Published:Updated:

கணேஷின் முட்டைக் கணக்கு, விஜயின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive

கணேஷின் முட்டைக் கணக்கு, விஜயின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive
கணேஷின் முட்டைக் கணக்கு, விஜயின் பதில், ‘பிக்பாஸ் ஃபேமிலி'யின் வாட்ஸ்அப் குரூப்! வையாபுரி ஷேரிங் #VikatanExclusive

“பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்புவரை நான் சும்மாதான் இருந்தேன். படத்தில் நடிக்க வாய்ப்புகளைத் தேடி வாங்கிக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபிறகு வாய்ப்புகள் என்னைத்தேடி வருகின்றன. 'கலகலப்பு 2', 'சாமி 2' படங்களில் இப்போது கமிட் ஆகியிருக்கிறேன். இதுதவிர பிரபு சாலமன், மிஷ்கின் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.” - ‘நான் வீட்டுக்குப் போகணும்’ என்று அழுதுகொண்டிருந்த வையாபுரியின் வாழ்க்கை இப்போது ‘ஹாய் படி... ஹேப்பி படி’ என்று மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கிறது. 

“பிக் பாஸ் என்னால் மறக்க முடியாத அனுபவம். அந்த வீட்டுக்குள் செல்லும்வரை என்னுடன் போட்டியாளராக இருக்கப்போவது யார் யார் என்ற விவரம் எனக்குத் தெரியவே தெரியாது. பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றபிறகுதான் அங்கே இருந்தவர்களைச் சந்தித்தேன். கஞ்சா கருப்புடன் படமெல்லாம் பண்ணியிருக்கிறேன். ஆனால், அதிகமாகப் பேசிப்பழகியதில்லை. ஷக்தி, காயத்ரி, நமீதா... இவர்களைத் தெரியும். ஆனால், பெரிய அறிமுகம் இல்லை. இவர்கள் அனைவருடனும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதுதான் பழகி நட்பானேன்.”

“பிக் பாஸ் வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?”

நடிகர் ஷாம், ‘விஜய் டிவி-யில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளர்களைத் தேர்வு செய்கிறார்கள். நீ முயற்சி பண்றீயா’ என்று என்னிடம் கேட்டார். அப்போதுகூட அவரிடம், ‘நாம கோபக்காரன்ங்க. நம்மள எல்லாம் வீட்டுக்குள்ளயே விடமாட்டாங்க’ என்று சொன்னேன். அப்போது அவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக வர முயற்சி பண்ணினார். இப்படி நிறையபேரை பிக் பாஸ் போட்டியாளராக சேனல் தரப்பிலிருந்து செலக்ட் பண்ணி வைத்திருந்தார்கள். அப்படித்தான் என்னையும் ஒரு போட்டியாளராகத் தேர்வு செய்தனர். விஜய் டிவி-எண்டமால் இருதரப்பும்  ஒன்றாக அமர்ந்து என்னிடம் பேசினார்கள். நிகழ்ச்சியின் விதிமுறைகள் பற்றி என்னிடம் சொன்னார்கள். நான் பொதுவாகவே செல்போன் அதிகமாகப் பயன்படுத்த மாட்டேன். அது மட்டுமல்லாமல் அந்த நேரத்தில் எனக்குப் படங்கள் குறைவாகவே இருந்தன. தவிர கமல்சார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது, அதனால் நமக்கு நல்ல ரீச் கிடைக்கும் என்பதால் அவர்கள் சொன்ன அனைத்து கண்டிஷன்களுக்கும் நான் சம்மதம் தெரிவித்தேன். இந்த நிகழ்ச்சி நான் எதிர்பார்த்ததைவிட எனக்கு மிகப் பெரிய பிரேக்காக அமைந்திருந்தது.”

“இதற்கு முன் இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறீர்களா?”

“இதற்கு முன் எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நான் பார்த்தது இல்லை. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும்கூட நான் பங்கேற்ற பிக் பாஸ் எபிசோட் எதையும் இன்றுவரை பார்க்கவில்லை. எனக்குப் போடப்பட்ட அக்ரீமென்ட்டில்கூட என்ன இருந்தது என்பது பற்றி எனக்குத் தெரியாது. இங்கிலீஷில் இருந்ததால் எனக்குப் படிக்கத் தெரியவில்லை. ஆனால், கையெழுத்து மட்டும் போட்டேன். முக்கியமாக பிக் பாஸ் வீட்டில் அதிகமாகச் சொல்லப்பட்ட 'டாஸ்க்' என்கிற வார்த்தையே இதற்குமுன் நான் கேள்விப்பட்டதே இல்லை. முதலில் டாஸ்க் என்கிற விஷயம் எனக்குக் கஷ்டமாக இருந்தது. பிறகு பழகிவிட்டது. பல இங்கிலீஷ் வார்த்தைகளை அங்கேதான் கற்றுக்கொண்டேன். 'டிரிக்கர்', 'ஹாய் படி' இவையெல்லாம் அங்கே போன பிறகுதான் தெரியும். வெளியுலகமே தெரியாமல் இருந்த எனக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்தது பிக் பாஸ்தான்.”

