Published:Updated:

''சென்னைக்கு வந்தா சிவாஜி சார் வீட்டு சாப்பாடுதான்!" - துல்கர் சல்மான்

''சென்னைக்கு வந்தா சிவாஜி சார் வீட்டு சாப்பாடுதான்!" - துல்கர் சல்மான்
''சென்னைக்கு வந்தா சிவாஜி சார் வீட்டு சாப்பாடுதான்!" - துல்கர் சல்மான்

தமிழ், இந்தி என இருமொழிகளில் 'டேவிட்' படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் தற்போது தமிழ், மலையாளம் காம்போவில் இயக்கியிருக்கும் படம் 'சோலோ'.  படத்தில் துல்கர் சல்மான் நான்கு கேரக்டர்களில் நடிக்கிறார். கேரக்டருக்கு ஒரு டீஸர் வீதம், இதுவரை நான்கு டீஸர்கள் வெளியாகியிருக்கிறது. இப்படத்துக்கு 11 இசையமைப்பாளர்கள், 3 ஒளிப்பதிவாளர்கள் எனப் பெரும் படையே பணிபுரிந்திருக்கிறது. 

இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய படத்தின் ஹீரோ துல்கர், ''இந்தப் படம் ஒரு பெரிய பட்டாளத்தையே கொண்டுள்ளது. வெவ்வெறு மொழிகளில் இருந்து நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். அதிலும், சதீஷ் என்னுடன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷூட் நடக்கும்போது சதீஷுடன் இருந்தால் சிரிக்காமல் இருப்பதுதான் என் பெரிய டாஸ்க்காக இருக்கும்'' என்று சிரித்தபடியே விடைபெற்றார். 
  

அடுத்ததாக வந்த சந்தோஷ் ஆன்சென்ட் பால், '' 'ரெமோ' படத்துக்குப் பிறகு, தமிழில் மீண்டும் நடிப்பது மகிழ்ச்சி. இன்னும் நிறைய படங்கள் பிஜோய் நம்பியாருடன் சேர்ந்து பண்ணணும்னு ஆசையாக இருக்கிறது. திரையில் எனக்கான நிறைய இடத்தை எனக்கு அளித்ததற்கு நன்றி'' என்று முடிக்க, தொகுப்பாளர் பிரியதர்ஷினி ''அட நம்ம ஊர்காரரும் இதுல நடிச்சுருக்காருப்பா.. வாங்க சதீஷ்'' என்றவுடன் மைக்கைப் பிடித்த சதீஷ் மேடையில் உள்ள அனைவரின் பெயரையும் சொல்லிவிட்டு, 'யப்பா.. யார் பேரையும் விடலை' எனக் கண்சிமிட்டி கலாய்த்தார். ''சந்தோஷ் அடையாளமே தெரியலை. 'ரெமோ' படத்துக்கும் இதற்கும் நல்ல சேஞ்ச். நான் இதுவரை நடிச்ச 40 படங்கள்லேயும் ஒரேமாதிரிதான் நடிச்சிருப்பேன். ஆனால், துல்கர் ஒரு படத்துலயே 4 வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். படத்தோட நாலு ஹீரோயின்ஸ்ல மூன்று பேர் இங்கே இருக்காங்க, தன்ஷிகா மட்டும் வரலை. எங்க வரவிட்டீங்க பாவம்' என மீண்டும் ஒரு முறை அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். 

