹிட் ஆனது. தன் செல்வாக்கு அவருக்கு தைரியத்தை அளித்தது இந்தப் படத்தின் வெற்றி அவருடைய எண்ணத்துக்கு பச்சைக் கொடி காட்டினாலும் அவர் அவசரப்படவில்லை. இதனை அடுத்து, தான் அரசியலுக்கு வரலாமா என்பதை அறிய நேரடியாக ஒரு படம் எடுத்து மக்களின் நாடி பிடித்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அதிக செலவில்லாமல் 'அடிமைப்பெண்' படம் போன்ற ஆடம்பரங்கள் இல்லாமல் பத்தே நாட்களில் விஜயா வாஹினி முதலாளி நாகிரெட்டியிடம் சொல்லி அவரது தயாரிப்பில் 'நம் நாடு' படத்தில் நடித்து முடிக்கிறார். அந்தப் படத்தின் வெற்றி இவருக்கு அரசியலில் ஈடுபடலாம் என்ற முழு நம்பிக்கையைக் கொடுத்தது.

நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் :

'நம் நாடு' படமும் 'அடிமைப்பெண்' போல எம்.ஜி.ஆர் வில்லன்களைத் தோற்கடிக்க ஜெயலலிதாவே அவருக்கு முற்றிலும் உதவுவது போன்ற கதையம்சம் உள்ள படம். இதில் அவர் கோடீஸ்வரராக மாறு வேடத்தில் ‘நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான் நான் - துணிச்சலை மனத்திலே வளர்த்தவன் நான் நான் நான்’ என்று பாடி ஆடும் பாடல் அவரது மனத் திட்டத்தை எடுத்துரைத்தது. இதில் வில்லன்களைக் காங்கிரஸ்காரர்கள் போலவும் உயர்ந்த பக்திமான் போலவும் காட்டியிருந்ததால், திமுகவினருக்கோ சாதாரண மக்களுக்கோ சந்தேகம் வரவில்லை.

இதற்கிடையே பல வெற்றிப்படங்கள் வந்தன. 'விவசாயி', 'மாட்டுக்கார வேலன்', 'குடியிருந்த கோயில்', 'தேடிவந்த மாப்பிள்ளை' எனப் பல படங்கள் வந்து எம்.ஜி.ஆரை உச்சத்துக்குக் கொண்டு போயின. எம்.ஜி.ஆரை வைத்துப் படம் எடுப்பவர்கள் எல்லாம் நல்ல லாபம் பெறுகின்றனறே, நாம் ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று கலைஞரும் அவரது மருமகன் முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை அணுகி தாங்கள் கடனில் தவிப்பதாகவும், ஒரு படம் இலவசமாக நடித்துக் கொடுத்தால் கடனில் இருந்து கரையேறிவிடுவோம் என்றனர். எம்.ஜி.ஆர் எதிரி என்றாலும் உதவி என்று கேட்டுவிட்டால் செய்துவிடுவார் அல்லவா... அவர், தான் மட்டுமல்லாது ஜெயலலிதாவும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுப்பார் என்றார். 'எங்கள் தங்கம்' உருவாயிற்று. எம்.ஜி.ஆர் மற்றும் திமுக புகழ் பாடும் பாடலாக 'நான் செத்துப் பிழச்சவன்டா எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்ற பாடலில் கலைஞரை பற்றிய வரிகளாக ‘ஓடும் ரயிலை இடை மறிச்சு அதன் பாதையில் தனது தலை வச்சு - உயிரையும் துரும்பா தான் மதிச்சு - தமிழ் பெயரை காத்த கூட்டம் இது’ என்பவை அமைந்தன. இன்னொரு டூயட் பாடலுக்கு, 'நான் அளவோடு ரசிப்பவன்' என்ற வரியை எழுதிவிட்டு கவிஞர் வாலி அடுத்த வரிக்குத் தடுமாறிய போது கலைஞரோ, 'எதையும் அளவின்றிக் கொடுப்பவன்' என்று அடியெடுத்துக் கொடுத்தாராம்.

பாரத் விருது பெற்ற எம்.ஜி.ஆர் : 

எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, இருவரும் பிரிந்துவிட்டனர். உடல்நலத்தைப் பேணுவதில் சிறிதும் அக்கறை இல்லாத ஜெயலலிதா ரொம்பவும் குண்டாகிவிட்டார். 'பட்டிக்காட்டுப் பொன்னையா', 'அன்னமிட்ட கை' படங்களில் எம்.ஜி.ஆருக்குப் பெரியம்மா போலத் தோற்றமளித்தார். மேலும் எம்.ஜி.ஆரிடம் இருந்து இவரைப் பிரித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கும்பல் இந்நேரம் பார்த்து மஞ்சுளாவை அறிமுகம் செய்தது. சத்யா மூவிஸ் முலமாக 'ரிக்க்ஷாக்காரன்' படம் ஆர்.எம்.வீ அவர்களால் எடுக்கப்பட்டது. இதில் பணக்காரர்களின் அக்கிரமங்களுக்குத் துணை போகும் நீதித்துறையை எம்.ஜி.ஆர் சாடியிருந்தார். இதில் ‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு'  என்ற பாடலில் 'நாணல் போல வளைவதுதான் சட்டம் ஆகுமா - அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா’ என்று கேட்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு இந்தியாவின் சிறந்த நடிகரான 'பாரத்' விருது கிடைத்தது. பின்பு அது கலைஞர் சிபாரிசால் கிடைத்தது என்று திமுகவினர் குற்றஞ்சாட்டியதும், எம்.ஜி.ஆர் அதைத் திருப்பிக் கொடுத்தார். இத்துடன் எம்.ஜி.ஆர் - கலைஞர் நட்பு முடிவுக்கு வந்தது.  அடுத்த ஆண்டே (1971) கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை எம்.ஜி.ஆருக்கு அமைந்தது போன்ற கதைகள் கேட்டு, தோற்றம், பாட்டு, டான்ஸ் எம்.ஜி.ஆர் போலவே உருமாற்றி திரைக்குக் கொண்டுவந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. 'சினிமாவுக்கு அதிகம் பேர் போகிறார்களே அவர்களை மடை மாற்றுவோம்' என்று கருதி அரசுக்கு வருமான தரக்கூடிய மதுக்கடைகளைத் திறந்தார்.

எம்.ஜி.ஆரையும் கட்சியை விட்டு நீக்கினார். அதற்குப் பிறகான தனது படங்களில் எம்.ஜி.ஆர் நேரடியாக திமுக எதிர்ப்பை வெளியிட்டார். அதை அடுத்த கட்டுரையில் காண்போம்.

அடுத்த கட்டுரைக்கு