“ஏண்டா இந்த நிகழ்ச்சிக்குச் சென்றோம் என்று வருத்தப்பட்டது உண்டா?”

“கண்டிப்பாக இல்லை. 400 படங்களுக்கும் மேலாக நடித்துவிட்டேன். அதிகமாக யாருக்கும் என்னைப் பற்றி தெரியாது. ஆனால், இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலமாக மூன்று வயது குழந்தைகூட என் பெயரைச் சொல்கிறது. அதனால்தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வரும் போதுகூட 'தெரியாதவர்களுக்கும் தெரிய வைத்த' என்று ரொம்ப அழகான ஒரு வரியை எழுதிவிட்டு வந்தேன்.”

“பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்பு கமல்ஹாசனைப் பார்த்துப் பேசினீர்களா?”

“இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது கமல் சாரை அவரது ஆஃபீஸில் போய்ப் பார்த்து பேசிவிட்டு வருவேன். ஆனால், இந்த நிகழ்ச்சிக்குப் போவதற்கு முன்பு அவரை நான் சந்திக்கவில்லை. முதல் நாள் மேடையில்தான் பார்த்தேன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக எனக்குக் கிடைத்தது எல்லாம் பாஸிட்டிவ் ரிசல்ட்தான். ஹவுஸ் மேஸ்ட்ஸும் சரி வெளியே மக்களும் சரி என்னைப் பற்றி யாரும் தப்பாகப் பேசவில்லை.”

“பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக என்னவெல்லாம் கற்றுக்கொண்டீர்கள்?”

“நன்றி சொல்ல, பாராட்டுத் தெரிவிக்க, மன்னிப்பு கேட்க... என்று நிறைய கற்றுக்கொண்டேன். அங்கிருந்தவர்களில் அதிகமாகக் கோபப் படக்கூடிய கேரக்டர் நான்தான். ஆனால், இந்த நிகழ்ச்சி என்னை முழுவதுமாக மாற்றிவிட்டது. இதே விஜய் டிவி-யில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றபோது, ‘உங்க இஷ்டத்துக்கு லேட்டாக்குனீங்கன்னா நான் கிளம்பிப் போயிட்டே இருப்பேன்’ என்று சொன்னேன். அப்படிச் சொன்ன எனக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய பொறுமையைக் கற்றுக்கொடுத்தது. நான் வெளியே வரும்போது எனக்குப்போட்டுக்காட்டிய  குறும்படத்தில் என்னைப் பார்க்கும்போது எனக்கே பிரம்மிப்பாகயிருந்தது. அதைப் பார்க்கும்போது அழுகையே வந்துவிட்டது.

எனக்காக ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. ‘ஜான்பூரி’னு என்ற பெயரில் ஒரு  அக்கவுன்ட்டையே ரசிகர்கள் ஓப்பன் செய்து அதில் ஐந்து லட்சம் பேர் ஃபாலோவர்ஸ் லிஸ்டில் இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் என்ன நன்றிக்கடன் செய்யப்போகிறேன் என்றே தெரியவில்லை. அதில் எனக்கு வந்திருக்கும் கமென்ட்ஸ், மீம்ஸ் எல்லாம் என் பையன் என்னிடம் காட்டினான். பார்க்கும்போது மகிழ்ச்சியாகயிருந்தது.”

“பிக் பாஸ் வீட்டுக்குள் அதிக நாள்கள் இருப்போம் என்று நினைத்தீர்களா?”

