Published:Updated:

தங்க முட்டையைத் தேடிச்செல்லும் பூனையின் பயணம்! #PussInBoots

தங்க முட்டையைத் தேடிச்செல்லும் பூனையின் பயணம்! #PussInBoots
தங்க முட்டையைத் தேடிச்செல்லும் பூனையின் பயணம்! #PussInBoots

தங்க முட்டையைத் தேடிச்செல்லும் பூனையின் பயணம்! #PussInBoots

சிங்கம் வீரமானது, நரி தந்திரமானது என்பது போன்ற பல விஷயங்கள் சிறார்களுக்கான கதைகளில் சித்திரிக்கப்படுவது உண்மையானதா? 

இல்லை. மனிதர்கள், தங்களிடமுள்ள எதிர்மறைக் குணங்களை, விலங்குகளின்மீது ஏற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. எந்த உயிரினமும் இயற்கையால் படைக்கப்பட்ட குணாதிசயங்களிலிருந்து விலகுவதில்லை. அதன் வழியாகவே இயங்குகின்றன. எனவே, ‘பூனைகள் திருடும்... திருட்டுப் பூனை’ என்று சொல்வது நம் கற்பிதமே. என் இளம் வயதில் வீட்டுக்கு ஒரு பூனை வந்துபோகும். நாங்களாக உணவு அளிக்கும்வரை பொறுமையாகக் காத்திருக்கும். ஒருமுறைகூட உணவுப் பொருள்களைத் தள்ளிவிட்டு தின்றதில்லை. அதாவது, திருடியதில்லை. 

சந்தர்ப்ப சூழலால் தவறு இழைத்திருந்தாலும் நேர்மையாக நடந்துகொள்ளும் ஒரு பூனையைப் பற்றிய திரைப்படம் இது. விலங்குகளின் மீது சிறுவர்களிடம் பல்வேறு தவறான அபிப்ராயங்கள் உலவிக்கொண்டிருக்கும் சூழலில், இதுபோன்ற புனைவுகள் வெளிவருவது அவசியமானது. 

புஸ் (Puss) என்கிற பூனைதான் இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம். அது அணிந்திருக்கும் காலணி, அதன் பிரத்யேக அடையாளம். ஒரு காலத்தில் அதன் நல்லியல்புக்காகக் கிடைத்த பெருமை. ஆனால், அதெல்லாம் பழைய கதை. இப்போது, அது சட்டத்திலிருந்து தப்பிய சமூக விரோதி. காவல் துறை, அதன் தலைக்குப் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. தன் பழைய பெருமையை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது புஸ். அதற்குப் பெரும் பணத்தைச் சம்பாதித்தாக வேண்டும். 

ஜாக் மற்றும் ஜில் தம்பதியர், பயங்கரமான கொள்ளைக்காரர்கள். அவர்களிடம் மாய அவரை விதைகள் இருக்கின்றன. அதைத் திருடுவது புஸ்ஸின் நோக்கம். ஏன் திருட வேண்டும் மாய விதைகளை மண்ணில் புதைத்தால், அது வானத்தின் உச்சியை நோக்கி வேகமாக வளரும். அதைப் பிடித்துக்கொண்டு மேலே சென்றால், அங்குள்ள பிரமாண்டமான கோட்டையில் உள்ள தங்க வாத்து முட்டைகளைக் காணலாம். அவற்றைத் திருடிக்கொண்டு வருவதுதான் புஸ்ஸின் நோக்கம். மாய அவரை விதைகள் பற்றிய விஷயத்தை, தன் முன்னாள் நண்பனிடமிருந்து அது அறிந்திருக்கிறது. பல காலமாக அதற்கு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. இப்போதுதான் அதைப் பற்றிய துப்புக் கிடைத்துள்ளது. 

கொள்ளையர்களின் இருப்பிடத்தை அடைகிறது புஸ். ஆனால், அந்த விதைகளைத் திருடும் நோக்கத்துடன் இன்னொரு பூனையும் வந்திருப்பதை அறிந்துகொள்கிறது. இருவருக்கும் நடக்கும் சண்டையில், கொள்ளையர்கள் எழுந்துவந்து இரண்டையும் அடித்துத் துரத்துகிறார்கள். புஸ் கோபத்துடன் இன்னொரு பூனையை துரத்திச்செல்கிறது. ஓரிடத்தில் இரண்டுக்கும் கடுமையான நடனச் சண்டை நடக்கிறது. கிட்டி என்று அறியப்படும் அந்த இன்னொரு பூனை, பெண் என்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறது புஸ். அதன் மீது ஈர்ப்பு உண்டாகிறது. 