அடுத்து வரிசையாக வந்த கதாநாயகிகள், அவர்களுக்குத் தெரிந்த ஓரிரு தமிழ் வார்த்தையைக் கொண்டு படத்தைப் பற்றிப் பேசினார்கள். இறுதியாக பேசிய இயக்குநர் பிஜோய் நம்பியார், ''சில வருடங்கள் கழித்துத் தமிழில் இயக்குகிறேன். இந்தப் படத்தில் துல்கர் நான்கு கேரக்டரில் நடித்திருந்தாலும், கேரக்டரில் வித்தியாசங்கள் இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரைப் பற்றியும் கதை செல்லும். அதனால்தான் 'சோலோ'னு டைட்டில் வைத்தேன். ஸ்க்ரிப்ட் எழுதும்போதே இந்த டைட்டில் வைத்துதான் ரெடி பண்ணினேன். ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்" எனக் கூறி படத்தின் ஸ்னீக் பீக்கை திரையிட்டார் இயக்குநர். இந்த நிகழ்வுக்குப் பிறகு, துல்கரிடம் பேசியபோது, 

''சோலோ படத்தில் உள்ள நான்கு கதாபாத்திரத்தில் எது பிடித்திருந்தது?''

''படத்தில் உள்ள நான்கு கேரக்டருமே எனக்குப் பிடிச்சது. ஆனால், சேகர் என்ற கேரக்டரை நான் ரொம்ப லைக் பண்ணேன். ஏன்னா, மற்ற கேரக்டர்கள் ரெளடி, ஆர்மிமேன் அப்படினு இருக்கும். இதுதான் வித்தியாசமா இருக்கும். இந்தக் கேரக்டருக்குதான் அதிக உழைப்பு போட்டிருக்கேன்னுகூட சொல்லலாம். என் சினிமா வாழ்க்கையிலேயே நீளமா முடி வெச்சு, தலைக்குப் 14 க்ளிப் போட்டது இந்தப் படத்துக்குத்தான். கோவம் வந்தா திக்கித் திக்கி பேசுற கேரக்டர். அப்படி பேசும்போது கொஞ்சம் சிரமமா இருந்துச்சு. ஆனா, ரசிச்சுப் ரசிச்சு பண்ணேன்.''

''உங்களோட எல்லாப் பட விழாக்களிலும் மணிரத்னம் இருக்காரே..."

''அது நிஜமா எதார்த்தமா நடந்த ஒரு சம்பவம்தான். 'வாயை மூடி பேசவும்' படத்தின் தயாரிப்பாளரும், மணி சாரும் நண்பர்கள். 'ஓ காதல் கண்மணி' மணி சாரோட படம். பிஜோய் மணி சார் அசிஸ்டென்டா வொர்க் பண்ணவர். ஆக, என்னோட மூன்று தமிழ் படங்களின் விழாக்களையும் மணி சார் வந்தது லக் தான்.''

''உங்க படங்களைப் பார்த்துவிட்டு அப்பா என்ன சொல்வார்?"

''அப்பா சினிமாவுக்கு வந்தபோது அவருக்கு சொல்லிக்கொடுக்க யாருமில்லை. அதுனால, என்னையும் அப்படித்தான் கத்துக்கணும்னு அடிக்கடி சொல்வார். எந்த டிப்ஸும் தரமாட்டார், 'நீயே கத்துக்கோ'னு விட்டுவிடுவார். ஆனா, உழைக்கணும் நல்ல நடிக்கணும்னு பாசிட்டிவாகத்தான் பேசுவார்.  என் முடிவுகள்ல தலையீடு இருக்காது.''

"தமிழ் டப்பிங் ரொம்ப ஆர்வத்தோட பேசுறீங்களாமே..."

''அது ஏன்னு தெரியலை. வேகமான சத்தமான வசனங்கள் பேசும்போது தமிழ்தான் தெளிவா இருக்குனு நிறைய பேர் சொல்லிருக்காங்க, எனக்கும் அப்படிதான் தோணுது. அது தமிழ் மொழியோட காரணமானு தெரியலை. மலையாளம் பேசும்போது, தெளிவு குறையும்னு வேகமா பேசமாட்டேன். ஆனா, தமிழ் பேசும்போது தெளிவா இருக்கு. ஸோ, டப்பிங்கும் சுவாரஸ்யமா இருக்கு.''