“சத்தியமாக இல்லை. 84 நாள்கள் இருந்துவிட்டேன். ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. 50 நாள்கள் தாண்டின பிறகுதான், ‘நூறு நாள்களை முடித்துவிட்டுத்தான் போக வேண்டும்’ என்று எனக்குள் தோன்றியது. ஒரு வேலை நம்மை எலிமினேட் செய்தாலும் வெளியே இருக்கும் கார்டனில் பாய் விரித்தாவது படுத்துவிட வேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். அந்த அளவுக்கு அவர்களிடம் நெருக்கமாகிவிட்டேன். 'யாராவது சண்டை போட்டால்கூட உள்ளே போகாமல் அவர் பாட்டுக்கு இருக்காரு' என்று கணேஷை எல்லோரும் சொல்வார்கள். நானும் அப்படித்தான். முக்கியமாகப் பெண்கள் சண்டை போட்டுக்கொள்ளும்போது இடையில் போகவே மாட்டேன். யார் எது சொன்னாலும் 'ஆமா' போட்டுக்குவேன். ஏனென்றால், அவர்கள் காலையில் அடித்துக்கொள்வார்கள், மாலையில் சேர்ந்துகொள்வார்கள். சமாதானப்படுத்தியவர்கள் தனியாக நிற்பார்கள். காலையில் பொழுது விடிந்தால் பதினைந்து பேரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்துத்தானே ஆக வேண்டும்.''

“ஓவியா-ஆரவ் இருவருக்குமான பிரச்னையில் நீங்கள் தலையிட்டீர்கள். அதற்கு காரணம் என்ன?”

“ஆரவ், ஓவியாவை ஓரங்கட்டும்போது கஷ்டமாகயிருந்தது. அதனால்தான், 'பேசினால் எல்லாப் பெண்கள் கூடவும் பேசுங்கள். இல்லையென்றால் யாரிடமும் பேசாமல் இருந்துவிடுங்கள்' என்று ஆரவ்விடம் சொன்னேன். ஏனென்றால் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.”

“ஓவியாவுக்கு இவ்வளவு ரசிகர்கள் பிக்பாஸ் மூலம் கிடைப்பார்கள் என்று நினைத்தீர்களா?”

“ஓவியாவுக்கு இருக்கும் ரசிகர்களைப் பார்க்கும்போது அதிர்ச்சியாகவும் மிரட்சியாகவும் இருக்கிறது. ஏனென்றால் 84 நாள்கள் இருந்திருக்கிறேன். நான் வெளியே வந்ததற்கு பல பேர் ஃபீல் பண்ணினார்கள். ஆனால், எனக்கு ஓவியா அளவுக்கு ரசிகர்கள் இல்லை. பெண்களுக்கு எப்போதும் ஒரு கிரேஸ் இருக்கும். அதில் பாதியாவது எனக்குக் கிடைத்திருக்கலாம் என்று தோன்றியது. ஒரு ஆசையிருந்தது, ‘அந்தக் கடைசி நாளில்கூட என்னைக் கூப்பிட்டு அங்கீகாரம் பண்ணியிருக்கலாம்’ என்று தோன்றியது. ஏனென்றால் பிக் பாஸ் காட்பாதர், என்டர்டெயினர், பிக் பாஸ் அண்ணன், பாசமலர் என்றெல்லாம் மக்கள் சமூக வலைதளங்களில் என்னைக் குறிப்பிட்டிருந்தனர். இதையெல்லாம் பார்க்கும்போது ரொம்பப் பெருமையாக இருக்கிறது.

வெளியே இருக்கும் இவர்களே இவ்வளவு யோசித்திருக்கிறார்களே, பிக் பாஸ் தயாரிப்பு நிறுவனமும் நம்மைக் கூப்பிட்டு ஏதாவது பண்ணியிருக்கலாமே என்று தோன்றியது. வருத்தம்கூட இருந்தது. அப்புறம் நானே நினைத்தேன். பதினைந்து பேரில் நம்மை மட்டும் கூப்பிட்டு கெளரவப்படுத்தினால் நன்றாகயிருக்காது. எல்லோரும் கஷ்டப்பட்டிருக்கோம் என்று மனசை நானே தேற்றிக்கொண்டேன்.  அங்கிருந்தவர்களில் அதிகப் படங்களில் நடித்தவன், அதுமட்டுமல்லாமல் சீனியரும்கூட. அதனால் ஒரு நிமிடம் அந்த எண்ணம் வந்தது. 

அப்புறம் அந்த எண்ணம் என்னைவிட்டுப் போய்விட்டது. இதுவே பழைய வையாபுரியாக இருந்திருந்தால் ஸ்டேஜிலேயே சண்டைபோட்டு இருப்பேன். ஆனால், இப்போது இருப்பது புதிய வையாபுரி. இதை ஏற்றுக்கொள்ளும் பருவம் வந்துவிட்டதால், இதுவும் கடந்து போகுமென்று கடந்துவிட்டேன். எதிர்பார்ப்பது தவறு என்று எண்ணிக்கொண்டேன். அந்தவகையில் ஓவியாவுக்கு இருக்கும் மாஸ் பார்க்கும்போது பிரமிப்பாகத்தான் இருக்கிறது.”