புஸ்ஸுக்கு இன்னொரு ஆச்சர்யமும் காத்திருக்கிறது. கிட்டியைத் தனக்குப் பின்னால் அனுப்பிய ஆசாமி யாரென்று தெரிகிறது. பால்ய வயது தோழனான, 'ஹம்ப்ட்டி டம்ப்ட்டி' என்கிற முட்டை. இளம் வயதில் தன்னை குற்றத்தில் மாட்டிவிட்ட முட்டையை மன்னிக்க புஸ் தயாராக இல்லை. எனவே, அதனுடன் இணக்கமாகப் பேச மறுக்கிறது. ‘அதெல்லாம் பழைய கதை நண்பா. இப்போ நாம் இருவரும் சேர்ந்து, அந்த மாய விதைகளைத் திருடலாம்’ என்று ஆசை காட்டுகிறது முட்டை. ஆனால், வெறுப்புடன் அங்கிருந்து விலகிவிடுகிறது புஸ். 

“அவன் உன் ஃப்ரெண்டுதானே. ஏன் இத்தனை கோபம்?” என்று விசாரிக்கிறது கிட்டி. புஸ்ஸின் பிளாஷ்பேக் விரிகிறது. புஸ்ஸின் சிறுவயதில் அது அநாதைப் பூனையாக உணவுக்குத் தவிக்கும்போது, 'எமல்டா' என்கிற பெண்மணி ஆதரவு அளிக்கிறார். அவரது இல்லத்தில் புஸ்ஸைப்போலவே பல ஆதரவற்றவர்கள் இருக்கிறார்கள். எமல்டாவை தனது தாயாகவே எண்ணுகிறது புஸ். அங்கே கிடைக்கும் பால்ய தோழன்தான் முட்டை. குறும்புச் சிறுவர்கள் முட்டையை வம்புக்கு இழுக்கும்போது, ஆத்திரத்துடன் அவர்களைத் தாக்குகிறது புஸ். எனவே, முட்டையும் பூனையும் நண்பர்களாகிறார்கள். மாய விதையின்மூலம் தங்க வாத்து முட்டை கிடைக்கும் என்கிற கனவை, பூனைக்குள் முதலில் விதைப்பதே முட்டைதான். எனவே, இருவரும் அதைத் தேடி அலைகிறார்கள். ஆனால், வெற்றி கிடைக்கவில்லை. 

கயிற்றை அறுத்துக்கொண்ட ஒரு முரட்டுக்காளை சாலையில் வெறித்து ஓடுகிறது. அதனிடமிருந்து அந்த நகரின் படைத் தலைவரின் தாயைக் காப்பாற்றுகிறது புஸ். மக்கள் புஸ்ஸைப் பாராட்டுகிறார்கள். படைத் தலைவரும் புஸ்ஸைப் பாராட்டி காலணிகளைப் பரிசு அளிக்கிறார். புஸ்ஸுக்கு இதுவே பெருமையான அடையாளம். எனவே, தன் திருட்டுத்தனத்தை விட்டு நேர்மையாக நடந்துகொள்ள முயற்சி செய்கிறது. இதற்கிடையில், ஒரு வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறது முட்டையான ஹம்ப்ட்டி டம்ப்ட்டி. இது புஸ்ஸுக்குத் தெரியாது. காவல் அதிகாரிகள் துரத்தி வரும்போது, உதவிக்காக புஸ்ஸை நோக்கி அது வருகிறது.

“இது மக்களின் பணம். ஏன் திருடினாய்?” என்று புஸ்ஸுக்கு ஆத்திரம். ஆனாலும், சிக்கலான சூழலில் ஒரு காவல் அதிகாரியை புஸ் தாக்கிவிட, இருவரும் தப்பி ஓடுகிறார்கள். காவல் அதிகாரிகள் புஸ்ஸைத் துரத்துவதை எமல்டா பார்த்துவிடுகிறார். தன் தாயாக கருதிய பெண்மணியின் முன்னால் இந்த அவமானம் நேர்ந்துவிட்டதே என்று புஸ் கலங்குகிறது. முன்னர் கிடைத்த பெருமை நீங்கி கெட்ட பெயர் உண்டாகிறது. 