''நீங்க நடித்த தமிழ் படங்களில் மறக்க முடியாதது?''

''ஓ காதல் கண்மணி' படத்தின் முதல் நாள் ஷூட்ல 'ஹே... சினாமிக்கா' பாட்டு எடுத்தாங்க. அந்தத் தருணத்தை மறக்கவே முடியாது. ஏன்னா, மணி சாரை சின்ன வயசில இருந்து பார்த்து பார்த்து வளர்ந்திருக்கேன். அவரை ரொம்பப் பிடிக்கும். அப்போ அவர் மைக்ல ஆக்‌ஷன், கட் சொல்லும்போது அவரையே பார்த்துட்டு இருந்தேன். அந்தத் தருணம் தமிழ் படங்களில் மறக்க முடியாத ஒன்று.''

''தமிழில் உங்களுக்குப் பிடித்த கதாநாயகி யார்?"

''பிடிச்சவங்க அப்படிலாம் இல்லை. எல்லோரையும் பிடிக்கும். குறிப்பா, நஸ்ரியா என் தங்கச்சி மாதிரி. அவங்ககூட இருந்தா ரொம்ப ஃபன்னா இருக்கும். ஏதாவது பேசிக்கிட்டே, சிரிச்சுட்டே இருப்பாங்க. ஆக்‌ஷன் சொன்னவுடனே அவங்க டயலாக்கை சூப்பரா பேசி டைரக்டர்கிட்ட பாராட்டு வாங்குவாங்க. ஆனா, எனக்கு அப்படி வராது, கொஞ்ச நேரம் தேவைப்படும். டைரக்டர்கூட அடிக்கடி நஸ்ரியாவை அமைதியாக இருக்கச் சொல்வார். பேமிலி ஃபிரெண்ட் அவங்க.''

''துல்கர் சல்மான் ஒரு சார்மிங் பாய்னு எல்லாருமே சொல்றாங்களே...''

''அது எனக்கு சுத்தமா பிடிக்காது. என்னை ஒரு வட்டத்துள்ள அடைச்சுக்க விரும்பலை. எல்லா கேரக்டரும் பண்ணணும், இந்த பிம்பத்தை உடைக்கணும்னு ஆசைப்படுறேன். தமிழில் நான் பண்ண ரெண்டு படமுமே கொஞ்சம் பப்லியான கேரக்டர். அதுனால அப்படி ஒரு பிம்பம் வந்துருச்சு. அதுக்குப் பிறகு, லவ் ஸ்டோரியா நிறைய படங்கள் வந்துச்சு. வித்தியாசமா பண்ணணும்னு அதையெல்லாம் தவிர்த்துட்டேன். எனக்குப் புதுசு புதுசா நடிச்சு மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு ஆசை!" 

''தமிழ் திரையிலகில் உங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் யார்?"

''விக்ரம் பிரபு. எனக்கும் அவருக்கும் பல வருட நட்பு. ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய டிராவல் பண்ணிருக்கோம். நான் சென்னை வந்தேன்னா அன்னைக்கு சாப்பாடு அவங்க வீட்லதான்."

"பிஜோய் நம்பியாருடன் வொர்க் பண்ண அனுபவம்?"

''பிஜோய், மணி சார் மாதிரிதான். கடின உழைப்பு, அவ்வளவு எனர்ஜி, ரொம்ப க்ரியேட்டிவா யோசிப்பார். அவர்கூட இருந்தா நமக்கு டயர்ட் ஆகாது. அவரோட ஸ்பிரிட்லயே நம்மளையும் கூட்டிட்டு போயிடுவார். கொஞ்சம் சோர்வானாலும் அவர்கூட பேசினா எனர்ஜி வந்திடும். விஷுவல் ரொம்ப ஸ்டார்ங்கா இருக்கும். அந்த அளவுக்குத் திறமைசாலி." 

அடுத்த கட்டுரைக்கு