“ஆரவ் பிக் பாஸ் டைட்டிலுக்குத் தகுதியானவர் என்று நினைக்கிறீர்களா?”

“நான் வெளியே வந்த 12 வது வாரம், ‘ஆரவ், கணேஷ், சினேகன்... இந்த மூவரில் யாருக்கு டைட்டில் கிடைத்தாலும் சந்தோஷம்’ என்று  தான் சொல்லிவிட்டு வந்தேன். ஏனெனில் மூவரும் கடுமையான உழைப்பாளிகள், குறிப்பாக டாஸ்க் விஷயத்தில். அதிலும் கணேஷ் ஜென்டில்மேன். கவிஞர், யார் வெளியே போனாலும் ஃபீல் பண்ணுவார். நல்லா சமைச்சுப் போட்டிருக்கார். நல்ல உழைப்பாளி. எல்லோர் விஷயத்திலும் அக்கறை கொண்டவர். ஆரவ்வும் நல்ல உழைப்பாளி. ஆரவ் பண்ணியது ஒரே ஒரு தவறுதான். கவிஞர் பற்றிய குறும்படத்தில் பேசியது. அதையும் அப்பவே கவிஞரிடம் மன்னிப்புக் கேட்டு விட்டார். அதன்பிறகு இருவரும் நட்புடன் பேசிவிட்டார்கள். அதனால் மூன்று பேரும் தகுதியானவர்கள்தாம் என்று நினைத்தேன்.”

“நீங்கள், ஆரவ், பிந்து மாதவி, ஹரீஸ் நால்வரும் பிறகு உங்கள் வீட்டில் சந்தித்தது பற்றி...”

“பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரும் வாட்ஸ் அப்பில் ஒரு குரூப் ஆரம்பித்திருக்கிறோம். அதில் சில பேருடைய நம்பர்ஸ் மிஸ் ஆகியிருக்கிறது. அதனால் எல்லோரையும் எங்கள் வீட்டுக்கு அழைக்க முடியவில்லை. இவர்கள் மூன்று பேரும் என் வீட்டில் மதிய உணவுக்கு வந்தார்கள். கவிஞர் வெளியூர் போய் விட்டார். அதனால், அவர் வரமுடியவில்லை. இனிவரும் நாள்களில் அனைவரது வீட்டுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கிறோம். என் வீட்டில் கொலு வைத்தேன். அப்போதே எல்லோருக்கும் மெசேஜ் அனுப்பினேன்.”

“பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த சிலருக்கு நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்ததே?”

“ ‘பாராட்டக் கூடிய பெண்களும் இருந்தார்கள். திட்டக்கூடிய பெண்களும் இருந்தார்கள்’ என்று காயத்ரி என்னிடம் சொன்னார். எல்லாம் போகப்போக சரியாகிவிடும்.”

“கணேஷ் முட்டை சாப்பிடுவது பற்றி ரொம்ப புகார் செய்தீர்களே?”

“கணேஷ் விஷயத்தில் நான் மிகப்பெரிய பாவியாகி விட்டேன். என்னாலேயே அவர் முட்டை சாப்பிடுவதை நிறுத்தினார். ஒரு கிண்டலுக்காகத்தான் நானும் கஞ்சா கருப்பும் கணேஷை அப்படிப் பேசினோம். அவர் ஜிம், யோகா எல்லாம் செய்வார். இதெல்லாம் செய்யும்போது ரொம்பப் பசிக்கும். அதனால் ஜூஸ், முட்டை, புரோட்டின் இதையெல்லாம் நிறையச் சாப்பிட வேண்டும். பாவம் இப்போது அவர் பாதி உடம்பாகி விட்டார்.

பிக் பாஸ் வீட்டில் முட்டைகளை எண்ணித்தான் கொடுப்பார்கள். அதனால், கிண்டலுக்காகத்தான் ''என்னப்பா இப்படி முட்டை சாப்பிட்டால், என்னாவது'' என்று பேச ஆரம்பித்தது. ‘சாப்பாடு விஷயத்தில் போய் இப்படி அவரைப் பேசிவிட்டோமே’ என்று ரொம்ப ஃபீல் பண்ணினேன். அதனால், கணேஷைக் கூப்பிட்டு 'தயவுசெய்து மன்னித்து விடுங்கள் சாப்பாட்டு விஷயத்தில் நான் இப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று மன்னிப்பு கேட்டேன்.

அவர்  ‘அண்ணா விடுங்க. நான் தப்பா நினைக்கவே இல்லை. நீங்கள் கிண்டல் பண்ணலைனா ஹியூமரே இல்லாம இருந்திருக்கும். நீங்கதான் எங்க டைம்பாஸ்’ என்றார். ''மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாதபடி கிண்டல் செய்வது தப்பில்லை'' என்று கமல் சாரே சொன்னார். ‘உங்களை யாராவது இப்படிப் பேசியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்’ என்று என் மனைவிகூட கேட்டார். ரொம்ப கஷ்டமாகயிருந்தது. கணேஷ் விஷயத்தில் நான் தப்பு செய்துவிட்டேன். கணேஷ் ஒரு ஜென்டில்மேன்.”

“பிந்து மாதவி மேல் மட்டும் எதற்காக இவ்வளவு பாசம்?”

“பிந்து 63 நாள்கள் உள்ளே இருந்தார்கள். ஒருநாள்கூட யாரையும் பற்றி புறம் பேசியது இல்லை. ஓவியாவும் அப்படித்தான். பிந்து உள்ளே வரும்போது ஓவராகக் கிண்டல் செய்திருக்கிறேன். அதன்பிறகு அவருடன் நட்பாகி விட்டேன். முதலில் டீ சாப்பிட மாட்டேன் என்று சொன்னார். அடுத்த நாள் காலையில் வந்து ''டீ கிடைக்குமா'' என்றார்? டீ போட்டுக் கொடுத்தேன். அது பிந்துவுக்குப் பிடித்துவிட்டது. அப்போதுதான் பேச ஆரம்பித்தேன். ரொம்பத் தனிமையாக ஃபீல் பண்ணினார். என்னைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே பொட்டு வைக்க வேண்டும், சேலை கட்ட வேண்டும், பூ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். விநாயகர் சதுர்த்தி நடக்கும்போதெல்லாம் பிந்துவிடம், சேலை கட்டச் சொல்வேன். அதையெல்லாம் பிந்து கேட்பார். 'சரிங்கண்ணா'' என்பார். ரொம்ப வெகுளியான பெண்.”

“பிக் பாஸ் நடப்பது எல்லாம் ஸ்க்ரிப்ட் என்று பேச்சுயிருக்கிறதே?”

“ ''ஒரு டையலாக் எழுதிக் கொடுத்தால், அதற்கு கவுன்டர் கொடுக்க அவன் என்ன திணறு திணறுவான், எப்படிச் சண்டையெல்லாம் ஸ்க்ரிப்டாக நடக்க முடியும்’ என்று கமல் சார் அழகாகச் சொல்லியிருந்தார், ஸ்க்ரிப்டாக இருந்திருந்தால் கோபப்படாமல், கடைசி வரை காயத்ரியை அன்பாகக் காட்டியிருந்திருக்கலாம். அங்கே நடந்த அழுகை, சிரிப்பு, கோபம் எல்லாம் உண்மை. அங்கே இருந்தவர்களின் உணர்ச்சிகளும், வெளிப்பாடுகளும் உண்மைதான். சின்ன சத்தம் ஏற்பட்டால்கூட இயற்கையாகத்தான் இருந்தது.”

“பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் யார்யார் உங்களுக்குப் போன் பண்ணி பேசினார்கள்?”

நான் வெளியே வந்த எபிசோட் டி.வி-யில் காட்டியவுடன் பிரபு சார் எனக்குப் போன் பண்ணி இருபது நிமிடம் பேசினார். ‘உன் குறும்படம் பார்த்துவிட்டு அழுதுட்டேன்டா. எங்க வீட்டில் எல்லோரும் நிகழ்ச்சியைப் பார்த்தோம். இதைவிடப் பெரிய கிரெடிட் உனக்குக் கிடைக்காது. நீ பேசினதப் பார்த்துவிட்டு வீட்டில் எல்லோரும் அழுதுவிட்டோம்’ என்றார். கமல் சாரே என்னை வெளியே அனுப்பும் போது, ‘வையாபுரியாக வந்த உங்களை ஸ்டாராக அனுப்புகிறோம்'' என்று சொன்னார். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’க்கு அப்புறம் இரண்டாவது பாலத்தை கமல் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார். வெளியே வந்தவுடன் நடிகர் விஜய்க்குத்தான் 'வணக்கம்' என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். அவர் அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. வெளியூரில் இருப்பதாகச் சொன்னார்கள். அவர் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.”