காவல் அதிகாரிகள் துரத்தியதில் முட்டை மாட்டிக்கொள்கிறது. “நண்பா என்னைக் காப்பாற்று” என்று அலறுகிறது. “உன்னால்தான் தவறு செய்யாத எனக்கும் கெட்ட பெயர். எப்படியாவது ஒழி” என்று புஸ் தப்பித்துவிடுகிறது. எனவேதான் இப்போது தேடப்படும் குற்றவாளியாக நிற்கிறது. 

புஸ்ஸின் பிளாஷ்பேக்கை தூக்கக் கலக்கத்துடன் கேட்கும் கிட்டி, ஆறுதல் சொல்கிறது. ஹம்ப்ட்டி டம்ப்ட்டி முட்டை மறுபடியும் வந்து புஸ்ஸிடம் பேசுகிறது. “நண்பா, நாம் அந்த மாய விதைகளைத் தேடிக் கண்டுபிடித்தால் எல்லா பிரச்னையும் தீர்ந்துவிடும்” என்று ஆசை காட்டுகிறது. புஸ்ஸுக்கு சபலம் உண்டாகிறது. தங்க வாத்து முட்டைகளைத் தேடிச்சென்ற அவர்களது சாகசப் பயணம் வெற்றி அடைந்ததா, நேர்மையான பூனையாக இருக்க விரும்பிய புஸ்ஸுக்கு இழந்த பெருமை திரும்பக் கிடைத்ததா என்பதை சுவாரஸ்யமான முறையில் சொல்லியிருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படம் Shrek வரிசையின் ஒரு தொடர்ச்சி. அதில், உப பாத்திரமாக வந்த புஸ் பூனையை மையப்படுத்தி உருவாக்கிய படைப்பு. Puss in Boots என்பது ஐரோப்பிய நாட்டுப்புறக் கதைகளில் பிரபலமாக உள்ள பூனையின் சித்திரம். தலையில் இறகுவைத்த தொப்பியும் தன் பெருமையான காலணிகளுடன் புஸ் நடந்துவரும் காட்சிகள் கம்பீரமாக இருக்கின்றன. பூனைதானே என்று அலட்சியமாக அணுகுபவர்கள், புஸ்ஸின் வீரத்தைக் கண்டு பிரமித்துப் போவார்கள். இத்தாலிய கதைகளில் வரும் பாத்திரம் என்பதால், இடையிடையில் அந்த மொழி வசனங்களையும் புஸ் பேசுவது சுவாரஸ்யம். 

புஸ்ஸுக்கும் கிட்டிக்கும் நடக்கும் நடனத்துடன் கூடிய சண்டைக் காட்சிகள் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களுக்கும் புஸ் குழுவுக்கும் நடக்கும் துரத்தல்களும் சண்டைகளும் பிரமிக்கச் செய்பவை. மாய அவரை விதை, வானத்தைப் பிளந்துகொண்டு வளர்வது, இந்த மூவரும் அதைப் பற்றிக்கொண்டு விண்ணில் உள்ள கோட்டைக்குச் செல்வது, தங்க வாத்து முட்டைகளை எடுப்பது, அதைப் பாதுகாக்கும் பிரமாண்ட வாத்து உருவத்திடமிருந்து தப்பிப்பது போன்ற இந்தப் பயணத்தின் மிக சுவாரஸ்யமான பகுதிகள். 

முட்டை மீண்டும் தனக்கு துரோகம் செய்வதால் சிறைக்குச் செல்லும் புஸ், தன்னுடைய ஊரை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றி, இழந்த பெருமையை மீட்கும் கிளைமாக்ஸ் காட்சி அற்புதம். புஸ்ஸுக்கும் கிட்டிக்கும் ஏற்படும் காதலும், அதுசார்ந்த ஊடல்களும் நகைச்சுவையை உண்டாக்குகின்றன. 

அனிமேஷன் வகை திரைப்படங்களை உருவாக்குவதில் புகழ்பெற்ற நிறுவனங்களுள் ஒன்றான ட்ரீம் ஒர்க்ஸ், இந்தத் திரைப்படத்தை மிகுந்த கற்பனை வளத்துடனும் உருவாக்கியுள்ளது. சல்மா ஹெய்க் (Salma Hayek) உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பாத்திரங்களுக்கு குரல் தந்து உயிரூட்டியுள்ளார்கள். ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷன் பெற்ற இந்தத் திரைப்படம், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. 

பூனைகளைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை மாற்றிக்கொள்ள Puss In Boots அனிமேஷன் திரைப்படம் நிச்சயம் உதவும். பூனைகளின் சுவாரஸ்யமான அட்டகாசங்களைக் காண, நிச்சயம் இதைப் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு